புதன், 28 மார்ச், 2018

காமி ( காட்டு) மற்றும் காமி (அன்புக்குரியாள்)



பிறவினைச் சொற்களில் ஏற்படுந்  திரிபுகள்


காண் என்பதன் பிறவினை காண்பி  என்பது.  இதை நம் இலக்கண நூல்கள் விளக்கும்.  செய் என்னும் வினையோவெனின் செய்வி என்று பிறவினை வடிவு கொள்ளும்.  ~தல் என்னும் தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால் காண்பித்தல்,  செய்வித்தல் என அமையும்.

செய்வி, காண்பி, செய்வித்தல் காண்பித்தல் போன்றவற்றைத் தனிச்சொற்களாய் நாம் கொள்வதில்லை.  செய், காண் என்ற சொற்களையே சொற்களென்`கிறோம்.  மற்றவை இச்சொற்களின் பிறவினை வடிவங்கள் என்`கிறோம்.  செய்வித்தல் போன்ற சில வடிவங்களை அகராதிகளும் பெரும்பாலும் தருவதில்லை.

காண்பித்தல் என்பது பேச்சுமொழியில்காமிஎன்று வருகிறது. காமி என்பது  அகரவரிசையில் இப்பொருளில் இடப்படுவதில்லை.
காமி, சத்தியபாமா, கதவைத் திற வாஎன்ற நாடகப் பாட்டில் காமி என்பது காமத்துக்குரிய பெண்ணைக் குறிக்கிறது.  கலகம் மூலம், காமினி மூலம்  என்ற மலையாளப்பாட்டிலும்  காமினி என்பது காமி என்ற பொருளிலேதான் வருகிறது.

காமம்> காமி > காமினி.

காமி  (காட்டு என்ற பொருளில் ) என்பதை   முறைப்படி அமைந்த சொல்லாய்த் தமிழாசிரியர் ஏற்றுக்கொள்வதில்லை.  

சிவகாமி என்பதில் சிவனின் இணை என்ற பொருளில் காமி என்பது சரியாக வருகிறது.
காமி என்பது அன்புக்கும் அணைப்பிற்கும் உரிய பெண் என்று தனித்து நின்றும் பொருளுணர்த்தும். ஆனால் பேச்சு வழக்கில் காண்மி, காண்பி என்பவற்றுடன் சென்று மலைவு தருகிறது.  காமினி என்பது இன்+இ என்ற இறுதிகளைப் பெற்று இவ்விலக்கலிலிருந்து தப்பிவிடுகிறது.

ஒருமித்தல் என்ற பிறவினையில் மி என்ற இறுதிநிலை  வந்து, நல்ல சொல்லாகிறது.  நிறுமித்தல் ( நிருமித்தல்) என்ற சொல்லிலும் தடைக்கற்கள் இல்லை.  நேர்மித்தல் ( நேமித்தல் ) என்பதிலும் பிறவினையமைப்பு நன்றாகவே உள்ளது. ( நியமித்தல் என்பது இன்னொன்று).   சேர்மித்தல் ( சேமித்தல்) என்பதும் நன்று.

காமி(த்தல்) என்ற பேச்சு வழக்குச் சொல்லை காண்மித்தல் என்று திருத்தமாக எழுதியிருப்பின்  அல்லது பேசியிருப்பின்  இடர் ஏதுமில்லை. அது காண்பித்தல் போலவே ஏற்றுக்கொள்ளத்தக்க உரு உடையதாகிவிடும், இடையில் நிற்கும் ணகர மெய்யை ஒலிக்க இயலாத காரணத்தால் காண்மி என்பதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. காண்பி என்பதும் அதே காரணத்தால் உரையாடல்களில் அருகிவிடுகிறது.

காண்மானம் என்ற பேச்சுச்சொல்,  எழுத்தில் வருவதில்லை.  "ஓரு காமானமா அதெ சொல்லுவாரு" என்று செவிகளில் வந்தேறும்.  அகராதிகளில் இல்லை.  எடுத்துக்காட்டு என்ற பொருளில் இது கையாளப்படுகிறது. இதிலும் ணகர ஒற்று மறைந்துவிடுகிறது. காண்மானம் என்பதில் இலக்கணத் தெற்று ஏதுமில்லை. 


(பிழைத்திருத்தம் பின்.)


கருத்துகள் இல்லை: