வெள்ளி, 16 மார்ச், 2018

வாத்திய ஒலிகளும் வணிக இலாபங்களும்



மலாய் மொழியில் “உந்தோங்”  என்றால் இலாபம்,  வருமானம் என்று பொருள். எப்போதாவது இலாபம்  என்று சொல்லவேண்டுமானால் “கடாங் கடாங்” என்பதையும் இணைத்துக்  “கடாங்  கடாங் உந்தோங்க்”  என்று சொல்லவேண்டும்.  இல்லை என்பதற்கு  “தா” (ஜாவாவில் ங்கா ) என்பார்கள். எனவே இலாபம் இல்லை என்று சொல்ல வேண்டுமானால் “தா உந்தோங்” என்று சொல்லலாம்.

சீனர்கள் முக்கிய விழாக்களில் சீனப் பறைகளை வாசிப்பார்கள். பெரிய நிலை மத்தளமும் கொட்டுவார்கள்.  அவர்கள் இவற்றை வாசிக்கும்போது எழும் ஒலி கேட்பதற்கு நன்றாக இருக்கும்.  அது பெரும்பாலும் “உந்தோங்க்  உந்தோங்க் உந்தோங்க்”  என்று ஒலிக்கும்.  இந்த ஒலியை மலாய் மொழியில் பொருள்கூறுவதானால்  இலாபம் இலாபம் இலாபம் என்றுதான் சொல்லவேண்டும்,   பெரும்பாலும் கடைகள் தொழில்கள் நடத்துபவர்கள் ஆதலால்  அவர்கள் வாசிப்பதுபோலவே தொழிலிலும் அவர்களுக்கு எப்போதும் இலாபமாகவே இருக்கும் என்பது அவர்களைக் கவனிப்பவர்கள் உணர்ந்து சொல்லும் ஒரு விடயம் ஆகும்.

இந்தியர்களும் தம் நிகழ்வுகளில் தம் வாத்தியங்களை இயக்குவார்கள். இவர்கள் வாசிக்கும் தவில், மத்தளம் மதங்கம் போன்றவை  “கடாங்  கடாங் உந்தோங்க்” “கடாங்  கடாங் உந்தோங்க்”  என்றுதான் ஒலிக்குமாம்,  இந்தியர்களுக்கு எப்போதும் இலாபமாக இல்லாமல் எப்போதாவது இலாபம் கிட்டி மகிழ்வார்களாம்.  தொழில்துறையில் அவர்கள் இரண்டாவதாக இருக்கிறார்கள். அவர்கள் வாசிக்கும் வாத்தியங்கள் அவர்களின் தொழில் நிலையை பிறருக்கு எடுத்துக்கூறுவதுபோல் அமைந்துவிடுகிறது.

மலாய்க்கார்ர்கள் பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபடுவதில்லை.  அப்படி அத்துறையில் நுழைந்து முயலும்போது இலாபம் காண்பதுமில்லை. அவர்கள் விழாக்களில் வாசிக்கும் வாத்தியங்களில் அடிப்பதும் “தா உந்தோங்” “தா உந்தோங்” என்றுதான் அடிப்பார்களாம்.  இலாபம் இல்லை இலாபம் இல்லை என்று சொல்வதுபோல் அவர்களின் வாத்தியங்களும் அமைந்துவிடுமாம்.

இவை எல்லாம் முற்றிலும் உண்மை என்று சொல்வதற்கில்லை.  ஒவ்வோர் இனத்தவரின் வாத்திய ஒலியையும் அவர்கள் வணிக இலாப நட்ட நிலைகளையும் கூர்ந்து கவனித்த யாரோ இப்படி ஒரு கதையைச் சோடித்து இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். மனிதனின் மூளை இப்படியெல்லாம் கிண்டல்களை உருவாக்குகிறது என்பது இதிலிருந்து உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

வாத்தியங்களின் சந்தத்தைப் பொறுத்தவரை ஒலிப்பு வருணனை உண்மைதான்.  இலாபம் என்பது நமக்குத் தெரியாதவை.  மலாய்க்காரர்கள் இப்போதுதான் தொழில்துறைகளில் ஈடுபாடு காட்டுகிறார்கள். சீனர்களே இதில் முன்னோடிகள் ஆவர்.


கருத்துகள் இல்லை: