வியாழன், 28 பிப்ரவரி, 2019

இறைப்பற்று மிக்குடையார் பெண்களே

இறைப்பற்று மிக்குடையார் பெண்களே---  இறைவர்
ஒருவரையே காணுமிவர் கண்களே;
முறைப்படி முடித்திடுவர்  பூசையை --- அன்பர்
முன்னேற வேண்டிடுமோர்   ஆசையில் .


பொருள்:

இறைப்பற்று -  பக்தி  அல்லது பத்தி.
இறைவர் ஒருவரையே---  கடவுளை மட்டுமே; 
காணும் :  மற்ற மனிதர்களைப் பார்க்கமாட்டார்கள், கண்ணாலும் மனத்தாலும்
என்பது.
இவர் கண்களே -  இவர்கள் குமுகத்துக்குக் கண்களே.
அன்பர் : கணவன்மார்.

புதன், 27 பிப்ரவரி, 2019

மூத்தோர்பால் அன்பு



தாத்தாவின் தாடிமீசை எப்படி ---அவர்
தருகின்ற அன்பினால் நான் இப்படி!
மூத்தோரும் இளையோரும் இப்படிச் ---சேர்வோம்
மூதறி வாளர்தம்  சொற்படி.


சனி, 23 பிப்ரவரி, 2019

தனம் தானியம் தனவந்தன்



இன்று தனம் தானியம் என்பன பற்றிக் கொஞ்சம் அிவோம்.

ஒரு தகப்பன் தன் இரு மக்களுக்குத் தன்‌ சொத்துக்களைப் பாகப் பிரிவினை செய்கிறான். பிரிந்த ஒவ்வொரு   பகுதியும்ஃ
ஒவ்வொரு மகனும் தனது என்று சொல்லக்கூடியது ஆகும். ஒருவனுக்குப் புதையல் கிட்டுகிறது, அது அவன் தனது என்று சொல்லிக்கொள்ளக் கூடிய செல்வமாகும். எம்மனிதற்கும்  தனதாக வந்து சேர்ந்த செல்வமே தனம் ஆகும், அடுத்தவன் வைத்திருக்கும் செல்வம் அடுத்தவனின் தனம்.

ஒரு குகையிலோ அல்லது காட்டிலோ மனிதர்கள் கூட்டமாக வைகிய ஞான்று அவர்கள் பயன்பாட்டுக்குரிய பல பொருள்கள் பொதுவுடைமையாய் இருந்தன. மனிதர்கள் பிரிந்து வாழத் தலைப்பட்ட போது  செல்வங்கள் சிலவற்றைச் சிலர் தனது - தமது என்றனர்.
து என்பது இலக்கணப்படி ஒருமைப் பொருள் தருவதால் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களை  தன, தம என்று அகர விகுதி இட்டுத்தான் சொல்வது இலக்கணப்படி சரியாக இருக்கும். தன் பொருட்களைப் பன்மையில் எடுத்துக்கூறவே தன என்ற சொல் பிறந்ததுதனியுரிமை க் கோட்பாடு தோன்றவே இதை விதியாகக் கொண்டு பிறழ்வோரைத் திருடர் என்று சொல்லவேண்டி  ஏற்பட்டது.
திருடு என்ற சொல் திரிபு என்ற சொல்லுடன் தொடர்பு உள்ளது சொற்பிறப்பு முறையிலேதிர் > திரி > திரிபுதிர் > திரு > திருடு, இது இயல்பினின்றும் பிறழ்வு என்னும் கருத்து.

தனம் என்பது இன்று பணம் நகைகள் என்று விரிந்தாலும் பண்டைக் காலத்தில பண்டமாற்று என்பதே வழக்கமாக இருந்ததால் தனம் - பொருள்களின் தொகுதி என்றே கொள்ளுதல் வேண்டும்.

தன் > தன (பொருட்தொகுதி ) பன்மை வடிவம்.
தன > தனம்.

தனது மாடு. ( மாடு - ஒருமை; தனது - ஒருமை )
தன மாடுகள் ( இரண்டு சொற்களும் பன்மை ).
தன் மாடு,மாடுகள் ( இரண்டிலும் பொருந்தும் ).

இவ்வாறு தனம் என்ற சொல்லின் தமிழ் மூலமறிக.

ஆனால் தானம் என்பது தா என்பதனடிப் பிறந்த சொல். தா என்பது கொடு என்பதுபோலும் வினைச்சொல். ஒப்புடையோன்பால் ஏவலாகும்.

தனம் என்பது தன் என்பதனடிப் பிறக்க, தானியம் என்பது தான் என்பதனடித் தோன்றியது ஆகும். இறையாகச் செலுத்தியது போக ,தான் வைத்துக்கொள்ளும் கூலமே தானியம் ஆகும். இது முன் விளக்கம் பெற்றுள்ளது. முன் இடுகைகள் காண்க.

தன   வந்தன்

ஒருவனுக்குத் தனம் கிட்டிவிடுமாயின் அவன் " தனம் வந்தவன்" ஆகிறான். இந்தப் பேச்சு வழக்கு வாக்கியமே " தனவந்தன் " என்று ஒரு சொன்னீர்மைப் பட்டுச் சுருங்கிற்று. தனம் வந்த அவன்> தனம் வந்த அன் > தனவந்தன். இதில் வந்துள்ள மாற்றங்களை அறிந்துகொள்க.

இவற்றுள் அயன்மை யாதுமில்லை.





வெள்ளி, 22 பிப்ரவரி, 2019

தான்வந்தர முனிவர்

இன்று தான்வந்தரம் என்ற சொல்லைப் பார்ப்போம்,

தான்வந்தரம் தைலம் என்று ஒரு தேய்த்துக்கொள்ளும் எண்ணெய் உள்ளது.  இது நாட்டுவைத்தியம் செய்வோரிடையிலும் செய்துகொள்வோரிடையிலும் மிக்கப் புகழ் எய்திய ஓர் எண்ணெய் ஆகும். தலைக்குத் தான்வந்தரம் தைலமும் உடம்புக்குச் சீரபலாத் தைலமும் தேய்த்துக் குளித்தால் சில உபாதைகள் நீங்குவதாகக் கூறுவர்.  நரம்புத் தளர்ச்சியை விலக்குவன இவை என்பர்.  தான்வந்தர முக்கூட்டு என்றொரு தைலமும் கேரளத்தாரால் பயன்படுத்தப்படுகிறது. இவை யாம் சில ஆண்டுகட்கு முன் கேள்விப்பட்டவை ஆதலால் சரியாக ஒப்பிக்கிறேமா என்று ஐயப்பாடு உள்ளது,  நீங்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள்.

தான்வந்திரி ( தான்வந்தரி ) என்பது ஒரு முனிவரின்  பெயராம். இவர்தாம் தம் நூலில் இத்தைலம் ( தான்வந்தரம்)  பற்றிக் கூறியுள்ளார் என்ப.

தான்வந்தரி ஒரு பெரிய மருத்துவ நூலார்.  இவர்பற்றிச் செய்திகள் இப்போது கிட்டிட வில்லை.

எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. தானே வந்த அரிய முனிவர் என்ற பொருள்படும் இவர் பெயர் ஒரு காரணப்பெயரே ஆகும்.

தான் :  தானேயாக.
வந்து :  தோன்றிய
அரு :   அரிய
இ:  விகுதி.

தானே வந்து மக்களிடம் தோன்றிய அரிய முனிவர்
தான்வந்தர முனிவர்

அரு> அரி என்பதற்குப் பதில் தான்+வந்து + இரி என்பதே சொல்லின் வடிவமாகவும் இருத்தல் கூடும்.  இரு என்ற வினை இரி  என்று கேரள நாட்டில் வழங்கும்.அவ்வாறாயின்  அரிய முனிவரென்பதற்குப் பதிலாக வந்து இருந்த முனிவர் என்று பொருள்கொள்ளுதல் வேண்டும்.  இதில் சிறப்பில்லை. அரிய முனிவர் என்பதே அவர்க்குப் பெருமை சேர்ப்பது. செயற்கு அரிய செய்த அருமுனி அவரென்பதனால் என்று கொள்க.  மேலும் இஃது அவர்க்கு வழங்கிய சிறப்புப் பெயர்.  அவர்தம் இயற்பெயர் எமக்குக் கிட்டவில்லை,  செயற்கரிய செய்த பெரியவரே இவர்.

நோய் தீர்க்கத் தைலம் தந்த இம்முனிவரைப் பாராட்டுவோமாக.

இவர்பற்றிய அரிய செய்திகள் உங்கட்குக் கிட்டுமாயின்  அல்லது  நீங்கள் அறிந்திருப்பின் இங்குப் பின்னூட்டமிட்டுப் பகிர்ந்து கொள்ள வருக.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

எதைத்தான்

எதைத்தான் பாடுவதோ என்றெண்ணும் போது,
விதைத்தாள் பக்க த் தில்
இருந்தென்றன் அம்மை,
அதைத்தான் கொண்டேனென்(று)
அண்முகின்ற காலை,
சிதைத்தால்    அலைபேசி
செய்வதுவும் தகுமோ?

பல ஆண்டுகளாக கைப்பேசிகளைப் பயன்படுத்தி வந்துள்ளேன், ஆனால் பல கோளாறுகளாலும் சிறந்தமைவுகளாலும் இவற்றையும் இவற்றிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. இன்றுகாலை ஒரு சோனி தொலைபேசியிலிருந்து ஒரு பாடல் புனைய முனைந்தேன். ஆனால் இக்கைப்பேசியில் தமிழ் எழுத்துப்பெயர்ப்பு சரியாக வரவில்லை;  இருந்தேன் என்பது இருன் -தேன் என்று வந்தது.  நகர எழுத்துவரவில்லை.  அதற்கான ஓட்டுமெல்லி ( டிரைவர் )  இல்லை என்று அறிந்துகொண்டேன். அப்புறம் கைப்பேசியையும் விண்டோஸ் என்னும் இயக்கமைப்பையும்  இணைத்து அந்தச் சிறு கவிதையை எழுதி முடித்தேன். ஒரு விதையைப் பற்றி எழுதப்போய் அது இயலாமல் கைப்பேசி கொடுத்த எழுத்துத் தொல்லையைப் பற்றியே என் கவிதை அமைந்துவிட்டது.  சில வரிகள் தாம். படித்து மகிழுங்கள்.

சிறந்தமைவுகள் - இம்புரூவ்மென்ட்ஸ் என்னும் மேம்படுத்துதல்கள்.
கைப்பேசி =  அலைபேசி.

இயக்கமைப்பு: "விண்டோஸ்" போன்றவை. மென்பொருள் இயக்கமைப்பு.

பாகிகள் : ( பேரகிராஃப் ) சரியாக வரவில்லை. இதைச்சரியாக அமைக்க முடியவில்லை. வேறொரு கணினியிலிருந்து பின்னொரு நாள் செய்யலாம் என்றெண்ணுகிறேன்.

கவிதையின் ஒரு வரிக்கு ( அடிக்கு ) ஒரு  புள்ளி  ( , ) இடப்பெற்றுள்ளது.

நன்றி.


புதன், 20 பிப்ரவரி, 2019

வேவு வேசி தாசி தாசன்

ஒற்றர்களை அனுப்பி அவர்கள் மறைவாக இருந்து நடப்பவைகளை அறிந்துவருவது அரசின் செயல்களில் ஒன்றாகும்,  சில வேளைகளில் இவ் வொற்றர்கள் மாறுவேடத்தில் செல்வர்.

இவ்வேடத்திற்கு அவர்கள்  ஆடை அணிகலன் முகமாவு முதலியவற்றால் தங்களை வேய்ந்துகொள்ளவேண்டும்.  வேய்தல் என்றால் மேல் அணிந்துகொள்ளுதல்.

அவன் பெண்ணுடைகளை வேய்ந்துகொண்டான்.
ஒரு சேவகனின் உடையை வேய்ந்துகொண்டான்

என்றெல்லாம் கூறலாம்.

இந்த வேய் என்ற சொல் தொழிற்பெயராகும் போது வேய்வு ஆகிறது.  வேய்வு என்பதில் யகர ஒற்று கெடும்போது அச்சொல் வேவு என்று திரிந்துவிடும்.

இதிலிருந்து வேவு பார்த்தல் என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.


யகர ஒற்று இல்லாமற் போன சொற்கள் பல.

எனக்குப் பிடித்த ஒரு திரிபு: வேய்வு >  வேவு போன்றது இது.

வாய் > வாய்த்தி:> வாத்தி >  வாத்தியார். ( பணிவு அல்லது மரியாதைப் பன்மை).

உபா த்ியாயர் என்பது வேறு சொல்.

பண்டைக் காலத்தில் எல்லாம் வாய்ப்பாடமாகத் தான் கற்றனர்.  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுத்தவர் வாய்த்தியார் > வாத்தியார்.

உய்த்துணர்தல் குறிக்கும் உய்த்தி என்ற சொல்லும் உத்தி ஆனது அறிக.

உத்தி என்பது பின் யுக்தி ஆனது மெருகு.

கண்ணுக்கு இனிய ஆடைகளையும் செம்பஞ்சுக் குழம்பு போலும் அழகுபடுத்தும் துணைப்பொருள்களையும் ேய் ந் து கொண்ட வள் வேய் > வேயி ஆனாள்.  யிகரம் சிகரம் ஆகுமாதலால் இது பின் வேசி என்று திரிந்தது மட்டுமின்றி, பொருளும் பொல்லாமை பூண்டு விலைமகள் என்று உணரப்படலாயிற்று.

தன்னுடல் தந்தவள் தா > தாசி எனப்பட்டாள்.   சி என்பது ஒரு விகுதி.   தாச்சி என்று வல்லெழுத்து மிகாமல் தாசி என்றே மென்மை பெற்றுச் சொல் அமைந்தது. அன்றியும் இடைக்குறை என்று விளக்கினும் ஏற்றற்குரித்தே.
உடலுழைப்புக்குத் தன்னைத் தருவோன் தாசன் எனப்பட்டான்.  இவை தா என்ற சொல்லினின்றும் அமைந்தவை.  சில மேலை வரலாற்றாசிரியர் இதன் அமைப்பு அறியமுடியவில்லை என்றனர். அது தமிழ் வினைச்சொல்லான தா என்பது அறியாமையே  ஆகும். அயற்றிரிபு தாஸ்யு என்பதாகும்.

தாசி என்பது பண்டை நாட்களில் வேலைக்காரிகளைக் குறித்திருக்கக்கூடும்.  வேலைக்காரிகள் ஆண்டைகளால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டமையால் அவர்கள் பின் விலைமாதர் நிலைக்குத் தள்ளப்பட்டிருத்தல் கூடுமென்பதை ஊகிக்கக் கடினமொன்றுமில்லை என்பதறிக.


திருத்தம் வேண்டின் பின். Some new errors not in original noted. Will correct..

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தந்தது சந்ததி.

சந்ததிகள் என்போர் யாரென்று ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

தமக்குத் தாமே தந்துகொண்ட பின்னோரே சந்ததிகள் ஆவர்.

தம் >  சம்.
தந்த > சந்த
தி  என்பது விகுதி.

சந்ததிகள் என்பவர்கள் தாம் தமக்குத் தந்தவர்களே.

இப்போது சொல்லை அமைப்போம்.

தம்மின் திரிபாகிய சம் என்பதை எடுத்துக்கொள்வோம்.  ( சம் ).

தந்த என்பதில் இறுதி  ~த வை எடுத்துக்கொள்ளுவோம். (  ~ த  ).

இனி,  தி விகுதி சேர்க்கவும்.

சம் + த + தி =  சந்ததி  ஆயிற்று.

தந்த என்பதில் ஏன்   தந்  என்பதை விட்டுவிட்டோம்.  அதை விடாவிட்டால்


தம்தந்ததி   >  சம்சந்ததி  என்று வரும்.  அது சரியில்லை.

தம்சந்ததி  என்றாலும் ஒரு சொல்லாகாமல் வாக்கியமாகவே உள்ளது.  தம் என்பதை வைத்துக்கொண்டால் பிறர்சந்ததி என்பதற்கு  ஒலித்தடை மனத்தடை எல்லாம் ஏற்படுகின்றன.  ஆகவே தம் தந்  என்பவற்றில்   ( தம் தம் இரட்டிப்பு ) ஒரு தம் வைத்துக்கொள்வதே ஒலிச்சிறப்பு ஆகும்.

தகரம் சகரமாகும் என்பதை முன் இடுகைகளில் கண்டிருக்கிறீர்கள்.  மறத்தலாகாது.  வச்சுக்கோ என்பதில் வைத்துக்கொள் என்பதன் தகரச்  சகரத்  திரிபுகளை   அறிந்துகொள்வீர்.  இன்னொரு சொல்:

சனி < தனி.  ( தனி ஆற்றலுள்ள "கிரகம்"  ).

The equivalent English word is usually defined as:  a person considered as descended from some ancestor or race. But the great learned persons who coined the term சந்ததி  ( santhathi) have cleverly avoided starting to think of a descendant as someone issuing from a remote ancestor. Their short answer was: if  I or you did not participate neither I nor you will have any descendant.  They had coined the word from that premise. I am amazed at their wit of discovery of a suitable conceptual commencement. If you do not include yourself in finding out how many are missing from your group in an expedition,  your answer turns out to be wrong.

மகிழ்க.

பிழை புகின் இனித் திருத்தம்.
Reviewed and some errors rectified: 17.2.2019


காசுமீரில் வெடிவைத்த தீவிர வாதிகள்.

மகன்மாரை  இழந்துவிட்ட தாய்மார் கூட்டம்
காண்பேனோ எனக்கலங்கும்  தந்தைக்  கூட்டம்
இகத்திளவல் இல்லையெனும் அக்காள் கூட்டம்
என்று காண்பேன் என்றொழியும் நண்பர் கூட்டம்
நகத்திலினிச்  செம்மையிடா நங்கைக்  கூட்டம்
நாடெங்கும் உய்த்ததலால் கூடும் நன்மை
முகத்துணித்தீ விரவாதி வெடித்த குண்டால்
மூள்வதுவும் உளதாமோ முயன்று சொல்வீர

ஒழிகதீ  விரவாதி உலகின்  மீ தே
ஒரு நான்கு பதின்மரையே உயிர் குடித்தார்
பழி முதிர் முறைகளினால் பெறுமோர் நன்மை
பண்பன்பாம் என்பவற்றால் பெறுதல் இன்றேல்
குழிபுகும் சாவினிலே ஒழிதல் நன்றே
குளிர்காசு  மீரமதில் கொலைகள் செய்தார்
வழிபுகும் மறவர்தமை வலைவி ரித்து
வதைப்புறுத்து வதனால்வெல் வாய்ப்பும் உண்டோ?.

பொருள்:

இகத்து :   இவ்வுலகில்
இளவல் :  தம்பி
செம்மை :  நகச்சாயம்
உய்த்தது அலால் :  ஏற்படுத்தியதன்றி
முகத்துணி :  மறைந்து செல்வோர் குறிக்கிறது
மூள்வது : உண்டாவது

நான் கு பதின்மர் :  நாற்பது பேர்
பழிமுதிர் : பழி கூடின
வழி புகும் :  தம் இருப்பிடம் போம் வழி செல்லும்
வலை விரித்து:   அகப்படுத்தி அல்லது மறைவாகத் தடுத்து

மறுபார்வை இட்ட தேதி : 19.2.2019 

     

வியாழன், 14 பிப்ரவரி, 2019

எண்ணுதலும் தொடர்புடைய திரிபுகளும்.

ஓர் இடுகை வரைந்துகொண்டிருக்கையில் இரு உதடுகள் என்று எழுத நேர்ந்தது.  இதை உண்மையில் ஈர் உதடுகள் அல்லது ஈருதடுகள் என்றுதான் பதியவேண்டும்.  வாக்கியத்தில் சில இடங்களில் ஈர் ஆடு என்று எழுதினால் இலக்கணப்படி சரியானதாக இருந்தாலும் மனநிறைவாக இருப்பதில்லை. இரு ஆடு என்றே எழுதி முடித்தேம்.

ஆனால் ஒரு உதடு என்று எழுதுவதில்லை.   ஓர் உதடு என்றே எழுத வேண்டும் என்பதெம் கொள்கை.

ஆருயிர் என்ற தொடரைக் கவனிப்போம்.

இது:

அ ருமை + உயிர் =  அரு+ உயிர் =   ஆர் + உயிர் =   ஆருயிர் 

ஆகும்.

அரு என்ற அடிச்சொல் ஆர் என்று உயிர் வரத் திரியுமெனினும்   அவ்வாறு உயிர் அல்லதது வரினும் திரியுமென்பது காண்க.

ஆர்  + தல் = ஆர்தல்.

அரு என்பது தனித்தே ஆர் என்று திரிந்து இன்னொரு சொல்லான பின் தல் என்னும் தொழிற்பெயர் விகுதி வருதல் மேவியதால் இதன் இலக்கணம் வேறுபடுகிறது.

ஒரு என்பதிலிருந்து ஓர் என்பதும் அவ்வாறே திரிந்தது.  ஒரு மனிதன் ஒன்றையே நினைத்துக்கொண்டே அல்லது சிந்தித்துக்கொண்டே இருந்தால்  அது ஓர்தல் ஆகும். இதன் அடிப்படைக் கருந்து ஒன்றையே எண்ணுதல் ஆதலின்  ஒன்று என்பதன் அடிப்படையில் ஓர்தல் ( எண்ணுதல்) என்ற சொல் அமைந்துள்ளது.

ஒரு மனிதன் எண்ணுவதெல்லாம் வெளியிற் சிந்துவதில்லை.  தேவையானதையும் அல்லது அறிவுக்குப் பொருந்தியதை மட்டுமே வெளிக்கொணர்கிறான்.  அவனுடைய எண்ணத் தொகுதியில் இருந்து ஒன்றிரண்டே வெளிவருகின்றது.  அறிவுக்கும் பொருந்தாதன எண்ணினும் யாவும் வெளிப்படுவதில்லை.  சில மறதியின் வாய்ப்பட்டு வெளிவருமுன் அழிந்துவிடுகின்றன.  அவற்றை அவனேகூட மீட்டெடுக்க முடிவதில்லை.
சில வெளி  வருகின்றன.  சிந்துவது வேறு.   கொட்டுவது வேறு.  பொருத்தமானது சிறிது வரின் அது  சிந்து > சிந்தி > சிந்திப்பது ஆகும்.

சில் > சில.  இதில் அகரம் பன்மைப் பொருளது.
சிலது  சிலதுகள் என்பன ஒருமை பன்மை தவறாகக் கலந்த பிழைச் சொற்கள்
.

சில் என்ற அடியினின்றே சிறுமை குறிக்கும் சொற்களும் தோன்றின.

சில்> சிறு.

சில் என்பது சின் என்றும் திரியும்.  ஒ.நோ:  திறல் > திறன்.  லகரனகரப் போலி.

சின் > சின்னவன்,  சின்னப்பையன்.
சின் >  சின்னம் ( ஒன்றைப்போல் சிறிதாகக் காட்டப்பட்ட அல்லது வரையப் பட்ட உருவமுடையது ).
இது பின் பெரிதாய் அமைந்த போலுருவுக்கும் பொருள்விரிந்தது.

சில் என்பதில் சிற்றுருவக் கருத்தும் எண்ணிக்கையிற் குறைவுக் கருத்தும் அடங்கியுள்ளமை புலப்படும்.

எனவே சிந்தித்தல் என்பது:  1. கொஞ்சம் கொஞ்சமாக எண்ணுதல். 2.  சில கருத்துகளை வெளியிடுதல்.  3  விரிவாகவன்றி  எண்ணுதல்.

இப்பொருள் மறைந்து,  பொதுவாக எண்ணுதலை இப்போது சிந்தித்தல் என்பது குறித்தது.

சின்+ தி =  சிந்தி.
சின் + து = சிந்து  ( சிறிதான கவி அல்லது இசை.  அளவடி அல்லாதது.)
சிந்து நதி :  அகலம் குறைவான நதி.  சிந்து என்பது ஒரு சிறுவகை நூல் குறித்ததென்பதும் அந்நூல் அங்கு விற்பனை செய்யப்பட்டது என்றும் அதனால் ஆறு அப்பெயர் பெற்றது என்றும் வரலாற்றாசிரியர் சீனிவாச ஐயங்கார் கூறுவார்.
சிந்தன்:  சராசரி உயரத்துக்குக் குறைவான மனிதன்.

எண்ணுதல்: ஒன்றன்பின் ஒன்றாக மனத்துள் உருவாகுதல்.
சிந்தித்தல் :  சிறிது சிறிதாக எண்ணுதல்.  அவ்வாறு வெளிப்பட்டவை சிந்தனை.
ஓர்தல் : ஒன்றையே எண்ணுதல்.

ஓர்மை:  நினைவு என்று மலையாளத்திலும் பொருள்தரும்.

நினைவு: முன் நிகழ்வை இப்போது எண்ணுதல்.      பொதுவாக எண்ணி அதை மனத்துள் வைத்திருத்தல்.

பிழைபுகின் திருத்தம் பின்

எமது வலைப்பூ - Google Plus

இப்போது  கூகிள் ப்ளஸ் என்பது நமது வலைப் பூவுடன் இணைத்து வைக்கப்படவில்லை.  ஆதலால் நீங்கள் நல்லபடி தேடித்தான் இவ் வலைப்பூவைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். எமது வலைப்பூ அடையாளம்:

Blogger Sivamala:
blogID=7941642520803533372  என்பதாகும்.

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


புதன், 13 பிப்ரவரி, 2019

பாட்டிகள் கையிலும் அலைபேசி



கவிதை  படம்

பாட்டிகள் கையிலும் அலைபேசி
பரமன் அளித்ததோர் நல்லாசி
கணினிக்  கலைதனை  நீ நேசி
காண்பவை நல்லவை நீ வாசி .

உருளை என்ற சொல்லில் சிந்தனை.

உருளை என்பதைச் சுருக்கமாக:

உருள்+ ஐ =  உருளை என்று அமைத்துச் சொல்லலாம்.

உருளை என்ற சொல்லை அமைத்து முதல்முதலாக வழங்கிய தமிழன் புலவனா அல்லது சிற்றூரானா என்று யாரும் அறிந்தவரில்லை.

எம் ஆய்வில்  :

சக்கரத்தை அமைத்தபின் அதை:

உருள்வளை என்று பெயரிட்டுப் பின் அது:

உருளை என்று குறைந்திருக்கலாம்.

அப்படியானால் இலக்கணப்படி அது:

இடைக்குறை எனப்படும்.

உருளும் வளையம்

உருள்வளை   >  உரு(ள்வ)ளை  >  உருளை.

இரண்டு எழுத்துக்கள் மறைந்தன.

மக்கள் விரைவாகப் பேசவேண்டி நேர்ந்தால் சொற்கள் பல்வேறு சுருக்கங்களை அடைந்துவிடும்.

சறுக்கு அரு அம்:  சறுக்கி அருகில் செல்லும் உதவிப்பொருள்.

சறுக்கரம் >  ச(று)க்கரம் >  சக்கரம்.

சறுக்குவதற்கு அமைந்த அரைவளையம் பின் முழு வளையம் ஆனபோது அதுவும் சக்கரம் என்றே சொல்லப்பட்டது.   மரப்பட்டை சீரை என்று சொல்லப்பட்டு,  அதன்பின் வந்த சீலையும் அதிலிருந்தே திரிந்து பெயர் பெற்றது அறிக.

சீரை > சீலை > சேலை.

சீரை > சாரி  (   அயல் திரிபு).

சீரை = பட்டை.

மரப்பட்டையைக் கோத்து இடுப்பில் அணிந்துகொண்ட காலத்தில் வழங்கியது
எம் தமிழ். இன்று நேற்றல்ல.

பொருளால் தாழ்ந்துவிட்ட சொற்கள்.

ஆள் என்பது முதற்கண் ஆட்சி குறித்த சொல்லன்பது கூறபட்டது. இச்சொல் இன்றும் இப்பொருளில் நன்றாகவே வழங்குகிறது.  இது வினைப் பகுதியாகவே நிற்கின்றது.

அருள் என்ற சொல்லும்  தெய்வக்கொடையைக் குறித்த சொல் என்பது நல்லபடியாகத் தெரிகிறது
இதுபோன்று வினைப்பகுதி உருவில் நின்று பணிவன்புடன் விழைதலைக் குறித்தது.  இதனைக் கருத்தில் கொள்ளுங்கள்:

வந்தருள் என்று உரைப்பாய் -  என் பாங்கி
வந்தருள் என்று உரைப்பாய்.

தெய்வ நிலையில் உள்ளோரை வந்தருள் என்பதுபோலவே  ஆட்சி நிலையில் உள்ள ஒரு மானிடப் பிறவியை " வந்தாள்.  வந்தாள்" என்று கூறினர்.  இவற்றில் உள்ள வழக்கொற்றுமை கண்டுகொள்க.   இன்றுகாறும் இது பெண்பாலாருக்கே உரித்தாய் வழங்கி வருதலால் தொடக்கத்திலும் வந்தாள் என்பது பெண்பாலாருக்கே வழங்கிற்று என்பது உணரத்தக்கது.

ஆள் என்ற ஆட்சிச் சொல் பெண்பாலார் இவ்வழக்குத் தொடங்கிய காலத்து ஆட்சிநிலையில் இருந்தமையைக் குறிப்பதறிக.  நம் குமுகம் ஒரு மாதராட்சி போற்றிய குமுகமாகும். இது ஆங்கிலத்தில் மாந்தவியலில் matrilineal society எனப்படும்.  மாந்தவியல்:  anthropology.

வந்தாள் சென்றாள் கண்டாள் என்பவை உயர் ஆட்சி நிலை குறித்து நிற்க, அந்நிலை எவ்வாறு இழிபுற்றது  என்பது ஆய்வுக்குரியது ஆகும்.  இப்படி உயர்நிலையில் இருந்து இழிபு கண்ட சொற்கள் பல.

நாற்றம்:  பண்டைப் பொருள்:  மணம்.  இற்றைப் பொருள்: தீய வீச்சம்.

தேவரடியாள்:  பண்டைப்பொருள்:  தெய்வத்தொண்டு செய்யும் பெண். இற்றைப் பொருள்:  விலைமாதர்.

வந்தாள் சென்றாள் முதலிய சொல்வடிவங்கள் இவ்வாறே  ஆட்சிநிலை குறிக்காமல் தம் பொருளிழந்தன.  ஒரு மதிப்புக்குரிய மாதை (  அரசகுமாரி என்று வைத்துக்கொள்ளுங்கள் ) வந்தாள் என்று குறிப்பிட்டால் பணிவுக்குறைவு,  (மரியாதைத் தேய்வு)  என்று உணரப்படுகிறது.    அதனால் இவ்வழக்கும் ஒரு பொருளிழிபே  ஆகுமென்பதை உணர்க.  இதை ஈடுகட்ட வந்தார் சென்றார் என்று எழுதவும் சொல்லவும் வேண்டிய நிலை உருவாகிவிட்டது. ஆர் என்பதோ உயர்வு குறிக்கும் சொல்.  அதுவும் பின் ஒரு விகுதியாயிற்று.

ஆர் என்ற அடிச்சொல்லின் பொருள் இன்று உயர்வையே குறித்ததுடன்,  ஆரியன் என்ற தமிழ்ச்சொல்லும் இன்றும் உயர்ந்தோன் என்றே பொருள்தரும்.  ஆரியன் என்ற தமிழ்ச்சொல் ஓர் இனப்பெயர் அன்று.  அது ஆதியில் ஒழுக்கத்தாலும் அறிவினாலும் உயர்ந்தோன் என்று பொருள்பட்டது.  பின்னரே இழிபு அடைந்து ஒரு கூட்டத்தினனைக் குறிக்க வழங்கிற்று, இதுவும் பொருளிழிபே  ஆகும்.   குமுகத்திற் பலவும் இழிபு அடைந்தபோது இப்பொருள் இழிபு விளைந்தது காண்க.

ஆர் :  வினைப்பகுதி.
ஆர்தல் -  தொழிற்பெயர்.
ஆர் + இய + அன் =  ஆரியன்.  (  அல்லது:  ஆர்+ இயன் ).    இயல்> இயன். லகரனகரப் போலி.  ஒ.நோ:  திறல் > திறன்.
பொருளாக்கம்:  உயர்வில் அல்லது உயர்வினால் இயன்றோன்.

இதை விளக்க அயல் வழக்குகள் தேவையில்லை  யாதலறிக.

மேலையர் ஆய்விலும் ஆரியன் என்பது சங்கதத்திலும் இனப்பெயர் அன்றென  சொல்லப்படுவதை இதற்கு ஆதரவான கருத்தாகவே கொள்ளவேண்டும்.

ஆள் என்பதும் விகுதியாகிற்று.
ஆர் என்பதும் விகுதியாயிற்று.

ஆதியில் ஆன் விகுதியிலும் இதுபோலவே  பொருளிழிபு நிகழ்ந்துள்ளது..  முருகன் வந்தான் என்று தெய்வத்தைக் குறிக்க வழங்கும் போது பணிவில் குறைவாக எண்ணப்படுவதில்லை ஆதலால் இதுவும் இத்தகைய வரலாற்றுக்கு உட்பட்டதே ஆகும். மனிதனைக் குறிக்கும் போது மட்டும் மரியாதைக் குறைவு என்று எண்ணப்படுகிறது.

சேரலத்தில் ( கேரளத்தில் ) வழங்கிய பேச்சில் இத்தகைய மாறுபாடுகள் நிகழாமலும் எச்சங்களே முற்றுக்களாக நிற்றலும் கண்டு ஒப்பீடு செய்துகொள்க.

வந்தாள் -   மலையாளம்:  வந்நு   ( = வந்து :  எச்சவினை)
வந்தார் -  மலையாளம் :   வந்நு  (  = மேற்படி)
வந்தான் - மலையாளம்:  வந்நு  ( = மேற்படி ).

வந்தான்,  வந்தாள் :   முற்றுவினைகள்.
வந்து ( தமிழ்) :  எச்சவினை.
வந்நு ( மலையாளம் ) - முற்றும் எச்சமும் ஆகும்.

வந்து நிற்பவள் ஆணா பெண்ணா என்று கண்ணுக்குத் தெரியும்போது அதற்கு ஒரு விகுதி எதற்கு என்று இத்தகைய விகுதிகள் வழங்காத மொழியினர் கேட்பர்.  மொழி கடுமையாகிவிட்டது.  சீனம் முதலிய மொழிகளில் இல்லை.

சுசீலா பாடினார். (தமிழ்)
சுசீலா பாடி ( மலையா.)

சுசீலா பெண் என்பது தெரிய விகுதி எதற்கு? பெயரிலும் காட்சியிலும் கண்கூடு அன்றோ?

டிய டாத்தாங்க,   இய டாத்தாங்   ( மலாய்).   விகுதிகள் இல்லாமலே இந்தோவிலும் மலேசியாவிலும் சக்கைபோடு போடுகிறார்கள்.  தகலோக் மொழியைக் கூர்ந்து கவனித்துப் பின்னூட்டமிடுங்கள். 

ஆகவே மொழியை வேண்டுமென்றே யாரும் கடினப்படுத்துவதில்லை. இவை வரலாற்றுச் செலவில் ஏற்பட்டவை ஆகும்.

தமிழ்போல சங்கதமும் கடினமொழியே.  பிற்காலத்து இந்தோ ஆரிய மொழிகளை ஒப்பிடுக.

எச்சவினையே முற்றுவினையாகவும் நிற்றல் ஒப்பத்தக்கதே ஆயினும் இவ்விகுதிகள் தேவையில்லாமல் மொழியில் புகுந்தன என்று கொள்ளல் அறிவுடைமையாகது.  பெண்ணாட்சி இருந்து பின் அது பிறழ்வு அடைந்ததே காரணம் என்பது உணர்க.

சிந்தித்து மகிழ்க!

பிழைபுகின் திருத்தம் பெறும்.
எமது இலத்தீன் ஆசிரியர்  அமரர் REV BRO VALAERIAN அவர்களுக்குத் தாழ்ந்து பண்வினைத் தெரிவித்துக்கொள்கிறேம்.




ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

விசுவாசம்

விசுவாசம் என்பதனை இப்போது யாங்ஙனம் அமைந்த சொல்லென்று உணர்ந் தின்புறுவோம்.

விசு என்பது விரிவு குறிக்கும் ஒரு திரிமூலம் ஆகும்.

விர் > விய் > விய்+ உ + வியு  >  விசு.

விர் என்ற அடியினின்று இத் திரிபுகள் உருப்பெறும் என்பதைப் பழைய இடுகைகளினின்று ஈண்டு அறிதல் கூடும்.

பண்டை மனிதன் மரம் என்பது பெரிதும் உணர்ச்சியற்ற ஒன்று என நினைத்தான். அது ஈரமுள்ள மரமானாலும் காய்ந்துவிட்ட மரமானாலும் அவன் வேறுபடுத்தி அறிய அவனுக்கு காலம் பிடித்தது. உணர்ச்சியும் உயிரும் அற்றது மரம் என்ற கருத்திலிருந்து அவனது மூலங்கள் எப்படித் திரிந்தன என்பதை இங்கு நோக்கி அறிக:

மர் > மரம்
மர் >  மய் > மாய் >  மாய்தல்
மர் > மரி > மரித்தல்.

பாகத மொழிகளில் :

மர் > மார் > மாரோ.
(  இறப்பு )

மர் > மரணம்;  அதாவது:  மரி + அணம் = மரணம்.

மாள் > மார் அல்லது  மார் > மாள்.  ளகர ரகரப் போலி.

மனமே இல்லாதான் மரம் போன்றவன்; குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்; அவன் தொட்டும் அவள் அவள் மரக்கட்டைபோல் கிடந்தாள் என்ற வரணனைகளிலிருந்து மர் என்ற அடிச்சொல்லின் திறமுணர்தல் கூடும்.
ஒன்றறிவதாவது உற்றறிவதுதான் என்று தொல்காப்பியனார் வகுத்துள்ளதால் மரத்திற்கு அது வெட்டிக் காயுமுன் உணர்வுள்ளதாம் என்பதை அறியலாம்.  வெட்டியவுடன் நீர் வடிந்து காய்கிறது:  காய் >  காயம்.
சகதீச சந்திரபோஸ் முதலியவர்கள் மரங்கட்கும் உயிரும் உணர்வும் உள்ளமையை உணர்த்தியுள்ளனர்.

இங்கு கண்டவற்றுள் யாம் உங்கட்குத் தெரிவிக்க விழைந்தது:  விர்> விய் என்பதுபோன்றதே  மர் > மய் என்ற திரிபுமாகும்.

மேற்குறித்தபடி விய் உ என்பது, முன் விரிதல் என்பது  ஆம்.  உ என்பது முன்.

ஆக விசு என்பது விரிவு  அல்லது  முன்விரிவு என்பது ஆகும்.

இனி வாசம் என்பது இருத்தல் என்பது நீங்கள் அறிந்ததே. இங்கு அதற்கு மணம் அல்லது நறுமணம் என்பது பொருளனறு.

விசுவாசமின்மை ஒரு குறுக்கம்.  விசுவாசம் என்பது ஒரு விரிவு.  தன்மேல் ஒருவன் பற்றுள்ளோன்.   பிறன்மேலும் பற்றுள்ளோன் ஆவதே விசுவாசம் என்பதைச் சுருக்கமாக அறியலாம். நடபடிக்கைளில் எதிர்பார்ப்புக்கு மாறாமை போற்றுதலே விசுவாசம் ஆம்.  தொடர்பறாமை கடைப்பிடித்தல் என்பதும் அதுவாம்.  இதனைப் பற்றன்பு என்று முன் ஓரிடுகையில் குறித்தேம்.  பற்று என்பதும் ஓரிடத்தது  இன்னோர் இடத்துச் சென்று பிடிகொள்ளுதல் ஆகும்.  விசுவாசம் என்பதும் அதுவேயாம் என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  வாசம் என்பது முன் விளக்கப்பட்டுள்ளதாக நினைவுள்ளது. இலதாயின் பின் விளக்கம் பெறும்.

பிழைபுகின் பின் திருத்தம்பெறும்.



சனி, 9 பிப்ரவரி, 2019

Sivamala's comment in Times of India

MoD's Rafale note: Top developments and reactions

Sivamala wrote:

What this Pappu has brought up is an internal procedure between the various ministries that when one is negotiating the other should stay away. Such procedures are for good management and they are not laws. If a superior non-negotiator interfered, it does not become a criminal offence. Neither does it point to something mala fide. But a higher authority in the know would and should interfere where there is a necessity to lead any talk to a successful conclusion. That in any situation is common sense. Furthermore if the procedures were put in place by a subordinate command it would not bind a superior authority in any case, unless Pappu will in his office allow his clerk to overrule him. A High Court cannot make a rule for the Supreme Court. Neither can a grandson give orders to his grandpa..Even when a subordinate has violated the management procedure as the one referred it is just a procedural error and not a violation of law.Assuming Modiji had interfered in consequence of which Ambani got something out of it, it is good: otherwise it would have gone to a foreign company. Ambani is a local employer and he can employ more Indians in his homeland. The local HAL would take a century to complete the given work and by then India would have lost out in defence to its neighbours. Warning: HAL should cease sleeping on projects.Pappu is just wasting everyone''s time by dwelling on peripheral matters, which are non-issues. Modi is a prime minister and not a clerk in the Defence Ministry. Pappu is making noise as through an absolute offence has been committed. So stupid. No case.Pappu has previously said that the current government is completing the various projects left unstarted or unfinished by the congies and he was displeased with that. His displeasure has become a phobia now. Pappu was waiting to crop the benefits when he can lay his hands on it in future. Now sensing the day might never come, he is badly agitated.

 

comments:   read in Times of India

வியாழன், 7 பிப்ரவரி, 2019

விசாரணை சொல்

விசாரணை என்ற சொல்லை இன்று சிந்திப்போம்.

ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு  விசாரணை செய்தலை "கைந்நாற்காலி விசாரணை"  ( armchair investigation  )   என்று சொல்வதுண்டு.  விசாரணை என்றால் விசாரிப்போன் அல்லது விசாரிப்போர் விரிந்து சொல்லுதல் வேண்டும். பரவலாகச் சென்று பல இடங்களிலும் கேட்டறியவேண்டும்.  இது விசாரணை என்ற சொல்லின்  மூலமாக நாமறிவதாகும்.  இன்று அலுவலகங்கள் கொள்ளும் பொருள்:  சான்றுகளைத் தேடிப் பிடித்துப் பதிவிடுதல் என்பதாகும்.  இந்தப் பொருள் சொல்லமைப்பில் இல்லை.  வழக்கில் உணர்ந்துகொள்ளப்படுவதாம்.

விரி > விய > வியா > விசா.

விர் > விரி  ஆதலின்,  விர் > விய் என்பதுணுர்க. பண்டைக் காலத்தில் விற்பனை செய்தோர் பொருளைத் தொலைவில் கொண்டு சென்று பரவச் செய்து அதற்கு மாற்றுப் பண்டங்களைப் பெற்றதனால்  விய் என்பது பரவற் கருத்துடன் தொடர்புற்றதே.  வில் என்பது எழுத்தளவில் உள்ள அடிச்சொல் என்றாலும் விய் என்பதே இன்னும் பேச்சில் உள்ளது. " காசுக்கு விய்யி" என்று பேசுவதைக் கேட்டிருப்பீர்.   விய் என்ற அடிச்சொல்லை அகர ஆதிகள் தனியாகப் பதிந்து பாதுகாக்கவில்லை என்றாலும் அது பல சொற்களில் அடியாகவே உள்ளது.

விர்> வில்:  ரகர லகரப் போலித் திரிபு.
விர் > விய் என்பது சொல்லியலில் இயல்பான திரிபு..

எழுதி வைக்காமல் போனது பேச்சில் வாழக்கூடும்.  அதை ஒதுக்குவது மடமை.  ஒதுக்கி  வைத்தாலும் சொல்லாய்வில் அது மீட்டுருவாக்கம் பெறும்.

வியன் என்பது தமிழில் விரிவு என்று பொருள்படுவது.

விரிநீர் வியனுலகு.

கடலால் சூழப்பட்ட விரிந்த உலகம்.

வியத்தல்  :  விய.   ஒரு காணாத பொருளைக் கண்டவுடன் கண்ணிமைகள் விரிந்துவிடுகின்றன.  மனமும் விரிவு கொள்கிறது.  அதனால் வியத்தல் என்பதோர் அருமையான சொல்லாகும்.

விய(ப்பு) > வியப்பித்தல் :  அதிசயிக்கும்படி செய்தல்.

வியப்பு என்பது மனத்துள் விரிவுகாண்பதைக் குறிக்கிறது.

பி என்பது பிறவினை விகுதியாகும்.

ஒருவனை வேலை ஏவுகையில் குரல்  ஒலி விரிந்து சென்று  அவனை எட்டுகிறது.

வியம்  >  வியங்கோள்.    அழைத்தல்.

வியம் > வியமம் :  துக்கம் ( நிகழ்வு கேட்டு  அதனால் துயர் பரவுகிறது ).  பொறாமை:  பொறாமையும் இவ்வாறு பரவலாகக் கூடியது.  பாராட்டு:  ஒருவர் இன்னொருவரைப் பாராட்டுவதும் இவ்வாறு பரவத் தக்கது.

வியர்வை என்பதும் பரவலாக உடலில் வெளிப்படும் தணிப்பு நீர்.

வியல் =  அகலம்.

விரிந்து செல்வது சிலவேளைகளில் வேறுபடும். ஆகையால் :

விய > வியவு:  வேறுபாடு.

விய > விய + ஆய + அம் =  வியாயம் >வியாசம்.  விரிந்து வரையப்படும் கட்டுரை.

விய + ஆக்கிய +  ஆன + அம் =  வியாக்கியானம் :  விரித்துரை.  அதாவது விரிவாக்கி ஆனது.    இச்சொல்லில் ஆக்குதல் என்ற வினையின் எச்சம் இருமுறை வந்து சொல் நீண்டது.


இன்னும் பல.

இப்போது விசாரணைக்கு வருவோம்.

விய > விச + ஆர் + அணை =  விசாரணை.  ( விரிந்து சென்றறிதல் ).

"விரிந்தறிதல் "   அல்லது  "விரிந்தெடை " என்றொரு சொல்லைப் படைக்கலாம்.  எடு ஐ =  எடை .எது நன்று என்பது நீங்கள்  கூற வேண்டும்.

 (விர் )  > (விய்).

பிழைகள் புகின்  திருத்தம் பின்.
Reviewed : 12.2.2019

புதன், 6 பிப்ரவரி, 2019

சுவையான தகவல்கள். சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி. இன்னும் பல

சிங்கப்பூரில் முதல் தமிழ்ப் பள்ளி:

1834ம்  ஆண்டு சிங்கப்பூரில் முதன்முதலாகத் தமிழ் வகுப்பு  சிங்கப்பூர் ஃபிரீ ஸ்கூல் எனப்பட்ட  சிங்கை இலவசப் பள்ளியில் துவங்கப்பட்டதென்று கூறுவர்.  இதை ஆராய்ந்து கண்டுபிடித்த தமிழன்பர் யாரென்று தெரியாவிட்டாலும் அவர்க்கு நாம் நன்றி சொல்வோம்.


பாரதியார் பலகலைக் கழகப் பேராசிரியர் பதவி -  ரூ. 30  இலக்கம்.

இப்படிக் காசு கைமாறியதாக ஒரு புகார் உள்ளது.  ஆனால் காவல்துறை விசாரணையில்  இது தொங்கிக்கொண்டு இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் இராமதாசு தெரிவித்திருந்தார்.  மற்ற விவரங்கள் தெரியவில்லை.
30 இலக்கம் (  லட்சம் ) தானே!.  பேசாமல் கொடுத்துவிட்டு  அப்  பதவியில் அமர்ந்துவிடலாம் என்று மற்றவர்களிடையிலும் பேச்சு அடிபடுகிறதாம்.

உயரமான கொடிக்கம்பம்:

இந்தியாவிலே மிக்க உயரமான கொடிக்கம்பம்  தி.மு.க வுக்குத் தான் உள்ளதாம். இதன் உயரம் 144 அடியாகும்.   இது அண்ணா அறிவாலயம் என்ற தலைமை நிலையத்தில் உள்ளது.  கொடியை மேலே ஏற்றுவதற்கு ஒரு  மின்பொறி  உள்ளது.  கொடிக்கம்பம் நாட்டிய தேதி:  16.12.2018.

செவ்வாய், 5 பிப்ரவரி, 2019

நெய்யும் நேசமும் நட்பும் நடுப்பகுதியும். பொருந்துமா?

நெய்யிலிருந்து பல பலகாரங்களைச் செய்ய அறிந்துள்ளோம்.  நெய்யிலிருந்து என்றால் அதில் தொடங்கி,  அடுத்து மாவைப் போட்டு, அடுத்து உப்பை இட்டு, அடுத்து இனிப்பினை இட்டு........ ஆகவே இருந்து என்ற சொல் தொடக்கத்தையே காட்டும்.  இருந்து என்பது அசைவற்று வைகிய நிலை; அசைவு தொடங்கியவுடன்  வரை என்பது எல்லை அல்லது முடிவு ஆகும்.

நேசம் என்றும் திரிந்துலவும் நேயம் என்பது, மிக்க அருமையாக அமைந்த சொல்.  நெய் + அம்  =  நேயம் ஆகும். இங்கு முதனிலை என்னும் முதலெழுத்து  நெடிலாகி நீண்டது  ஆதலின் முதனிலை திரிந்த பெயராகும். இப்பொழுது நெய் என்பது வினைச்சொல்லாகவும் இன்றளவும் உள்ளது.   துணி நெய்கிறார்கள் என்`கிற  வழக்கை நோக்கி இதை உணரலாம்.  நெயவில் நூல்கள்  நெருங்கிப் பிணைந்து பின்னித்தான் துணி  அமைகிறது. இதுவும் நேயம் என்ற சொல்லின் தன்மையை நன்`கு உணர்த்துவதாகும்.பிற்காலத்தில்  நேயம் என்ற சொல் நேகம் என்று திரிபுண்டு ஒரு ஸகர முன்னொட்டைப் பெற்று ஸ்னேகம் அல்லது ஸ்நேகம் என்று மாப்பூசி மயக்கிற்று.   காலத்தால் பிந்திய சொல் இதுவாகும்.  மசாலையை நல்லபடியாக நேகாக அரைக்கவேண்டும் என்று அம்மா பணிப்பெண்ணிடம் சொல்வார்.   நேகாக அரைத்தால் பிணைப்பு அதில் கூடுதல் ஆகிறது. நக்கரை புக்கரையாக அரைத்தால் துகள்கள் பெரியனவாய்ப் பிணைப்புக் குறைந்து காணப்படுமென்பர்.  நேகு > நேகம் >ஸ்நேகம் எனினும் அதுவாம்.

நீரும் மண்ணும் நெருங்கிய நிலப்பகுதியே நெய்தல்.  வெம்மையும் குளிரும் ஒன்றை ஒன்று தொட்டு நிற்கும் நிலப்பகுதியே நெய்தல். மக்களும் நெருக்கமாக வாழுமிடம் நெய்தல். கடல் பல செல்வங்களும் தருவது:  அவை கடல் பஃறாரம்  என்ப.   கடல் பலவும் தருவது என்று பொருள்தரும்.

நெய்தல் என்பதில் தல் ஒரு விகுதி;  அது பெரிதும் தொழிற்பெயர் விகுதியாய் வரக் காணலாம்.

பஃது என்பது  பத்து  ஆகும்.   பல்+ து =  பத்து அல்லது பஃது.  அகர முதலாய் 0னகர இறுவாய் முப்பஃது என்ப என்ற தொல்காப்பியத் தொடரை உன்னுக.

இரண்டு மாடுகளை ஒரு கயிற்றினால் கட்டி  இரண்டும் இருபக்கமாக இழுத்துக்கொண்டு போனால்  அவை பிரிந்து நிற்பவை என்பது சொல்ல வேண்டியதில்லை.  இரண்டும் நடுப்பகுதிக்கு வந்து ஒன்றாக நின்றால் நட்பு டையவை ஆகின்றன.

நள் >  நடு.

நள்ளிரவு;  நடு இரவு,   நள்ளாறு -  நடு ஆறு -  நட்டாறு.

இதுபோலும் அமைப்பு:   கள் -  கடு;  பள் - படு;  சுள் - சுடு என்று மொழியெங்கணும் பரந்துபட்டுள்ளன.

நடு >  நட்டல்  இது நடு+  அல்.   நாடாது நட்டலிற் கேடில்லை. நட்டபின் வீடில்லை.  ( வீட்டுக்கு வராமல் சுற்றித் திரிவான் என்பதன்று;  விட்டு விலகலாகது என்பது.)

நள் + பு  =  நட்பு.

நள் என்பதும் நெருக்கமுணர்த்து பதமே.  பொருள் பதிவு பெற்றதே  பதி + அம் = பதம்.  நன் கு வார்க்கப்பட்டதே வார்த்தை.    இனி வாய்த்தை > வார்த்தை.  எனினும் அதுவே.  இரு உதடுகள் நெருக்கமுற்றதே  வாய்.  பொருள் வருவிக்கப் படுவதே வார்த்தை.  வரு > வார்.  வருவான் -  வாரான்  என்பவற்றில் வரு என்பது வார் எனத் திரிதலுணர்க.  சொல்லின் ஒலி மட்டுமே உண்டு;  பொருளானது ஊட்டப்படுகிறது.  பொருள் அருத்தப்படுகிறது:  அருந்து > அருத்து என்பது பிறவினை.   அர் என்பது அரவம் என்று ஒலியுமாம்.
 இப் பிரிசெலவு நிற்க.

சந்திப்போம்.

நிலைப்பிசகுகளும் வருபிழைகளும் திருத்தம் பின்

ஒவ்வொரு முறையும் மீளேற்றுகையில் செலவு கூடும்.


 



CHANGES TO BLOGS AND AFFECTED SIVAMALA BLOG.

Some changes are being made to the blogs at large by Google and Google plus and some other features may not be available soon.
If you are follower on Google then re register as a follower on the blog itself.

Your comments on Google + ,may have been seldom read by the Author.  Please make your comments on the post itself.  If not e mail them to bisivamala@gmail.com. Worthy comments stand abundant chance to be noticed and replied.

We hope it continues to be easy to reach this blog though we do not know how things will work out.

பன்றி வருடமே வருக!

சந்தங்கள் மாறி மாறி வரும் தனிச்சொல் பெறாத சிந்து .


சீனப் புத்தாண்டு தினம்
சீருடன் வாழ்கபல் லினம்
வானை முத்தமே இடும்
வரையாய் வளர்அரத் தினம்.

செல்வம் தருவது பன்றி
சேர்ந்தே வந்திடும் வென்றி
வெல்வ தெலாமுடன் ஒன்றி
பன்றி தருவதும் நன்றி.

பன்றி  வருடமே வருக!
பல்கலை நற்புகழ் தருக.
தொன்று தொட்டவை தொடர்க
தொல்லை இலாப்பொருள் பெருக.

பன்னிரு விலங்குகள் தம்மில்
பின்னிலை எய்திய பன்றி
பின்நிறை உழைப்பதில் விம்மி
பெற்றவை  இல்லையே கம்மி .

போற்றியே ஏற் றிடும்  குணம்
போதும் எனும் நல்  மனம்
ஆற்றலில் தானடங் கெனும்
ஆவன தாம்பூ வனம்

புத்தாண்டில் மனம் மகிழ்
புன்மை அனைத்தையும்  இகழ்
எத்திசையும் மேல் திகழ்
இப்பெரு  நாள் தனைப் புகழ் .


 வரையாய் -  மலையாய்
வென்றி-   வெற்றி
நன்றி  -  நன்மை
தொன்று தொட்டவை = பாரம்பரியம்

பின் நிறை -  பின்பு முழுமை  பெற்ற
விம்மி  - கூடுதல் ஆகி
கம்மி  -  குறைவு
புன்மை -  தாழ்வானவை
எத்திசையும் -  எங்கிருந்தாலும்
மேல் திகழ்  -  உயர்வாய் இரு


ஆவன -  ஆகியவை
பூவனம் -  மலர்த் தோட்டம் போல் ஏற்புடையவை








ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

டகர ரகரத் திரிபுகள்

பல இடுகைகளில் டகரம் ரகரமாகவும் இம்முறை மறுதலையாகவும் வருமென்பதைக்  கண்டு உணர்ந்திருக்கலாம்.

எடுத்துக்காட்டுகள்:

மடி > மரி.

இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான்.

அவன்  மடிந்தான்.
 அவன்  மரித்தான்.

மரித்தவர் உயிர்த்தெழுந்தார்.

இறந்தாருடன் பற்றுதல் ஏதுமில்லாத போது மடிந்தார் எனல் ஏற்புடையது.

அவர்பால் பற்றுதல்  இருந்தால்  மரித்தார் என்பதே நன்று.  மற்றும் நடுநிலையான சூழ்நிலைகளில் மரித்தார் என்பதே நன்று.


மேலும் டகர ரகரத் திரிபு:

குடம்பை -   குரம்பை.

" குடம்பை தனித்தொழிய ........"

"மாயக் குரம்பை "  என்பன காண்க.

குடம்பையாவது உள்ளீடுகளை மேற்போர்த்தியிருப்பது. :  அங்கம்.

பலலுறுப்புகள் அடங்கியது அங்கம்.    அடங்கு >  அ(ட)ங்கம் >  அங்கம் . இடைக்குறை.

குடம்பையும் ஏறத்தாழ அப்பொருளினதே.

உட்டுளை (   உள் துளை)  -   உள்வளைவு , உள்வழியுடைமை )

குடு > குடை
குடு>  குடைவு
குடவு என்றும் சொல்வர்.

குடு > குடம்.  குடம்> கடம்


குடு -   குடல்.  ( உணவை உள்வைத்து சத்துகளை உறிஞ்சும் உறுப்பு)
குடல் >  குடர்    ல -  ர  போலி.
குடு -   குடலை.  ( கடலை போலும் பொருளை உள்வைக்க உதவும்  கூடு)
குடு -   குடம்பை. ( உறுப்புகளை உள் வைத்திருப்பது).
குடு -   குடும்பம். (  ஆடவர் பெண்டிர் பிள்ளைகளை உள்வைத்திருப்பதாகிய சேர்க்கை )

இவை இத்தகு திரிபுகளில் சில.

ஏனை மொழிகளில்:

சோப்டா > சோப்ரா.
ஒடிசா > ஒரிஸா.

பிழைகள் காணின் அல்லது புகின் பின் திருத்தம் பெறும்.

சனி, 2 பிப்ரவரி, 2019

சங்கட ஹற சதுர்த்தியும் தமிழ்த் தொடரும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும்  செயல் தடைகள் தாமதங்கள் ஏற்படுகின்றன.  தடை என்பது  நாம் முன்செல்வதைத் தடுப்பது போன்ற நிகழ்வுத் தடைகள்.  தாமதமென்பது:

தாழ்  + மதி +  அம் =  தாழ்மதம் >  தாமதம்.

பத்து நாட்களில் முற்றுப் பெற்றுவிடும் ஒரு செயல் திட்டத்தை ஐந்து நாட்களில் முடிப்பதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்கள்.   ஆனால் ஐந்து நாளில் முடியவில்லை.  ஆறு ஏழு என்று நீண்டு செல்கிறது.  இது நீள்வதற்குக் காரணம் குறைத்து மதிப்பட்டதுதான் என்று நமது முன்னோர் கண்டுபிடித்தனர்.  அது உங்களுக்குக் கால நீட்டிப்பு என்றாலும் அடுத்த குழுவினர்க்குத் தாமதம் தான்.  இந்தத் திட்டத்தில் ஐந்து நாட்களில் பயனை எதிர்பார்த்து  அது முடியாமல் பத்து நாள்வரைகூடக் காத்திருக்கவேண்டியுள்ளதே.   அது தாழ்மதிப்பீட்டினால் வந்த தாழ்மதம் > தாமதம்.

இங்கு மதம் என்பது மதி + அம் = மதம்.. இதேபோல் அமைந்த இன்னொரு சொல்: பதி + அம் =  பதம்.  அம் என்பதுபோலும் விகுதி வர,  சொல்லிறுதியில் நின்ற உயிர்கள் கெடும்.   எ-டு:  அறு + அம் =  அறம் (  அறம் பொருள் இன்பம் ).
இகரம் இறுதி கெடும்; உகரம் இறுதியும் கெடும்  -  அம் அல்லது உயிர்முதலாகிய எந்த விகுதி வரினும்.

தடை தாமதம் முதலியவை கடந்து செல்லற்குரியவை; கடினமானவை.  ஆகவே  இவை கடங்கள்.  வெம்மை மிக்கக் கடின வழிகளையுடைய மலை வேங்கட மலை.   வேகும் > வேம்;    கடு + அம் =  கடம்.   கடமாவது கடினமானது;  கடத்தற்குரியது.   கட + அம் =  கடம்  எனவும் ஆகும்.  முதனிலைச் சொல்லீற்று உகர அகரங்கள் கெடும்,  உயிர் வரின்.

தனக்கு வந்த கடின நிலையே கடம்;  மற்றவனுக்கு வருவது அவனுக்குக் கடம்.  ஆகவே ஒவ்வொருவரும்  தம் கடத்தை நினைந்தே துயர் கொள்வர் அல்லது  தாண்டிச் செல்ல முயல்வர்.

தம் கடம் > சம் கடம் >  சங்கடம்.   ( தகரம்   சகரமாகும் ).




இதுபோலும் த > ச திரிபுகள் முன்னர் விளக்கப்பட்டன:

தனி >  சனி.  ( சனிக் கோள் )
தங்கு > சங்கு   ( ஓட்டினுள் வாழும் உயிரி )
தங்கு >  சங்கு > சங்கம்.

த + தி >  தத்தி > சத்தி >   சக்தி.    தன் > த:  கடைக்குறை.  தி: விகுதி.

இனிச் சங்கட ஹர சதுர்த்தி என்பதில்  ஹர என்பது:

அற > ஹர.

தங்கடம் அறுபடச் செய்யும் பூசை அதாவது சங்கடம் அறச் செய்யும் பூசை.  


கடு + அம் =  கட்டம்  ( கடின நிலை).
கட்டு + அம் = கட்டம்.  குறுக்கு நெடுக்காக கோடுகளால் அமைந்த வரைவு.
நிலை.  டகரம் இரட்டித்தது.

கட + அம் =  கடம் (  கடத்தற்குரிய இடம் அல்லது நிலை ).

கடம்  > கஷ்டம் ( மெருகூட்டல்)
கட்டம் > கஷ்டம் ( மெருகூட்டல் ).

கஷ்டம் என்பதில்  ஷ் என்பது அயல் ஒலி. அதை விலக்க:

கஷ்டம் >  க(ஷ்)டம் > கடம்.  ( சொல் பழைய நிலைக்கு வந்துவிட்டது).

தமிழிலிருந்து அமைந்த வடசொற்கிளவி  கஷ்டம்.
வடவெழுத்து ஒரீஇ  :  ஒருவி;  அதாவது விலக்கி:
பழைய கடம்  என வந்துவிட்டது.

கடு  கட என்ற அடிச்சொற்கள் இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.

பின் தோற்றப் பிழைகள் திருத்தம் பெறும்.



பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி

பிரித்தியங்கரா தேவி என்ற  பெயர் எவ்வாறு அமைந்தது? இதனை  நாடுவோம்!

 பிரித்தியங்கரா தேவி என்பதை பிரித்து+ இயங்க + அறா+ தேவி என்று பிரிக்கவும்.

இத் தொடர்மொழிப் பெயரில், பிரித்து என்பது உண்மையில் பிரிந்து என்பதன் வலித்தல் ஆகும்.  வலித்தல் எனின் "ந்து" என்பது "த்து"  என்று வல்லெழுத்துப் பெற்றது என்பதாகும். இது புதியதன்று. விகுதி சேரும்போது வலித்தல் போன்றதே இது. வருந்து > வருத்தம், பொருந்து> பொருத்தம் முதலியன உங்களுக்குத் தெரிந்த எடுத்துக்காட்டுக்கள்.

பெருமானிடமிருந்து பிரிந்து என்று பொருள்கூறாமல், பெருமானிடமிருந்து தன்னைப் பிரித்து, அல்லது பிரித்துக்கொண்டு என்னின், இதன்பொருள் இன்னும் எளிதாகிவிடும்.

பிரிந்த பின், அல்லது பிரித்துக்கொண்ட பின், இயங்க = தனித்து அமர்ந்து அருள்பாலிக்க, அறா = அறாத, தேவி = தெய்வம் என்பது பொருள்.

தனித்து அவள் நிற்க, பற்றாளன் அவளைத் தாழ்ந்து பணிந்தாலும், அவனுக்குப்  பெருமானின் அருளும் தானே வந்துறும் என்பது தெளிவாகும்படி "அறா" என்ற பதம் உள்பதியப் பட்டுள்ளது கண்டு இன்புறலாம்.  இது பின் பெயரில் "அரா" என்று மாறியுள்ளது.

இயங்க அறா > இயங்கறா:  இங்கு ஓர் அகரம் கெட்டது.

வீறு என்பது அம் விகுதி பெற்று வீரம் என்று திரிந்துள்ளது நோக்குக.
விறுவிறு என்று போனான். விர்ரென்று போனான் என்ற வழக்குகளை நோக்குக. ரகர றகர எழுத்துமாற்றங்கள் தமிழுக்குப் புதியவை அல்ல.



பைத்தியம் சொல்.

பைத்தியம் என்ற சொல்லை முன்பு விளக்கியதுண்டு.  அதற்கான பழைய இடுகை இங்கில்லை  யாதலின் அதிலடங்கியிருந்த கருத்துகளை நோக்கி இப்போது  மறுசெலவு மேற்கொள்வோம்.

பைந்தமிழ் என்பது  இளமை வாய்ந்த தமிழ் என்று பொருள்படும்.  தமிழ் என்ற சொல்லை எடுத்துவிட்டால் இதில் மீதமிருப்பது பை என்பதே.  பசுமையே பைம்மை.

பசுந்தமிழ் என்பதே பைந்தமிழ்.

பைந்தமிழ் போற்றும் பாகேசுவரி பாலன்  என்ற சொற்றொடரில் இச்சொல் பதிவாகி இருப்பதனைக் காண்க.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெளிந்து ஆய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

என்ற திருவிளையாடற் புராணப் பாடலிலும் பசுந்தமிழ் என்பதைக் காண்க.  பைந்தமிழ்  பசுந்தமிழ் எல்லாம் ஒன்றுதான்.  முதிராமை என்பதே பசுமை.

முதிர்தல் என்பது பல்வகைப்படும்.  அறிவு முதிர்ச்சி,  உடல்முதிர்ச்சி,  என இரண்டைக் குறிப்பிடலாம்.  இவை மனித வளர்ச்சியின்பாற் பட்டவை,

பைத்தியக் காரன் என்பவன் அறிவு வளர்ச்சி பெறாதவன் என்பதே இச்சொல்லமைப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்வது  ஆகும். பைத்தியம் என்றால் என்ன என்பதற்கு மருத்துவ நூல் ஒரு விளக்கம் தரலாம்;  சட்டம் ஒரு விளக்கம் தரலாம்; இன்னுமுள்ள அறிவியல் மற்றும் ஆய்வுகள் இன்னொரு விளக்கம் தரலாம்.   அவை தம்முள் வேறுவேறு கோணங்களில் அதனை அலசலாம்.  அவைகளில் எதுவுமன்று நாம் சொல்வது.  சொல்லில் பெறப்படும் பொருளே நாம் கருதற்குரித்து ஆகும்,

பை  =  பசுமை,  பொருள்:  முதிராமை.
து  =  உரியது, உடையது என்ற பொருள் தரும் இடைச்சொல்.
இயம் என்பது ஒரு விகுதி.  இது இ,  அம் என்ற  இருவிகுதிகள் இணைந்த கூட்டு விகுதி ஆகும்,  இந்த விகுதி இ மற்றும் அ என்ற சுட்டுச்சொற்களின் வளர்ச்சியிலிருந்து போதருவது ஆகும்.

பை + து + இயம் =  பைத்தியம்,   முதிராமை காரணமான ஒரு மனநோய்.

பைத்தியம் என்ற சொல்லின் உள்ளுறைவை அறிவாளிகளும் மக்களும் மறந்துபோய்ப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இன்று நோக்குவார்க்கு அது ஒன்றும் தெற்றெனப் புலப்படப் போவதில்லை.  ஆய்வு செய்தாலே அது புலப்படும்.  முன்னரே முடிவுசெய்துவிட்ட கருத்தினடிப் படையில் அதை அணுகுவோன் அதன் பொருளை அறியப்போவதில்லை.  அது அவனை ஏமாற்றிவிடும். அவன் தொடங்கிய இடத்திற்கே வந்து  கருத்துக் காணாமையில் உழல்பவன்.

நாம் இன்று இச்சொல்லை அமைப்புப் பொருளில் பயன்படுத்தவேண்டியதில்லை.  அதன் வழக்குப் பொருளிலே அதனைப் பயன்படுத்தலாம்.  அமைப்புப் பொருள் அது தமிழ் என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது,  அறிந்தபின் வழக்கில் என்ன பொருளோ  அதற்கே திரும்பிவிடுக.

பிழைகள் பின் தோன்றக்கூடும். அவை உரியவாறு
திருத்தமுறும். கள்ளப்புகவர்கள் நடமாடுவதால்.


வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

திரிபும் கால ஓட்டமும்

இன்று திரிபு அடைவதற்கு ஒவ்வொரு சொல்லுக்கும் எத்துணை ஆண்டுகள் கழிந்திருக்கும் என்று பார்ப்போம்.

கா என்பது காத்தல் என்று பொருள்படும் ஒரு மிக்கப் பழைய தமிழ்ச்சொல். ஒரு பழம் அழுகிவிடாமல் காக்கவேண்டும்.  அதற்கு என்ன செய்யவேண்டுமென்றால் அதை உரிய முறையில் பத்திரப் படுத்தவேண்டும் . பத்திரப் படுத்துவது என்பது ஒரு பேச்சுமொழிச் சொல்.   எழுதும்போது பலரும் பழம் கெட்டுவிடாமல் காக்க வேண்டும் என்று எழுதுவர்.

காத்துச் சூட்சிக்கணம், கஸ்தூரி மாம்பழம்

என்று ஒரு மலையாளப் பாட்டு இருக்கிறது.   பழம் கெட்டுவிடாமல் காக்க வேண்டும் என்பதே அங்கும் வழக்கு ஆகும்.

கா அல்லது காத்தல் என்பதிலிருந்து  காதல் என்ற சொல் அமைந்தது.  இந்தச் சொல்லின் பிறவினை வடிவமே காத்தல் என்பது.  ஆனால் இப்படி எந்த வாத்தியாரும் சொல்லிக்கொடுப்பதில்லை.  இதற்குக் காரணம் காதல் என்பதற்கும் காத்தல் என்பதற்கு மிடையில் உண்டான பொருள் வேறுபாடுதான்.

ஓர்  இளைஞன் ஒரு பெண்ணை விரும்புகிறான்.  தான் விரும்பிய அந்தப் பெண்ணைப் பிறர் அணுகிவிடாத படி  அவன் பாதுகாப்பான். அப்படி அவன் பாதுகாப்பதே காதல் ஆகிறது. அப்பெண்ணுடன் தான் தொடர்பு வைத்துக்கொள்வதையும் பிறர் காணாமலும் பிறரும் செய்யாமலும் காப்பான்.  அதுவே காம்  ஆகிறது.

கா என்பது காம் என்று திரிவதற்கு அல்லது நீள்வதற்கு எத்தனை ஆண்டுகள் சென்றிருக்கும்?  இது உடனே நிகழும் திரிபு அன்று.  காலம் செல்லவேண்டும்.

கா  >  காம் :  காம் என்பது கா என்பதை நோக்க ஒரு புதிய அமைப்பு ஆகும்.

காம் என்பதே போதுமானது.  உடல்வேட்கையைக் குறித்தது.  பின் அது காமம் என்று திரிய ஒரு தலைமுறையாவது சென்றிருக்கவேண்டும்.  அம் சேர்த்தபடியால் சொல்லில் என்ன புதுமை விளைந்தது.  என் கருத்து ஒன்றுமில்லை என்பதுதான்.  காம் என்று மட்டும் குறிப்பிடுவது நிறைவு அளிப்பதாய் இருக்கவில்லை போலும்.  ஓர் அம் சேர்த்து காமம் என்ற சொல் அமைந்தது.

காம் என்ற அடிச்சொல்லும் இருந்தது.  அது நிறைவு அளிக்காமையினால் காமம் என்று சொல் அமைத்

தவர்கள்  பின்னர் காமம் என்ற அந்த உணர்வுக்குரிய பெண்ணைக் காமி  என்றனர்.  அதாவது காம் அல்லது காமம் உடையவள் காமி.

காமி சத்தியபாமா கதவைத் திற வா

என்பது ஒரு பழம்பாடல்.  நாடகப் பாட்டு.

பின் காமத்தை ஆட்சி செய்வதாகக் கருதப்பட்ட கண்ணறியாத ஒருவன்  காமன் எனப்பட்டான்.  இதிலும் காம் என்ற அடிச்சொல் பயன்பட்டது.

காமத்துக்கு எல்லோரும் உரிமை உடையவர்கள் ஆகமாட்டார்கள் ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு!  உரிமை உடையவளைக் குறிக்க  ,   காமினி என்ற சொல் உண்டானது.  இதில் இன் என்னும் உரிமை குறிக்கும் உருபு இடைநிலையாகி உள்ளது.  காம் + இன் + இ =  காமினி.

கந்தனின் கருணை  என்ற தொடரில் கந்தனினின்றும் வெளிப்படும் கருணை என்ற பொருள் கிட்டுகிறதன்றோ.  இதில் இன் என்ற உருபு செய்யும் தொழிலைக் கண்டு பொருளைப் புரிந்துகொள்ளலாம்.

காமத்தை ஆட்சி செய்யும் தேவதை காமாட்சி எனப்பட்டாள். அப்படி ஒரு தேவதை இருப்பதாக மக்கள் எண்ணி இச்சொல்லைப் படைத்தனர்.  கா என்பதிலிருந்து காமாட்சி என்ற சொல்லை உண்டாக்க எத்தனை நூற்றாண்டுகளும் கருத்துவளர்ச்சிகளும் தோன்றியிருக்கவேண்டும்?

காம் தன் அடிப்படைப் பொருளை இழக்கவில்லை என்றாலும் பேச்சில் தனிச்சொல்லாய்ப் பயன்படவில்லை என்றாலும் அதற்குப் பதிலாகக் காமம் என்ற சொல் அமைந்துவிட்ட போதிலும்  அது அடிச்சொல்லாக நின்று மொழியை வளப்படுத்தியது.   அது தாய்ச்சொல் ஆகிவிட்டது.  இந்த மாற்றத்தை அடைய ஒரு தலைமுறையிலிருந்து பல தலைமுறைகள் சென்றிருக்கலாம்.

சொல் திரிபில் அடங்கியிருப்பது கால ஓட்டமாகும்.

அடிக்குறிப்புகள்.

பிழைகள் காணின் திருத்தம் பின்.  `1.2.19

Errors not found in our original:
சில பிழைகள் காணப்பட்டுத் திருத்தம் பெற்றன.  கள்ளப்  புகவர்களால்   இவை புகுத்தப்  பட்டவை. மேலும் வரக்கூடும். எமக்குத் தெரிவிக்கலாம்  அல்லது திருத்தம் செய்யப்படும் வரை பொறுமை காக்கவும்.     2.2.19

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

சாய்தல் என்பது பலவகைகளில் செயலாக்கம் படத்தக்கது  என்பதைச் சிந்தித்து உணரலாம்.  இவ் வகைகளையெல்லாம் தொகுத்து நால்வகையில் சாய்தல் கூடுமென்று கூறின் அது  சரியாகும். முன்னாகச் சாய்தல், பின்பக்கம் சாய்தல், பக்கவாட்டில் வலமாகச் சாய்தல்;  அவ்வாறே இடமாகச் சாய்தல் என்று நான்`கு அவையாம்.

சாம் என்றொரு சொல் முற்காலத்தில் வழங்கியது என்று அறிஞர் கூறியுள்ளனர். இச்சொல் பின்னர் இகர விகுதிபெற்று சாமி என்று நீண்டது.
விகுதி என்பதே  சொல்லின் மிகுதிதான்.   விஞ்சுதல் - மிஞ்சுதல் என்ற சொல் போலவே மிகுதி > விகுதி என்பதும் ஆம்.

சாமியைப் பண்டையர் முன்பக்கமாகச் சாய்ந்து தரையில் படிந்தவாறு கும்பிட்டனர்.  கும்பு இடுதல் என்பது கைகள் குவித்தலைக் குறிப்பது.  இச்சொல் கூம்பு என்பதனோடு தொடர்புடைய சொல்.   கும்பு > கூம்பு.  கூம்பு என்பது வல்லெழுத்துப் பெற்றுக் கூப்பு என்றாகும்.  கூப்பு > கூப்புதல்.

சாய்ந்து கும்பிடப் படுவது  சாய் > சாய்ம்  > சாம்  ஆனது.   சாம் என்ற சொல் பின் இகர விகுதி பெற்று சாமி ஆனது.   சாய் > சாய்ங்காலம் என்பது போன்றதே.  உகரத்தை உள்ளிடும்போது  சாயுங்காலம் என விரியும்.  சாயும் என்பது எச்சவினையின்பாற் படும்.  சாமி என்பதில் வரும் ஈற்று இகரத்தை வெறும் விகுதியாக விட்டுவிடாமல் இங்கு என்று சுட்டுப்பொருள் காண்போமாயின் சாயும் இங்கே என்று அது விரிதல் காணலாம்.   சாமி இருக்குமிடத்தில் சாய்வது பண்டை நாட்களிலிருந்தே வணங்குவதன் குறிப்பானது.

சாய்தல்  வினைச்சொல்.
சாயும் என்பது இடைக்குறைந்து  சாம்  ஆனது  எனினுமாம்.

சாய் > சாய்ம் > சாம்  எனினும்  அதுவேதான்.

சாயும் இ  >  சாம்  இ  >  சாமி என்பதும்  அமைப்பை விளக்கப் போதுமானது.

இன்னொரு சொல்லை ஒப்பிடுவோம்.

காண் > காண்பி என்பது பிறவினை வடிவம்.

இது பேச்சில் இப்படி வருவதில்லை.  காண் > காண்மி > காமி என்று ஒலிக்கப்படுவது கேட்டிருப்பீர்.

பாம்பு என்ற சொல்லிலும் பாய் > பாய்ம்பு > பாம்பு என்றாவதைக் காண்க.
வேகமாக முன்  வந்து  தீண்டுதல் அல்லது  விரைந்து நகர்தல் குறிக்கவே பாய்தல் என்ற சொல் இங்கு வருகிறது.

செத்துப்போனவன் சாய்ந்துவிடுகிறான்.  சாய் என்பதும் சா என்பதும் தொடர்புடைய சொற்கள்.

சா >  சாய் > சாய்தல்.
அல்லது   சாய் > சா > சாதல்.  இவற்றில் எப்படிப் பார்த்தாலும் தொடர்பு தெரிகிறது.

இதிலிருந்து  சா என்ற பழந்தமிழ்ச் சொல்  சாய்தலையும் சாதலையும் ஒருங்கு குறித்த பல்பொருளொரு சொல் என்பது புலப்படும்.

ஆக,   சாமி என்பதன் அடைவுப் பொருள் கும்பிடப் படுவது என்பதுதான் என்பதை உணரலாம்.  வணக்கம் என்ற சொல்  வளைவு குறித்தது முன்.
இன்று இப்பொருள் மறைவாக இருப்பதுபோலவே  சாமி என்பதும் சாய்தல் கருத்தை மறைவாகக் கொண்டுள்ளது.

 ஸ்வாமின் என்னும் சமஸ்கிருதச் சொல் வேறு.  இச்சொல் பல பொருள் உடைய சொல்.