வாயினின்றுதான் சொற்கள் பிறக்கும். கண்ணிற் பிறப்ப தெங்ஙனம்? இன்று கண் என்ற உறுப்பு
குறிக்கும் சொல்லினடிப் பிறந்து தமிழ்மொழியில்
பொருண்மையில் மறைவாகவும் வெளிப்படையாகவும் வழங்கும் சில சொற்களை இங்குக் கவனிப்போம்.
நேரத்தை அளவிட எண்ணிய தமிழன், கண் இமைப்பதற்கு எடுத்துக்கொள்ளும்
நேரத்தைக் கவனிப்புக்குள்ளாக்கினான். கண்ணிமைப்பொழுது
என்று ஒரு தொடரை உருவாக்கினான். இது சற்றே நெடிதாய் இருந்ததனால் அதைக் குறுக்க நினைத்து,
கண் என்பதனோடு அம் விகுதி சேர்த்துக் “கணம்” என்றான்.
ககரத் தொடக்கத்துச் சொற்கள் சகரத் தொடக்கமாக மாறும். இதற்கு எடுத்துக்காட்டு: சேரலம் - கேரளம் என்பது. ச - க, மற்றும் ல-ள இரண்டும் இங்கு அமைந்துள்ளமை
காணலாம். இதனைப் பின்பற்றி, கணமும் சணம் (
க்ஷணம்) ஆனது.
கணம் என்பதே முன்வடிவம்.
தமிழ் மிகப்பழங்காலத்திலே எழுத்துமொழி ஆகிவிட்டபடியால் கணக்குப்
பார்க்கவேண்டின், அதனை எழுதிப் பார்த்தனர்.
இதற்குக் கண் என்பதிலிருந்தே கணித்தல் என்ற சொல் உருவானது.
கணித்தல் என்பது உண்மையில் கண்ணால் பார்த்து அறிதல் என்று பொருள்படும்.
எனினும் எழுது கருவிகள் ஓலையும் எழுத்தாணியும்தாம். மணல் சுவர் என பயன்படக்கூடிய பொருள்கள் பிறவும் உதவின. வசதிக்குறைவுகள் காரணமாக பெரும்பாலனவர்கள் மனக்கணக்குப்
போடுவதிலும் வாய்பாடு பயன்படுத்துவதிலும் ஈடுபட்டனர். சோதிடம் முதலிய பார்ப்பதற்குக் கணித்தல் என்று கூறினர். இது கணித்தவர்கள் கணியர் எனப்பட்டனர்.
அவர்கள் கணித்தது கணிதம் ஆனது. கணி + து + அம் = கணிதம் ஆனது. து என்பது இது என்பதன் சுருக்கம் எனக் கருதலாம். து விரிந்து இது ஆனது விரியென்றும் கருதலாம். இந்த வாதம் பெரிதனறு.
கண் என்பது விழி என்ற உறுப்பைக் குறித்தது மட்டுமின்றி இடம் என்றும் பொருள்பட்டது. அதன்`கண் இதன்`கண் என்பவற்றில் கண் என்பது இடமே
குறிக்கும். இடம் இன்றேல் எதையும் காணுதல்
இயலாது ஆதலால், கண் என்பது இடமும் விழியும்
ஒருசேரக் குறித்தது பொருத்தமே ஆகும். இதன் பொருட்டு
இடம் என்பது அதன்`கண் உள்ள பொருள்களையும் உள்ளடக்கும். ஓரிடத்தில் ஒரு கரடி நின்றால், இடத்தை மட்டும் நோக்கிக்
கரடியைத் தவிர்த்தல் இயல்வதில்லை. காணும் பொருட்களை மனத்துள் பதியாமை என்பது வேறு.
கண் என்பது ஓர் இடப்பொருள் காட்டும் உருபாகவும் பயன்பட்டுள்ளது.
இதனின்று நிலத்தில் அளந்து தான் எடுத்துக்கொண்ட இடம், காணி எனப்பட்டது, கணித்து எடுத்துக்கொண்ட துண்டு
நிலம் அது. கண்+ இ = காணி ஆனது. முதனிலை திரிந்து விகுதி பெற்ற பெயர். நிலத்தின்
அளவு அரசு அலுவலர்களால் தீர்மானிக்கப்பட்டது. கணி > காணி எனினுமாம்.
காணம் என்ற சொல், கணி+அம்
என்று அமைந்தது, ஒரு குறிப்பிட்ட கணிப்புக்கு உட்பட்ட பொற்காசை இது குறித்தது. காணங்கள் இப்போது வழக்கில் இல்லை.
காணம் என்பது கணிக்கப்பட்ட மதிப்பினதாகிய பொன் காசு என்று பொருள்பட்டாலும், மாகாணம் என்பது மாநிலம் என்று பொருள்தந்தது. காணி என்பது நிலம் என்ற பொதுப்பொருளில் வழங்கிய
காலத்தில் மாகாணம் என்ற சொல் அமைந்ததால் அது பெரிய நிலம் என்று பொருள்தந்தது இயல்பானதே
காணி, காணம், மாகாணம் என்பனவெல்லாம் ஓர் கணிப்பு அல்லது மதிப்பீட்டுக்குரியவை.
ஆகவே கண் என்பதினின்று பிறந்த கணி என்பதே அடிச்சொல்.
தொடர்ந்து இன்னோர் இடுகையில் சந்திப்போம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக