புதன், 21 மார்ச், 2018

பதியும் தம்பதியும்

பதி என்ற ஏவல் வினை ஒன்றை இன்னொன்றில்
உள்ளிடுதலைக் குறிக்கும்.  புகுத்தல், நுழைத்தல்
முதலிய வினைகளில் மென்மை இல்லாமை
உணரப்படும்.  ஆனால் பதியும்போது கால்  சேற்றில்
மெதுவாக அழுந்துதல்போல் ஒன்றில் மற்றொன்று
இணையும்.

பதி என்பது கணவனையும் குறிக்கும். இது இப்பொருள்
பெற்றதற்கு நாம் மனிதவளர்ச்சி  நூலைக்கண்டு
விளக்குதல் வேண்டும்.  இந்தியாவில் பல குழுவினரிடை
குடும்பத்தில் பெண்ணே தலைமை தாங்கினாள்.
திருமணம் நிகழ்ந்தபின் ஆண்மகனே தன் பிறந்த
வீட்டை விட்டுப் பெண்ணின் வீட்டில் சென்று தங்கி
வாழ்ந்தான்.  ஆகவே அவன் பெண்ணின் உறையுளில்
சென்று பதிந்தான்;  வீடுவாசல் முதலிய சொத்துக்கள்
பெண்வழியே பிள்ளைகட்குச் சென்றன. இங்ஙனம்
தன்னைப் பதிந்துகொண்டதால் அவன் பதியானான்.

வீட்டுக்குப் பெண்ணே தலைவி. கணவன் பதிவு
பெறுபவன்.  இந்தப் பொருளைப் பார்த்தால் அவன்
சென்றேறிதான். ஆனால் பிற்காலத்தில் பதியென்னும்
சொல் தலைவன் என்ற பொருளைப் பெற்றது குமுக
மாற்றத்தினைக் காட்டுகிறது.

தம்பதி என்ற சொல்லோ இன்னும் இனிய பொருளை
நமக்குத் தெரிவிக்கிறது.  தம் என்பது இருவர் இணைவைக்
குறிக்கும் பன்மைச் சொல்.  தன் என்பதன் பன்மை.
தம்பதி என்போர் ஒருவருள் இன்னொருவர் பதிவாகு-
கின்றனர். இது மனப்பதிவு அல்லது ஒருவர் வாழ்வில்
இன்னொருவர் சென்றிணைந்தததைக் காட்ட
வல்லது.  பதி என்ற முதனிலைத் தொழிற்பெயர்
கள் விகுதியோ அர் விகுதியோ பெற்று கணவன்
மனைவி இருவரையும் குறிக்கும். அதாவது:
தம்பதியர் அல்லது தம்பதிகள் என்று.  அருமையான
வாழ்க்கை இணைப்பை இச்சொல் காட்டவல்லது.

மனைவி கணவன் வீட்டில் சென்று வைகும்
மணமுறையில் அவளும் பதிவாகிறாள் என்றாலும்
அவளைப் பெரும்பாலும் பதி என்பதில்லை; இது
ஆணாத்திக்க நிலையைக் காட்டுவதாகும். இருவரும்
பதிகளே ஆயினும் ஆணே குமுகத்தில் பதி எனப்
படுகிறான்.

தமிழ்வழியாக விளக்குகையில்தான் இச்சொல்லின்
உண்மைப்பொருள் சிறக்கத் தோன்றுகிறது.

இவை தமிழ்ச்சொற்களே.

------------------------------------------------------
அடிக்குறிப்பு:

தளபதி :  இச்சொல்லில் "பதி" என்பதன் பொருள்:

இங்கு காணலாம் (சொடுக்கவும்)

http://sivamaalaa.blogspot.com/2017/10/blog-post_85.html 

கருத்துகள் இல்லை: