செவ்வாய், 29 ஜூன், 2021

அக்காள் (த) - சேச்சி ( மலை)

 அக்காள் -  தங்கை என்பது மிக்க நெருக்கமான,  பெரும்பாலும் மனநிறைவு அளிக்கும் ஓர் உறவு ஆகும்.  அக்காள் தங்கைகள் சிலர் சண்டை போட்டுக்கொண்டிருக்கலாம்.  திருமணமாகிப் புக்ககம் புகுந்துவிட்ட பின் வந்த சண்டைகளாக இவை இருக்கலாம். இன்னும் தாய்வீட்டில்தான் இருக்கிறார்கள் என்றால், மீண்டும் ஒன்றுசேர்வது மிகவும் எளிதன்றோ?  அக்காள் கணவர், தங்கை கணவர் முதலியோர் பின் புலத்தில் இருந்து சண்டையை ஊக்குவித்துக்கொண்டிருந்தால், நிலைமை சற்றுக் கடினமாகிவிடும்.

சண்டை இல்லாமல் யாவரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே. சிலர் சண்டை போட்டுக்கொள்வதைப் பார்த்தால் நமக்குக் கவலையாக இருக்கின்றது.  அரசியல்வாதிகள்தாம் பலவிதச் சண்டைகளைப் போட்டுக்கொள்கிறார்கள். அமைதிப்பூங்காவாக ஆகட்டும் இவ்வுலகம்.

சண்டை இன்மை காண்பதே  நம் மாந்த நாகரிகத்தின் தலையாய நோக்கமென்று ஒருசில கூறினோமாயினும், இன்று நாம் எடுத்துக்கொண்டது அக்காள், தங்கை என்ற சொற்களைப் பற்றியும், தமிழின் இனமொழியாகிய மலையாளத்தில் உள்ள 'சேச்சி "என்ற சொல்லைப் பற்றியும்தாம். ஆகவே நாம் தலைப்புக்குரிய பொருளுக்குச் செல்வோம்.

அக்காள் என்பதன் நல்வடிவச் சொல் அக்கை என்பதுதான்.  அம்மா என்ற விளிவடிவுக்கு எவ்வாறு அம்மை என்பதே எழுவாய் வடிவமாக வருகிறதோ, அவ்வாறே  அக்கா என்ற விளிவடிவுக்கு  அக்கை என்பதே எழுவாய் வடிவம் ஆகும்.  விளிவடிவு என்பது ஒருவரை அழைக்கும்போது வரும் வடிவச்சொல்.

(அம்மை என்பது ஒரு நோயின் பெயருமாகிவிட்டபின் அவ்வடிவம் மக்களின் பயன்பாட்டில்  தன் பிடியை இழந்துவிட்டதென்று தெரிகிறது. எனினும் இலக்கிய வழக்கில் அது தொடர்ந்தது. ) 

கண்ணன் என்பது எழுவாய் வடிவம், அது கூப்பிடும் (விளிக்கும்) வடிவத்தில் கண்ணா!  என்றோ,  கண்ணனே என்றோ வரும். சிலவேளைகளில்  " ஓ கண்ணன்,  ஓ கண்ணா" என்று நிலைமைக்குத் தக்க,  ஓ, ஆ, ஏ, என்றெல்லாம் விளியானது வெளிப்படும். இவற்றில் சில இலக்கண நூல்களில் விதந்து சொல்லப்படாதனவாய்  ஒழியும்.  மற்ற மொழிகளிலும் ஆ, ஏ, ஓ என இவை வருவதுண்டு.

நந்தலா கோபாலா ஜெய பிருந்தாவன லோலா

என்பதில் விளிவடிவங்கள் இருந்தால் கண்டுபிடியுங்கள். கருத்துரை இடுங்கள்.

எழுவாய் என்றால் வாக்கியத்தில் பேசுபொருளாய் வருவது.  நத்தை நகர்கிறது என்பதில் நத்தையே நாம் காணும் பேசுபொருள் .  நத்தையே  வாக்கியத்தில் "சப்ஜெக்ட்" (subject) என்பர். "நத்தையே நகராதே"  என்பதில் நத்தையே என்பது விளிவடிவம். Vocative case.  இதை விளிவேற்றுமை என்றும் கூறுவர்.

அக்கை என்பதே எழுவாய் வடிவில் அம்மை என்பதுபோல் இருக்கிறது.  (ஐகாரத்தில் முடிபவை)

அக்கையே, எண்ணெய் வாங்கினேன், ஆனால் புட்டியின் தக்கையை மறந்தேனே.

தங்கையே      நீ மறப்பதே உனக்கு வாடிக்கையாகிவிட்டது, உன்னை அறைகிறேன்.

அக்கை என்பது விளியில் அக்கா என்றும் வரும்.  அக்காவே என்று இரட்டை விளிவடிவிலும் வரும்.  இரட்டையாக வரக்காரணம்  அக்கா என்ற சொல் விளிவடிவில் இருந்தாலும் தன் விளிப்பொருளை இழந்து  எழுவாய்வடிவினது போல் உலகவழக்கில் எண்ணப்படுகிறது.  அக்கா என்பது இக்கோளாற்றால், எழுவாயிலும் அக்கா, விளியிலும் அக்கா ஆயிற்று.

அக்கை + ஆள் >  அக்காள்.  இது  ஏற்கெனவே பெண்பாலாய் உள்ள அக்கை என்ற சொல்,  ஐ இறுதி கெட்டு,  ஆள் என்ற இன்னொரு பெண்பால் விகுதி பெற்று  அக்காள் ஆகிவிட்டது.

இது பெண் என்ற சொல்,  ஆள் விகுதியைப் பெற்று:-

பெண்ணாளே பெண்ணாளே கருமீன் கண்ணாளே கண்ணாளே!

என்றும் பாட்டில் வருவது போலுமே.

அம்மை என்பது அம்மாள் என்று வருவது போல். எ-டு. இரமணி அம்மாள்.

"அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்." ---  இந்த வாக்கியத்தில் உள்ள அம்மை என்பதே எழுவாய் வடிவம்.  அது அப்பா என்ற விளிவடிவத்துடன் கலந்து  ஒரு சொன்னீர்மை அடைந்து இரண்டும் விளித்தன்மை அடைதல் காணவேண்டும்.

இனி,  அக்கை என்பது அக்கைச்சி என்று வந்து  சி என்ற பெண்பால் விகுதி பெற்றும் வரும்.

தங்காள்  என்னும் வடிவமும் "அக்காள்" என்பதற்கு ஒப்புமையாக நிலவினாலும் அது "நல்லதங்காள்" கதை மூலமே நமக்கு வருகிறது.  பெண்டிர் தமக்குள் ஒத்துப் போகாமை பற்றிய கதைகளை எழுதிக் குவித்துக் களிப்பதென்பது ஆடவர்க்கு வாடிக்கை என்பதை இங்குச் சொல்ல வேண்டுவ தில்லை.

வடிவங்களில் குழப்படி இருந்தாலும் அவை இலக்கியத்தில் இடம்  பெற்றுவிட்டால் அவற்றை விலக்க முடியாது.  தவறாயின் வழுவமைதியாய் ஏற்றுக்கொள்ளப்படும்.

இனிச் சேச்சி என்ற மலையாள வடிவத்திற்கு வருவோம்.  இது உண்மையில் சேட்டத்தி என்ற சொல்லின் தேய்வும் திரிபும் ஆகும்.   சேட்டம் என்றால் வலிமை, பெருமை.  இங்குச் சேட்டத்தி என்ற சொல்லில் மூப்பு குறித்தது.

சேட்டம் > சேட்டத்தி > ( சேத்தி) >  சேச்சி   ஆயிற்று.   இடைக்குறையும் திரிபும் உள்ளன.  சேத்தி என்பது வழங்கவில்லை.  சேத்து என்ற சொல் உறவுடைய சொல். ஒப்புடையது என்று பொருள்படும்.  சேட்டத்து > சேத்து. ( இடைக்குறை). இதைப் பின்னர் அறிவோம்.

இதில் தகர சகர மாற்றீடு இருப்பதை நுட்பமாய் அறிக.

இவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்வோம். அன்பர்கள் உடன் நின்று ஆய்வினை முடித்தமைக்கு எம் நன்றியும் வணக்கமும்

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்











திங்கள், 28 ஜூன், 2021

பாதரட்சை

 பாதரட்சை என்றாலும் செருப்பு என்பதே பொருள்.  ஆனால் சொல்லைக் கேட்க, அது அமைப்பாய்வுக்கு  எளிதானதன்று என்று நினைக்கத் தோன்றும்.  இதை யாமும் நீங்களும் இங்கு ஆய்வு செய்தபின்னர், அது எத்தகைத்து என்று ஒரு கருத்தை மேற்கொள்ளுதல் பொருத்தமாக  விருக்கும்.

பாதரட்சை என்ற சொல்,  பாதரட்சம் என்றும் வழங்குவதுண்டு. மற்றொரு பெயரான  தொடுப்பு என்பது மிக்கப் பொருத்தமுடையது எனலாம்.  வேட்டியையோ அல்லது  சேலையையோ கட்டிக்கொண்ட பிறகு,  'கால்மிதியல்' என்பது தொடர்ந்து வரும் ஓர் அணியாகும். ஆதலின் "தொடுப்பு" என்பது பொருந்துவதே.

பாததிராணம் என்பது மிதியடிக்கு இன்னொரு பெயர். பாதத்தின் மேல்புறத்தைத் திரைபோல் ஓரளவு மறைப்பதால் ,  திராணம் என்பது பெயரில் வருகின்றது.  திரை + அணவு + அம் >  திர அண அம் > திராணம் ஆகின்றது.  திரையணவம்  என்று அமைத்தலை இச்சொல்லாசான்கள் உகக்கவில்லை .  பாததிராணம் போலும் சொற்கள் மிக்கத் திரிபுகளுடன் அமைக்கப்பெறுபவை.

பாதம் என்பது முன்னரே நம் இடுகைகளில் விளக்கம்பெற்ற ஒரு சொல்லே.  ஆதலின் அதை இங்கு மீண்டும் விளக்கவில்லை.  தொடர்புடைய இடுகைகள் கிட்டுமாயின் கீழே அடிக்குறிப்பில் தருவோம்.

இரட்சை என்பது ஒன்று,   பாதங்களுக்கு வலி, வியர்வை, அழுக்கேற்றம் முதலியன இன்றி  "ரட்சிப்பவை"  என்று நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதுவும் ஒரு விளக்கமாகலாம்.  ஆனால் நம் விளக்கம் வேறு:

பாதரட்சைகள் எப்போதும் இரண்டாகவே வருபவை.  ஒற்றை பயன்படாது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இரண்டு >  இரட்டு > இரட்டு + சை > ( இங்கு டு என்ற கடின ஒலியை விலக்க ) > இரட் + சை > இரட்சை ஆகிறது.  இவ்வாறு கடின ஒலிகள் விலக்குண்டு அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் காட்டப்பெற்றுள்ளன.  அங்கு சென்று அமைதியாகப் படித்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்.  ஆனால் ஒன்று மட்டும் எடுத்துக்காட்டாக  இங்குக் காண்பீராக:

பீடு + மன் >  பீமன் > வீமன்.    வீமன் மகாபாரதக்கதையில் வருபவன்.  இங்கு டு என்னும் வல்லொலி விலக்குண்டது.  

சொல்லமைப்பில் நாவினைத் தடைசெய்வது போலும் வல்லொலிகள் இடைவருங்கால் அவற்றை நீக்கிச் சொல்லமைத்தல் ஒரு நல்ல உத்தியே ஆகும். மொழியிற் பல சொற்களை ஆய்ந்தால், பல சொற்களில் இவ்வாறான விலக்குதல்களும் சுருக்குதல்களும் வருவதைக் காணலாம்.  எ-டு:  ஒளி மழுங்குதல் >  ஒளி மங்குதல்  ( ழு ஒழிந்தது).  காள் காள் தை >  காள்தை > கழுதை. இது சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்.  இவை தேவையான மாற்றங்கள்.

பகு + குடுக்கை >  பகுக்குடுக்கை > பக்குடுக்கை.

நாத்தடை கூடுமான வரை ஏற்பாடாமல் ஒழுகிசையாகச் சொல்லமைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.  இதைத் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்குப் பல அகச்சான்றுகள் மொழியில் அமைந்துகிடக்கின்றன.

பாதரட்சைக்குத் திரும்புவோம்.  பாதத்திற்கு இரண்டு பாதரட்சை. இரண்டு என்பது ரண்டு, ரெண்டு என்றெல்லாம் தலையிழந்து வரும். இச்சொல்லில் ரட்சை என்று வந்ததும் அஃதே.

பாதரட்சை செய்தால் "இரட்டி" ச் செய்க.  பாத இரட்டுச் செய் என்று எடுத்து முடிப்பினும் யாம் ஒப்புவோம்.

எல்லாத் திரிபுகளையும் இங்கு விவரிக்கவில்லை , ஏனெனில் நம் நேயர்கள் பலர் தொடர்ந்து படித்து வருகிறீர்கள். தெரிந்தவற்றை மீண்டும் கூறாதொழிதல் நேரத்தை மீத்துத் தரும் உத்தியாம்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


குறிப்புகள்







ஞாயிறு, 27 ஜூன், 2021

சில காலணிகளின் பெயர்கள்-

காலணிகளின் பெயர்கள் சிலவற்றை இன்று அலசி எடுத்து நோக்குவோம்.

பாதுகை


இதற்குப்  பாதுகம் (அம் விகுதி , மற்றும் மராடி  என்றும் கூறுவதுண்டு.  மிதியடி எனலுமாகும். "கால்கட்டை" என்பது கேள்விப்பட்டிருக்கிறோம்.   மராடி என்பது மர அடி என்பதன் மரூஉ. 

பாதுகை என்பது ஒரு காலணிவகை. (மரத்தாலானதும் தெய்வச்சிலைகட்கு அணிவிப்பதும் ஆம் )   இக்காலத்தில் காலுறையையும்  காலணிகளோடு கூடவே வைத்துத்தான் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் காலுறைகள் பற்றி எதுவும் கண்டதாய் எம் நினைவில் இல்லை. காலுறை யணிதல்  மேலைநாட்டினர் வழக்கமாய் இருக்கலாம்வெப்பமிக்க நாடுகளில் வாழ்ந்தோருக்குக் காலுறைகள்  அணியும் வழக்கம் இருந்ததற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்னலாம். உடையில் கொஞ்சம் விலகல் அல்லது நீம்பல் இருந்தாலும் குளிர் உட்புகுந்து வருத்தும் இடங்களில் நாம் வாழவில்லைஉலகுலாவுக்குச் செல்வதென்பது வேறு.

நாம் நடக்கும்போது காலும்  ,  அணிந்துள்ளபோது  காலணியும் நிலத்தில் பதிகின்றன.   இதனைக் காரணியாகக் கொண்டு காலணிப் பெயர்கள் சில தோன்றியுள்ளன..  ஆதலின் கவனத்துக்குரிய  அடிச்சொல் " பதி(தல்)"   என்பது ஆகிறதுபதி என்பதன் முந்துவடிவம் பது என்பதுஅதனின் மூத்தது பல் என்ற அடிச்சொல்லேஅதனின் தாய்ச்சொல் எனின் அது புல் என்பதுஅதன் மூலப்பொருள் "பொருந்து" என்பதே ஆகும் இதனை இப்போது ஒரு வரிசைப் படுத்தினால் -----:


அடிச்சொற்கள்:

புல்  -  வினைச்சொல்: புல்லுதல்,  எனின் பொருந்துதல்.   தரையில் முளைக்கும் புல்,  அப்பெயர் பெற்றது அது தரையில்  செறிந்து பொருந்தி வளர்வதனால்தான்.   இது காரணப் பெயரானாலும், சில் இலக்கண நூல்கள் இதை இடுகுறி என்று வகைப்படுத்தியிருக்கக் கூடும்.  இதற்குக் காரணம், இச்சொல் நோக்கியவுடன் காரணம் தெற்றெனத் தெரியாமையினால் தான். > பல் > பது > பத்து;

புல் >பல் > பற்று ( பல் + து)

புல் பல் ( கடைக்குறை) >  + து பத்து > பது.

இந்த ஈரெழுத்துக்களையும் இணைத்ததில்

ப து பத்து என்று வந்தது தோன்றல்.

பத்து என்பது பின் பது என்று வரின் அது கெடுதல் ( அதாவது த் என்ற மெய் ஒழிந்தது.)

இனிப் பது என்பது பாது என்று வரின் அது  திரிதல். எப்படித் திரிதல்நீண்டு திரிதல்.

பது > பாதுமுதனிலை நீண்டு திரிந்தது என்னும் --   இலக்கணம்.

பொருளைப் பொறுத்தவரை,  

பதிதல் ( கால் அல்லது காலணி நிலத்தில் பதிதல் என்பதே அடிப்படைக் கருத்துஇங்கு கவனம்பெறும் எல்லாச் சொல்லுருக்களுக்கும் இது பொதுப்பொருள். )

 பாது என்பது சொல்லின் பகுதி.

பாது + கை பாதுகை ஆகிறது. இது ஒரு காலணி அல்லது காலணி வகை.  இங்கு, கை எனல் விகுதி   .

பற்றன் ஒருவன், இராமனின் பாதுகையே தனக்குத் துணை ஆகும் என்று பாடும்போது இச்சொல்லைப் பயன்படுத்துகிறான்.

இராமபிரானின் பாதுகை  ஒரு தெய்வம் அணிந்த பாதுகை ஆதலால், பாதுகை என்பதற்குப் புனிதமானது என்ற பொருளும் சில மொழிகளில் உண்டானது.

மலாய் மொழியில்:

 

மலாய் மொழியிலும் அப் பொருள் காணப்படுகிறது.  (Sri Paduka Baginda )

இனி, சப்பாத்து என்பதிலும் இறுதியில் இச்சொல் உள்ளது.

சப்பை + பாத்து > சப்பாத்துஇது ஒரு பகவொட்டுச் சொல். காலடிப் பகுதியில் சப்பையாக நிலத்தில் பதிவதான காலணி.

சப்பாத்துக்கட்டை என்றும் கூறுவர்இது ஒரு கள்ளி வகைக்கும் பெயராகிச் சப்பாத்துக்கள்ளி என்று கூறுவர்.

சப்பாத்துக்கள்ளிக்குப் பலகைக்கள்ளி என்றும் பெயருண்மையால்இதன் சப்பை உருவத் தன்மை தெரியலாகும்.

பற்று என்ற இலக்கியச் சொல்லும் பல் > பத்து என்ற அடிகளிலிருந்து வருவதே. பற்று என்பதற்கு மூலம் மக்கள் மொழியே.  

இங்கு நாம் கருதும் பத்து எண்ணிக்கையன்று. 

 "பற்றுக பற்றற்றார் பற்றினை ......."  குறள்.

மக்கள் மொழி

மக்கள் மொழியிலிருந்து இலக்கிய மொழி கிளைத்தது. அவ்வாறின்றி ஏற்பட்ட எந்த மொழியும் வெறும் புனைமொழி ஆகும்புலவன் புனைந்த மொழி பேச்சு மொழியாகாமல் வெறும் செத்த மொழியாக ஓலைச்சுவடிகளில் மட்டும் இருக்கும்தமிழின் சிறப்பு அது பேச்சு மொழி; எழுத்து மொழியும் ஆகும்.

கிளவி என்ற பதத்திற்குச் சொல் என்பது பொருள்ஏன் இப்பெயர்அது பேச்சு மொழியிலிருந்து கிளம்பியகிளந்த  சொல்கிள் மேலெழு என்பது பொருள்

பகுபதம் பகாப்பதம் என்பவெல்லாம் இருக்கும் சொல்லை இருந்தபடி வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் புலவனுக்குரியவை. அவன் எதற்கும் எதையும் புதுவது அறிய முற்படாதவன். மொழியை மிக்கப் பழைமையான காலத்திலே அறிவியல்போல் பாவித்து ஆங்காங்கு சிந்தனையைத் தெளித்துவிட்ட தொல்காப்பிய முனிபோலும் கதிரவனுக்கு ஒரு விதிவிலக்கு. ஆதலின் ஆய்வாளனொருவன் இலக்கணப்புலவன் பகுபதம் என்று சொன்னதையும் பகுத்துப் பார்க்கச்  சொல்லியலில் தயங்குதல் இல்லை. பகாப்பதம் என்று முடிவுகட்டியதையும் துருவிச் சென்று உண்மைகாணப் பின்வாங்குவதில்லை.  ஆதலின் பகாப்பதம்  என்பதொன்றில்லை இங்கு

அது இலக்கணத்திற்றான் உண்டென்று கொள்க.


சப்பை என்பது

ஒரு பட்டை வடிவப் பொருளை அல்லது சப்பையான பொருளைத் தரையில் எறிந்தால்,  அது சப்  என்ற ஒலியுடன் அடைவிடம்  தொடும்.   இவ்வொலியிற் பிறந்ததே சப்பை என்ற சொல். இவ்வாறு விழத்தக்க பொருளேயன்றி பிறவகைப் பொருளுக்கும் இச்சொல் பொருந்துவதுண்டு;  எடுத்துக்காட்டு,  சப்பை மூக்கு என்பது.  செயலிலும் பொருந்தும்:  எ-டு:  சப்பைக் கட்டு. பிறபயன்பாடுகளும் வருதல் உண்டு.

முடிவுரை:

ஒரு கவியோ கட்டுரையாளனோ,  பதத்தின் பொருளை நன்கு அறிந்திருப்பானாகில்,  சொற்களைத்  திறத்துடன் கையாள்வான். பொருண்மை தவறாத நிலையில், கருத்துகள் துல்லியமாகப் படிப்பவன்முன் வைக்கப்பட்டு,  மொழியின் பயன்பாடு மேனிலை கொள்ளும். அதனால் சொல்லின் பொருளைச் சரியாக அறிதல் எவ்வாறு நோக்கினும் நன்மையே ஆகும்.  


அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 



-----------------------------------------------------------------------------------------------------------------------

EDIT RESERVE  - PL DO NOT READ.


காலணிகளின் பெயர்கள் சிலவற்றை இன்று அலசி எடுத்து நோக்குவோம்.

பாதுகை என்பது ஒரு காலணிவகை.  இக்காலத்தில் காலுறையையும் காலணிகளோடு கூடவே வைத்துத்தான் ஆய்வு செய்யவேண்டியுள்ளது. தமிழ் இலக்கியத்தில் காலுறைகள் பற்றி எதுவும் கண்டதாய் எம் நினைவில் இல்லை. இது மேலைநாட்டினர் வழக்கமாய் இருக்கலாம்.  வெப்பமிக்க நாடுகளில் வாழ்ந்தோருக்குக் காலுறைகள்  அணியும் வழக்கம் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்னலாம். உடையில் கொஞ்சல் விலகல் அல்லது நீம்பல் இருந்தாலும் குளிர் உட்புகுந்து வருத்தும் இடங்களில் நாம் வாழவில்லை;  உலகுலாவுக்குச் செல்வதென்பது வேறு.

நாம் நடக்கும்போது காலும்  ,  அணிந்துள்ள காலணியும் நிலத்தில் பதிகின்றன.   இதனைக் காரணியாகக் கொண்டு காலணிப் பெயர்கள் சில தோன்றியுள்ளன..  ஆதலின் கவனத்துக்குரிய  அடிச்சொல் " பதி(தல்)"   என்பது ஆகிறது.  பதி என்பதன் முந்துவடிவம் பது என்பது.  அதனின் மூத்தது பல் என்ற அடிச்சொல்லே.  அதனின் தாய்ச்சொல் எனின் அது புல் என்பது.  அதன் மூலப்பொருள் பொருந்து என்பதே ஆகும்.  இப்போது இதனை இப்போது ஒரு வரிசைப் படுத்தினால் -----

புல் > பல் > பது > பத்து;

புல் >பல் > பற்று ( பல் + து)

புல் >  பல் >  ப ( கடைக்குறை) >  ப + து >  பத்து > பது.

இந்த ஈரெழுத்துக்களையும் இணைத்ததில்

ப து >  பத்து என்று வந்தது தோன்றல்.

பத்து என்பது பின் பது என்று வரின் அது கெடுதல் ( அதாவது த் என்ற மெய் ஒழிந்தது.)

இனிப் பது என்பது பாது என்று வரின் அது  திரிதல். எப்படித் திரிதல்?  நீண்டு திரிதல்.

பது > பாது.  முதனிலை நீண்டு திரிந்தது என்னும்,   இலக்கணம்.

பொருளைப் பொறுத்தவரை,  

பதிதல் ( கால் அல்லது காலணி நிலத்தில் பதிதல் என்பதே அடிப்படைக் கருத்து:  இங்கு கவனம்பெறும் எல்லாச் சொல்லுருக்களுக்கும் இது பொதுப்பொருள். )

 பாது என்பது பகுதி.

பாது + கை >  பாதுகை ஆகிறது. இது ஒரு காலணி அல்லது காலணி வகை.

பற்றன் ஒருவன், இராமனின் பாதுகையே தனக்குத் துணை ஆகும் என்று பாடும்போது இச்சொல்லைப் பயன்படுத்துகிறான்.

இராமபிரானின் பாதுகை  ஒரு தெயவம் அணிந்த பாதுகை ஆதலால், பாதுகை என்பதற்குப் புனிதமானது என்ற பொருளும் சில மொழிகளில் உண்டானது.

மலாய் மொழியிலும் அப் பொருள் காணப்படுகிறது.  (Sri Paduka Baginda )

இனி, சப்பாத்து என்பதிலும் இறுதியில் இச்சொல் உள்ளது.

சப்பை + பாத்து > சப்பாத்து.  இது ஒரு பகவொட்டுச் சொல். காலடிப் பகுதியில் சப்பையாக நிலத்தில் பதிவதான காலணி.

சப்பாத்துக்கட்டை என்றும் கூறுவர்.  இது ஒரு கள்ளி வகைக்கும் பெயராகிச் சப்பாத்துக்கள்ளி என்று கூறுவர்.

சப்பாத்துக்கள்ளிக்குப் பலகைக்கள்ளி என்றும் பெயருண்மையால்,  இதன் சப்பை உருவத் தன்மை தெரியலாகும்.

பற்று என்ற இலக்கியச் சொல்லும் பல் > பத்து என்ற அடிகளிலிருந்து வருவதே. பற்று என்பதற்கு மூலம் மக்கள் மொழியே.

"பற்றுக பற்றற்றார் பற்றினை ......."  குறள்.

மக்கள் மொழியிலிருந்து இலக்கிய மொழி கிளைத்தது. அவ்வாறின்றி ஏற்பட்ட எந்த மொழியும் வெறும் புனைமொழி ஆகும்.  புலவன் புனைந்த மொழி பேச்சு மொழியாகமல் வெறும் செத்த மொழியாக ஓலைச்சுவடிகளில் மட்டும் இருக்கும்.  தமிழின் சிறப்பு அது பேச்சு மொழி; எழுத்து மொழியும் ஆகும்.

கிளவி என்ற பதத்திற்குச் சொல் என்பது பொருள்.  ஏன் இப்பெயர்?  அது பேச்சு மொழியிலிருந்து கிளம்பிய,  கிளந்த  சொல்.  கிள் -  மேலெழு என்பது பொருள். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின் 



 

மருத்துவரிடம் சென்றோம் NOT CORONA.

{இன்றுகாலை மருத்துவரிடம் செல்ல வேண்டியதாயிற்று அன்னையை

அழைத்துக்கொண்டு. அந்நிகழ்வைத் தெரிவிக்கும் ஒரு சிறுகவிதை.} 


சிறுகுழவிப் பருவத்தில் எனைய  ணைத்தார்

இன்னமுதை ஊட்டினவர் எடுத்தே ஆட்டிப்

பலவொலியும் செவிகுளிரப் பதித்துப் பண்ணில்

பரவயமே உறவைத்தார்  அருமை  அன்னை;

விலவுதலும் கூடுவதோ ? அன்ன வர்க்கே

விலாப்புறத்து வலியாலே துடித்து விட்டார்.

குலவன்பு மொழியோடே கூட்டிச் சென்றேன்

குலைதலற மருத்துவரைக் குறுகி  னோமே.  1

 

அருஞ்சொற்கள்

விலவுதலும் -  விட்டு விலகி நிற்பதும்.  

அன்னைக்கு முடியவில்லை என்றால் பிள்ளை

உதவாமல் நிற்கமுடியாது.

கூடுவதோ - முடியுமா?

குலவன்பு -  மிகுந்த அன்புடன்.

குலைதலற -  குலைதல் அற -  மனத்திடம் குறைந்துவிடாமல்.

குறுகி -  அணுகி.


மருத்துவர்முன்:

பாசமுறு  அன்னைதனைப் பார்த்து விட்டு,

பரிந்துரைத்த படி,தாமே சூசி யிட்டார்

நேசமுற மருந்தளித்துப் பேச லுற்றார் 

நீங்களினி அஞ்சுதலை நீப்பீர் என்றே

ஓசமுற வலி நீங்க,  உளம்க  ளித்தோம்

உடன்வீடு பின்வந்தோம் உமைய ருள்தான்;

தேசமிதில் தொற்றென்பார் அதுவோ அன்று;

தேகமுற்ற சிறுநோவே யாவும் நன்றே.   2


அருஞ்சொற்கள்

சூசி = ஊசி

அஞ்சுதலை -  அச்சமடைதலை

நீப்பீர் -  விலக்குதல் செய்வீர்.

ஓசம் உற -  ( முகத்தில் ) ஒளி பெறும்படியாக.  

இந்த மகிழ்வை முகமன்றி வேறெது காட்டும்?

ஓசமென்பது ஒரு மேனிலைத் தகுதி என்ற பொருளும் உடையது.

நோய் நீங்கிடில் ஓசம் தான்.  இது ஓச்சு(தல்) + அம் >  ஓசு +அம். [ச்] இடைக்குறை 

உடன் - ஒன்றாக

நல்ல வேளையாக இது கொரனா இல்லை.


இவ்வாறு உறவினர் நண்பர்கட்குத் தெரிவிக்கிறோம். நன்றி. 



வெள்ளி, 25 ஜூன், 2021

கொடிய கூற்றத்தால் மறைந்தோர்க்கு நெகிழுரை

 படித்தலில் பார்த்தலில் பதிந்துதம் சிந்தையைப்

பறிகொடுத் தோர்பலர் போய்விட்டனர்;

உடைத்தது பொன்மனத் துயர்ந்தவர் குழுவினை

ஒப்பதில்    லாத் தீய கொடுங்கூற்றமே. 1


படித்தலில் -  இடுகைகளைப் படிப்பதில்

பார்த்தலில் -  என்ன உள்ளது என்று நோட்டமிட்டோர் செயலில்

கொடுங்கூற்றமே = கொடிய எமனாகிய  கோவிட்19 நோய்

உடைத்தது குழுவினை - நோய் உள்ளே வந்து சிலரைக் கொன்றுவிட்டது.

[ இறந்தோரை பொன்மனத்தை உடையோர் என்றும்   பொதுவான நோக்குடையோர்

என்பதால் குழுவினர் எனத் தக்கார் என்றும்  இவ்வரிகள் போற்றுகின்றன .]

[ பொது நோக்காலும் ஆர்வத்தினாலும் யாவரிடத்தும் காணப்பெறும்

தம் செயல்பாட்டினாலே குழு என்பதறியப்படுவதால் குழுவாயினர் ]

 

முன்னூறு நானூறு  முன்வந்து  பாய்ந்தவர்

முத்த  மிழ்க்கடல் முட்ட நீந்தித்

தந்நா தங்கிடத் தாம்பல கண்டனர்

தம்மொழி தழைந்திட ஓங்கிநின்றார் 2


பாய்ந்தவர் -  வலைப்பூவில் விரைந்து வந்து புகுந்தோர்

முட்ட -  முற்றவும்

தந்நா தங்கிட -  தம் நாவில் தமிழ் நிலைநிற்க.

[தம் நாவில் இவ்விடுகைகளில் உள்ள தமிழும் அதன் மூலம்

கிட்டும் அறி பொருளும் குறித்தது.]

பல கண்டனர் -  பல கருத்துகளை அறிந்தின்புற்றனர்

தழைந்திட -  தழைத்திட


முதலாம் தொற்றலை மூலை முடுக்கெலாம்

மூண்டத    னால்அதைத் தாண்டிவர

எதனா    லும் இய லாதமக்  கள்அங்கே

இறந்தனர் தாங்காத்  துயரமிதே.  3


தொற்றலை -  தொற்று அலை


இரண்டாம் அலையின் இறுதியில் வந்தவர்

இருந்தவர் தம்மில் பாதியன்றே!

உறண்டி மடிந்தோரை மறவா    தேதலை

இருகால்  பணிந்து தாழ்கின்றமே. 4



இரண்டாம் அலை -  கொரனா அலை 2

உறண்டி -  நோயினால் நலம் குன்றி

இருகால் பணிந்து -  இருகால்களையும் பணிந்து;/   இருமுறையும்

வணங்கி.  ( இரட்டுறல்)

தாழ்கின்றமே -  வணங்குகிறோம்.

இக்கவியில் தொற்று என்றது கோவிட்19  நோயை


வியாழன், 24 ஜூன், 2021

காரை, சாந்து முதலியவை [cement]

 

24.6.2021


இன்று காரை என்ற சொல்லை ஆய்ந்து உரையாடுவோம்.


முதலில் சொல்லின் பொருளைக் காணப்புகுந்தால், காரை என்பது 1. ஊத்தை, 2. ஆடை, 3. சுண்ணச்சாந்து (என்பவற்றோடு), மற்றும் செடி, மரம், மீன் இவற்றின் வகைப்பெயர்களாகவும் உள்ளது. இவற்றுள் ஊத்தை சாந்து முதலியவை கரைய அல்லது கரைக்கத் தக்கனவாய் உள்ளன. இது காரணமாக, இச்சொல்லினைப் பற்றிய ஆய்வில் வகைப்பெயர்களை விடுத்து முதல் மூன்றில் இரண்டை மட்டும் சற்று விரித்துக் காண்போம்.


கார் என்ற அடிச்சொல், கருநிறத்தைக் குறிக்கின்ற சொல். கருநிறத்தது எனப்படும் சனிக்கிரகம், காரி என்ற பெயருமுடையது. மற்றும் பிற கோள்களுடன் ஒப்புநோக்க, தனித் தன்மை வாய்ந்தது சனிக்கிரகம்; அதன் பெயரும் இதனால் வந்ததே. நடைமுறையில் தன்மை பற்றிப் பெயர் வருவது மிக்க இயல்பானதே. தகர வருக்கம் சகர வருக்கமாம் ஆதலின், தனி > சனி ஆயிற்று. கிரகம் இங்கு கோள் என்ற சொல்லுக்குப் பதிலாக வந்தாலும், அது வீடு ( சோதிடத்தில் வரும் 12 வீடுகள் ) என்னும் பொருளதே. அதை இவ்வாறு உணர்க:-


சனிக்கு + இரு + அகம் : சனிக்கிரகம் ( சனியின் வீடு என்பதாம்). இரு என்பது இருத்தல் வினை. கோள் தொடர்புற்று இருக்கும் வீடே இராசி ( இரு + ஆசு + ). கணியக் கலை, தமிழர் கலை என்பதறிக. இச்சொற்களின் அமைப்பு அதனை நிறுவி உண்மை தெரிவிக்கும்.


எடுத்துக்கொண்ட சொல் "காரை" எனினும், உண்மை உணர்த்துவதே வான் நோக்கு ஆதலின் சற்றுப் பிற திசைகளில் விரிதலில் குற்றமொன்றும் இலது காண்க.


ஊத்தை என்பது, வேண்டாதவை. நீரோடும் நெடுங்குழிவில் வீசப்பட்டவை பலவும் கரைந்து கருநிறத்தவாய்க் கிடத்தலால் காரை என்பது அதற்குப் பொருத்தமே. கரை > காரை. (முதனிலை நீண்டு தொழிற்பெயரானது.) கரை(தல்) என்பது வினைச்சொல்.


மேற்கண்ட பொருள்போல், சுண்ணச் சாந்து என்பதும் கரைத்துப் பயன்பெறுவதே ஆகும். அதுவும் காரையேயாகும்செமென்ட் என்பதைச் சீமைக்காரை என்று மொழிபெயர்த்துள்ளனர். (20th c). தரைக்காரை இணக்குக்காரை இறுகுகாரை எனினும் ஏற்புடையனவே. செவிக்கினியதைத் தேர்வுசெயதுகொள்க.


தரைக்காரை என்பதில் இது சுவர் எழுப்பவும் பயன்படுவது என்பதால் காரண இடுகுறிப்பெயர் ஆகிறது. இணக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயராகும். காரை என்பதும் தொழிற்பெயராவதால் வல்லெழுத்து மிகுந்து புணர்ந்து இணக்குக்காரை என்று வந்தது..இறுகுகாரை என்பது வினைத்தொகை.இதில் வலிமிகவில்லை.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்


புதன், 23 ஜூன், 2021

பாதுகாப்பு என்ற பதம்.

தொடங்குரை: 

ஏடெழுத்து ஏதேனும் எழுதவேண்டும் என்று எண்ணுங்கால், எண்ணிறந்தன எம்மனத்துள் இயல்கின்றன.  என்செய்வேம் யாம்! ( செய்வோம் என்பது இன்னொரு வடிவம்).   அவற்றுள் ஒன்று: பாதுகாப்பு என்ற சொல்.  இச்சொல் நாம் அடிக்கடி செய்திகளில் மற்றும் நண்பர்களிடைப் பேச்சுகளிலும் கூடச் செவிமடுப்பது ஆகும்.  

நேயர்கள் இச்சொல்லில் இரு பகுப்புகள் இருப்பதைக் காணலாம்.  ஒன்று பாது என்பது.  இன்னொன்று: காப்பு என்பது. இரண்டையும் நல்லபடியாக உங்களுடன் இணைந்தே அலசுவோம்.

இணைப்பொருட் சொற்கள்

பாதுகாத்தல் என்ற பொருளுடைய பிறசொற்களைக் காண்போம்.

ஓம்புதல்.  இது பலவகைகளில் ஒரு சிறந்த சொல்.  தொடக்கத்திலே  "ஓம்" இருக்கின்றதன்றோ.   தன்னை இறைவன்  பாதுகாக்க வேண்டுமிடத்துப் பற்றன் பயனுறுத்தும் பண்புமிக்கச் சொல்.  ஆனால் இன்று இலக்கியச் சொல்லாக மட்டுமே உள்ளது.  இறைப்பற்றுப் பாடல்களாயின் பழம்பாட்டுக்களாய் இருத்தல் கூடும். இச்சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும்,  யாம் மேலும் ஆய்வு மேற்கொள்ளவில்லை. ஆயின் தமிழிலக்கியத்தில் ஆங்காங்கு வந்துழிக் காண்க

ஓம்படை, ஓம்படுத்தல்;  ஓம்படுத்தும் ~ அல்லது பாதுகாவலுறவேண்டிப் ~  பெரியோர் சொல்வது.

புறங்காத்தல்  -  இதுவும் இப்பொருள் உடையதாயினும், இது இலக்கிய வழக்கினது  ஆகும். குடியைப் புறங்காத்தல் நம் ஒவ்வொருவருடைய கடமையும் ஆகும்.  தான் பிறந்த குடியை வெளித்தாக்குதல்களிலிருந்து காத்தல் என்பது குடிபுறங்காத்தல்.

காத்தல் என்றாலே பாதுகாப்பை(யும்) குறிக்கும் என்கிறது திவாகர நிகண்டு.

காப்பு  பாதுகாத்தல்,  பாதுகாவல் எனினுமது.  விகுதி வேறுபாடுதான்.  காக்கை என்ற சொல் ஒரு பறவையைக் குறித்தல் மட்டுமின்றி இப்பொருளும் உடையது.

கா -  இது பிறசொற்களைப் பின்னொட்டி வரும்.  எ-டு:  பூங்கா.  கடிமரக் கா .  புறநானூற்றில் "கடிமரந்  துளங்கிய கா" என்று வருகிறது.  புறம் 23.

ஆதரித்தல் என்பதும் பாதுகாப்பு என்ற பொருளில் ஆளப்பட்டுள்ள சொல்.  "இப்புலவர் குறுநில மன்னரால் ஆதரிக்கப்பட்டவர்"  என்பதில் அப்பொருளும் வாழ்வாதாரம் அளித்தவர் என்ற பொருளும் உள்ளன.

இரட்சித்தல் என்ற சொல்லிலும் இப்பொருள் தொக்கு.    இரக்கம் >இரக்கி > இரட்சி > இரட்சித்தல்.  ஒ.நோ:  பக்கி > பட்சி. அட்சரம் >  அக்கரம்.  தக்க இணை> தக்கிணை> தட்சிணை. ( குரு, பூசாரிக்குகட்குச் சம்பளமாகத் தரப்படுவது). 

அகரம் தொடங்கிச் சரமாக (வரிசையாக ) வருவது அச்சரம்.  அடுத்தடுத்து வருவது அடு + சரம் ;  அச்சரம் ( டு இடைக்குறை) என்று இருபிறப்பி.  சரம் : சரி+ அம் = சரம்,  இகரம் கெட்டுப் புணர்தல். ஒன்றன்பின் ஒன்றாய்ச் சரியாக வைக்கப்பட்டது. 

அக்கரம் -{ பல்பொருளொரு சொல்.}

அனுபாலனம்  ( அணுகிப் பாலித்தல் ).  அணுகு - அணு - அனு.  பாலித்தலாவது தம் பாதுகாவலுக்குள் ஒரு பாலாக அல்லது பகுதியாக மேற்கொள்ளுதல்.  பால் - பகுதி.   எ-டு:  அறத்துப்பால்.  அறத்தைக் கூறும் பகுதி.   பால் - பாலி - பாலித்தல்: பகுதியாய்க் கொள்ளல். (அமைப்புப் பொருள்).  பால்> பாலி + அன் + அம் =  பாலனம்.  அன் - சொல்லாக்க இடைநிலை.  அம் என்பது இறுதிநிலை அல்லது விகுதி,  இச்சொல் பரிபாலனம் என்பது போல்வது.  பரிதல் - பல்பொருட்சொல். இவற்றுள் வெளிப்படுதலுமாம். இச்சொல் பர > பரி என்ற பரவற் கருத்தும் உடைத்து.

பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப்

பாலித்திட வேண்டும்   ( பாரதி)

பத்திரம் -   "பத்திரமாகப் போய்வருக".

பரித்திராணம்பரி + திரு + அண(வு) + அம்> பரித்திரு + அணம் > பரித்திராணம்.  பரிந்து மேலான முறையில்  அணவி அமைதல்.

பாலனம் -  மேலே பரிபாலனம் காண்க

புரத்தல்  --  "இரவலர் புரவலர் நீயும் அல்லை "  (புறநானூறு).

புரவு  - " பயிர்களுக்கு நீர்ப்புரவு இல்லை"

அரக்கம் "ஒவ்வொரு நாடும் அணுகுண்டு வைத்திருந்தால்  பாருக்கு ஓர்

அரக்கம் இல்லை".  அரிய நிலை என்பது பாதுகாப்பு உடைய நிலையே.[ அரு+ அ+(கு+அம்) ]

பெட்பு - பாதுகாப்பு.  பெண்+பு = பெட்பு.  பெண் பாதுகாக்கப்படுபவள்,  விரும்பப் படுபவள் ஆதலால் இச்சொல்லிலிருந்து பெட்பு என்ற சொல்லமைந்து இப்பொருள்களைக் குறித்தது.

என்றிவ்வாறு பாதுகாப்பைக் குறிக்கத் தமிழில் சொற்கள் பலவாகும்.

பாதுகாப்பு:

பதுங்கு:  பது >  பாது  + காப்பு.

பதுங்கியிருந்து ( படைத்தலைவன் போன்றோரைக்) காப்பது. அல்லது எதிரியை வீழ்த்தி இடரற்ற நிலையை உய்ப்பது.

பார்த்தல் :  பார்த்து > பாது.  இடைக்குறை இரு மெய்கள்.   பாது + காப்பு.

பகுத்துக் காப்பு >  பகுத்து >  பாது.   பாது+ காப்பு.   பகுதி என்ற சொல் பாதி என்று திரிந்தது போலுமே பகுத்து என்பதும் பாது என்று திரியும். அரசுத் தலைவர்கள் வருகையில் அவர்கள் குழாம் பகுத்துக் காக்கப்படுகிறது.  மக்கள் கூட்டத்தை வேறாகக் காப்பர்.

மேலே பாது என்பது விளக்கப்பட்டது. இம்மூன்று வழிகளிலும் இச்சொல் அமைவுறும்.  ஆதலின் இது பல்பிறப்பிச் சொல்.

காப்பு

கணவன் தன்னை வாழ்வில் காக்க என்று மணமகள் காப்புக் கட்டிக்கொள்கிறாள். இது நூல், பொன்வளையல் என்று எதுவாகவும் இருக்கலாம்.  இறைவனிடமும் வேண்டிக் கட்டிக் கொள்ளலாம்.  இதனால் கையில் அணிவதற்குக் காப்பு என்ற பெயர் ஏற்படலாயிற்று.

நிதிக்காப்பகம் ,  பணக்காப்பகம் -  வங்கி. பணவகம் எனினுமாம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.







திங்கள், 21 ஜூன், 2021

கால் - நீட்சிக்கருத்து உருளையை மாறுகொண்ட சொல்.

 இன்று  கால் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோ.

காலுதல் என்பது ஒரு வினைச்சொல். அது நீண்டு ஓடிக் கீழிறங்குவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக,  ஒரு நீர்வீழ்ச்சியில் நீரானது நீண்டு ஓடிவந்து மேடான நிலத்திலிருந்து கீழிறங்குகிறது. " மலையினின்று கான்றொழுகும் நீர்"  என்று இதைக் குறிப்பர். சூரியனிலிருந்து கதிர் கீழிறங்குதலும்  " பகல் கான்று எழுதரும் பரிதி " என்பர் ( பெரும்பாணாற்றுப் படை 2).  இவற்றில் நீங்கள் கால் என்பதன் நீட்சிக் கருத்தை அறிந்துகொள்ளலாம்.

கால் - கான்று என்பது வினை எச்சம். கான்ற என்பது பெயரெச்சம். கான்றது, கால்கின்றது, காலும் என்பன இறந்தகால, நிகழ்கால, எதிர்கால முற்றுவினை வடிவங்கள்.

மனிதனின் காலும் விலங்குகளின் காலும் உடலிலிருந்து வெளிப்பட்டுக் கிழிறங்குவன. இங்கும் நீட்சிக் கருத்தே காண்கிறோம்.

காற்றும் நீண்டு வீசுவதுதான்.  கால் என்ற பெயர்ச்சொல்லிலிருந்து கால்+து > காற்று என்று சொல் அமைகிறது. நேரம் என்பது குறுகிய காலம்.  ஆனால் கால் > காலம் என்பது நீண்டு செல்லும் பொழுது ஆகும்.

காலம் என்பது எதற்கும் காத்திருப்பதில்லை. அது ஓடிவிடுகிறது.  நேற்றைப் பொழுது இப்போது எங்கே?  அது தொலைந்துவிட்டது.  யாரிடமாவது வீண்வாதம் செய்துகொண்டிருந்திருந்தால், காலம் ஓடியிருக்குமே.... அந்தக் காலம் போனது போனதுதான்.  இதனால் ஆங்கிலப் பழமொழி Time and tide waits for no man " காலமும் கடற்பெருக்கும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை"  என்று வருகிறது.   அம் விகுதி பெறாமல் கால் என்ற அடிச்சொல்லும் காலம் குறிக்கும்.

" நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா"  

என்ற ஒளவையின் பாடலில் கால்  என்பது செய்த காலம் அல்லது பொழுது என்னும் பொருளில் வருகிறது. இங்கு இது ஓர் உருபு ஆகும்.

பேச்சுமொழியில் கால் என்பது வரும்.  " அவரு வந்தாக்க எங்கிட்ட சொல்லு: என்பது  உண்மையில் வந்தக்கால் என்பதே ஆகும்.  எழுத்துமொழியை நோக்க "வந்தாக்க" என்பது சிதைவு.  கால் என்பது  ~க  என்று சிதைந்துவிட்டது.  கா என்னும் எழுத்து க என்று குறுகியும் கால் என்பதில் லகர ஒற்று கடைக்குறையாகியும் வந்தன.  நம் பழைய இலக்கணங்கள் இவற்றைக் கண்டுகொள்ள மாட்டா.  தமிழின் எல்லா நூல்களும் கிடைக்காமல் போய்விட்டால்,  க என்ற எழுத்தை வைத்துக்கொண்டு அது கால் என்பதன் திரிபு என்று கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. எந்த ஆய்வாளருக்கும் கடினமே.

வண்டிக்கால்கள்

வண்டிகளுக்கு ஒரு காலத்தில் சக்கரம் இல்லை. அதை தாங்கிக்கொள்ள நாலு அல்லது இரண்டு கால்கள்  வண்டிகட்கு  இருந்தன.  இவை வண்டிக் கால்கள் அல்லது சகடக் கால்கள்  எனப்பட்டன.  பின் வண்டி "அறிவியல்"  வளர்ந்து,  உருளைகள் வந்த காலத்திலும் அந்த உருளைகளைக் கால்கள் என்றே குறித்தனர்.  நீட்சிக்குப் பதிலாக வளைவு வந்துவிட்டாலும் பெயர் அதுவாகவே இருந்தது.  நாலடியாரில் இது " சகடக் கால்" என்று குறிக்கப்பட்டது.  இப்போது வண்டிக்கால் என்றாலும் அது மாட்டுவண்டி குதிரை வண்டி முதலியவற்றின் உருள்சுற்றிகளையே குறிக்கின்றனர்.  உந்துவண்டியின் ரோடாக்கள் அவ்வாறு குறிக்கப்படுவதில்லை. 

ரோடா என்பது பக்கப் பட்டியலில் உள்ளது.  கண்டுகொள்க.

நீட்சிக்கருத்துடைய கால் என்ற சொல்,  நாளடைவில் உருட்சிப்பொருளைக் குறிக்க வளர்ந்தது உண்மையில் ஒரு பொருள்திரிபே ஆகும்.   ஆனால் இயல்பாகவே இரு பொருளையும் குறித்தது என்று அகரமுதலி வரைவோர் அலட்டிக்கொள்ளாமல் பட்டியலிட்டனர். யாரும் ஏன் என்று விளக்கினார்கள் இல்லை. மரப்பட்டையைக் குறித்த சீரை என்பது சீலை என்று திரிந்து அணியும் நீள்துணியைக் குறித்ததும் இவ்வாறானதே என் க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

ஞாயிறு, 20 ஜூன், 2021

நம் இனிய நேயர்கள்

 உழையென் றுழைத்தோர் இடுகைமுன் வைத்துப்

பிழையொன் றிருந்தாலும் பேசார்----- குழைவின்றி

நம்நேயர் சென்றிடுவார் நன்றல சுட்டாரே

எம்நாளும் செல்லும் இனிது. 


உழையென் றுழைத்து -  கடினமாக வேலைசெய்து;

இடுகை முன் வைத்து -  ஓர் இடுகையை வெளியிட்டு;

பிழையொன் றிருந்தாலும் =   பிழை ஒன்றோ காணப்பட்டாலும்;

பேசார் -  தம்முள் அதுபற்றிப் பேசிக்கொள்ள*  மாட்டார்கள்

குழைவின்றி  -  மன வருத்தம் இல்லாமல்;

நம் நேயர் சென்றிடுவார் -   நம்  வலைத்தள அன்பர்கள் போய்விடுவார்கள்;

நன்றல -  அப்பிழைகளை;

சுட்டாரே - எழுதியவரிடம்  எடுத்துக்காட்ட மாட்டார்கள்:

எம் நாளும் - எங்கள் காலமும் 

இனிது செல்லும்-   கசப்பு இல்லாமல்  போகும்.

( பின்  என்றாவது அதைக் கண்டு திடுக்கிட்டுத் திருத்துவோம் )

என்றபடி

மெய்ப்பு பின்னர்.

* இந்தக் குறியிட்ட பதங்கள் அழிக்கப்பட்டு,

கண்டு மீண்டும் புகுத்தப்பட்டன. 21062021   1033

Remarks: Hacked . restored 

சகடு, சகடை, சாகாடு,( வண்டிகள்)

சக்கரம் என்ற சொல் ஆய்ந்து தெளிவுறுத்தப்பட்டது.  அதற்கான இடுகையை இங்குக் காணலாம்:

 சக்கரம் , இரதம் :

https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html

சக்கரம் :

https://sivamaalaa.blogspot.com/2020/08/blog-post_28.html

சக்கரம் என்ற தமிழ்ச்சொல் அயலிலும் சென்று வழங்குவது.  சக்கரதாரி -  சக்கரத்தைத்  ஆயுதமாகத் தரித்தவர்.   தரி - தரித்தல்  > தாரி. முதனிலை நீண்ட தொழிற்பெயர்.

தரித்தல் என்பது அணிதல் என்று பொருள்படும்.  தரித்தல் என்பது அணிதல் என்பதே வழக்கில் பொருள் என்றாலும் ஒருவன் ஒன்றைத் தரிக்குங்கால்,  அவன் அதில் காட்சியளிக்கிறான்,  காட்சி அளித்தல் - காட்சி தருதல்.  எனவே தருதலுக்கும் தரித்தலும் உள்ள தொடர்பினை அறிந்துகொள்ளலாம்.  தரு > தரி .தரித்தல் எனச் சொல் பிறந்தது.

சகடம் என்பது சகடு என்றும் அம் விகுதி இல்லாமல் இன்னொரு வடிவத்தில் தோன்றும்.  

மடி - மரி என்ற திரிபு விதிப்படி, டகர ரகரம் ஆகும்.

அரு என்பது அடுத்துச் செல்லுதலுடன் பொருள் தொடர்பு கொண்டது.   அருகில் என்பது அடுத்து என்று பொருள்தருதல் அறிக.  அருகுதல் என்றால் குறைதல் என்று பொருள்தரும்.  அடுத்துச்செல்லுங்கால் செல்பவனுக்கும் சென்றடையும் தொலைவுக்கும் உள்ள இடைவெளி அருகுகிறது  அல்லது குறைகிறது என்பதை அறியவும். டு - று பொருள் அணிமையும் தழுவலும் காண் க.  தொலைவு குறுகுதல் அடுத்தல் என்பது குறிக்கும்.

எனவே சக்கரம்  ( சறுக்கரம் ) ,  சகடம்  ( சறுக்கடம் )   என்பவற்றோடு  சகடு என்பதன் அணுக்கம் காண்க.  சறுக்கு +  அடு என்பதில் அடு என்பதில் விகுதி இல்லை.  அடுத்தல் என்ற பொருளில் முதனிலைத் தொழிற்பெயர் .  இனி அடு என்பது ஐ தொழிற்பெயர் விகுதி பெற்று முடியவும் பெறுமாதலின்,  சகடை என்ற சொல்லும் ஆகி வண்டியையே குறித்தது.  

இனிச் சகடு என்பது சாகாடு என்றும் சகரம் நீண்டும்  அடு என்பது முதனிலை நீண்டு ஆடு என்றும் பெயராம். இச்சொல் வந்த குறள் நீங்கள் அறிந்ததே.

" பீலி பெய் சாகாடும் அச்சிறும்..." (குறள்).

ஊர்தி தொடர்பான இச்சொற்கள் பல்வேறு வடிவங்களில் மொழியில் தோன்றுதலானது, இவை பழங்காலத்தில் பெரிதும் வழங்கப்பட்டன என்பதையே காட்டுகிறது.

வண்டி என்ற சொல் வளைந்த உருளையைக் கொண்டதாகிய ஊர்தி என்ற பொருளைத் தருவது.  வள் -  வளைவு.  வள் + தி >  வண்டி.  ஒப்பு நோக்குக:  நள்+து > நண்டு. ( இதற்கும் ஓர் இடுகை விளக்கம் உள்ளது).

வளைவு :  வண்டி என்பதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு:  

வாங்கு + அன் + அம் > வாங்கனம் > வாகனம்.  

வாங்கு என்பது  வளைவு,   வாங்கரிவாள்,   வாங்குவில் தடக்கை ( பு.வெ.மாலை).

சகடம் வண்டி இந்தச் சொற்களில்  பின்னது  காலத்தால் பிற்பட்ட சொல் என்க. வளைசுற்றி  அல்லது உருளை என்பது பின்னரே அவ்வுருவை அடைந்த பொருள்.  சகடம் என்பது  தாங்குருளை  சுற்றுருவை    அடையுமுன் இருந்தது.  சுற்றுரு முழுமையுடன் அதன் பயன்பாடும் வளர்ச்சி  அடைந்தபின் சிலகாலம் செல்ல,   சகடம் என்ற சொல் பேச்சுவழக்கிறந்து விட்டது. அதன் பொருளை வண்டி என்ற சொல்லே உணர்த்திற்று. வாழும் சொல் வண்டி எனினும் இற்றை நிலையில் அது நீடிக்குமா என்று தெரியவில்லை. நீடிக்கவேண்டும் என்பது எம் அவா.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

  


வெள்ளி, 18 ஜூன், 2021

நண்டு பெயர் எப்படி வந்தது?

இதை வெகு சுருக்கமாகவே சொல்லிவிடுவோம்.  

நண்டின் உடம்பைப் பார்த்தால் அது இரு கூறாக இருக்கும்.  கீழ்ப்புறத்தில் ஓட்டில் நடுவில் ஒரு குழிவான கோடு இருக்கும்.  கோவணம் போன்ற மூடிய பகுதியும் இருக்கும்.

தமிழில் நள் என்பது நடு என்று பொருள்படும்.  நள்ளிரவு என்றால் நடு இரவு.  நள்ளாறு என்றால் நடு ஆறு.  நண்ணிலக்கோடு -  equator. ( பூமத்திய இரேகை என்பதும் உண்டு).  நண்ணிலக்கடல் - Mediterranean sea.

நள்+ து >  நண்டு  ஆயிற்று.   நடுப்பிரிவுக் கோடு உடைய உயிர். 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்,

திருத்தப் பார்வை: 21062021 1220


நண்டுக்குள் ஒரு குன்று .....

 நண்டு என்பது  நீர்,  நிலம் என ஈரிடவாழ் உயிரி ஆகும்.  நண்டு என்பது ஞண்டு என்றும் எழுதவும் பேசவும் பட்ட சொல்.  இத்திரிபு  ( ந > ஞ) நயம் -  ஞயம் என்பது போலவே யாம்.  "ஞயம்பட உரை"  என்ற ஓளவையின் அமுதம்  நீங்கள் அறியாததன்று.

நண்டுக்குள் கை, கால், சதை, ஓடு இவையெல்லாம் உள்ளது.  ஆனால் அதற்குள் குன்று ஒன்று மறைவாக இருப்பதை நீங்கள் அறியீர்  என்பது எம் துணிபு  ஆகும்.

இதை அறிந்துகொள்ள, எகுன்று என்ற சொல்லை  ஆய்ந்திடுவோம்.  இச்சொல்லில் இறுதியில் நிற்கும் பகுதி  "குன்று" என்பது.  குன்று என்பது ஒரு சிறுமலையைக் குறிக்கும்.  குன்று என்பது அம் விகுதி பெற்று, குன்றம் என்றும் வருதற்பாலது.  எடுத்துக்காட்டு:  திருப்பரங்குன்றம்.

எகுன்று என்பதற்கு  "நண்டுக்கண்"  என்று பொருள்.  நண்டு என்றவுடன் தொலைவில் நிற்கும் நமக்கு இச்சொல் பழக்கமில்லாமல் இருக்கலாம். நம் வட்டாரத்திலும் புழக்கமும் இல்லாமல் இருக்கலாம். நண்டுகளை அடிக்கடி பிடித்துப் பழகியவர்களுக்கு இது நன்கு தெரிந்திருக்கும்.

எகுன்று என்ற நண்டுக்கண்ணுக்கு இன்னொரு பெயரும் உண்டு.   அதுதான் " குன்றி"   என்பது.   இச்சொல்லுக்குப் பிற அருத்தங்களும் (அர்த்தம்)  உள்ளன.

நண்டுக்கண் நண்டுக்கு வேண்டும்போது வெளியில் சற்று நீட்டி  எதையும் பார்ப்பதற்கும் வேண்டாதபெழுது உள்ளிழுத்துக் கொள்ளவும் ஆன திறம் பெற்றது .  வெளிநீட்சியிலிருந்து குன்றுவித்து  ( குறுக்கி) உள்ளே பதிந்து கொள்ளும் அதன் வல்லமையினால் அதற்குக்  குன்றி என்ற பெயர் வந்தது.

குன்றுதலை உடைய எதுவும் விரிந்துதான் பின் குன்றும்.  இல்லையேல் குன்றுதல் என்ற சொல் அந்த நிலைக்கு பாவிக்கப்படாது..1.  ஆகவே விரிவும் சொல்லமலே அதிலடங்கிவிடுகிறது.

ஆனால் சிலர் இந்தக் குன்றுதல் எழுதலின்பின் நடக்கிறது என்று தெளிவுபடுத்த இன்னொரு சொல்லைக் கையாண்டனர்.  அது எழுகுன்று.  நண்டுக்கண் எழுவதும் குன்றுவதுமாக உள்ள உறுப்பு -  எனவே  எழு குன்று ஆகிறது.  இது இருவினையொட்டுப் பெயர்  அல்லது இரு முதனிலையொட்டு.

எழுகுன்று என்பது ழுகரம் இடைக்குறைந்து,  எகுன்று ஆயிற்று.  

இடை வரும் ழுகரம் குன்றிய இடைக்குறைச்சொற்கள் பல தமிழில் கிட்டும்.  சுருக்க விளக்கமாக, ஒன்று காட்டுவோம்:

விழு + புலம் >  விழுபுலம் >  விபுலம்.

இங்கு விழு என்பது சிறப்பு என்னும் பொருளது.

வேறு எழுத்துகளும் குறைவதுண்டு.  எ-டு:

தப்புதல்  தாரம் (  தாரம் தப்புதல் )  >  தப்பு+ தாரம் > தபுதாரம் .

இச்சொல் தொல்காப்பியத்தில் உளது. கண்டுகொள்க.

ஆகவே எழுவதும் குன்றுவதுமாகிய நண்டுக்கண் எகுன்று என்று பெயர் பெற்றது இனிதே ஆயிற்று.

எழுங்கால் அக்கண்  ஒரு குன்றுபோன்றது என்று நீங்கள் விளக்க நினைத்தாலும் அதுவும் சற்றுப்பொருத்த முடைத்தே யாகி, நண்டுக்குள் ஒரு குன்று என்ற தலைப்புக்கு ஒரு வன்மை சேர்க்கவே செய்யும் என்பதும் அறிவீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்பு.

குறிப்பு

1. பரவு > பாவு > பாவி(த்தல்).  காட்சிக்கு மட்டுமுள்ள ஒரு பொருள் பயன்படுத்தப் படுமானால்,  அதனை மனிதன் கையாளுதல் நிகழ்ந்து  செயல்பாடு பாவுதல் - பரவுதல் . பாவித்தல் நிகழ்கிறது.  அதனால் பாவித்தல் என்பது பயன்படுத்தல் என்ற பொருளை உறழ்கிறது. 

  

வியாழன், 17 ஜூன், 2021

சமத்கிருதத்தில் தமிழ்ச் சுட்டடிச் சொற்கள்.

 தமிழில் பெரும்பாலான சொற்கள் சுட்டடியில் தோன்றியவை எனபதில் ஆய்வுவல்லோர் வேறுபடவில்லை.  நம் இடுகைகளில் சுட்டடிச் சொற்கள் மூலமாக வரும்போதெல்லாம் அவ்வுண்மையைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை,  நீங்கள் அறிந்த ஒன்றிரண்டு சொற்கள் தவிர.  தமிழினோடு பலவகைகளில் ஒத்தியங்கும் சமத்கிருதத்தில் சுட்டடிச் சொற்களின் ஆட்சி தெளிவாகவே முன் நிற்கின்றது.

அ, இ, உ என்பவை சுட்டெழுத்துக்கள்.  அஃறிணை ஒருமையில் இவற்றோடு து விகுதி இணைக்கப்படும்.  மூன்று சுட்டுக்களுக்கும்,  அது, இது, உது என்று வரும். பன்மையில்  அவை, இவை, உவை என்று வரும்.

 பிறைக்கு முன்னுள்ள நிலவு  உவா எனப்படுகிறது. இதுவும் ஒரு சுட்டடிச் சொல்லே ஆகும். அதுவே அமாவாசை என்று சொல்கிறோம்.  பின்னரே நிலவு படிப்படியாக வளர்ந்து இறுதியில் முழு நிலவாகிறது.  அமாவாசை என்பதன் முழுவிளக்கம் இங்கு உள்ளது.  அதைச் சொடுக்கி வாசிக்கலாம்.

அமாவாசை  https://sivamaalaa.blogspot.com/2016/01/blog-post_24.html

பேச்சுச் சொல்  https://sivamaalaa.blogspot.com/2018/04/blog-post_17.html

இப்போது எப்படி சுட்டுச்சொல் சங்கதத்தில் வருகிறது என்று பார்ப்போம்.

நந்தனுதே

ஜிஷ்ணுனுதே

பூரிக்ருதே

ஷைலஸுதே

இவ்வாறு வருவனவற்றை : (விளிவடிவம் )  எ-டு:  நந்தன்+உதே  என்று பிரிக்கலாம்.  பிறவும் அத்தகையனவே. வேறு முடிபுகளும் உள.

உது என்ற சொல்  ஏகாரம் பெற்று உதே என்று வந்தது.  அம்மொழிப் புலவர் இவ்வாறு பிரித்துக்காண்பதில்லை. உண்மை உணர்த்திச் சுட்டடிகள் அங்கும் புகுந்துள்ளன என்று அறிவுறுத்த இவ்வாறு காட்டினோம்.

தமிழ்ப்பேச்சிலும் இது உது என்னும் சுட்டுச்சொற்களைக் கேட்கலாம். 

"யாரோட கைக்குட்டை?"

" இது  ங்கொப்பனுது"  என்ற பதிலை நோக்குங்கள்.

உகரச் சுட்டு முன் என்றும் பின் என்றும் இரு பக்கங்களையும் குறிக்கவரும். "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்ற திருக்குறள் தொடரில் அது பின்பக்கம் குறித்தது.  உவா என்ற சொல்கூட, அமாவாசையைக் குறிக்கிறதா அல்லது முழுநிலவைக் குறிக்கிறதா என்பதை இடன் கண்டு அறியவேண்டும்.   இடம்= இடன்.  பகு+ அம் = பக்கம் என்றும் பகம் என்றும் இருவகையிலும் வரும்.  தகு+ அ = தக்க என்பதுபோல் இரட்டிக்கும் என்றும் அறிந்துகொள்க.  தகு+ அ > தக என்பதுமாம்.  இவை புணரியலுள் கூறப்படும் நிலைமொழி வருமொழிப் புணர்ச்சிகள் அல்ல.  ஈற்று அகரம் வருமொழியன்று. இவண் மொழி என்பது முழுச்சொல். இதை உணரவேண்டும்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்/

புதன், 16 ஜூன், 2021

கொரோனா நேரத்தில் உணவுகள்




உங்கள் டாக்டரைக் கேட்டு நடைமுறைப் படுத்தவும்

என்னை நோய்வராமல் காப்பாற்று

( ஒரு பற்றன் அம்மனிடம் வேண்டுவது.  இங்குக்

கடைக்கணித்தல் என்ற பதம் பயன்பாடு காண்கிறது). 


அம்மா-க  டைக்கணிப்பாய் அணைத்துக்கொள் என்னை;

ஆண்டருளே நோயினின்றே அகலவெனை வைப்பாய்!

இம்மா-நி லத்தவர்கள் தும்முதல்செய்    கின்றார்

இருமுகிறார் ஈயென்ன சளியைவழிக் கின்றார்

சும்மாவே  வீட்டினிலே வைகுதலைச் செய்யார்

சுற்றிவரு கின்றவரைச் சுருட்டியிருத் திட்டால்

எம்மாநோய் என்றிடிலும் எனையணுகல் மேவா(து)

இதைஎனக்கு  நயந்திடுவாய் இடறலறச் செய்யே.


அரும்பொருள்:

அம்மா கடைக்கணிப்பாய் -  அம்மா கடைக்கண் பார்ப்பாய்

அகலவெனை -  அகல என்னை

இம்மா நிலத்தவர் -  நாட்டினர்

ஈ என்ன -  ஈ என்ற ஒலியுடன்,

வைகுதல் - தங்குதல் ஓரிடத்து;

சுருட்டி இருத்திட்டால் -- சுருட்டி இருத்து,   இட்டால்

எம்மா நோய் -  எவ்வளவு பெரிய நோய்

நயப்பதிலே -  தருவதிலே.

இடறலற -  நான்  இடறுதல் இல்லாமல்.

எழுத்து மொழியும் பேச்சு மொழியும்

 சமஸ்கிருதம் போலும் மொழிகளில்  பேச்சுமொழி என்று ஒன்று தனியாக இல்லை.  பேசுவதாய் இருந்தால் எழுத்தில் எப்படி இருக்கின்றதோ, அதேபடிதான் பேசவேண்டும்.  சிதைத்துப்பேசினால் அது வழுவென்று ஒதுக்கப்படும்.  ஆனால் தமிழிலே  பேச்சுமொழி  தனியாக இலங்குகின்றது.  சென்ற நூற்றாண்டிலும் அதற்கு முன் வாழ்ந்தவர்களும் இதைக் கொச்சை என்றனர்.  

 ஆட்டின்மேல் அடிக்கும் நாற்றத்தைக் கொச்சைநாற்றம் என்பதிலிருந்து கொச்சை என்பதன் உண்மைப் பொருளைக் கண்டுகொள்ளலாம்.   கொச்சு என்பது குழந்தை என்னும் பொருளதும்  ஆகும். ( குழந்தையை நல்லபடியாக குளிப்பாட்டி உரிய நறுமாவு பூசி உடுப்பிட்டுத் தொட்டிலில் கிடத்தினாலே ஏற்க இயலும் என்பதும் கருத்தாகலாம்).  கொச்சை என்பது இடக்கர் அன்று. (கெட்ட வார்த்தைகள் அல்ல ).

கொச்சை என்றால் திருத்தமற்ற பேச்சு என்று பொருள். திருத்தமின்மை என்று நினைத்ததால்  அது இழிதக்கது என்று முடிவு செய்தனர். இதற்கு மொழிநுல் அடிப்படை ஒன்றுமில்லை.  கோடிக்கணக்கான மக்கள் பேசும் ஒரு மொழியை எப்படி இழிதக்கது என்று இவர்கள் மிகு துணிகரமாகச் சொன்னார்கள் என்பது ஒரு புதிராக உள்ளது.  இதற்கு ஒரு காரணம் சொல்லவேண்டுமென்றால்  தாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த சொல்வடிவங்கட்கு இப்பேச்சுச் சொல் வடிவங்கள் வேறாக இருந்தன என்பதுதான்.   ஆனால் வேறாக இருந்ததும் எழுத்துமுறைக்குள் அடங்காமையும் ஒன்று இழிதக்கது என்று முடிவுசெய்யப் போதுமான காரணங்கள் ஆகமாட்டா.

உலகில் வரிவடிவம் இல்லாத மொழிகளும் இருக்கின்றன.  அதாவது அவை ஒலிவடிவில் மட்டுமே உள்ளன.  ஒரு மொழி ஒலிவடிவில் மட்டும் இருப்பதில் இருக்கும் இழிவுதான் என்ன?  மலாய் ஒலிவடிவில் அருமையாக இயங்கும் மொழி. பின்னர் எழுதிவைக்க நேர்ந்ததால்,   உரோமன் எழுத்துக்களையும்  அரபி எழுத்துக்களையும் (ஜாவி)  பயன்படுத்தி வரிவடிவாக்கினர்.  மலேசியாவில் அது அரசு மொழியாக உயர்ந்த தகுதியில் கோலோச்சுகிறது.. உயர்வு இழிவு என்பதெல்லாம் ஒரு மனிதனின்  எண்ணத்தளவிலானது;  வேர்ப்படையற்ற வெறுமை  உடையதுதான்.  " தூர் இற்று இன்று அன்ன தகைத்து  ( நாலடியார்  138)"  என்று அதை வருணிக்கவேண்டும்.   இற்று - துருப்பிடித்தது ஆகி;   இன்று -   இல்லையான ;  அன்ன - அதுபோல்;  தகைத்து - தன்மையை உடையது .  

சில சிறந்த தமிழாசான்களும் இத்தகு கருத்தினை உடையவர்களாய் இருந்தனர். அவர்கள் காலத்தில்  அது ஏற்றுக்கொள்ளப்பட்டது.  ஆனால் இன்று அக்கருத்து ஏற்புக்குரித்தன்று  என்பது தெளிவு. 

மக்கள்மொழி என்பது மக்களாட்சியின் ஓரமைப்பு  ஆகும்.  அம்மொழியில் பேசிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டுதான்  மக்கள் எதையும் தீர்மானிக்கின்றனர் என்பதால் அதை இழிவென்று சொல்வது மக்களாட்சிமைக்கு ( ஜனநாயகத்துக்கு) ஒத்துவராத கருத்தாகும்.  அத்தகு கருத்துகள் கொண்டிருத்தல் ஒரு காலவழுவாகும்.

மலையாளமொழி முழுமையாக அப்போதிருந்த   அவ்விடத்துப் பேச்சுமொழியை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததாகும்.   பேச்சுமொழியின் அழகில் மனத்தைப் பறிகொடுத்த எழுத்தச்சன் என்னும் புலவனால் வெற்றிப்பின்னணியுடன் முன் கொணர்ந்து அது  நிறுவப்பட்டது என்பதை மறுத்தற்கில்லை.  எழுத்துமொழியை  அடிப்படையாகக் கொண்டு பேச்சுமொழியில் அது தவறு, இது தவறு என்று சொல்லிக்கொண்டிருந்த புலவர்களை அவன் அப்பால் கடத்திவிட்டான்.  பையவே காணின், இது ஒரு பசும் புரட்சியே  ஆனது.

தமிழின் இனமொழிகள் தனிநாயகிகளாக மலர்ந்ததும் இவ்வாறுதான்.

எனவே அறிவுடைப் புலவன் என்போன்,  எழுத்துமொழியை அதிலுள்ள எழிலுக்கும் இயைபுக்கும் போற்றுவான்.  பேச்சுமொழியை  அதிலுள்ள எழிலுக்கும் பயன்பாட்டுக்கும் தலைமேற்கொள்வான்.  பயன் தெரிவோன் இரண்டனுக்கும் உள்ள தொடர்பினையும்  அறிவான். ஒன்று மற்றொன்றுக்கு உதவியதும் காண்பான்.  ஒலிகள் இயற்கையில் உள்ளன.  தெளிந்த அறிவினோன்  நாய் குரைப்பதும் பறவையின் பாட்டும் ஒன்றென்றே தரம் காண்பான்.  இவையனைத்தும் இறைவன் ஏற்றுக்கொண்ட அல்லது தந்துதவிய ஒலிகள்  அல்லது இயற்கை ஒலிகள். இவற்றுக்கு இழிவில்லை.  அழிவுமில்லையென்னலாம் -  உலகு அழிகாலம் உண்டேல் அது நிகழும்வரை. உம்மையும் கடந்து காலம் வருமட்டும் அழிவின்றி நிற்கும் எதையும் இழிவென்று உரைக்க எமக்கும் உமக்கும் நிற்புணர்வும்1 இல்லை. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.


குறிப்பு:

1    நிற்புணர்வு >  நிற்புணர் >  நிபுணர் > [ நிபுணத்துவம். ]  (நிலையை உணர்கின்ற தன்மை.)

திங்கள், 14 ஜூன், 2021

காண்தருவம் காந்தருவம் (மணம்)

தொடங்குரை:

 தமிழ்மொழியானது  மிக்க நெடுங்காலம் பேச்சுமொழியாக இருந்துள்ளது. இன்றும் இலக்கிய வழக்கில் உள்ள சொற்களுக்குப் பேச்சு மொழியிலிருந்து தொடர்பும் பொருளும் கிட்டுகின்றன.  இது தமிழின் சிறப்புகளில் ஒன்றாகும். தமிழ்ச்சொல்லின் பொருளைத் தீர அறிந்துகொள்ள அதன் உலக வழக்கினை ஆராய்தல் பேருதவியாக உள்ளது.  

உலக வழக்கின் திறம்:

இதற்கு ஓர் எடுத்துக்காட்டினைக் கூறலாம்.  தமிழ் என்று ழகரத்தை நாவினால் உளைப்பதற்கு இயலாத படிப்பறிவில்லாதவன் ஒருவன்,  தமில் என்று சொல்கிறான்.  அவனுக்கு ழ் என்ற எழுத்தை  நாவேற்றுதற்கு இயலவில்லை.  இந்தச் சொல்லை மூலமாக எடுத்துக்கொண்டு, அறிஞர் கமில் சுவலபெல்,  தம் + இல்  மொழி என்று மேற்கொண்டு,  இல்லத்து வழங்கிய மொழி என்பதே அப்பெயரின் அர்த்தம் என்று முடிவு செய்கிறார்.   

தமிழர்கள்  றகரம் இரட்டித்து  வருதலைத்  முறையாகப் பலுக்கினார்களில்லை. சிற்றம்பலத்தைச் சித்தம்பரம் என்று உச்சரித்தே, இடைக்குறைத்துச் சிதம்பரம் என்று ஊர்ப்பெயர் ஆக்கினர் என்று சொல்லின் செல்வர்  ரா. பி. சேதுப்பிள்ளை முடிக்கிறார்.   சிதம்பரம் என்னும் சொல் வழக்கிலிருந்தே நாம் அறிந்துகொள்ளுமாறு வரலாறு அமைந்துள்ளது காணலாம்.

தொல்காப்பியர் வழக்கு செய்யுள் இரண்டையும் ஆய்ந்தார்.  வழக்கு இரண்டு வகைப்படும். உலக வழக்கு, செய்யுள் வழக்கு என.  எனவே பேச்சு மொழியை உள்ளடக்கியதே உலக வழக்கு. அதை முற்றிலும் விலக்கிவிட்டு ஆய்வு செய்கிறோம் என்று சொல்லுதல் அறியாமையிற் பெரிதென்பதை  நுட்பமாக அறிந்துகொள்ளலாம்.

தமிழுலகின் விரிவு

தொல்காப்பியர் காலத்தில் கவிஞர்கள் பாவலர்கள் பலர் இருந்திருப்பர். தன் சிற்றூரில் வாழும் ஒரு கவிஞன் ஒரு பாடலை இயற்றி,  உழுதுகொண்டிருக்கும் போதோ வண்டி ஓட்டும்போதோ பாடலாம்.  அதை வெளிப்படுத்தி உலகினர் சுவைக்கும்படி செய்வதற்கு இருந்த வசதிகள் மிகவும் குறைவு.  அவன்றன் ஊராட்சியாளன் பாப்பற்றனாய் இருந்தால்  அவன் சமைத்துண்ணக் கொஞ்சம் நெல் ஈந்து புரப்பான் (ஆதரிப்பான்). அவனைவிடப் பெரிய நிலக்கிழானைத் தேடிப் போகவேண்டும்.  அப்போது ஒருவேளை ஒரு வாரத்துக்கு உள்ள உணவு கிடைக்கும்.  "உலக வழக்கு என்பதை பாவலர்களையே குறித்தது, மக்களைக் குறிக்கவில்லை"  எனின், ஊருக்கு ஒருவனாக இருந்த பாடலர்களின் மொத்தத் தொகை 50 அல்லது 100 என்றால்,  தமிழுலகு என்பது அவ்வளவுதானா? பரங்குன்றில் ஒரு பாடலன் இருந்தானாம்.    (தேவாரம் 876.1).  அவன் முருகனாக இருந்திருப்பான். அவன் மனிதனானால் பரங்குன்றம் அனைத்துக்கும் பாடலன் ஒருவன் தான் என்று பொருள்படும். அல்லது பா இயற்றுவோர் ஓரிருவர்  அங்குச் சென்று பாடிவிட்டு இறையுணவு (பிரசாதம் ) உண்டு திரும்பி இருப்பர். ( பாடல் பெற்றவன் முருகப் பெருமான் என்று வைத்துக்கொள்ளுங்கள். மறுப்பொன்றும் இல்லை ).  எனவே உலக வழக்கு  என்று சொன்னது மக்கள் மொழியைக் குறித்ததென்பதில் ஐயமொன்றும் இல்லை. ( கருத்தை மறுத்துப் பின்னூட்டம் செய்க. ) அது பரவலாக எழுத்திலாயினும் பேச்சிலாயினும் பயன்பட்ட மொழி.

காந்தருவம் என்ற சொல்.

காந்தருவம் என்ற சொல்லை இன்று ஆராய்வோம்.  காந்தருவ மணத்தில் ஆடவனும் பெண்ணும் பெற்றோர் ஏற்பாடும்  அறிதலும் யாதுமின்றி, காதல் வயப்படுகின்றனர்.  பின்னர் யாரிடமும் அறிவிக்காமலே மணந்துகொண்டு சகுந்தலை போல் வாழ்க்கையைத் தொடங்கிவிடுகின்றனர்.  இத்தகைய மணத்தைப் பழைய இலக்கியங்கள் காந்தருவம் என்று குறிக்கின்றன.

காந்தருவம் என்பதைச் சில வகைகளில் ஆராய்ந்து வெவ்வேறு முடிவுகளை எட்டலாம்.  சில நூல்களிலும் பிறராலும் சொல்லப்படுவன  அவை.  இவற்றுள், யாம் கண்டு விதந்து முன்வைப்பது இதுவாகும்:  வருமாறு.

காண்  தருதல்  -  கண்டவுடன் தன்னைத் தந்துவிடுதல். மணந்தோர் இருவரும் அவ்வாறு ஒருவரை ஒருவர் தந்து இணைகின்றனர்.

காண்தரு + அம் >  காண்தருவம் > காந்தருவம்.

அதாவது கண்டதும் காதலும் மணமும்.

அடங்குரை

இச்சொல் தமிழ் மூலங்களை உடையதாகவே முன் நிற்கின்றதென்பதை அறியலாம்.

இதை முன்னும் சொல்லியுள்ளோம். அவ்விடுகை இங்குக் கிட்டவில்லை.

காந்தம் என்ற சொல்லுடன் தொடர்புறுத்துதல் கூடுமெனினும் அது அணிவகையாய் முடியும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.. 


ஞாயிறு, 13 ஜூன், 2021

கம்பி - சொல்லமை நெறிமுறை

முன்னுரை 

ஒருவன் ஒடிப்போனான் என்பதைக் குறிக்கக் "கம்பி  நீட்டிவிட்டான்"  என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.  கம்பி என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. 

கம்பியும் கம்பும்

இது கம்பு என்ற சொல்லுக்கு உறவான சொல்லாம்.  உருண்டு நீட்சியாக உள்ள மரத் தடியைக் கம்பு என்பர்.  ஆனால் இது மட்குவதும் உடைவதும் எளிதில் நடைபெறும்.  இரும்பு பயன்பாட்டில் வந்த பின்னர்,  மரக்கம்புகள் போலவே உருண்டு நீண்ட இரும்புக் கம்பிகள் வந்தன,  இவை நீண்ட நாட்கள் இருக்கக் கூடியவை ஆதலால் மக்கள் சில வேலைகட்கு இதை விரும்பினர்.

இரும்புக் கம்புகளைக் கம்பி என்று குறித்தனர். இச்சொல்(கம்பு) ஓர் இகர விகுதியை ஈற்றில் பெற்று வேறொரு சொல்லைப் பிறப்பித்தது.

கம்பு + இ =  கம்பி.  ( கம்பு போல் நீண்ட இரும்பு )

பேச்சு வழக்கில் சொல்

கம்பி நீட்டிவிட்டான் என்ற வழக்கு, தொடர்வண்டியில் ஏறித் தப்பிப்பதை முதலில் குறித்தாலும் பொருட்பொதுமை அடைந்து எல்லா வகைத் "தப்பிப்பு ஓட்டங்களையும் "  குறிப்பதாய் வளர்ந்தது.   இஃது பொருள்விரி  ஆகும். கம்பிச் சடக்கில் ஓடும் தொடர்வண்டி ஏறி  வெகு தொலைவு சென்றுவிட்டான் என்பதே இதன் பொருள்.  சடக்கு -  விரைவு.  இது மலேசியாவில் வண்டி விரைந்து செல்லும் சாலையைக் குறித்து,  இப்போது சாலை என்றே பொருள் குறுகிய சொல்.  ஆகு பெயராய்ச் சாலை குறிக்கும். 

 கம்பு என்பது பல்பொருளொரு சொல்.

சொற்பொருட் காரணம்  மற்றும் அமைப்பு

இலை ஈர்க்கு முதலிய மென்மையான பொருள்களோடு ஒப்பிடுங்கால் கம்பு சற்றுக் கடினத்தன்மை உடையதாகும்.   அதனால் கம்பு என்பது கடு  (கடுமை) என்னும் அடியில் தோன்றியதாகும்.

கடு >  கடும்பு > கம்பு   ஆகும்.   இடைக்குறை.   இதுபோல் அமைந்த இடைக்குறை பல:

பீடு >  பீடுமன் >  பீமன்.>  வீமன்.

(மடமர் )>  மம்மர். (  மயக்கம்,  தெளிவின்மை)    மடம் > மம்>மம்மர் எனினுமாம்.

எவ்வாறெனினும் டகரம் இடைக்குறைவது காணலாம்.

கம்பும் கப்பும்

இதை வேறொரு வகையாகவும்  --  கப்பு என்றும் - விளக்கலாம்.

கடு  கடைக்குறை ).  + பு .=  கம்பு.  "அங்குச் செல்வது" என்ற பொருளுடைய சொல்லாம் அம்பு என்பதும் இவ்வாறு அமைந்தது. சுட்டடிச் சொல். இடையில் ஒரு மகர ஒற்று  தோன்றிற்றுகடு > > +பு > கப்பு ஆகும்மரக்கிளை  (கம்பு) என்ற பொருளும் இதற்கு உள்ளது என்றாலும், இதை பேச்சுமொழியில் யாம் கேள்விப்படவில்லை.

கருதற்குரிய நெறிமுறை

இந்தச் சொல்லை அமைத்தவன் காடுகளிடையே மலைகளிலோ சமதரைகளிலோ அலைந்து திரிந்த ஒருவனாகத் தான் இருக்கவேண்டும். புல், இலை, தழை, கொடி, செடி இவற்றுடன் ஒப்பிடுகையில் கடுமையானது என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியதால் அவன் கடு என்ற அடிச்சொல்லிலிருந்து சொல்லை அமைத்துக்கொண்டான்.. இவையே அவன் கையாளுகைக்கு உட்பட்டவை. என்கையில், அடிச்சொல், வினை பகுதி இவையெல்லாம் அவன் எண்ணத்தில் வந்திருக்க வாய்ப்பில்லை. இவை பின்புவரும் புலவனுக்கு வருபவை. கடுமை ஒன்றையே கருதியவனாய், கடும்பு என்று அமைத்து நாளடைவில் அது நாவிற்கெளிமை காரணமாக, கம்பு என்று சுருங்கிற்று. சுருங்கியதும் நல்லதே. கடும்பு என்பது வேறு பொருளையும் குறிக்கவருமாதலால், கம்பு என்று குறுகியது, கருதியோ கருதாமலோ பொருத்தமாகி, ஒரு சொல் கிட்டிற்று. மொழிக்குச் சொல் வேண்டும். நாலுகால் நாய்க்கும் இருக்கிறதே, அதை எப்படி நாற்காலி என்னலாம் என்று வாதிடும் அறிவாளியால் சொல்லமைக்க இயலாது என்பதை அறிக. ஆகவே சொல்லமைப்புக்கும் இலக்கணத்துக்கும் அறிவியற் கலைகட்கும் உள்ள இடைத்தொலைவை சொற்களை ஆராய முற்படும் அறிவாளி அல்லது மொழியன்பன்   உணர்ந்து ஒழுகவேண்டும். புலவர் அமைந்த சொற்களை மிகுதியும் உடைய இலத்தீன் போன்ற மொழிகள் மக்களிடை வழங்காமல் இறந்தன. அது ஓர் எச்சரிக்கை மணியானது இவ்வுலகிற்கு.

முற்றுரை

தமிழ் தழைந்திட இந் நெறிமுறையைத் தலைமேற் கொள்க.

கம்பி என்ற சொல்லின் தோற்றம்  அறிந்தோம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

.