பெண்ணாதிக்கக் காலத்தில் மணந்துகொண்டவன் பெண்ணின் வீட்டிற் சென்று பதிந்து வாழ்ந்தான். பெண்ணே அவ்வீட்டில் ஆட்சிசெய்தாள். நிலங்கள் தோட்டந்துறவுகள் அவளின் 'நிறுவாகத்தில்' இருந்தமையால், பெரிதும் சொத்துரிமை இல்லாத இவ்வாடவன், அவள்தன் நிறுவாகத்துக்கு உதவியாளன். பதிந்துவாழ்ந்தமையின் "பதி" என்பது அவனுக்கு பொருத்தமான சொல்லாயிற்று என்பதை இன்று நாம் உணர்கின்றோம். இச்சொல், வேளாண்மை செய்து வாழ்ந்த குமுகாயத் தொடர்பில் எழுந்தது என்பது சொல்லாமற் புரியக்கூடியது.
விலங்குகளை வேட்டையாடி வாழ்ந்தோரிடை இஃது தோன்றியிருக்க வாய்ப்புகள் குறைவாய் இருந்தது. அன்றன்று ஏதாவது கிட்டினாலே வாழ்வு நகரும். காட்டில் திரிவன, பெண்ணுக்குச் சொத்துகள் ஆகமாட்டா. காடுமுழுமையும் சொத்தாகவிருப்பின் இஃது அமையக்கூடும்.
இக்கருத்தின் தொடர்பில் யாம் முன்னெழுதிய இடுகை, இதைச் சற்று விரிவாக ஆய்கின்றது. சொடுக்கி வாசித்துக்கொள்ளுங்கள்.
https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_25.html
தலைவி என்று சங்க இலக்கியத்தில் கையாளப்பட்ட சொல்லும் இதனைக் கோடிகாட்ட, உதவக்கூடிய சொல்லே. காதல் தொடக்க நிலையில் இருக்கும் காலத்திலேயும் அவள் தலைவி என்ற குறிப்புக்குள் வந்துவிடுகின்றாள். அவளைத் தேடிவந்து அன்புகொள்பவன் தான் தலைவன். அவனைத் தேடி அவள் போவதில்லை. அவனை இறுதியில் ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை அவளும் வீட்டாரும் முடிவு செய்கின்றனர். பொருள் இல்லாதவனாயின் பொருள்வயிற் பிரிந்துசென்று, கொணர்வான். தலைவியை நாடும்போதே வயல், மலை காடு முதலியவை உடையவனாயும் இருத்தல் கூடும். நாடகக் கருத்துகள் பெரிதும் தலைவி, தோழி இவர்களிடையேதாம் தோன்றி இன்புறுத்துவனவாகின்றன.
தம் என்பது தன்மைப்பன்மைச் சொல். தாம் ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் என்பது இதன் பொருள்.
தன், தம் என்ற இரண்டும் சம் என்று திரியும்.
மனைவி என்பவள் தம்மைச் சார்ந்து வாழ்பவள் என்ற கருத்து ஆணாதிக்க காலத்தில் தோன்றியது ஆகும். அப்போது நிலவரமும் அவ்வாறு ஆகிவிட்டது.
தம் சார் அம் > சம் சார் அம் > சம்சாரம் ஆயிற்று.
தங்கு > சங்கு : சங்கு என்பது ஓருயிரி தங்கி வாழ் கூடு. பல புலவர்கள் அரசனின் அரவணைப்பில் தங்கி உண்டு கவி பாடிப் பரிசில் பெறும் இடம் அல்லது ஏற்பாடு சங்கம் ஆனது. சொற்கள் மற்றும் வழக்குகள் ( சொல் பயன்பாடுகள்) அவ்வப்போது நட்ப்புக்கு ஏற்பத் தோன்றிக்கொண்டிருந்தன. எ-டு: அரசவைக்குள் புகுந்து எதுவும் பேசாமல், வெளியில் நிற்கும் அதிகாரியிடம் ஒரு மனுவைக் கொடுத்து உதவுங்கள் என்று கேட்டுக்கொண்டு போவது " புகார்மனு" ஆனது. புகார் - அரசவைக்குள் புகாதவர். புகுந்து பேச எல்லாராலும் முடிவதில்லை. அரசவையில் முன்மைவாய்ந்த பேச்சுக்குரியவாய்ப் பல இருக்கலாம். புகார் - அர்சவைக்குள் புகாதவர் கொடுத்தது. புகார் என்பது உருதுமில்லை கிருதுமில்லை.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
தட்டச்சுப் பிறழ்வுகள் சுட்டிக் காட்டின் நன்றியுடையோம். பின்னூட்டமிடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக