புதன், 30 ஏப்ரல், 2014

குறள் பார்ப்பான் என்ற சொல்

"Paarppaan"  

பார்ப்பான் என்ற சொல்லுக்கு, பெரும்பேராசிரியர் மறைம-
லையடிகளார் சொன்ன பொருள் , கோயிற்காரியங்கள் பார்-
ப்பவன் என்பது.

ஓரிரண்டு ஆண்டுகளின்முன் நம் நேயர்கள் இணைய தளங்களில்
கூறியது: "நூல்களைப் பார்ப்பவன்" என்பது.

இரண்டையும் அணைத்துச் செல்கிறது என் உரை.

திருவள்ளுவர் காலத்தில், நூல்கள் ஏட்டுருவை இன்னும்
அடையவில்லை என்பது மெய்ப்பிக்கப் பட்டால், நூல்கள்
பார்ப்பவன் என்ற பொருளில் மாற்றம் தேவைப்படலாம்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர்
கரணம் என்ப என்பது தொல்காப்பியம், அது நினைவுக்கு
வருகிறது. பொய்யும் வழுவும் தோன்றாது மக்களை மேற்பார்-
ப்பவர் "பார்ப்பார்" என்று சுட்டப்பட்டிருத்தலும் கூடும்.
மறையோதுவோர் மக்களை நன்னெறிப்படுத்துவோர் அல்லது
அக்கடமை உடையோர் என்பதனால் இப்பெயர் வந்திருப்பி-
ன் சாலப் பொருத்தமே.

பார்ப்பான்  என்ற சொல் வந்துள்ள குறளைச் சற்று நுணுகி ஆய்வோம்.

ozukkam

மறப்பினும் ஓத்துக் கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

ஓத்து = ஓதுதலை;
மறப்பினும் = மறந்துவிட்டாலும்;
கொளல் ஆகும் = அதனை ஏற்றுக்கொள்வது கூடும்;
பார்ப்பான் = கோயிற்காரியங்கள் அல்லது நூல்கள் பார்ப்ப-
வன்;
பிறப்பொழுக்கம் = பிறந்த ( குடியின் )் ஒழுக்கத்தினை;
குன்ற = குறைவுபட விட்டுவிட்டால்;
கெடும் = (அது மாற்றவியலாத ) கெடுதலை உண்டுபண்ணிவிடும்.

இதனால், ஒழுக்கத்தின் இன்றியமையாமை உரைக்கப்பட்டது.

ஓதுதலை மறத்தல் : ஓதும் தொழிலையே நிறைவேற்ற மறத்தல்
ஒன்று; மற்று, ஓதுகையில் சொற்களையும் (மந்திரத்தையும்)
சொற்பொருளையும் மறந்துவிடுதல் இன்னொருவகை மறப்பாகும்.


குன்றக் கெடும் = குன்றினால், கேடுகள் பலவும் உண்டாகும்
என்பதாம். குன்ற = குன்றினால்.


A review of kuRaL (supra), sufficiently referenced below:

இக்குறளை வேறு வகையாகவும் சிந்திக்கலாம்.

குறள்:

SENTENCE 1  : (மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்.)
SENTENCE  2 : (பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்.)

இதில் இரண்டு வாக்கியங்கள் உள்ளன. முதல் வாக்கியம்:
பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளலாகும் என்பது.

நூல்களைப் பார்ப்பவ னொருவன், அவற்றில் ஓதற்குரிய ஒன்றை மறந்துவிட்டாலும், அதனை அறிஞர் பொருட்படுத்தமாட்டார்; (காரணம், அதனை யவன் திருத்திக்கொள்ளலாமே!)

அடுத்த வாக்கியம்: "பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்". இந்த இரண்டாவது வாக்கியத்துக்குப் பார்ப்பான் என்ற சொல்லை மீண்டும் துணைக்கழைக்க வேண்டியதில்லை. குடிக்குரிய ஒழுக்கம்
என்பது யார்க்கும் உண்டு, ஆதலால்், யாரென்றாலும், குடிக்குரிய ஒழுக்கத்தினின்று திறம்பி நடந்தால், அந்த நடத்தை, திருத்திக் கொள்ள முடியாத பெரும் பேரிடர்களை வாழ்வில்
விளைத்துவிடும்.

இதுவே சிறந்த விளக்கம் எனலாம்.

திருவள்ளுவர் காலத்தில் ";" குறி இல்லை. இப்போது அச்சிடப்பட்டவற்றில் அது இருக்கிறதென்பதை உணர்க. பிறப்பொழுக்கம் என்பது எச்சாதியானுக்கும் உண்டு. ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும் ஒரு குடியில் பிறத்தலால், அக்குடிக்குரிய ஒழுக்கமே அந் ந(ண்)பருக்குப் பிறப்பொழுக்கமாகும்.

meanings vary....

(Puram 166) it is clear that the word “paarppaan” can also refer to “uurpaarppan”, a person who looks after a village or region of several villages.

One has to be careful in interpreting.

பிறப்பொழுக்கம் - பிறந்த குடிக்குரிய ஒழுக்கம் என்று பல உரையாசிரியன்மார் உரைத்துள்ளனர். அவர்களை ஒருவகை-
யில் பின்பற்றியே நானும் " பிறப்பு ஒழுக்கம்" - குடிப்பிறப்புக்குரிய ஒழுக்கம் என்று உரைத்திருந்தேன். 

இதிலும் நாம் சற்று கருத்தைச் செலுத்தலாம். 

குடிக்குரிய ஒழுக்கம் என்று தமிழ் நாட்டில் ஓர் ஒழுக்க நெறி கடைப்பிடிக்கப்பட்டு வந்தது என்பது நிறுவப்படுதல் வேண்டும்்.

குடிக்குரிய ஒழுக்கம், சாதிக்குரிய ஒழுக்கம், பிறப்புக்குரிய ஒழுக்கம் என்பவெல்லாம் ஒரு பொருளனவா என்பதும்
தெளிவுறுத்தப்படுதல் வேண்டும். வள்ளுவர் ஒவ்வொரு சாதிக்கும் அல்லது குடிக்கும் அல்லது பிறப்புக்கும் ஒரு விதந்து கூறத்தக்க
ஒழுக்கம் இருந்தது என்று நம்பினாரா அல்லது அவ்வாறு இருந்ததா என்பதும் ஆய்ந்து நிறுவப்படுதல் வேண்டும். 

பிறப்பொக்கும் என்பது வள்ளுவர் கருத்தாகலின், பிறப்பொழுக்கம் என்பது ஏன் ஒத்த பிறப்பினரான மக்களிடையே
பொதுவாக நிலவிய ஒழுக்க நெறிகளின் தொகுப்பு என்று பொருள் படலாகாது என்பதையும் தெளிவு படுத்தவேண்டும்.
"சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்" என்றதனால், ஏன் சிறப்பொழுக்கம் என்ற தொடர் ஆளப்பெறவில்லை என்றும்
கடாவ வேண்டும். குடிக்கும் செய்தொழிலுடையோருக்கும் இடையே வழங்கி வரும் ஒழுக்க நெறிகள் எனின் சிறப்பொழுக்கம்
குன்றக் கெடும் என்று குறளில் ஏனோ வரவில்லை என்றும் குடைய வேண்டும்.

(குடி என்று இங்கே கூறப்பட்டது ஒரே தொழிலில் அல்லது அக்கறைக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு இணைந்தியங்கும்
குடும்பங்கள் என்று பொருள்படும். )

சரியான உரை

இருவகையில் பொருள் கொள்ளுதல்.

பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் என்பதை:

1. பிறப்பு, ஒழுக்கம் குன்ற, கெடும் அதாவது: பிறப்பானது, ஒழுக்கம் குன்றுமாயின், கெட்டுப் போகும் என்று கொள்ளுதல். இங்கு, பிறப்பு ஒழுக்கம் என்பன தனித்தனியாக நிற்கும்படி பொருள்கொள்ளப்பட்டது. பிறப்பு (எழுவாய்), கெடும் (பயனிலை). எப்போது கெடும்? என்ற கேள்விக்கு, ஒழுக்கம் குன்றினால் கெடுமென்றவாறு. இதைத் தற்கால உரைநடை இலக்கணத்தில், "கிளவியம்" (clause ) என்பர். இங்ஙனம் கொள்ளுங்கால், "பிறப்பொழுக்கம்" என்று ஒன்று விதந்து கூறுவதற்கு இல்லையாயிற்று.

2. அடுத்து, "பிறப்பொழுக்கம்" என்பதை ஒரு கூட்டுச்சொல்லாகக் கொண்டு, பிறப்பொழுக்கம் குன்றக்கெடும் எனக் கொள்ளுதல். இப்படிக் கொண்டால், பிறப்பொழுக்கம் குன்றினால், (எது) கெடும்? என்று கேள்வியை எழுப்பி, அதற்கு உரையாசிரியர் விடை சொல்வார். எது கெடும் என்றால் அவன் குலம் கெட்டுப்போகும், மேற்குலத்தினின்று கீழிறக்கப் பெறுவான்.. என்பார். ஆகவே, குலம் என்பதை வருவித்து உரைகூறுவார். கெடும் என்ற பயனிலை மட்டும் இருக்கிறது, எழுவாய் இல்லை. அதைப்படிப்பவரே வழங்கிக்கொள்ளவேண்டும். இப்படியும் உரை கூறலாம்.

சரியான உரை என்று எதுவும் இல்லை. சரியில்லாத உரையும் எதுவும் இல்லை. வள்ளுவர் காலத்தின்பின் ஈராயிரம் ஆண்டுகள் ஓடி மறைந்த நிலையில், அவரை முற்றும் அறிந்தவர் யார்? அவரே உரை வகுத்திருந்தால் இத்தகைய தொல்லைகள் இரா. ஆனால் அவரெழுதிய காலத்தில் மொழி நிலை மேம்பட்டு நின்று விளங்கிய காரணத்தால், உரை தேவைப்பட்டிருக்காது. ஈராயிரம் ஆண்டுகளின் பின் வாழும் நமக்குத் தேவைப்படுகிறது. உரையாசிரியர் அனைவருக்கும் நன்றி நவிலும் அதே வேளையில், வேறுபடும் உரைகளில் எது உங்கள் அறிவிற்கும் பொருத்தமாகப் படுகிறதோ, அதையே நீங்கள் மேற்கொள்வது, உங்கள் பொறுப்பும் கடனுமாகும்.


T032011@468# 

கருத்துகள் இல்லை: