ஞாயிறு, 10 பிப்ரவரி, 2019

விசுவாசம்

விசுவாசம் என்பதனை இப்போது யாங்ஙனம் அமைந்த சொல்லென்று உணர்ந் தின்புறுவோம்.

விசு என்பது விரிவு குறிக்கும் ஒரு திரிமூலம் ஆகும்.

விர் > விய் > விய்+ உ + வியு  >  விசு.

விர் என்ற அடியினின்று இத் திரிபுகள் உருப்பெறும் என்பதைப் பழைய இடுகைகளினின்று ஈண்டு அறிதல் கூடும்.

பண்டை மனிதன் மரம் என்பது பெரிதும் உணர்ச்சியற்ற ஒன்று என நினைத்தான். அது ஈரமுள்ள மரமானாலும் காய்ந்துவிட்ட மரமானாலும் அவன் வேறுபடுத்தி அறிய அவனுக்கு காலம் பிடித்தது. உணர்ச்சியும் உயிரும் அற்றது மரம் என்ற கருத்திலிருந்து அவனது மூலங்கள் எப்படித் திரிந்தன என்பதை இங்கு நோக்கி அறிக:

மர் > மரம்
மர் >  மய் > மாய் >  மாய்தல்
மர் > மரி > மரித்தல்.

பாகத மொழிகளில் :

மர் > மார் > மாரோ.
(  இறப்பு )

மர் > மரணம்;  அதாவது:  மரி + அணம் = மரணம்.

மாள் > மார் அல்லது  மார் > மாள்.  ளகர ரகரப் போலி.

மனமே இல்லாதான் மரம் போன்றவன்; குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்; அவன் தொட்டும் அவள் அவள் மரக்கட்டைபோல் கிடந்தாள் என்ற வரணனைகளிலிருந்து மர் என்ற அடிச்சொல்லின் திறமுணர்தல் கூடும்.
ஒன்றறிவதாவது உற்றறிவதுதான் என்று தொல்காப்பியனார் வகுத்துள்ளதால் மரத்திற்கு அது வெட்டிக் காயுமுன் உணர்வுள்ளதாம் என்பதை அறியலாம்.  வெட்டியவுடன் நீர் வடிந்து காய்கிறது:  காய் >  காயம்.
சகதீச சந்திரபோஸ் முதலியவர்கள் மரங்கட்கும் உயிரும் உணர்வும் உள்ளமையை உணர்த்தியுள்ளனர்.

இங்கு கண்டவற்றுள் யாம் உங்கட்குத் தெரிவிக்க விழைந்தது:  விர்> விய் என்பதுபோன்றதே  மர் > மய் என்ற திரிபுமாகும்.

மேற்குறித்தபடி விய் உ என்பது, முன் விரிதல் என்பது  ஆம்.  உ என்பது முன்.

ஆக விசு என்பது விரிவு  அல்லது  முன்விரிவு என்பது ஆகும்.

இனி வாசம் என்பது இருத்தல் என்பது நீங்கள் அறிந்ததே. இங்கு அதற்கு மணம் அல்லது நறுமணம் என்பது பொருளனறு.

விசுவாசமின்மை ஒரு குறுக்கம்.  விசுவாசம் என்பது ஒரு விரிவு.  தன்மேல் ஒருவன் பற்றுள்ளோன்.   பிறன்மேலும் பற்றுள்ளோன் ஆவதே விசுவாசம் என்பதைச் சுருக்கமாக அறியலாம். நடபடிக்கைளில் எதிர்பார்ப்புக்கு மாறாமை போற்றுதலே விசுவாசம் ஆம்.  தொடர்பறாமை கடைப்பிடித்தல் என்பதும் அதுவாம்.  இதனைப் பற்றன்பு என்று முன் ஓரிடுகையில் குறித்தேம்.  பற்று என்பதும் ஓரிடத்தது  இன்னோர் இடத்துச் சென்று பிடிகொள்ளுதல் ஆகும்.  விசுவாசம் என்பதும் அதுவேயாம் என்பதை ஒப்பிட்டு அறிந்துகொள்க.  வாசம் என்பது முன் விளக்கப்பட்டுள்ளதாக நினைவுள்ளது. இலதாயின் பின் விளக்கம் பெறும்.

பிழைபுகின் பின் திருத்தம்பெறும்.



கருத்துகள் இல்லை: