திங்கள், 12 மார்ச், 2018

தின்னத்தந்த கன்று...............

சென்றே ஒழிக  வயலணி ஊரனும் தின்னத்தந்த‌
கன்றே  அமையுங் கல்வேண்டா .....................(275)

இறையனார் அகப்பொருளிலிருந்து  ஓர்  உதாரணப்1 பாடல்.

இந்தப் பாடல், பரத்தையிடம் போதற்குப் பிரிந்த தலைமகன்
பற்றியது என்ப‌. அவன் போய்விட்டாலும் அவனுக்காகத் தலைமகளிடம் பேச, ஒருவன் வருகிறான். அவன் யாரென்பது, பாட்டிலிருந்து வெளிப்படையாகத் தெரியவில்லை.அவன் தலைமகளிடம்
பேசியதாக வருகிறது இந்தப் பாடல்.


சென்றே ஒழிக வயலணி  (ஊரன்):    அழகான வயல்கள் நிறைந்த ஊரை உடைய‌ அந்தத் தலைவன்   போனால் போகட்டுமே! (அப்படி உங்களை விட்டு
எங்கே போய்விடப் போகிறான் என்பது)

ஒழிக என்பது இத்தகு பிரிவினை, தொடரலாகாது என்பதன் குறிப்பாகும்.

வயல் அணி (ஊரன்) சென்றே ஒழிக என்று மாற்றுக.  எது ஒழிக எனின் பிரிதல் ஒழிக; ஊரன் சென்றுவிட்டான் என்பது.  சென்றே என்பதிலுள்ள ஏகாரமும் இறந்த காலமும் இதையே வலியுறுத்துவதாகிறது.  வயலணி என்பது ஆகுபெயராய் ஊரனைக் குறிக்கும்.

அடுத்து ஊரனும் என்று உம்மை தோன்ற அவன் குறிக்கப்பெறுகிறான்.

ஊரனும்   தின்னத்தந்த கன்றே அமையும் :  புல், பிண்ணாக்கு முதலிய
தீனிகள் அளித்துக் கொண்டிருக்கிறானே, உங்கள் கன்றுகட்கு!
உங்கள் வீட்டின் பாலுள்ள அன்பையும் கவனிப்பையும் அவன்
மறந்துவிடவில்லை என்பதை, இந்த அவன் செய்கை
காட்டுகிறதே. புல் பிண்ணாக்கு தவிடு முதலிய தின்னத்தந்த கன்றுகள் சான்றாய் அமையும் என்றபடி.

தின்னத் தந்த என்பது:  கன்றுகள் தின்னும்படியாக அவன் தந்தான் என்பது.
அவை ( அல்லது அது)  தின்றன;  (அவன்) தந்தான்:  இங்கு எழுவாய்கள் தொக்கு.


இந்த ஊரன் (தலைவன்) உயிர்கள் மேல் அன்புடையவன். வந்தபோதெல்லாம்
கன்றுகளுக்குத் தீனி போட்டு நல்லருளாளனாய்த் திகழ்ந்தான். கன்றுகள்பால் இத்துணை அன்பு காட்டியவன் வந்துவிடுவான் என்பது குறிப்பு.  ஒழிக என்றதும் பிரிதல் ஒழிக என்பதையே வலியுறுத்துகிறது.

மேலும் இங்கு கன்று என்றது  தென்னங்கன்று பனங்கன்றுகளைக் குறிக்கமாட்டா. அவை எதையும் தின்னமாட்டா; அவற்றையும் நேரடி உணவாக மனிதர் கொள்வதில்லை.

தின்னத்தந்து அகன்றே அமையும் என்பது பொருந்தவில்லை.  முன் உன்னுடன் இருக்கும்போது உனக்குத் தீனி அளித்தபின்,  " அகன்றே அமையும் " என்றால், விட்டுப்போனதே சரி என்று கூறுவதுபோலாகும்; அஃது ஒழிக என்ற கருத்துக்கு மாறாகிறது.  தலைவிக்குத் தின்னத்தருவதில் உள்ள பெரிய விடயமென்ன என்பதையும் விளக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. தலைவியின் வீட்டில் சோறில்லையோ?

தலைவி அவனின் அன்புக்கு ஏங்குகிறாள்;   உணவுக்கு அன்று.  இதனாலும் கன்றை  உண்ணுதல் என்னும் கருத்து, பொருந்தவில்லை.

தின்னுதல் என்றால் வருந்துதல் என்றும் பொருள் உள்ளது.  வருந்தும்படியான சூழ்நிலையை உண்டாக்கி அப்புறம்தான் எல்லாம் சரியாகும், வருவான் என்பது தலைவன் கல்நெஞ்சன் என்று பொருள்தருவதால் அதுவும் பொருந்தவில்லை.

சென்றே ஒழிக என்று சொல்லிவிட்டு அகன்றே அமையும் எனின் இதைச் சொல்ல ஒருவன் வரவேண்டுமோ?  என்ன ஆறுதல் அது?  மேலும் கூறியது கூறலாகிறதே!

யாம் கூறிய பொருளே பொருந்துகிறது.  கன்றுகள்பாலும் அன்போடு பழகியவன்; வருவான் என்பது.

இங்கு கல்வேண்டா என்று புலவர் சுருக்கமாகக் கூறுகிறார்.  இந்தப் பிரிவுக்காகக் கல்லறைக்குள் போய்விடாதே என்பது அவர் கூறவந்தது.
இதற்கு நடுகல் இல்லையாதலால் இறப்பதில் ஒரு வீரமும் இல்லை என்பது
குறிப்பு எனலாம். கல் என்பது கல்லறை என்பதன் கடைக்குறையாய்க் கொள்ளலாம்,  இதிலோர் வீரமில்லை, யாரும் நினைவு கூரத்தக்க செயலாகாது என்பது வந்தோன் வழங்கிய ஆலோசனை.  நல்லதோர் அறிவுரை.

வேலையாய்ப் போயிருக்கிறார், அன்புடையவர், வந்துவிடுவார், கவலை
வேண்டாம் என்பதே செய்தி, இப்பாடலில்.

இளமாடுகளைத் தந்து அவற்றை தலைவியும் தலைவனும் தின்றார்கள் என்பது கேட்க அருவருப்பாக இல்லை? இப்படியா பொருள் சொல்வது? தின்னத்தந்த = தீனி ஊட்டிய (கன்றுகள்).

இங்கு ஊரனும் தின்னத்தந்த  =  ஊரனும் ஊட்டி வளர்த்த (கன்றுகள்).

(ஊரன் )  சென்றே ஒழிக!
ஊரனும் தின்னத்தந்த (ஊட்டிவளர்த்த ) கன்று(ஓன்றோ பலவோ).

ஊரனும் என்றதால் பிறரும் ஊட்டுவதுண்டு என்பது பொருள். எப்படியும் கன்றுகள் தீனியைப் பெற்றுக்கொண்டுவிடுகின்றன;  தலைவியே அவனன்பை இழந்தவளாய் நிற்கிறாள் என்று தெளிவாக்குகிறது, ஊரனும் என்ற உம்மை.

தின்னத்தந்த :  தீனி கொடுத்த; தீவனம் கொடுத்த.

தின்னுதல் - என்றதால் கன்றை மனிதர் உண்ணுதலைக் குறிக்கவில்லை. தின்னுதல் என்பது கன்று முதலியன தீனி தின்னுதல்.  உண்ணுதல் என்பது மாந்தர் உண்ணுதல். இந்த வேறுபாட்டையும்  அறிக.

விடுபட்ட சொற்களை வழங்கிப் பொருள்கூறுக. இது நல்ல பாடலாகவே தோன்றுகிறது. நயமுள்ள பாடல்.

பயில்தொறும் நூல்நயம்..............!

We have edited this post in order to bring out  its best. Hope
you enjoy it.

Will review.





அடிக்குறிப்புகள்:

----------------------------------------------------------

வெட்சிதானே குறிஞ்சியது புறனே 


1

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று
இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்
சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 


(தொல்காப்பியம், புறத்திணையியல் 5)

தொல்காப்பியம்  சில துறைகளை வெட்சித்
திணையில் கூறுகிறது. 

யாருக்கு நடுகல் வழிபாடு  உரியது
என்பது கூறப்பட்டுள்ளது. இத்தலைவி இறந்தால்
அத்தகு சிறப்புகள் யாதுமில்லை என்பது 
குறிப்பு என்று கொள்ளலாம்.

பிற்காலத்தில் (பாடலெழுந்த காலத்தில் ) இந்த
விதிகள் எத்தகு இறுக்கத்துடன் பின்பற்றப்பட்டன?

குடும்பத்தார் மட்டும் சென்று வழிபட அடையாளக்
கற்கள் வைக்கப்பட்டன என்றும் கொள்ளலாம். அவை
நட்டகற்கள் தாம் எனினும் பிறர்வந்து வழிபாடு செய்யும்
சொல்லிய நடுகற்கள் அல்ல என்றும் கொள்ளலாம்.

பாடல் கல்வேண்டா என்று மட்டும் சொல்கிறது.
இதற்காகச் சாகவேண்டாம் என்பதே புலவன் இப்பாடலில்
சொல்வதாகும் என்று கொள்வதே பொருந்தும்.
நடுகல் ஒன்றும் இல்லை என்றும் குறிப்பாக எடுத்துரைக்கலாம்.

"பலர் என் ஐ முன் நின்று கல் நின்றவர்" என்ற
தொடரிலும் நடு என்பது இல்லை.



கருத்துகள் இல்லை: