{இன்றுகாலை மருத்துவரிடம் செல்ல வேண்டியதாயிற்று அன்னையை
அழைத்துக்கொண்டு. அந்நிகழ்வைத் தெரிவிக்கும் ஒரு சிறுகவிதை.}
சிறுகுழவிப் பருவத்தில் எனைய ணைத்தார்
இன்னமுதை ஊட்டினவர் எடுத்தே ஆட்டிப்
பலவொலியும் செவிகுளிரப் பதித்துப் பண்ணில்
பரவயமே உறவைத்தார் அருமை அன்னை;
விலவுதலும் கூடுவதோ ? அன்ன வர்க்கே
விலாப்புறத்து வலியாலே துடித்து விட்டார்.
குலவன்பு மொழியோடே கூட்டிச் சென்றேன்
குலைதலற மருத்துவரைக் குறுகி னோமே. 1
அருஞ்சொற்கள்
விலவுதலும் - விட்டு விலகி நிற்பதும்.
அன்னைக்கு முடியவில்லை என்றால் பிள்ளை
உதவாமல் நிற்கமுடியாது.
கூடுவதோ - முடியுமா?
குலவன்பு - மிகுந்த அன்புடன்.
குலைதலற - குலைதல் அற - மனத்திடம் குறைந்துவிடாமல்.
குறுகி - அணுகி.
மருத்துவர்முன்:
பாசமுறு அன்னைதனைப் பார்த்து விட்டு,
பரிந்துரைத்த படி,தாமே சூசி யிட்டார்
நேசமுற மருந்தளித்துப் பேச லுற்றார்
நீங்களினி அஞ்சுதலை நீப்பீர் என்றே
ஓசமுற வலி நீங்க, உளம்க ளித்தோம்
உடன்வீடு பின்வந்தோம் உமைய ருள்தான்;
தேசமிதில் தொற்றென்பார் அதுவோ அன்று;
தேகமுற்ற சிறுநோவே யாவும் நன்றே. 2
அருஞ்சொற்கள்
சூசி = ஊசி
அஞ்சுதலை - அச்சமடைதலை
நீப்பீர் - விலக்குதல் செய்வீர்.
ஓசம் உற - ( முகத்தில் ) ஒளி பெறும்படியாக.
இந்த மகிழ்வை முகமன்றி வேறெது காட்டும்?
ஓசமென்பது ஒரு மேனிலைத் தகுதி என்ற பொருளும் உடையது.
நோய் நீங்கிடில் ஓசம் தான். இது ஓச்சு(தல்) + அம் > ஓசு +அம். [ச்] இடைக்குறை
உடன் - ஒன்றாக
நல்ல வேளையாக இது கொரனா இல்லை.
இவ்வாறு உறவினர் நண்பர்கட்குத் தெரிவிக்கிறோம். நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக