ஞாயிறு, 13 ஜூன், 2021

கம்பி - சொல்லமை நெறிமுறை

முன்னுரை 

ஒருவன் ஒடிப்போனான் என்பதைக் குறிக்கக் "கம்பி  நீட்டிவிட்டான்"  என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதுண்டு.  கம்பி என்ற சொல் புழக்கத்தில் உள்ளது. 

கம்பியும் கம்பும்

இது கம்பு என்ற சொல்லுக்கு உறவான சொல்லாம்.  உருண்டு நீட்சியாக உள்ள மரத் தடியைக் கம்பு என்பர்.  ஆனால் இது மட்குவதும் உடைவதும் எளிதில் நடைபெறும்.  இரும்பு பயன்பாட்டில் வந்த பின்னர்,  மரக்கம்புகள் போலவே உருண்டு நீண்ட இரும்புக் கம்பிகள் வந்தன,  இவை நீண்ட நாட்கள் இருக்கக் கூடியவை ஆதலால் மக்கள் சில வேலைகட்கு இதை விரும்பினர்.

இரும்புக் கம்புகளைக் கம்பி என்று குறித்தனர். இச்சொல்(கம்பு) ஓர் இகர விகுதியை ஈற்றில் பெற்று வேறொரு சொல்லைப் பிறப்பித்தது.

கம்பு + இ =  கம்பி.  ( கம்பு போல் நீண்ட இரும்பு )

பேச்சு வழக்கில் சொல்

கம்பி நீட்டிவிட்டான் என்ற வழக்கு, தொடர்வண்டியில் ஏறித் தப்பிப்பதை முதலில் குறித்தாலும் பொருட்பொதுமை அடைந்து எல்லா வகைத் "தப்பிப்பு ஓட்டங்களையும் "  குறிப்பதாய் வளர்ந்தது.   இஃது பொருள்விரி  ஆகும். கம்பிச் சடக்கில் ஓடும் தொடர்வண்டி ஏறி  வெகு தொலைவு சென்றுவிட்டான் என்பதே இதன் பொருள்.  சடக்கு -  விரைவு.  இது மலேசியாவில் வண்டி விரைந்து செல்லும் சாலையைக் குறித்து,  இப்போது சாலை என்றே பொருள் குறுகிய சொல்.  ஆகு பெயராய்ச் சாலை குறிக்கும். 

 கம்பு என்பது பல்பொருளொரு சொல்.

சொற்பொருட் காரணம்  மற்றும் அமைப்பு

இலை ஈர்க்கு முதலிய மென்மையான பொருள்களோடு ஒப்பிடுங்கால் கம்பு சற்றுக் கடினத்தன்மை உடையதாகும்.   அதனால் கம்பு என்பது கடு  (கடுமை) என்னும் அடியில் தோன்றியதாகும்.

கடு >  கடும்பு > கம்பு   ஆகும்.   இடைக்குறை.   இதுபோல் அமைந்த இடைக்குறை பல:

பீடு >  பீடுமன் >  பீமன்.>  வீமன்.

(மடமர் )>  மம்மர். (  மயக்கம்,  தெளிவின்மை)    மடம் > மம்>மம்மர் எனினுமாம்.

எவ்வாறெனினும் டகரம் இடைக்குறைவது காணலாம்.

கம்பும் கப்பும்

இதை வேறொரு வகையாகவும்  --  கப்பு என்றும் - விளக்கலாம்.

கடு  கடைக்குறை ).  + பு .=  கம்பு.  "அங்குச் செல்வது" என்ற பொருளுடைய சொல்லாம் அம்பு என்பதும் இவ்வாறு அமைந்தது. சுட்டடிச் சொல். இடையில் ஒரு மகர ஒற்று  தோன்றிற்றுகடு > > +பு > கப்பு ஆகும்மரக்கிளை  (கம்பு) என்ற பொருளும் இதற்கு உள்ளது என்றாலும், இதை பேச்சுமொழியில் யாம் கேள்விப்படவில்லை.

கருதற்குரிய நெறிமுறை

இந்தச் சொல்லை அமைத்தவன் காடுகளிடையே மலைகளிலோ சமதரைகளிலோ அலைந்து திரிந்த ஒருவனாகத் தான் இருக்கவேண்டும். புல், இலை, தழை, கொடி, செடி இவற்றுடன் ஒப்பிடுகையில் கடுமையானது என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றியதால் அவன் கடு என்ற அடிச்சொல்லிலிருந்து சொல்லை அமைத்துக்கொண்டான்.. இவையே அவன் கையாளுகைக்கு உட்பட்டவை. என்கையில், அடிச்சொல், வினை பகுதி இவையெல்லாம் அவன் எண்ணத்தில் வந்திருக்க வாய்ப்பில்லை. இவை பின்புவரும் புலவனுக்கு வருபவை. கடுமை ஒன்றையே கருதியவனாய், கடும்பு என்று அமைத்து நாளடைவில் அது நாவிற்கெளிமை காரணமாக, கம்பு என்று சுருங்கிற்று. சுருங்கியதும் நல்லதே. கடும்பு என்பது வேறு பொருளையும் குறிக்கவருமாதலால், கம்பு என்று குறுகியது, கருதியோ கருதாமலோ பொருத்தமாகி, ஒரு சொல் கிட்டிற்று. மொழிக்குச் சொல் வேண்டும். நாலுகால் நாய்க்கும் இருக்கிறதே, அதை எப்படி நாற்காலி என்னலாம் என்று வாதிடும் அறிவாளியால் சொல்லமைக்க இயலாது என்பதை அறிக. ஆகவே சொல்லமைப்புக்கும் இலக்கணத்துக்கும் அறிவியற் கலைகட்கும் உள்ள இடைத்தொலைவை சொற்களை ஆராய முற்படும் அறிவாளி அல்லது மொழியன்பன்   உணர்ந்து ஒழுகவேண்டும். புலவர் அமைந்த சொற்களை மிகுதியும் உடைய இலத்தீன் போன்ற மொழிகள் மக்களிடை வழங்காமல் இறந்தன. அது ஓர் எச்சரிக்கை மணியானது இவ்வுலகிற்கு.

முற்றுரை

தமிழ் தழைந்திட இந் நெறிமுறையைத் தலைமேற் கொள்க.

கம்பி என்ற சொல்லின் தோற்றம்  அறிந்தோம்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

.




கருத்துகள் இல்லை: