ஞாயிறு, 25 மார்ச், 2018

இகரம் இணைந்து வினையாக்கம்

ஒன்று என்பது ஒரு பெயர்ச்சொல்.  அதை எண்ணுப்பெயர் என்பர்.
அதாவது ஒரு எண்ணுக்குப் பெயராக வருவது.  அதை ஒரு வினை
யாக மாற்றுவதென்றால் எப்படி அதைச் செய்வது?

ஓன்றாக்கு; ஒன்றாகு;
ஒன்றுபடு; ஒன்றுபடுத்து;
 என்று சொல்லலாம்.

ஒன்றித்தல் என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஒன்று என்பதில் ஒரு இகரத்தைச் சேர்த்தால்  அது வினை
யாகிவிடும்.

இதேபோல் இரண்டு என்பதை வினைச்சொல் ஆக்க,  இரண்டு+
இ =  இரட்டித்தல்  என்று அமைக்க.

மூன்றுக்கு இப்படி அமையவில்லை.  மூ என்பது வயதாகுதல்
என்றும் பொருள்படுவதால், மூன்றித்தல், மூவித்தல் என்று
அமையவில்லை. இது மொழிமரபு.

ஒரு என்ற சொல்லிலிருந்து  ஒரீஇ என்ற சொல் அமைந்தது. இதில்
ஒன்றித்தல் என்பதில் போல இகரமே வந்து வினையமைந்தது.
மேலும் ஒரீஇ என்பது அளபெடை வடிவமெடுக்கின்றது. இகரம்
வந்து வினையாகாத சொற்களும் உள.  எடுத்துக்காட்டு:
குரீஇ  என்பது.  இதன்பொருள் குருவி.

தாளிகைகளில் வரவேண்டிய செய்தியை வெளிவராமல்
தடுத்துவிட்டால் இதனை "இருட்டடிப்பு செய்துவிட்டனர்"
என்று சொல்வார்கள்.  நாமிதற்கு ஒரு புதிய சொல்லைப்
படைத்து மகிழலாமே.

இருட்டு > இருட்டித்தல் என்று ஒரு புதிய சொல்.  இப்படி
ஒரு சொல் இல்லை என்று நினைக்கிறோம்.  இருந்தால்
பிழை பொறுத்தருள்வீர்.

இருட்டித்தலுக்கு ஒரு புதுமெருகும் ஏற்றலாம்,   அதாவது:
இருஷ்டித்தல் என்று கவினுறுத்தலாம். எனக்கு இனிமையாகவே
உள்ளது.  நீங்கள் விரும்பாமற் போகலாம். ஒவ்வொரு நாவிற்கும்
சுவையூற்று வேறுபடுமன்றோ?

நாமிங்கு கூறமுனைவது என்னவென்றால்,  இருட்டு என்பதில்
ஓர் இகரம் சேர்த்து வினையாக்கம் நிகழ்த்தலாம் என்பது.

இன்னோர் எடுத்துக்காட்டு:  மறு>  மறுதலை > மறுதலித்தல்.
இங்கு ஐகாரம் ஒழிந்து இகரம் இணைந்தது. வினை அமைந்தது.

மகிழ்வீர்.


கருத்துகள் இல்லை: