வியாழன், 30 ஜூன், 2022

பல்லவராயன் -

 காளமேகப் புலவர் முதலியவர்கள்  ஒரு சொல்வடிவத்தைப் பலவாறாகப் பிரித்து எப்போதும்  இயல்பாக நாம் "இதுதான் பொருள்,  வேறில்லை" என்று  கட்டித் தொங்கிக்கொங்கிக் கொண்டிருக்கும் பொருளே அன்றி பொருட்பொலிவுகள் பிறவும் உண்டு என அறிவுறுத்தும் வண்ணமாகப் பல்வேறு   பொருட்களையும் ஒரு கவிக்குள் புகுத்தி,  மரம்போல் நின்ற காண்திட்பனையும் மல்லாந்து வீழும்படி இயற்றி.  வெற்றிக்கொடிகளைப் பறக்கவிட்டுச் சென்றனர்.  தமிழைப் படிக்கும்போதெல்லாம் அதனை வியக்கிறோம்  அல்லோமோ?

பல்லவராயன் என்பதற்கு இயல்பான பொருளையே நாம் முன் இடுகையில் கூறினோம்.

இப்போது இன்னொரு பொலி பொருளைக் காண்போம்.

பல்லவன் +  அருமை + ஆயன்,

பல்லவ +  அரு  +  ஆயன்

இவற்றுள் அரு ஆயன் என்பதைப் புணர்த்தினால்,  அராயன் என்று வரும். அரு என்பதிலுள்ள ஈற்று உகரம் வீழும். வீழ்ந்தபின் மிச்சம் அர்  + ஆயன்.   இப்போது அடிச்சொல்லலைப் பார்க்கிறோம். அது அர். அர் என்பதற்குப் பொருள் பல உள. அவற்றை அறியப் புறப்பட்டுக் குழம்பி விடாமல்,  அருமை என்னும் பொருளே கருதுவோம். இதனை ஆங்கிலத்தில் சொல்வதானால்  aru  -  special.  சிறப்பானது, சிறப்பானவை.  ஆய் என்பதற்கு ஆராய்  என்று பொருள். சிறப்பான வழக்குகளை ஆய்ந்து முடிப்பவன்.  ( ஒரு நீதி அரசனோ, விசாரண செய்வோனோ ). ஆய்+ அன் = ஆயன்.  A special investigator ( appointed by the Pallava monarch.)

பல்லவ  -  an epithet. அடைச்சொல்.

அராயன்  - a designation.  ஒரு பதவிப் பெயர்.

பலலவ மன்னன் ஆட்சியின் போது செதுக்கப்பட்ட கல்வெட்டு இலக்கியம் முதலிய ஆதாரங்கள் கிடைக்கவேண்டும்.  அவற்றில் பல்லவராயன் என்ற அதிகாரிபற்றிய குறிப்புகளைச் சேகரிக்கவேண்டும்.  இன்னும் வேண்டிய சான்றுகள் பல. நமக்குத் தெரிந்தது : சிலர் இந்தப் பட்டம் தமக்கு உண்டு என்று சொல்கிறார்கள்.  இந்தப் பட்டத்தை முதன்முதலாய்ப் பெற்ற மனிதனிலிருந்து நம் ஆய்வு தொடங்கவேண்டும். நாம் வேலையிலிருந்த காலத்தில் செய்ததைவிட அதிக வேலை!   இதற்குமேல் நீங்கள் ஆய்வு செய்யுங்கள். எவனாவது செய்துமுடித்த இலக்கிலிருந்து நீங்கள் தொடருங்களேன். எவனாவது முடித்ததைப் போய் மீண்டும் பிசையாமல், இதைச் செய்யுங்கள். ( முடிந்தால்).

பல்லவராயன் என்பது தமிழ்ப் புணரியலுக்கு ஒத்துப்போகிற  சொல்லமைப்பாகிறது.. பாணினி என்ற பாணாயனின் இலக்கணத்துக்குப் போகவேண்டியதில்லை. குழப்பம் குறைகிறது.

ஆயன் என்பது : இடையன் என்ற பொருளாய் இருக்காது. ஒருவேளை ஆசிரியன் என்ற சொல்  ஆயன் என்று குறுகி இருந்தால் ஆய்வு இன்னும் விரிகிறது.  ஆசிரியன் >  ஆ(சிரி)யன் >  ஆயன் என்று!  இதில்  சி மட்டும் வீழ்ந்தால் ஆரியன் என்றாகிறது.  ஆர் என்பது மதிப்பைக் குறிப்பதால்,  அது வெறும் அரசன் மதித்த குடிமகன் என்ற பொருளுடையதாக இருக்கலாம். எந்தப் பதவியும் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.

பல்லவராயன் என்பது பல்லவ மன்னன் கீழ் இயங்கிய ஓர் அதிகாரி என்று நிறுத்திக்கொள்வது கொஞ்சம் சும்மா இருக்க உதவும்.


 


செவ்வாய், 28 ஜூன், 2022

புதன் கிழமை வணக்கம்


[ நண்பருக்கு அனுப்பிய வாழ்த்து வணக்கம் தொகுப்பு.]

( கொஞ்சம் மரபுப் பாக்கள் போல் இருப்பினும் இவை புதுக்கவி 

வகையின  ஆகும்]

புதியன எல்லாம் தருவதும் புதன்,

புத்தொளி வீட்டில் வீசிடும் புதன், 

அதிநலம் உடலில் அளித்திடும் புதன், 

வணங்குவம் : காலை, 

 வணக்கம் சொல்வோமே.

[ எந்த நேரமானாலும் வணங்கலாம்,  ஆனால் காலையில் சொல்வது சிறப்பு  என்பதே கருத்து,   இனி,  இறைவனை வணங்குவோம், நண்பருக்கும் காலை வணக்கம் சொல்வோம் என்பதும் கருத்து ஆகும். ]

[இவை வாரத்தின் மற்ற நாட்களுக்கு, சனி ஞாயிறு  நாட்களுக்கு முன் இடுகை காண்க ]


திங்கட்கிழமைக்கு:-

எத்திக்கும் இனிதாகத்

தித்திக்கும் திங்களில்

காசி விசுவநாதனின்

ஆசிகள் பெருகிட

கணபதி கருணைசெய்வார். 

காலை வணக்கம்.


செவ்வாய்க்கிழமைக்கு:-

இனிய நாள்  செவ்வாய்,  எழுதரும் வருவாய்!

தனிநலங்கள் எலாம்  மலிதரும் தறுவாய்;,

 இறையருள் என்றும் உங்கள் இல்லத்தில் 

தங்குக  காலை வணக்கம் செல்வத்தில்.


புதன்:  மேலே  காண்க.

 பெருமான் அருளால்

 புதுமைப்  புதனால் 

அரிய நலங்கள் 

அடைவீர்களாக.


வியாழக்கிமைக்கு:


விரிந்த உலகில் 

சிறந்தவை யாவும்‌தரும்

வியாழ பகவான் ஆசியுடன்

 காலை வணக்கம். 

அம்மன் அருளால் 

இ‌ந்த நாள் இனிய நாள்.


வெள்ளிகிழமைக்கு:-

மெள்ள மெள்ள வந்திடுமே

மிக்க உறுதி தந்திடுமே,

வெள்ளியில்  நலமே சொந்தமினி, 

யாவும் செழிக்க உந்தல்தனி, 

வெள்ளியில் வெள்ளி முந்திவரும்

இல்லத்தில் தினம் பந்திதரும்,

காலை வணக்கம்  தண்கலமாய்

காண்பீர் எம்கவி வெண்கலமாய்.


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்

 

.

பலம் உடையவர் : பலவர்> பவர் ( வலிமை)

ஒரு பழைய திரைப்பாடல் : " எளியோரைத் தாழ்த்தி  வலியோரை வாழ்த்தும் ,  உலகே உன்செயல்தான் மாறாதா" ( கவி கா.மு. ஷெரிப் அவர்தம் அழகான வரிகள் , நெஞ்சைத் தொடுவது)   தொண்சுவைகளில் ஏக்கச்சுவை பொங்கிவரப் பாடுவார் பாடகர்.  இதனை  நாடகத்துக்காகப் பாடலாம்,  அது மாறப்போவதில்லை. அப்படியே மாறிவிட்டாலும்,  பிறரைக் கட்டுக்குள் வைத்திருக்கும்  திறனற்றவர்களால்  மன்பதையில் ( சமுதாயத்தின்) ஒழுங்கு முறையை நெறிப்படுத்த இயலாமல் அதனால் சரிவினைச் சந்திக்கவேண்டி நேரலாம்!! பலம் வாய்ந்தவர்கள் பலம்தேவைப்படும் வேலைகட்குத் தேவைப்படுகிறார்கள். But don't bully the weak. 

சாதுவானவர்கள்,  மென்மையான வேலைகளில் ஒளிதருவர். சாது என்ற சொல் எவ்வாறு தோன்றியதென்பதைப் பின் பார்க்கலாம். நிற்க.

நாம் இப்போது "பவர்" என்ற ஆங்கிலச் சொல்லைக் கவனிப்போம்.  

சுருங்க விளக்கினால் இவ்வாறு வரும்:

பலம் + அர் >   பல + அர் >  பலவர் >  ( இதில்  லகரம் இடைக்குறையாகிவிட்டால்), >  பவர் ( power) :  ஆகிவிடும்.

பலம்  ( வலிமை), இதில் இறுதி குன்றி  எச்சம் ஆகிவிடும்.

பல ஆன் > பலவான்.  இதில் பல என்பது எச்சச் சொல்.  அது போலவே இதுவும்.

'புத்திமான் பலவான் ஆவான்'

வந்தான் சென்றான் என்பதில் வரும் ஆன் விகுதிதான் இது.

பலவான் >  balwant  ( வட இந்திய மொழிகள் ).

ஓ மல்லா   :  ஓ பலம் பொருந்தியவனே!  என்பது.

மல் > வல் > பல்.

வல்லோன்,  மல்லன்,  பலவன்.

பல் >  பல்+ அவன் >  பல்லவன்:   பலமுடைய மன்னன்.

அரையன் > அரசன்.   பல்லவ அரையன் > பல்லவராயன்  (திரிபு)

பல்லவன் <> வல்லவன்.

புத்திமான்:  மான் என்பது இங்கு மகன் என்ற சொல்லின் திரிபு.  மக>  மா.

மேலும் பலம் என்பது  வலம் என்பதன் திரிபு.  வல் > பல் + அம் > பலம்,

புத்திமான் புத்தம்புதிய சிந்தனையில் செயல்படுபவன்.  புது அன் >புத்தன்.  புது இ > புத்தி. புத்தர் என்ற பாராட்டுப்பெயர் தென்னாட்டார் கொடுத்தது.  அதுவே சிறந்த பெயராய் நின்றது.

வலம்படு என்று பழந்தமிழில் வந்தால்,  அது "பலம் படு"  அதாவது வலிமைப்பட்ட என்று பொருள்.

இழிநிலை இலத்தீனில் potere  போட்டு அறை என்பதுபோல் உள்ளது. பழம் பிரஞ்சு மொழியில் pouair  என்று வந்தது.  மொழிதோறும் திரிபுகள் ஊரும்.

ஐரோப்பிய வடிவங்கள் போடு என்பதனுடன் தொடர்பு காட்டினும்,  போடுகிறவனும் வலிமை  உடையவன் தான். அதாவது உதைகொடுப்பவன்.  வாங்கிக்கட்டிக்கொள்பவன் வலிமை இல்லாதான்.

என்றாலும்,  பலம் அர் >  பலவர் >  பவர் என்று,  ஒரு பலம் பொருந்தியவனை முன் வைத்து எழுந்த சொல் இதுவென்பது பொருத்தமாகிறது. 

தமிழ்ச்சொற்களை ஆராய்ந்தால் இன்னொரு மெய்ம்மையும் விளங்கும். அதாவது இடையிடையே, இப்போது  கிடைக்காத,  அகரவரிசைகளில்  இல்லாத  சொற்களும் கிடைக்கும்.  அது நம்மிடம் இல்லாமல்,  வெளியுலகில் பலவிடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும். அடிச்சொற்கள் மூலங்கள் வழியாத அவற்றை அறிந்து அவற்றின் வாழ்விடங்களை அறியலாம். உறவு துண்டித்துப் பிரிந்திட்ட சொற்கள். நாம் அவற்றை நம் ஆய்வுப் பாதையிலிருந்து விலக்கிவிடலாகாது.  மேலும் ஆய்ந்து  தொடர்புகளை வெளிக்கொணர்க. ஆய்வை விரிவுசெய்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


வெள்ளி, 24 ஜூன், 2022

தமிழ் பரவிய நிலங்கள், மொழிகள்.

 பிரிட்டீஷ்  ஆட்சி  ஏற்படுவதற்கு முன்  இந்தியா ஒரு தேயமாக  இருக்கவில்லை. பல பகுதிகளாகப் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது, ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழி வழங்கிவந்தது என்று கூறலாம், தமிழ்நாடு என்ற ஓர் ஆட்சிப்பகுதியோ முழுநாடோ இருந்ததில்லை. அதனால் தமிழ்ப் பேசும் நிலப்பகுதிகளைத்  "தமிழ்கூறு நல்லுலகம்"  என்றது தொல்காப்பிய நூல்.. கிளைமொழிகளும் எழுத்தற்ற மொழிகளும் பல்கிக்கிடந்தன. ( நல்லுலகம் என்று விதந்து கூறியவதனால்,  நாடுகள் பலகொண்ட ஒரு பெருநிலப்பகுதியைக் குறித்தனர் என்றும் கொள்ளலாம்.) தமிழ் இலங்கைத் தீவிலும் வழங்கியது. பல்வேறு தரப்பினரும் அறிந்து கொள்ளுமாறு ஒரு பொதுமொழியை உருவாக்குவதற்கு  அரசியல் குமுகவியல் அழுத்தமுறுத்தும் ஒரு  தேவை பழங்காலத்தின் முற்பகுதியில் ஏற்படவில்லை என்று கூறலாம். என்றாலும் சமத்கிருதம்   ( சமஸ்கிருதம்) என்ற -  பொதுமொழி என்று கருதத் தக்க மொழியொன்று ஏற்பட்டிருந்தது. இதிற் சிறந்து விளங்கிய தொல் கவி வால்மிகி  இராமாயணத்தைப்  பாடினார். பாணரான பாணினி  இலக்கண நூல் புனைந்தார். வியாசர் என்ற மீனவப் புலவர் மகாபாரதம் ஆக்கினார். இந்நூல்களும்  இன்ன பிறவும் மக்களிடம் நன்கு பயின்று வழங்கின.

கல்வியிற் சிறந்தவர்களை அரசர்களும் உகந்தனர்,  அரசாட்சி செய்தவர்களும் சிலர் நூல்கள் பாடினர். எடுத்துக்காட்டு:  அதிவீரராம பாண்டியன் என்ற அரசர். மொகலாய அரச வழித்தோன்றல்களிலும் நூல்கள் எழுதியோர் உள்ளனர்.

சமத்கிருதத்தில் பல்வேறு மொழிச்சொற்களும் கலந்திருந்தன. சில சீனச்சொற்களும் திரிந்து புகுந்தன.   தமிழர் போருக்கென்று ஓர் இலக்கணம் வகுத்துக்கொண்டு, மற்ற மொழி பேசியவர்களை போருக்குள் உட்படுத்தி, "இமயவரம்பன்" போன்ற பட்டங்களைச் சூட்டிக்கொண்டு மற்றமொழி பேசுவோரிடம் ஓரளவு இனக்கலப்பு மேற்கொண்ட அரசாண்ட தமிழருக்கு, ஒரு பொதுமொழி ஏற்படுத்தும் தேவை இருந்தது.   அதனால் அவர்கள் சமத்கிருதமொழியை வளப்படுத்தி பிறபகுதிகளில் வழக்குக்கு ( பயன்பாட்டுக்கு) க் கொணரும் முயற்சி மேற்கொண்டனர்.( சீன உச்சரிப்புக்கு ஓரளவு ஒத்துவரும் பாலிமொழியைப்  படைத்து விரிவு படுத்தியதும் இத்தகு தேவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. இதைத் தமிழரோடு பிறரும் செய்திருக்கலாம்  ). பல்வேறு பண்டிதன்மார் இதில் ஈடுபட்டனர் என்பது அறியத்தக்கது. ( நளந்தா பல்கலைக்கழகம் இதற்கு உந்துதல் அளித்தது.)  இந்திய நிலப்பகுதிக்கு வெளியில், உரோமப் பேரரசு ஏற்பட்ட போது,  இலத்தீன் மொழி உருவாக்கப் பட்ட காலை, தமிழிலிருந்து பல சொற்களை நம்புலவர்கள் கொண்டு சென்று உதவினர்.  இந்த நெருக்கத்தின் காரணமாகப் பல தமிழ்ச்சொற்கள் இலத்தீனுக்குள் புகுந்தன. வணிகத்தின் மூலமாகவும் தமிழ் பரவிற்று. சுமேரியா முதலிய இடங்களிலும் தமிழ் வழங்கியுள்ளது.

இதையும் அறிந்துகொள்க:  மெசோபோட்டேமியா

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_16.html  மிசைப்போதுமே(வி)ய

மிசைப்பொழுது  -  சூரியன் உயர்நிலையில் இருக்கை. (வெப்பமிகுதி)

ஈராற்று நாடு -  ஈராக்,    ஈராக்கு ( ஈராக்குதல் ) இரண்டாகுதல்.   ஆறு இரண்டாகப் பிரிதல். Land of Two Rivers 

நல்லது என்பதைத் தெரிவிக்கும் சொல்லே  bon, bona ( f),  bonus (m)  என்ற சொல்வடிவங்கள்.

பொல் ,  பொன்.  லகர நகரப் போலி

bon =  பொன்(னான).   cf  pawn.  (pawnshop).

செல்வம் என்பது பல உருக்கொள்ளும். அவற்றுள் நல்லது, உயர்ந்தது பொன் என்னும் உருவம்.   ஆகவே நல்ல என்ற பொருள் பெறுபொருள். derived meaning.

bona என்ற சொல்லின் ஆய்வில் இந்தோ ஐரோபிய ஆய்வாளர்கள் தடுமாறியுள்ளனர். இதைப் பின்னர் அறிவோம். அவர்களைக் குறை சொல்வதற்காக இது எழுதப்படவில்லை.

பொன்னான பயணம்,  இதுவே bon voyage என்று இந்தோ ஐரோப்பியத்தில் வருகிறது.

தோகை என்ற சொல் இஸ்ரேலின் மொழியில் சென்றது போலுமே இது.

P, B   p or b  என்பவற்றில் வேறுபாடில்லை.  சில ஐரோப்பிய மொழிகளை ஆய்ந்து காணவும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

சில திருத்தங்கள்: 26.6.2022  0625

ஞாயிறு, 19 ஜூன், 2022

போய் என்பதிலிருந்து வோயேஜ்.

 இன்று வோயேஜ்  (voyage)  என்ற ஆங்கிலச்சொல்லைக் கவனிப்போம்.  நல்லபடியாகச் சென்றுவருக என்பதற்கு "Bon voyage"  என்பது சென்ற நூற்றாண்டில் பெரும்பாலார்க்கு அறிமுகமான ஒரு தொடர்.  "உன் செலவு ( பிரயாணம்) நல்லபடி அமைக"  என்பதே  இதன் பொருள்.  இத்தொடர் இன்று அவ்வளவாக வழக்கில் இல்லை.

நாம் கவனிப்பது வோயேஜ் என்பது மட்டுமே,

போய் வாருங்கள் என்பதிலே,  வாருங்கள் என்பது முதன்மையான ஒரு கருத்து. எல்லாம் நல்லபடியாய் இருக்குமானால் போகிற நபர் ( ந(ண்)பர் )  வந்துவிடுவார்.  சங்க காலம் போன்ற முற்காலங்களில்,  தொலைதேசங்களுக்குப் போகிறவர், பெரும்பாலும் திரும்புவதில்லை.  அவர்களின் ஆயுளும் இடையில் முடிந்துவிடுவது உண்மை.  கப்பல் வானவூர்தி தொடர்வண்டிகள் முதலியன வருமுன்,  போகிறவன் (பயணம்)  போய்விடுவதே பெரும்பான்மை. பக்குடுக்கையார் நளந்தா  சென்றதை அறிவோம்.  திரும்பிவந்தாரா என்று தெரியவில்லை. இராமபிரான் தென்னாடு வந்து சென்றது, ஒரே நெடும்பயணம். 

வோயேஜ் என்ற சொல்,  "போய்" என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து உருவான சொல். 

பகரம்  வகரமாகும் ( திரிபு).  இது பலமொழிகளில் ஏற்படும் திரிபுவகை.

போய் >   வோய்  voy.

பயணம் என்பது ஓரிடத்துக்குப் போவதுதான்.

வோய் என்பதுடன் ஏஜ் என்ற விகுதியை இணைத்துவிட்டால்  வோயேஜ் என்ற சொல் கிட்டுகிறது.

எச்சவினைகளையும் வினைப்பகுதி போல் கொண்டு,  அவற்றிலிருந்து வேறு சொற்கள் தோன்றினவாகப் பாலி,  சமத்கிருத மொழிகளில் காட்டுதல் உண்டு.

ஆகவே இது முன்வாழ்ந்த பண்டிதர் காட்டியவற்றோடு ஒத்துச்செல்வதாகும்.

ஆனால் இந்தோ ஐரோப்பிய ஆய்வாளர்கள்,  வொயேஜ் என்பது  வயா என்ற இலத்தீனிலிருந்து வந்ததாகக் காட்டுவர்.  இதுவும் தொடர்புடையதே ஆயினும் ஒரு சுற்றிவளைப்பே ஆகும்.  ஆனால் தவறன்று.   வயா என்பது தமிழ் வழி என்பதிலிருந்து போந்ததாகும்.

இந்தத் திரிபு:  ழ- ய.  ழகரத்தைச் சரியாக ஒலிக்க இயலாதோர் பயன்படுத்துவது. 

வாழைப்பழம் -    வாயப்பயம்

வழி > வயி > வயா via.

போய் என்ற வினை எச்சம் நேரடிப் பிறப்பிப்பு என்பதுணர்க.

வாய் என்ற சொல்லுக்கு  வழி என்ற பொருளும் உள்ளது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.  

மறுபார்வை , திருத்தம்: 21072022  0901

நோய்க்கு நல்ல பானம். மருந்துகள் ?

 கொழுந்துநீரைக்  குடிக்கலாமே  குணமுண்டு கூறுவர்காண்

குளம்பிநீரும்  குடித்திடலாம்  குறையதனால்  இலைகாண்பீர்!

எழுந்துநட  மாடுதற்கோ  இயன்றிடாத நிலைவரினோ

சிறந்ததெனச்  செவிகொள்வது பசும்பாலே பிறிதுளதோ?.


பொருள்.-----  கொழுந்துநீர்  -  இது தேநீர். இதைக் குடிக்கலாம், இதிலும் குணமுண்டு என்று கூறும் மக்களும் நூல்களும் உள்ளன.  அதெபோல் குளம்பிநீர் என்னும் காபியைக் குடிக்கலாம், குறையொன்றும் ஏற்படாது என்போரும் உள்ளனர்.  ஆனால் மூப்பினால்  எழுந்து நடமாட முடியாத நிலையில் நாம் செவி வாயிலாய் அறிவது பசும்பால் நல்லது என்பது, வேறு குடிநீர் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

குடும்பத்துக்குப் பசுமையைத் தருவதனால்  பசு  -  பசு.  மாடல்ல மற்றையவை என்று வள்ளுவனார் விளக்கியுள்ளது காண்க,






படம்:  அன்பர் ஒருவர் கொழுந்துநீர்  அருந்துகிறார்,  அது நல்ல தேறல்தான். எதற்கும் மருத்துவரை நாடி  ஆலோசனை பெறுங்கள்.


இன்றுபோல பின்னாளில்  நன்றுபல மருந்துகளும்

மன்றுமனைமருதகங்கள் எங்கெனினும் கிடைத்திடவே

வென்றநிலை உலகினிலே  விலகாது நிலவிடுக.

சென்றிடுக போர்கலகம்  சீரமைதி  உலகினிலே..


பொருள்.------  இன்று மருந்துகளும் பிறபொருள்கள் போல எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. இது ஒரு வெற்றிபெற்ற நிலை என்று சொல்லலாம்.  பொருட்பகிர்வு என்று வரும்போது  மக்களுக்குப் பொருட்கள் சென்று சேராத நிலையை வென்றநிலை இதுவாகும்.  இது உலகில் தொடரவேண்டும். பயன்பாட்டுப் பொருள் பகிர்வுத்திட்டங்கள், உலகத்தில் தொடரவேண்டும். அதற்குத் தடைகளே நாம் ஏற்படுத்தக் கூடாது.  போர், கலகம் முதலியவை  உலகை  விட்டு நீங்கவேண்டும்.  உலக அமைதி முதன்மையாகும்.( Maintain supply chain ).



மருந்து அடுக்கும் பலகை


மருந்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் பலகைவரிசை.

எதை உட்கொள்வதால் நோய் வருகிறது என்று உணர்ந்து கொள்வதை முதன்மையாகக் கருதினாலும், நோய் வந்த பின் மருந்துகள் உண்டு அந்நோய்களை விலக்கிக் கொள்வதும் முதன்மையானதே.  மருந்துகள் கிடைப்பதையும் உறுதி செய்க என்பது கருத்து.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.





வெள்ளி, 17 ஜூன், 2022

ராங்கி என்பதன் மூலம்

 ராங்கி என்பது பேச்சு வழக்கில்  (புழக்கத்தில்)  உள்ள சொல். இது தமிழன்று என்று சிலர் கூறுவாராயினர்.

ஏறத்தாழ இதே ஒலியுடன் இயல்வது ஓர் ஆங்கிலச் சொல். அது rank  என்பது. ஒலியொற்றுமை காரணமாக, இச்சொல் ஆங்கிலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று சிலர் கருதினர். ஆங்கிலச்சொல் செர்மானியச் சொல்லான *hringaz  என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆங்கில ஆய்வாளர்கள் கருதினர்.  அவர்கள் காட்டும் மூலச் சொல்லுக்கு  வளைவு "curved"  என்பது அடிப்படைப் பொருள் என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.  ஆயினும் இஃது பொருத்தமாகத் தெரியவில்லை.   இதற்குப் படிநிலை  (மதிப்பில்  ஏற்ற இறக்கம் ) என்ற வழக்கு(பயன்பாட்டு) ப் பொருள்  1809ல்  வந்து சேர்ந்ததாகக் கூறுவர்.    இதுவும் வெள்ளையர்கள் இந்தியாவில் நன்கு வேரூன்றிய பின்னர்  ஏற்பட்டது  என்று அவர்கள் சொல்கிறார்கள்.  இதில் உள்ளநிலை என்னவென்றால்   இதைக் "கண்டுபிடித்தோர்" தமிழறிவு இல்லாதோர்.  தமிழில்  அவர்கள் தேடிப்பார்க்கவில்லை.  . எலியைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தாலும், அதைப் பிடிக்கும் வேலையில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. எங்கும் தேடிப் பார்க்கவேண்டும். இல்லையேல் எலி தப்பிவிடும். 

அரங்கு என்பது தமிழில் உயர்நிலை, ஏற்றமான இடம் என்று பொருள்தரும். இதன் ஆண்பால் வடிவம் :  அரங்கன் என்பது.  ஆகவே பெண்பால் அரங்கி என்பதுதான். அரங்கி என்பது பால்பாகுபாடற்ற சொல்லாகவும் கூடும்.

அரங்கில் பேசுவார், பாடுவோர் முதலானவர்கள்,  பெரிதும் மதிக்கப்படுவோர் ஆவர்.  அரங்கில் நிற்போர்,  அரங்கிகள் ஆவர்.  இதனின்று " ராங்கி" என்ற சொல் வந்தது. இதை ஐரோப்பியர் எடுத்துச்சென்று அவர்கள் மொழியில் பரப்பிக்கொண்டனர் என்பது தெளிவு.  ராங்கி என்றால் அரங்கில் நின்று  தாழ இருப்போனுடன் தொடர்பு கொள்ளுதல்  போன்று நடந்துகொள்வது. 

அரங்கி என்பதே ராங்கி என்று திரிந்தது. எனவே ராங்கி என்பது நிரம்ப - ரொம்ப என்பதுபோல் தலையிழந்த சொல்.  இவ்வாறு தலையிழந்த இன்னொரு சொல்:

அரண் உடையவள் >  அரண் இ >அரணி >   ராணி  ,  பெரும்பாலும் அரசு உடையோரே ராணிகள்.

தானே கட்டிய அரணுக்குள் புகுந்துகொண்டு பாதுகாப்புத் தேடிக்கொண்டவனும் கடவுள், வலியோன் ஆகியோர்முன் பாதுகாப்புத் தேடி அரண் (சரண்) புகுந்தோனும் சரணாகதி அடைந்தோனும் என பல்வேறு வேறுபாடுகளையும் விளக்கவேண்டியுள்ளது. இதை நேரமுள்ளபோது எடுத்துக்கூறுவோம்.  ராணி என்பது அதிகம் வழங்க, தமிழ்நாட்டில் ஏன் ராணா என்பது அவ்வளவாக வழங்கவில்லை என்பதற்குக் காரணமும் உண்டு. இவை பின். இணைந்திருங்கள்.

ராணி:

இது தமிழே ஆகும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்

சில திருத்தங்கள் செய்யப்பட்டன. சில சேர்க்கப்பட்டன. 


0015 20062022




காதல் எண்ணெய்---- வாழ்க்கை விடியல்

அக்காள் புருடனை விரும்பும் ஒரு தங்கைக்குச் சோரக் கவி:-

அக்காள் வீட்டில் அக்காள் புருடன் இருக்கும் வரைக்குமே----- அவளை

அணைத்துக் கொள்வார் அன்பைத் தருவார் எண்ணெய் கிடைக்குமே!

முக்கால்  நேரம் முகத்தில்  முகமே முடிவே இல்லாச் சுகமே சுகமே

தெற்கால் உள்ள தெருவின் வழியே  திரும்பிப் போவாளே----வழியில்

தித்திப் பாலே கால்கள் தெற்றும்  திரும்பும் கனவில் இதழ்கள் பற்றும்

அத்திக்காலே மெள்ளத் திறந்த கள்ளக் கனிவாலே. -----இந்த

அகிலம் என்றும் அவட்கு வேண்டும் கொண்ட முடிவாலே.


இந்த இன்பக் கவியுடன் இருக்கும் எண்ணெய்ப் புட்டியையும்

பார்த்து ஆனந்தம் அடையுங்கள்.

தங்கை கணவன் மதுபோதையிலே கிடந்தால் தங்கைதான் என்செய்வாள்.

இதைக் கதையாக எழுதலாம்.




சிவமாலாவின் நிமிடக் கவி.

குறிப்பு:

கண்போன்று இணைந்திருப்பவன் கணவன்.

புருவம் போன்று இருந்து காப்பவன்: புருடன். சொடுக்கி வாசிக்க:

https://sivamaalaa.blogspot.com/2016/03/blog-post_37.html


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்ன.



புதன், 15 ஜூன், 2022

பிறட்டல், குழம்பு, இரசம்

 கறிசோறு  இரசம்குழம்பு பிறட்டல் என்று

பொறிபரக்கத் தினந்தோறும் உணவு கொண்டு

மறியாடு போல்பருத்த  பின்னர் (உ)ரொட்டி

அறிதின்றால் எடைகுன்றும் என்பார்   தோழி! 


இரசம் --  அரைசம் ( சில மருந்து இலை முதலிய அரைத்து கொதிப்பித்த நீர்.). அரைக்காமல் இப்போது வைக்கிறார்கள்.

அரைசம் >  ரசம்  >( இரசம்,)  உலகவழக்கில்  ரசம். 

மறி  - செம்மறிக் கடா.

ரொட்டி - இதைப் பின் ஆய்வோம்.  உருஒட்டி > உரொட்டி > ரொட்டி.

ஓர் உருவாகச் செய்து,  சூட்டுத்தட்டில் ஒட்டி வேவித்து எடுப்பது. பழகாத தட்டானால் அடிப்பிடிக்கும்.

அறி -  அறிக.

சில்லோர் --- சிலர்.

குன்றும் -  குறையும்.






 சோறுகறி  வேண்டாமே எடையே கூடும்

சாறுமிகும் உணவுகளால் புளிப்புத் தொல்லை;

வேறுவழி  உரொட்டிஎன்று  வாதம் போட,

ஈறதையே  வாங்கியுணல் என்றேம் தோழி.


வாங்கிவந்து வைத்தாலும் வாயி  லிட்டு

தாங்குபசி  போக்கினதைக் காண வில்லை;

தேங்கினவே உரொட்டிகளே என்ன தின்றார்

ஓங்கினதும் உண்ணாமை  தானோ  தோழி


குறிப்புகள்:


ஈறு - முடிவு


பிறட்டல்:  புரட்டிப் புரட்டி வரட்டி எடுத்து உண்ணக் கொடுப்பதால் புரட்டல் என்ற சொல்லே பிரட்டல் ( பெரட்டல்) என்று திரிந்தது என்ற கருத்தும் உள்ளது. ஆனால்,  குழம்பு முதலியவைக்குக் கூடுதலாகவே பிரட்டல் வைக்கப்படுகிறது.இது புரட்டல் > பிரட்டல் என்ற திரிபு என்பதைவிட, 

1 பிற அட்டல் >(  பிற அடு+அல் )>  பிறட்டல்.

 [  கூடுதலாக சமைக்கப்பட்டது.]

அட்டாலும் பால் சுவை குன்றாது என்றார் ஒளவை.  மூதுரை.

2 பிற அடு அல் >  பிறட்டல்

[பிற குழம்புக்கு அடுத்ததாக வைக்கப்படுவது அல்லது

ஆக்கிக் கொடுக்கப்படும் உணவு.]

அடுத்து அணைவாக வைக்கப்பட்டது என்ற பொருள்  "அட்ட அணை" > அட்டவணை என்பதிலும் உளது.

மேங்கறி என்பது ஏற்புடைத்தே. இட்ட உணவுக்கு மேலாக வைக்கப்படுவது.

அடுத்தடுத்து ஒட்டிய கடுதாசியால் ஆனது அட்டை.  அடு+ ஐ :  அட்டை. அடு ( அடுத்தல் என்பதும் இரட்டித்தது).

சொல்லாக்கத்தில் இரட்டிப்பதும் அஃதின்மையும் ஒலிநயம் கருதி அமையும். 

அட்ட : இது எட்டு என்பது  இங்கு  பொருந்தவில்லை;  எல்லா அட்டவணைகளிலும் எட்டுப் பகுதிகள் இல்லை. எட்டு என்பது பொருந்துமிடங்கள் வேறு காண்க.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

கருத்துகளைப் பின்னூட்டம் செய்க.



செவ்வாய், 14 ஜூன், 2022

அழித்தவை எல்லாம் மீண்டுவந்தன

 அழியாத நல்லின்பம்  அகிலத்தில் எனதென்றே அறிந்திட்ட ஒன்றென்றால் அதுவென்றன்  கைப்பேசியில்;

பழியொன்றும்  அதிலில்லை, படிக்கின்றேன் அதைமீண்டும், பார்தன்னில் சோர்வுற்றே இல்லாயின உள்வந்திட்டால்;

வழிச்செல்லும் போதாங்கு  வந்தோருள் வானுலகு சென்றோரும் உள்ளோருள் கலந்திங்கு வந்ததேபோல்;

விழியிலிவை பட்டாலும் வீணென்று காணற்கும் கூனென்று கொள்ளற்கும்ஒன்றில்லை இன்பமின்பம்.


எம் தொலைப்பேசியில் உள்ளவற்றை அழித்துவிட்டு மறுதிறவு செய்கிறபோது முன் களைந்தவை எல்லாம் மீண்டும் வந்துவிட்டன. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றபடி,  இதுவும் இன்பம்தான்; இன்பமே அன்றித் துன்பமில்லை. இருக்கட்டும்.


கூன் -   குறைவு.  நிறைவற்றநிலை.

ஒன்றில்லை - ஏதுமில்லை.

இந்தச் சிறுகவியில் அருஞ்சொற்கள் இல்லை. அடிக்கு எட்டுச்சீர்களாக, ஒவ்வொரு சீரும் மூன்று  அசைகளாக அமைந்துள்ளன.  மனத்துள் இந்த வடிவில் கவிதை தோன்றியதால் வடிவில் மாற்றம் செய்யாமல் அவ்வாறே வடித்துள்ளேம்.  கவிதை தன்மையொருமையில் கூறுவதாக வந்துள்ளது. விளக்கத்தில் தன்மைப்பன்மையில் கொடுத்துள்ளேம்.  மிக்க நன்றி.

{கைப்பேசி,  தொலைப்பேசி என்பவற்றில் வலிமிகும். இது நன்று. மெய் " ப்" இடப்பட்டுள்ளது. விடப்பட்ட இடங்களில் ப் இட்டு வாசிக்கவும்.)  பின்னூட்டம் இடுதல் மிக்க உதவி. எளிதில் நாங்கள் கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு வணக்கம்.

தொலைப்பேசி என்றால் தொலைவிலிருந்துகொண்டு பேசும் கருவி என்பது.

 தொலைப்பேசி என்ற தொகையில்  "இல், இருந்துகொண்டு" என்பன தொக்கது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.




மினிட்டும் செகண்டும் தமிழ் மூலங்களுடன் ஒப்புமை,

 மிகுந்த சிந்தனையில் ஈடுபடாமலே மிக்க எளிதாக, " மினிட்" என்ற ஆங்கிலச் சொல்லின் அமைபு பற்றி நாம் உரையாடலாம்.

தமிழில் நாம் நிமிடம் என்று சொல்கிறோம். இச்சொல் மற்ற இந்திய மொழிகளிலும் சொல்லக்கேட்கிறோம்.  ட என்பதற்குப் பதில் ஷ இருக்கலாம்.

மேலும் செல்லுமுன் இதைச் சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள்.

https://sivamaalaa.blogspot.com/2017/05/for-minute.html

இப்போது நிமிடம் :  இதில் அம் விடுபட்டால்  நிமிட்.

இதில் முதல் இரண்டு எழுத்துக்களை முறைமாற்றினால்:  நிமிட்> மினிட் என்று  மாறிவிடும்.

"வழக்கில் புல்லைச் செத்தி எடுத்தல் என்பதுண்டு.  செத்தி > செதுக்கி.

செகன்ட் என்பது  செத்துண்டு, செக்குண்டு ( செகு+உண்டு). ஒப்புமைசெய்யத் தக்க வடிவங்கள்.

வெட்டுண்ட கைகள் வேதனை கொண்டேனே

விதிவசத்தால் இந்த கெதியை அடைந்தேனே

இந்தப் பாடல் வரியில் உண்டு என்ற துணைவினை வருவதுபோலவே,  செக்குண்டு என்பது.

இலத்தீனில் "செக்குண்டா" என்பது வெட்டுண்டது என்னும் பொருளது. இது பெண்பால் வடிவச்சொல்; ஆண்பால் சொல்: செக்குண்டஸ் என்பது.

இவை மிக்க அணுக்கமுடையனவாயும் ஆய்வுக்குரியனவாயும் உள்ளவை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர் 


திங்கள், 13 ஜூன், 2022

தாடி, தவ்வு, தாடகை

 தவ்வு என்பது இப்போது இப்போது ஓர் அரும்பதமாகவே தோன்றுகிறது. இதை தடு என்ற வினையிலிருந்து அறிந்து போற்றலாம். 

தடுத்தல்  வினை.

தடு > தடுப்பு  ( பு விகுதி),  தடை ( ஐ விகுதி), தடங்கல் ( தடு+ அம்+ கு+ அல்,  இரண்டு இடைநிலைகளும் ஒரு விகுதியும்).

வு என்பதும் ஒரு விகுதிதான்.  அறி -  அறிவு.

தடு > தடு+ வு>  தடுவு.

டு என்பது இடைக்குறையாக,  

தடு > தடுவு > த + வு > தவ்வு,   அல்லது  த(டு)வு> தவ்வு> தௌவு என்றும் எழுதினர்.

தாடி என்பதும் முகத்திற்கு ஒரு தடைதான். (குழந்தையை முத்தமிடத் தடை, வேறு தடைகளும் இருக்கலாம்).

தடு >  தாடு.  ( இது சுடு > சூடு என்பது போல).

தாடு +   இ >  தாடி. 


இனி இராமாயணத்தில் எப்படி தாடு என்பதிலிருந்து பிறந்த சொல் ஒரு பேயின் பெயராய் வருகிறது, காண்போம்.

தாடகை யாகம் இயற்றுவோரின் முயற்சிகட்கு ஒரு தடையாகவிருந்தாள்.

தாடு :  தடை.  தடுத்தல்.

தாடு + அகம் + ஐ.

அகம் என்பதை அக என்று குறைக்க,

தாடு + அக+ ஐ  > தாடகை ஆகிறது.

தவமியற்றும் இடத்தில் இருந்துகொண்டு ( "அக")  தடைசெய்யும் பேய்.

வான்மிகி ஒரு சங்கப்புலவருமாவார். இராமாயணத்தில் பல பெயர்கள் தமிழ் மூலம் உடையவை.


துர்க்கையம்மனைச் செவ்வாய்க்கிழமை தொழுதல்.

 ஒவ்வொரு நிமிடமும் உழைப்பென்றாலும்

எவ்வாறேனும் தொழுதல் இழைக்கநின்றார்;

செவ்வாயில்  சிறிதுகாலம் பசித்திருந்தார்

ஒவ்வாதன யாவையும் ஒசித்துவீசி, 

செவ்வானில் பகலோனின் ஆட்சிக்காலில்


தவ்வழிக்கும் துர்க்கையம்மை  மாட்சிகண்டார்.


செவ்வாய் - செவ்வாய்க்கிழமை

ஒசித்துவீசி  -  களைந்து எறிந்துவிட்டு.

பசித்து -  உண்ணாமை கடைப்பிடித்து

ஆட்சிக்காலில் -  ஆளும் காலத்தில், அதாவது ஒளிவீசிக்கொண்டிருக்கையில்.

தவ்வழிக்கும் -  கெடுதல் நீக்கும். 

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


ஞாயிறு, 12 ஜூன், 2022

முடியாதவர்களுக்கான மின்வண்டி.

 அகவைபல  கடந்துநடை  தளர்ந்திறங்கி

ஆடியாடிச்  செல்கின்ற  நிலையடைந்து

முகமேதோல்   சுருங்கிவலி   கைகாலூர்ந்து

முடக்கமெனும் கட்டமது நேர்ந்தபோதும்

திகைப்பதுதீர் முதியர்நட மாட்டமேற்றி

தேனில்லா விடினும்நற் சருக்கரைபோல்

வகையாக வரப்போக   உறவுநண்பை

வளர்விக்க  இயங்கியொன்று வந்ததேபார்!  


மின்னடையாற்  றல்தன்னால்  ஒலியெழுப்பி

மீயெனுமோர் இசைமீட்டி ஓட்டம்கூட்டும்

தன்விடுகை  வண்டியிதைத்  தனதாய்க்கொண்டு

தடுக்கிவிழும் முதியோரும்   அங்குமிங்கும்

மின்னலைப்போல் இல்லெனினும் விரைந்துசற்று

மேனிலையில் வேலைகளைத்  தீர்க்குமாற்றல்

பன்னலமும் தாம்பெறுவர் இரவுவேளை

பகல்புலர்ந்த நலம்காண   வந்ததேபார்!


மேயென்றே  ஓடுவதாம்  ஆடுமின்  வண்டிநீயே

மீயென்றே மீட்டுவிரைந்   தோடு.


அரும்பதவுரை:

அகவைபல கடந்து  --- முதுமை அடைந்து

 தளர்ந்திறங்கி -  தளர்ந்து இறங்கி,   இறங்கி - வாழ்க்கை

இறங்குமுக மாகி,

வலி   கைகாலூர்ந்து -- கைகால் வலி மேலிட்டு;

முடக்கமெனும் கட்டமது நேர்ந்தபோதும் -  முடக்கம் ஏற்பட்டாலும்.

திகைப்பது   தீர்   -- திகைப்பை நீக்கிக்கொள்க;

முதியர்நட மாட்டமேற்றி  ---- முதியவர்களுக்கு அவர்களின் நடமாட்டத்தை

அதிகமாக்கி;

தேனில்லா விடினும்நற் சருக்கரைபோல்  ---- தேன் கிடைக்காத போது=

சர்க்கரை கிட்டியது போல;

வகையாக வரப்போக  --  நல்லபடி( உறவினர் நண்பரிடை) ஈடுபாடு மிக; 

உறவுநண்பை வளர்விக்க---  உறவுகளையும் நட்பையும்  பெருக்க,

இயங்கியொன்று வந்ததேபார்!  ----  ஒரு வண்டி வந்துள்ளது.  பார்க்கவும்.


மின்னடையாற்றல்  தன்னால்  -- பாட்டரி வலிமையினால்

ஒலியெழுப்பி --சத்தம் ஏற்படுத்தி;

மீயெனுமோர் இசைமீட்டி -- மீ என்று ஒலியுடன்;

 ஓட்டம்கூட்டும்  --  ஓடுகின்ற,

தன்விடுகை  வண்டியிதை --- முதியவர் தானே ஓட்டிச் செல்லும் இந்த வண்டியை;

தனதாய்க்கொண்டு --  வாங்கி வைத்துக்கொண்டு,

தடுக்கிவிழும் முதியோரும்   அங்குமிங்கும்;

மின்னலைப்போல் இல்லெனினும் -  அதிவேகமாய் இல்லை என்றாலும்;

விரைந்துசற்று  கொஞ்சம் விரைவாக;

மேனிலையில்-  நல்ல விதமாக;

 வேலைகளைத்  தீர்க்குமாற்றல்,  ~;  தீர்க்கும் - முடிக்கும்,  ஆற்றல் - திறம்;

பன்னலமும் தாம்பெறுவர் --  பல நலமும் அடைவர்.

இரவுவேளை  பகல்புலர்ந்த -  வாழ்வின் இரவில் உள்ள முதியவர் கூட

பகலில் வந்துவிடும்,

நலம்காண   வந்ததேபார்!  என்றவாறு.

நண்பு நட்பு இருவகையாக எழுதப்படும். நட்டல் என்பதும் சரி.



அறிந்த சொற்கள் சிலவற்றுக்குப் பொருள் விடப்பட்டுள்ளது.




வண்டிகளின் படம்:




அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.






வெள்ளி, 10 ஜூன், 2022

பேரிகை - தாண்டவம், "இகை"

பேரிகை என்ற பண்டைக்கால முரசு/ பறை. 


பேரிகை என்பது ஒருவகைப் பறையின் பெயர். இதை வாசிப்பதைக் கொட்டுதல் முழக்குதல் என்ற வினைகளால் குறிக்கலாம்.

இப் பேரிகை என்னும் சொல்லில்  இறுதி இகை என்று முடிகிறது.  இகை என்ற தொழிற்பெயர்  இகு+ ஐ என்று விகுதி புணர்த்தி அமைந்தது.  இதுபோல் அமைந்த வேறுசொற்கள் :  தொகை ( தொகு  ஐ),  நகை (நகு + ஐ),  தகை ( தகு ஐ ) எனப் பலவுள்ளன.  இகத்தல் பல்பொருட் சொல் என்றாலும், அதன் பொருட்களில், தாண்டுதல் என்பதுமொன்று. இகை என்பது தாண்டுதல் என்று பொருள்கொள்ளுவோமானால்,  இந்தப் பேரிகை என்பதை அங்குமிங்கும் தாண்டிக்கொண்டு ஆடினர் என்று முடிபு கொள்ளலாம்.  தாண்டித் தாண்டி ஆடிய ஆட்டங்களும் உள்ளன.  தாண்டவம் என்று சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படும் நடனமும் உண்டு.  "பொன்னம்பலம் தனில் தாண்டவமாடிய (சிவம்)" என்பது காண்க.  தாண்டு+ அ+ அம் =  தாண்டவம், இங்கு  அ என்பது சொல்லாக்க இடைநிலை, அம் என்பது விகுதி.  அ+ அம் = அவம், இதில் வ் என்பது வகர உடம்படுமெய். இது அவர் என்பதில் அ+ வ் + அர் > ~  , வகர உடம்படு மெய்  என்றபடி.

இகத்தல் என்பது  தாண்டுதல் என்று நம் நிகண்டுகள் சரியாகவே பொருள்கூறியுள்ளன.  இது ஒரு சுட்டடிச் சொல்.  இது எவ்வாறு ஆனது என்பதை இப்போது கண்டுகொள்வோம்.

இக : வினைச்சொல்.  இ + கு + அ.    இ என்பது இங்கு,   அ என்பது அங்கு.  தாண்டுவது, இங்கிருந்து அங்கு,  அங்கிருந்து இங்கு.   கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறுசொல், இக்காலத்தில் அது உருபாகவும் பயன் காண்கின்றது.

பேரிகை என்ற சொல்லை இப்போது நன் கு அறிந்தோம்.  ஆனால் இச்சொல்லை வேறொரு முறையிலும் அறியலாம்.  அதைப் பின் ஓர் இடுகையில் சொல்வோம்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.


வியாழன், 9 ஜூன், 2022

"காண்வாய்" தமிழில் எப்படிச் சொல்வது.

 காண்வாய் என்பது இரண்டு தமிழ்ச்சொற்களை இணைத்த தொடர்போல் உள்ளது.

வாயைப் பார் என்று பொருள்கொள்ளலாம்.  ஆனால் இலக்கியத் தமிழில் வாய் என்பதற்கு இடம் என்ற பொருளும் உள்ளது. வாய்க்குருவி என்றால் ஊதுகுழல். இதுபோல் சொற்களும் உள்ளன.  வாய்க்காலுக்குப் போதல் என்றால் கால்லால் போதல்,  கழிப்பிடம் செல்லுதல் என்பது,  இவ்வாறு வேறுபொருள் தரும் சொற்களும் தொடர்களும் உள்ளன.

இங்கு நாம் எடுத்துக்கொண்ட " காண்வாய்"  என்பது  "ஊர்தியுலா"  ,  காப்புலா,  ஊர்தியணி,   ஊர்தித்தொடர்,  வாகனத்தொடர்,  வாகனப்பாதுகாப்பணி  என்று சிலவகைகளில்  தமிழில் சொல்லலாம்.  காண்வாய் - convoy. ஆங்கிலச் சொல்.

செய்திக்கு ஏற்ற பொருளுடைய சொல்லைத் தேர்ந்தெடுத்துத் தமிழில் சொல்ல முயற்சி மேற்கொள்ளுங்கள். எளிதன்று ஆனாலும் முயற்சி திருவினை. 


உங்கள் வாசிப்புக்கு:

https://sivamaalaa.blogspot.com/2017/08/blog-post_28.html


உங்கள் கருத்துகளைப் பின்னூட்டமிடுங்கள்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்


செவ்வாய், 7 ஜூன், 2022

சுத்தம் என்ற சொல் கவியில்.

 தரையில் எதுவும் கிடக்காமல்

தகுந்த படிநீ  சுத்தம் செய்!

உரக்கப் பெரிதாய்ப் பேசிநலம்

உடலில் உனதென் றெண்ணாதே,

இரவும் பகலும் நீயறியா

ஈளை நுண்மிகள் பிற பரவும்

கரவில் வளர்நோய்க் குற்றுயிரே

குறுமி கிருமி  ஆனதம்மே!


ஈளை - சளித்தொடர்புடைய ஒரு நோய்.

நுண்மி - கிருமி

பிற - ஈளை அன்றி மற்றவை

கரவில் - மறைவாக

குற்றுயிர் -  மிகச்சிறிய உயிர்வகை. நுண்ணுயிர் - அதனினும் சிறியது.

கண்ணுக்குத் தெரியாத சிறுமை உள்ள உயிர்.

நுண்மையும் குறுமையும் பொருள்தளர்ச்சியாகப் பயன்படுத்தப் பட்ட சொற்கள்.


சுத்தம் --  தூய்மை.  இச்சொல்லின் தோற்றம் இவ்வாறு:

https://sivamaalaa.blogspot.com/2014/04/words-of-cleanliness.html

இனி,  இன்னொரு வகையிலும் இதுவே முடிபு:

உ  -  முன்னிருப்பது;   உது :  உகரத்துடன் ஒன்றன்பால் விகுதி சேர்ந்த சொல். முன்னுள்ள பொருள். இதற்கிணையான சொற்கள்:   அது,  இது, எது, உது.

அது > அத்து.

இதுபோல்  உது > உத்து.

அத்துச் சாரியை,  அது என்பதன் இரட்டிப்புதான்.

உது > உத்து > உத்தம் > சுத்தம்.

அகர வருக்க எழுத்துகள் சகர வருக்கமாய்த் திரியும்.

உத்தமர் என்பதும் இதனடியில் தோன்றியதே.


சுத்தம் என்ற சொல், மேலை இந்தோ ஐரோப்பியத்திலும் இல்லை.

கிருமி என்பது குறுமி  ( குற்றுயிர், சிறியது ).  கிருமி :  கருமி, (கரியது) மற்றும் குறுமி .  இச்சொல் இருபிறப்பிச் சொல்.



கிரு :  கரு என்பது கிரு என்று திரியும்.

எடுத்துக்காட்டு:  கரு>  கிரு> கிருஷ்ண  ( கிருஷ்ண பக்கம்)

கரு > கரி > கரிசல். (கரிசு+ அல்)

கருசணவிய பக்கம் >  கிருஷ்ண......

நிலவின் ஒளியில்லாத பக்கம்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.


இலாடம் மற்றும் எதிர்மறை அமைப்புச் சொற்கள்.

 இன்று லாடம் என்ற சொல்லை ஆய்ந்து  அது தோன்றிடம் ( தோற்றுவாய்) அறிவோம்.  ( தோற்று  - தோன்றும்  ,  வாய் -  இடம் ).

இது மிக்க எளிதான சொல்தான்.

செருப்பு  ஒரு பக்கமாகத் தேய்ந்து  அப்புறம்  நாம் நடப்பதற்கு ஒத்து வராமல் வழுக்குதல், வீழ்தல் முதலிய தொல்லைகளை உண்டுபண்ணும்.  லாடம் என்னும் ஒட்டுறுப்பை அடித்துப் பொருத்தி,  இந்தத் தொல்லையை ஒருவாறு நீக்கிவிடலாம்.  

இக்காலங்களில் செருப்புகள் தொழிற்சாலைகளில் செய்து முன் தயாரிப்பாகக் கிடைத்தலால்,  லாடம் முதலியவை அடித்துச் செருப்பைச் செப்பம் செய்யத்தேவையில்லை. புதியவை வாங்கிப் போட்டுக்கொள்ளலாம். ஊர்க்காவலர் படை, போர்ப்படை முதலியவற்றில் பணிபுரிவோரே இப்போது இலாடங்களைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள் என்று அறிகிறோம்.

மேலும் இப்போது காலணிகள் பெரும்பாலும் தேய்வையால் ( ரப்பர்)  ஆனவை. இலாடங்கள் இவற்றுக்கு உதவ மாட்டா.

சமதரையில் செருப்பு  ஆடுதலின்றி இருக்கவேண்டும்.  இந்த ஆடுதல் கருத்தினின்றே இலாடம் என்ற சொல் அமைந்துள்ளது.

இல்   ஆடு  அம் >  இலாடம் > லாடம்.

செருப்பு ஆடாமல் காக்கும் இரும்புப் பட்டையாணி.

இது முறைமாற்று அமைப்புச் சொல்.

ஆடு + இல் + அம்  >  ஆடிலம் என்று அமைந்திருந்தால்  இயல்பமைவு எனலாம். அமைத்தவர்கள் இது நன்றாக இல்லை என்று நினைத்துத் திருப்பிப் போட்டு அமைத்துள்ளனர்.  இந்த முறையைப் பிற்காலத்தில் பின்பற்றியுள்ளமை தெரிகிறது.  

இதுபோல் முறைமாற்றாக அமைந்த இன்னொரு சொல்:  இலாகா.

பொருள்:  நிறுவாகக் காப்பு இல்லம்.

இல் +  ஆ + கா.

( இல்லம்  ஆகும்  காப்பதற்கு)  காப்பதற்கு ஆகும் இல்லம்.

சில சொற்கள் எதிர்மறையாக அமைந்தவை:

இன்னல  ( பொருள் நேற்று ).   " இன்று அல்ல"  இன்னு அல  இது மலையாள மொழிச்சொல்.

இதுபோல் எதிர்மறையாக வரும் தமிழ்ச்சொல்:

அன்னியன் ( அல் நீ அன்).  நீ அல்லாத பிறன் அல்லது உனக்கு உறவு அற்றவன்,

தீபகற்பம்.   ( தீவகம் அல் பு அம் ).  வ- ப போலி.

அல்  ( அல்ல) என்பது இதில் எதிர்மறை.

பழங்காலச் சொல்:  அல்,(  பகல் அல்லாத நேரம்.)

அல்லி  ( இரவில் அல்லாமல் மலராதது)

உன்னைப்போல் பிறனை நேசி என்ற வாக்கியத்தில், நீ அல்லாத யாவரும்  பிறன் என்றே கொண்டனர்.  உறவு ஒரு பொருட்டன்று. 


அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்




சனி, 4 ஜூன், 2022

இறக்கும்போதும் உமக்காகத் துடிக்கும் நாயின் இதயம்.

 

நேரிசை வெண்பா


அன்பினோர்    ஊற்றாக வாழ்ந்தே,   உயிர்விட்டால்

அன்புக்  கெனநின்ற  நாய்தனை ---- தன்பக்கல்

என்றும்நீக் காதீர் இதயம் உமக்கன்றோ 

கொன்றும் துடிக்கும்  அது.


அன்பினோர் -  அன்பின் ஓர்;   உயிர்விட்டால் - இறக்கும்போதும்; 

அன்புக் கென நின்ற =  உயிர் இருக்கும்போதும் உமக்காக;  அது 

போம்போதும் உமக்காக என்பது;   தன் பக்கல் -  தன் பக்கத்திலே; ( தன் பக்கத்திலிருந்து )

எந்தக் காலத்திலும்;   நீக்காதீர் - உம்  அரவணைப்பிலிருந்து விலக்காதீர்

என்பது;    இதயம் உமக்கன்றோ  -  அதன் இதயம் முழுமையும்

உமக்கு என்பதில் ஐயமில்லை;   கொன்றும் துடிக்கும் அது -   நீர் அதைக்

கொன்றாலும் அதன் இறுதித் துடிப்பு உமக்காகத்தான்.

உமக்கன்றோ என்பதை இருபுறமும் இணைத்துப் பொருள் கொள்க. இச்

சொற்றொடர் " நடுநாயகம் ". ( இருபக்கம்  மாட்டும்படி நட்டு 

நயக்கப்படுவது).  

நடுநின்ற  " நாயகம்".   நய அகம் - நயமுடைய உட்பகுதி. அல்லது நயக்கப்பட்ட ~.

Pl click: செய்தி.

https://theindependent.sg/shiba-inu-loyal-dog-runs-8km-back-home-after-owner-gives-him-up-due-to-asthma/

..................At one point, it appeared that Saisai was crying, so Zhao gently caressed his head and told him not to cry. She, too, sniffled at the end of the video......................


நம்  வலைபூவின் ஆதரவாளர் திருமதி ரெதி  அவர்களின் நாய்,  நோய்வாய்ப் பட்டு இறக்கும் தறுவாயில் செய்திவர,  விலங்கு நோய்மனைக்கு ஓடினார்,  இன்னும் இறக்கவில்லை, போய்ப் பாருங்கள் என்றனர்  மருத்துவர்கள். அருகே சென்று ரெ பெயர்சொல்லிக் கூப்பிட, தலையைத் தூக்கி  அது அவரைப் பார்த்துவிட்டு தலையைக் கீழே போட்டுவிட்டு ஒரு பெருமூச்சு விட்டது.  தலையை மீண்டும் தூக்க இயலாமல் இன்னொரு மூச்சுடன் நின்றுவிட்டது.   என்னே கொடுமை.

இவ்வாறெல்லாம் அன்புகாட்டும் நாயை  நாய் என்பதே தவறு. அதுதான் உண்மை இதயக்கனி.

 




துர்க்கையம்மன் அருள்


 எத்துணை மாட்சிமை துர்க்கையம்மா!

இத்தனை அழகும் சன்னிதியில்.

உத்தமச் சத்தியக் கருணையிலே

எத்தனை நாட்கள்யாம் இணைந்துநின்றேம்

பத்தருக் கினியும் அருள்புரிவாய்

பனிபக  லோன்முன்  மறைந்துவிடும்

நித்திய வாழ்வினில் எமைநிறுத்தி 

நேரு  மின்னல்களும்  இலவாக்குவாய்..


சிவமாலையின் கவி.


பொருள்

எத்துணை மாட்சிமை துர்க்கையம்மா!

--- மாட்சிமை என்பது பெரும்பாலும் மன்னரவையில் நிலவும் மேன்மை நிலை.  இது அலங்காரங்கள் மக்கள் அஞ்சுதலன்புடன் நிற்றலைக் குறிக்கும். இறைவிக்கும் ஏற்றசொல்தான்.

மாட்சி மை துர்க்கையம்ம  மை  my என்றுகூட வைத்துக்கொள்ளலாம்.

இத்தனை அழகும் சன்னிதியில்.===  தெய்வம் நிற்குமிடம்  சன்னிதி.

உத்தமச் சத்தியக் கருணையிலே  (  சத்தி - சக்தி;  அக் கருணையிலே என்று இருவாறு பொருள் கொள்ளவும் இடமுண்டு.)

அதாவது சக்தி அக் கருணையிலே என்றும் வரும்,

கருணை என்பது  கருநெய் என்றுகூட வைத்துக்கொண்டாலும் ஒரு பொருண்மை உண்டு.  அக்கினிக்கு வத்திரங்கள் உணவெல்லாம் கொடையாக்கியபின் எரிந்த கருப்பில் கொஞ்சம் எடுத்து நெய்விட்டு,  பொட்டுவைத்துக் கொள்வதுண்டு.   கருணை - என்பதைக் கருநெய் என்று எடுத்துக்கொண்டாலும் அதையும் குறிப்பாகக் கொள்ளலாம்.  இதைப் பலமுறை பெற்றுள்ளேம்.  நீங்களும் பெற்றிருப்பீர்கள்.

எத்தனை நாட்கள்யாம் இணைந்துநின்றேம்  -  இவ்வாறு ஈடுபாடுகள் உள.

பத்தருக் கினியும் அருள்புரிவாய்  : இனியும் என்றால் முன்னும் அருள் கிட்டியபடி. இனியும் வேண்டும் அந்த இனிமை என்பது.

பனிபக  லோன்முன்  மறைந்துவிடும்  அவ்வாறு அருள் கிட்டினால் இன்னல்கள் மறைந்துவிடும்.

பக -  வெட்டிவிட, பக எனில் அது பெய்யாத இடம் செல்லுதலுமாம். ( என்றும் பொருள் )

கடவுள் ஒரு லோன் (கடனாக அருள்) கொடுத்தாலும்  தாழிருஞ்சடைகள் தாங்கி தாங்கருந்தவமேற்கொண்டாவது கட்டிவிடலாமே.  அப்படியும் கொள்ளலாம்.

நித்திய வாழ்வினில் எமைநிறுத்தி   நித்தியம் என்பது நிற்றலுற்ற தன்மை.

நில் . நிற்றல் > நித்த(ல்)  :>  நித்தி(யம்.).

நேரு  மின்னல்களும்  இலவாக்குவாய்..  நேரும் இன்னல்.

இல என்பது பன்மை, இல்லை என்பது  தற்காலத் தமிழில்.

இல்லை - ஒருமையும் இல்லை; பன்மையும் இல்லை.

இல என்பது பன்மையில் மட்டும் வருவது.

நின்றேம் என்பது தம்மைச் சார்ந்தோரை மட்டும் உட்படுத்த, நின்றோம் என்பது  முன்னிலையில் உள்ளோரையும்  ( இங்கு துர்க்காதேவி) உட்படுத்தும்/. ஆதலால் நின்றேம் என்பதே ஏற்றுக்கொண்டேம்.  ஏம் விகுதி இப்போது வழக்கு குன்றியுள்ளது.)

மறைமலையடிகள் பெரிதும் ஏம் விகுதியைப் பயன்படுத்தியுள்ளார்.

நின்றேன் >  நின்றேம் (பன்மை)

நின்றோன் >  நின்றோம்  (")

வழக்கில் சற்று வேறுபடுதல் உண்டு. இதை ஒருமுறை விளக்கவேண்டும்.

இம்மில் முடிவது பண்டைத் தமிழில் பன்மை.

சீனமொழியில் மகர ஒற்றில் முடியும் பன்மை உண்டு. அது இன்னும் ஓர் அன் பெற்று ஆங்கு முடியும்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்





வெள்ளி, 3 ஜூன், 2022

சம்சாரம்.

 பெண்ணாதிக்கக் காலத்தில் மணந்துகொண்டவன் பெண்ணின் வீட்டிற் சென்று பதிந்து வாழ்ந்தான். பெண்ணே அவ்வீட்டில் ஆட்சிசெய்தாள். நிலங்கள் தோட்டந்துறவுகள் அவளின் 'நிறுவாகத்தில்'  இருந்தமையால், பெரிதும்  சொத்துரிமை இல்லாத இவ்வாடவன், அவள்தன் நிறுவாகத்துக்கு உதவியாளன். பதிந்துவாழ்ந்தமையின் "பதி" என்பது  அவனுக்கு பொருத்தமான சொல்லாயிற்று என்பதை இன்று நாம் உணர்கின்றோம்.  இச்சொல், வேளாண்மை செய்து வாழ்ந்த குமுகாயத் தொடர்பில் எழுந்தது என்பது சொல்லாமற் புரியக்கூடியது.

விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தோரிடை இஃது தோன்றியிருக்க வாய்ப்புகள் குறைவாய் இருந்தது.  அன்றன்று ஏதாவது கிட்டினாலே வாழ்வு நகரும்.  காட்டில் திரிவன, பெண்ணுக்குச் சொத்துகள் ஆகமாட்டா. காடுமுழுமையும் சொத்தாகவிருப்பின் இஃது அமையக்கூடும்.

இக்கருத்தின் தொடர்பில் யாம் முன்னெழுதிய இடுகை,  இதைச் சற்று விரிவாக ஆய்கின்றது.  சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள்.

https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html

தலைவி என்று சங்க இலக்கியத்தில் கையாளப்பட்ட சொல்லும் இதனைக் கோடிகாட்ட, உதவக்கூடிய சொல்லே. காதல் தொடக்க நிலையில் இருக்கும் காலத்திலேயும் அவள் தலைவி என்ற குறிப்புக்குள் வந்துவிடுகின்றாள். அவளைத் தேடிவந்து அன்புகொள்பவன் தான் தலைவன்.  அவனைத் தேடி அவள் போவதில்லை.   அவனை இறுதியில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை அவளும் வீட்டாரும் முடிவு செய்கின்றனர். பொருள் இல்லாதவனாயின் பொருள்வயிற் பிரிந்துசென்று,   கொணர்வான். தலைவியை நாடும்போதே  வயல், மலை காடு முதலியவை உடையவனாயும் இருத்தல் கூடும். நாடகக் கருத்துகள் பெரிதும் தலைவி, தோழி இவர்களிடையேதாம் தோன்றி இன்புறுத்துவனவாகின்றன.

தம் என்பது தன்மைப்பன்மைச் சொல்.  தாம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் என்பது இதன் பொருள்.  

தன், தம் என்ற இரண்டும்  சம் என்று திரியும். 

மனைவி என்பவள் தம்மைச் சார்ந்து வாழ்பவள் என்ற கருத்து ஆணாதிக்க காலத்தில் தோன்றியது ஆகும்.  அப்போது  நிலவரமும் அவ்வாறு ஆகிவிட்டது.

தம் சார் அம் >  சம் சார் அம் > சம்சாரம் ஆயிற்று.

தங்கு > சங்கு  :  சங்கு என்பது ஓருயிரி தங்கி வாழ் கூடு. பல புலவர்கள் அரசனின் அரவணைப்பில் தங்கி உண்டு கவி பாடிப் பரிசில் பெறும் இடம்  அல்லது ஏற்பாடு சங்கம்  ஆனது.  சொற்கள் மற்றும் வழக்குகள்  ( சொல் பயன்பாடுகள்)  அவ்வப்போது நட்ப்புக்கு ஏற்பத் தோன்றிக்கொண்டிருந்தன.  எ-டு:  அரசவைக்குள் புகுந்து எதுவும் பேசாமல்,  வெளியில் நிற்கும் அதிகாரியிடம் ஒரு மனுவைக் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டு போவது  " புகார்மனு"  ஆனது.  புகார் -  அரசவைக்குள் புகாதவர்.  புகுந்து பேச எல்லாராலும் முடிவதில்லை. அரசவையில் முன்மைவாய்ந்த பேச்சுக்குரியவாய்ப் பல இருக்கலாம்.  புகார் - அர்சவைக்குள் புகாதவர் கொடுத்தது.  புகார் என்பது உருதுமில்லை கிருதுமில்லை.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

தட்டச்சுப் பிறழ்வுகள் சுட்டிக் காட்டின் நன்றியுடையோம். பின்னூட்டமிடுங்கள்

புதன், 1 ஜூன், 2022

பிராயம் - பிறந்ததிலிருந்து

 வயது, அகவை போன்ற  காலச்சொற்களை நாம் முன்னர் விளக்கியிருக்கிறோம். இவை எல்லாம் தமிழ்ச்சொற்களே   ஆகும். இவற்றைச் சொல்லாய்வு அட்டவணைமூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.  காலத்திற்கும் அதன் ஓட்டத்திற்கும் கட்டுப்பட்டவனே மனிதனும் இதர  உயிரினங்களும். வயப்பட்ட காலம் வயது.   அகப்பட்ட காலம் அகவை. சொல்லமைய இவையே மையக்கருத்துகள்.

பிராயம்  என்பதெனின்:  

ஒருவன் பிறந்ததிலிருந்து,  காலம் ஓடுகிறது.  இதுவே இச்சொல்லின் மையக் கருத்துமாகும்.

பிற + ஆ + அம்.>  பிறஆயம் > பிராயம்.

றஆ என்பதில் ஓர் அகரம் வீழ்ந்தது.

றஆ >  ற்  அ ஆ > றா >  ரா ( வல்லெழுத்து மெல்லழுத்தானது).

ஆ+ அம் > ஆயம்.

வரையறவு: definition  பிறந்ததிலிருந்து ஆனது ( காலம்).  அதுதான் வயது,  அகவை.

ஆற்றங்கரைதனிலே -  அந்தியிலே  குளிர் தந்த நிலாவினில்,காற்றிலுட் கார்ந்திருந்தேன்,  (பாரதிதாசன்)  என்ற பாட்டில், பத்துப் பன்னிரண்டு பிராயம்  அடைந்தவர் என்ற சொற்பயன்பாட்டினை எண்ணுக 


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

குறிப்பு:  

இச்சொற்கள் முன் விளக்கப்பட்டுள்ளவை. உங்கள் நினைவுக்கு:

இது அற >  இதர   ( இங்கு ற என்பது ர- வாய்த் திரிந்தது. இருசொற்கள் புணர்ச்சி.)  [  இதர என்பது ஒரு கூட்டுச்சொல் ]

இதுஅற > இதர என்பதிலும் றகரம் ரகரமாயது காண்க.