புதன், 7 மார்ச், 2018

கோகிலமும் குயிலும்



கூவுதல் என்பது நல்ல தமிழ்ச் சொல் எந்தத் தமிழ்
வாத்தியாரும் இதை மறுக்கமாட்டார்.

குயில் கூகூ என்று கூவுகிறது.  இப்படித் தமிழர்
நினைத்ததில் தப்பில்லை.  ஆனால் கொடுந்தமிழ்ப்
பேச்சினரோ அது கூகூ என்று கூவவில்லை; கோகோ
என்றுதான் கூவுகிறது என்று நினைத்தனர். இப்படி
நினைத்ததிலும் ஒன்றும் தப்பில்லை.

(எதிலும் தப்பு அறிவதற்காக இதை எழுதவில்லை)

ஆகவே:

கூகூ என்பதிலிருந்து ஒரு சொல்லைத் தமிழுக்குத்
தந்தது குயில். இது ஒலிக்குறிப்புச் சொல்.  

இதை ஒப்பொலிச் சொல் என்றும் சொல்வர். 
Imitative word

கு+ இல் என்று சொல் அமைந்தது.

இல் என்பது வெறும் விகுதியாகவே கொள்ளத்தக்கது.
இவ்விடத்து இல் என்பது இடத்தையோ வீட்டையோ
உணர்த்தவில்லை.  ஆனால் வாய்+ இல் = வாயில் (
அதாவது வீட்டு வாசல் :  வாயில் > வாசல் ;  இது ய>
வகைத் திரிபு. ) என்பதில் இல் வீட்டைக் குறிக்கிறது.
வாயில் என்பது உண்மையில் இல்லத்தின் வாய்.  இல்
வாய் எனலும் பொருத்தமே.  மறுதலையாக அமைந்த
சொல். reverse formation. இப்படிச் சொற்கள் 
அமையும் என்பதை முன் இடுகைகளில் 
எடுத்துக்காட்டியுள்ளோம்.

இப்போது கோகிலம் என்ற சொல்லை உணர்வோம்.

குயில் கோகோ என்று கத்தும் என்று வேறு சிலர்
நினைத்தனர் என்று சொன்னோம் அல்லோமோ?
இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில் சிலர் குயில்
கோகூ கோகூ என்று கத்துவதாக நினைத்தனர்.(hybrid
imitative formulation).
எப்படியும் நினைக்கலாம்.  Freedom of expression
which at no time can be denied to them.  இது
இன்னும் இனியது.  கோகோ என்று கோழிதான்
கத்தும்.  குயில்மட்டுமே பாதி குயிலாகவும் பாதி
கோழி மாதிரியும் கத்தும்.  ஆகவே கோகூ கோகூ
என்றது சரியானது, இனிமையானது, ஏற்புடையது
என்று பலமாக ஆமோதிக்கலாம்.  ( ஆம் என்று
ஓதிக்கலாம்; என்றால் ஆமென்று ஓதிக்கொள்ள
லாம் ).

இனி விரிக்காமல் சுருக்கிக்கொள்ளலாம்.

கோகூ  கோகூ என்பதை எடுத்து, அதிலும் ஓர்
இல் சேர்க்கவும். கோ+கு+இல் + அம் என்றால்
கோகிலம் என்று சொல் வந்துவிட்டதே.  அது
எப்படி?  ( kU has been shortened
to ku only in the second syllable as in Tamiz ).

குயிலில் வந்த இல் ஏன் கோகிலத்திலும்
வந்தது? 

 உருஷ்யாவிற்குப் பக்கத்து மலைச்சாரலில்
திரிந்துகொண்டிருந்த ஆரிய மாந்தனுக்கு  எப்படி
இச்சொல் அமைந்தது?    சமஸ்கிருதம் தமிழை
ஒட்டியே வருகிறது.  சொல்லமைப்பிலும்
ஒலியமைப்பிலும் அது தமிழை ஒட்டியதே ஆகும்.
ஆரியன் என்பது இனம்பற்றிய சொல் அன்று.
அறிவாளி என்று பொருள்தரும் சொல்.  ஆரியன்
என்ற பெயருள்ள ஓர் இனத்தினர் வரவில்லை,
வெளிநாட்டினர் எப்போதும் வந்துள்ளனர்.

சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் பாடியவனும்
ஒரு பாணன் வகுப்பினன்.  வகுப்பின் பெயரால்
அவன் பாணினி எனப்பட்டான். பாண்+இன்+இ.
பாட்டுக்காரன் அல்லது பாணர் வகுப்பினன். 
சமஸ்கிருத முதல் பெருங்கவி வால்மிகியும்
இற்றை நிலையில் தாழ்த்தப்பட்டவன்.  
பாணர், வால்மிகி என்பவை
சாதிப்பெயர்கள். ( தொல்காப்பியன் என்பதும்
காப்பியக் குடியினன் என்பதைக் குறிக்குமென்பார் 
பேரா. கா.சு. பிள்ளை ).

இப்போது குயில் > குயிலம் > கோகிலம் எனினும்
கோகிலம் > குயிலம் > குயில் எனினும் ஒற்றுமை 
தெரிகிறது.
ஆனால் குயில் கூகூ என்று கூவுவதென்பதே தமிழனின்
செவிப்புலம் உணர்த்துவது;  அது கோகோ என்று 
கூவுவதில்லை.அது கோழிக்கு உரியது ஆகும்.

குயிலம்
குகிலம்
கோகிலம்.
யி>கி.  (ஆய > ஆக என்பதுபோல்)
கு> கோ.   கு - கூ - கூச்சல் - கோஷம்;  கூச் : கோஷ்.

கூ > கூவு,
கூ+இல் > குயில்.
முதலெழுத்துச் சுருங்கியும் சொல் அமையும் என்பது
முன்னர் உரைத்ததே.

சாவு + அம் = சவம் :  இங்கு முதலெழுத்து குறுகிவிட்டது,
பெயர்  பெயர்ச்சொல்லிலிருந்து அமைதல்.

நா> நாவு.
நா> நா+ கு > நக்கு > நக்குதல்.  வினைச்சொல் அமைவு.

அறிக; ஆனந்தம் அடைக.

  ------------------------------------------------------------------------------

 அடிக்குறிப்புகள்:

வாத்தியார் < வாய்த்தியார் < வாய்+தி -:  வாய்ப்பாடம்
சொல்லிக்கொடுப்பவர். இந்தத் தமிழ்ச்சொல்லை அயற்சொல்
என்று மயங்கி  "ஆசிரியர்" என்பதை ஈடாக மேற்கொண்டனர்.
பண்டைக்காலத்தில் ஆசிரியர் என்றால் தொல்காப்பியனார்
போலும் தம்துறை போகிய பெரும்புலவன்மாரையே குறித்தது,
இடையில் நிற்கும் மெய்கள் மறைவது இயல்பு.  எடுத்துக்காட்டு:
பேர்த்தி > பேத்தி.

எழுத்துப்பிழைகள் பின் திருத்தம்பெறும்.

கருத்துகள் இல்லை: