திங்கள், 5 மார்ச், 2018

நிறங்களின் பெயர்கள்



ஆதி மனிதன் இன்று நாமறிந்துள்ள பலவேறு நிறங்களையும் அறிந்துவைத்திருக்கவில்லை.  அவனிடம் வெண்மையும் செம்மையும் குழம்பிவிட்டது.  கொஞ்சம் வெளுத்த தோலனை “நல்ல சிவப்பாக இருக்கிறான்” என்று சொல்லுவது இன்றும் அவ்வப்போது செவிகளை எட்டுகின்றது. மஞ்சளும்  வெள்ளையும்கூட குழப்பத்துக்கு உட்பட்டுவிட்டன. சீனப்பெண்  போல வெள்ளையாக இருக்கிறாள் என் கிறார்கள். இத்தகைய வரணனைகளால் பொருள்நட்டம் ஏதும் ஏற்படாமையின்,  நாம் கவலை மிகக் கொள்வதில்லை.

கருமையை நீலமென்றும் நீலத்தைக் கருமை என்றும் நம் நூல்கள் குழப்புவன.  நீலத்துக்கு வேறு பெயர்கள் ஏதும் தமிழிலும் இல்லை. பிறமொழிகளிலும் கண்டறிய இயலவில்லை. நீலக்குயில், நீல நட்சத்திரம் என்பன நம்மிடை மகிழ்வை உண்டாக்கும் தொடர்களாகின்றன. குயில் கருமையா ?  நீலமா? நீலக்குயில் என்ற திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கானக் கருங்குயிலே என்று பாடுங்கள்.

“நீலவானும் நிலவும் போலே”

“வட்டக் கரிய விழி ~ வானக் கருமை கொல்லோ?”

நீலமென்ற சொல் அமைந்த விதம் முன் விளக்கப்பட்டுள்ளது.  எம் பழைய இடுகைகளைக் காண்க.  நீலமென்பது தமிழரைப் பொறுத்தவரை நிற்கும் நிறம்.  அத்துணை எளிதாக ஓடிவிடாது. அதனால் நில்+ அம் = நீலம்  என்ற அழகிய சொல்லமைந்தது.  நீல நிறம் வானத்தை விட்டுப் போவதுமில்லை. கடலைவிட்டுப் போவதுமில்லை.  வெள்ளை வேட்டியில் பட்டுவிட்டால் எளிதில் போகாமல் நிற்பதாகிறது.   
நீலமென்பது அழகாய் அமைந்த தமிழ்ச்சொல் ஆகும். நில் என்பது நீல் என்று வந்தது  முதனிலை திரிதல்.  அது அம் விகுதிபெற்று நீலம் ஆயிற்று,  முதனிலை திரிந்து (  நீண்டு ) விகுதிபெற்ற தொழிற்பெயர்.  அதாவது வினைச்சொல்லிலிருந்து தோன்றிய ஒரு பெயர்ச்சொல்.

கருப்பு, கறுப்பு என்ற சொற்களின் ஆதிப்பொருள் மறைத்தல் என்பது. கரு> கரவு என்ற சொல்லிலிருந்து இதனை உணர்க.  “கரவுள்ள உள்ளம் உருகும்” என்ற குறளை முன் கொணர்க.   கரு+ வு = கரவு.  பிறமொழிகளிலும் கருப்பு என்பது மறைப்புப் பொருளில் வரும்.  “பிளாக் மார்க்கட்” என்ற தொடரை நினைத்துக்கொள்க. மறைவான சந்தை என்பது பொருள்.   தீமை அனைத்தையும் மறைத்து நன்மையையே வெளிக்கொணர்வோன் இறைவனாதலின்  கரு> கிரு> கிருட்டினன் > கிருஷ்ணன் என்பது பொருத்தமான் பெயர்.    

இருட்டு> இருட்டினன் > கிருட்டினன் எனினுமாம். நிலவின் ஒளியற்ற பகுதி : இருட்டினபக்கம்  அதுவே கிருட்டினபக்கம் பின் அது கிருஷ்ணபக்கம். இரண்டெழுத்து மாற்றம் உங்களைத் தடுமாறவைக்கும்.

நிறம் என்பதே நிற்பதுதான்.  நில்> நிறு என்று திரியும்.  அம் விகுதி பெற்று நிறம் ஆயிற்று. இப்படிச் சொற்களை அமைத்த நம் முன்னோர் நல்லறிஞரும் சொல்லறிஞரும் ஆவர்.

அவர்களை வாழ்த்துவோம்.

மெய்யெழுத்தல்லாத விடத்துத் தோன்றிய
சில புள்ளிகள் திருத்தப்பட்டன: 21.11.2018




கருத்துகள் இல்லை: