சனி, 2 பிப்ரவரி, 2019

பைத்தியம் சொல்.

பைத்தியம் என்ற சொல்லை முன்பு விளக்கியதுண்டு.  அதற்கான பழைய இடுகை இங்கில்லை  யாதலின் அதிலடங்கியிருந்த கருத்துகளை நோக்கி இப்போது  மறுசெலவு மேற்கொள்வோம்.

பைந்தமிழ் என்பது  இளமை வாய்ந்த தமிழ் என்று பொருள்படும்.  தமிழ் என்ற சொல்லை எடுத்துவிட்டால் இதில் மீதமிருப்பது பை என்பதே.  பசுமையே பைம்மை.

பசுந்தமிழ் என்பதே பைந்தமிழ்.

பைந்தமிழ் போற்றும் பாகேசுவரி பாலன்  என்ற சொற்றொடரில் இச்சொல் பதிவாகி இருப்பதனைக் காண்க.

கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெளிந்து ஆய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்

என்ற திருவிளையாடற் புராணப் பாடலிலும் பசுந்தமிழ் என்பதைக் காண்க.  பைந்தமிழ்  பசுந்தமிழ் எல்லாம் ஒன்றுதான்.  முதிராமை என்பதே பசுமை.

முதிர்தல் என்பது பல்வகைப்படும்.  அறிவு முதிர்ச்சி,  உடல்முதிர்ச்சி,  என இரண்டைக் குறிப்பிடலாம்.  இவை மனித வளர்ச்சியின்பாற் பட்டவை,

பைத்தியக் காரன் என்பவன் அறிவு வளர்ச்சி பெறாதவன் என்பதே இச்சொல்லமைப்பிலிருந்து நாம் தெரிந்துகொள்வது  ஆகும். பைத்தியம் என்றால் என்ன என்பதற்கு மருத்துவ நூல் ஒரு விளக்கம் தரலாம்;  சட்டம் ஒரு விளக்கம் தரலாம்; இன்னுமுள்ள அறிவியல் மற்றும் ஆய்வுகள் இன்னொரு விளக்கம் தரலாம்.   அவை தம்முள் வேறுவேறு கோணங்களில் அதனை அலசலாம்.  அவைகளில் எதுவுமன்று நாம் சொல்வது.  சொல்லில் பெறப்படும் பொருளே நாம் கருதற்குரித்து ஆகும்,

பை  =  பசுமை,  பொருள்:  முதிராமை.
து  =  உரியது, உடையது என்ற பொருள் தரும் இடைச்சொல்.
இயம் என்பது ஒரு விகுதி.  இது இ,  அம் என்ற  இருவிகுதிகள் இணைந்த கூட்டு விகுதி ஆகும்,  இந்த விகுதி இ மற்றும் அ என்ற சுட்டுச்சொற்களின் வளர்ச்சியிலிருந்து போதருவது ஆகும்.

பை + து + இயம் =  பைத்தியம்,   முதிராமை காரணமான ஒரு மனநோய்.

பைத்தியம் என்ற சொல்லின் உள்ளுறைவை அறிவாளிகளும் மக்களும் மறந்துபோய்ப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. ஆகவே இன்று நோக்குவார்க்கு அது ஒன்றும் தெற்றெனப் புலப்படப் போவதில்லை.  ஆய்வு செய்தாலே அது புலப்படும்.  முன்னரே முடிவுசெய்துவிட்ட கருத்தினடிப் படையில் அதை அணுகுவோன் அதன் பொருளை அறியப்போவதில்லை.  அது அவனை ஏமாற்றிவிடும். அவன் தொடங்கிய இடத்திற்கே வந்து  கருத்துக் காணாமையில் உழல்பவன்.

நாம் இன்று இச்சொல்லை அமைப்புப் பொருளில் பயன்படுத்தவேண்டியதில்லை.  அதன் வழக்குப் பொருளிலே அதனைப் பயன்படுத்தலாம்.  அமைப்புப் பொருள் அது தமிழ் என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது,  அறிந்தபின் வழக்கில் என்ன பொருளோ  அதற்கே திரும்பிவிடுக.

பிழைகள் பின் தோன்றக்கூடும். அவை உரியவாறு
திருத்தமுறும். கள்ளப்புகவர்கள் நடமாடுவதால்.


கருத்துகள் இல்லை: