திங்கள், 19 மார்ச், 2018

சொல்லமைப்பில் வன்மை மென்மை திறம்.



தமிழ்ச் சொல்லமைப்புத் திறம்.

படிதல் என்ற சொல் பல பொருட்சாயல்களில் பயன்படுத்தத் தக்கதொன்றாம்.

எப்படி அடித்தாலும் இந்த மாடு படியாது என்பது பேச்சில் வரும் வாக்கியம்.  அடி என்பதற்கும் படி என்பதற்கும் ஓர் எதுகைநயம் இருப்பதால் கேட்கவும் இனிமையாக இருப்பது.

ஓர் கடுமையான ( அதாவது அடிபடுதல்  போன்ற) சூழ்நிலையில் படிதல் என்பது ஒரு நிலைகுலைவே ஆகும்.  அஃது  மனக்கனிவினால் தாழ்ந்து ஏற்றுக் கொள்ளுதலினின்று வெகுதொலைவில் இருக்கும் அல்லது நிகழும் ஒரு செயலாகும்.

படி என்பதும்  ( பொருண்மையில் வாசித்தல் என்னும் படி வேறு.) படு என்பதினின்று திரிந்தது.  ஒருவன் படிகின்ற பொழுது செயலில் தலை தரை நோக்குமளவிற்குச் சென்றுவிடுகிறான்.  மேலும் அவ்வாறே செல்வானாகில் படுத்துவிடுவான். படுத்தலாவது, உடல்முழுமையும் தரையிற் படுமாறு கிடத்தலாம்.

பணி என்ற சொல்லை இதனோடு கொண்டுபோய் ஒப்பீடு செய்யலாம்.  அது பண் என்ற சொல்லுடன் தொடர்புடையது ஆகும்.  ஒரு பெரியவர்முன் சிறு அகவையினன் ஒருவன் தாழ்ந்து நின்று ஏற்றுக்கொள்ளுதலை இது குறிக்கிறது.

இப்போது நாமெடுத்துக்கொண்ட கருத்துக்கு வருவோம்.

டகரம் வல்லெழுத்து.

வன்மை காட்டும் ஒருவன்முன் தாழ்ந்துசெல்வோன் படிகிறான்.

ணகரம் மெல்லிது.

மென்மை காட்டுவோன் முன் மனம் இசைந்து தாழ்ந்து செல்லுதலில் அவன் பணிகிறான்.

வணக்கம் குறிக்கும் சொல் பணிதல் ஆகும்.

மென்மையின் முன் தாழ்தல் பணிதலாம்.
வன்மையின்முன் தாழ்தல் படிதலாம்.

சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு சொற்கள் தமிழில் அமைகின்றன.

தனிமைச்சுவை உள்ள மொழி தமிழாகும்.
தமிழைப் பழகு;  அதுவே அழகு எனலாம்.     
 

கருத்துகள் இல்லை: