சனி, 2 பிப்ரவரி, 2019

சங்கட ஹற சதுர்த்தியும் தமிழ்த் தொடரும்.

எல்லோருடைய வாழ்க்கையிலும்  செயல் தடைகள் தாமதங்கள் ஏற்படுகின்றன.  தடை என்பது  நாம் முன்செல்வதைத் தடுப்பது போன்ற நிகழ்வுத் தடைகள்.  தாமதமென்பது:

தாழ்  + மதி +  அம் =  தாழ்மதம் >  தாமதம்.

பத்து நாட்களில் முற்றுப் பெற்றுவிடும் ஒரு செயல் திட்டத்தை ஐந்து நாட்களில் முடிப்பதாக நீங்கள் வாக்குறுதி கொடுத்தீர்கள்.   ஆனால் ஐந்து நாளில் முடியவில்லை.  ஆறு ஏழு என்று நீண்டு செல்கிறது.  இது நீள்வதற்குக் காரணம் குறைத்து மதிப்பட்டதுதான் என்று நமது முன்னோர் கண்டுபிடித்தனர்.  அது உங்களுக்குக் கால நீட்டிப்பு என்றாலும் அடுத்த குழுவினர்க்குத் தாமதம் தான்.  இந்தத் திட்டத்தில் ஐந்து நாட்களில் பயனை எதிர்பார்த்து  அது முடியாமல் பத்து நாள்வரைகூடக் காத்திருக்கவேண்டியுள்ளதே.   அது தாழ்மதிப்பீட்டினால் வந்த தாழ்மதம் > தாமதம்.

இங்கு மதம் என்பது மதி + அம் = மதம்.. இதேபோல் அமைந்த இன்னொரு சொல்: பதி + அம் =  பதம்.  அம் என்பதுபோலும் விகுதி வர,  சொல்லிறுதியில் நின்ற உயிர்கள் கெடும்.   எ-டு:  அறு + அம் =  அறம் (  அறம் பொருள் இன்பம் ).
இகரம் இறுதி கெடும்; உகரம் இறுதியும் கெடும்  -  அம் அல்லது உயிர்முதலாகிய எந்த விகுதி வரினும்.

தடை தாமதம் முதலியவை கடந்து செல்லற்குரியவை; கடினமானவை.  ஆகவே  இவை கடங்கள்.  வெம்மை மிக்கக் கடின வழிகளையுடைய மலை வேங்கட மலை.   வேகும் > வேம்;    கடு + அம் =  கடம்.   கடமாவது கடினமானது;  கடத்தற்குரியது.   கட + அம் =  கடம்  எனவும் ஆகும்.  முதனிலைச் சொல்லீற்று உகர அகரங்கள் கெடும்,  உயிர் வரின்.

தனக்கு வந்த கடின நிலையே கடம்;  மற்றவனுக்கு வருவது அவனுக்குக் கடம்.  ஆகவே ஒவ்வொருவரும்  தம் கடத்தை நினைந்தே துயர் கொள்வர் அல்லது  தாண்டிச் செல்ல முயல்வர்.

தம் கடம் > சம் கடம் >  சங்கடம்.   ( தகரம்   சகரமாகும் ).




இதுபோலும் த > ச திரிபுகள் முன்னர் விளக்கப்பட்டன:

தனி >  சனி.  ( சனிக் கோள் )
தங்கு > சங்கு   ( ஓட்டினுள் வாழும் உயிரி )
தங்கு >  சங்கு > சங்கம்.

த + தி >  தத்தி > சத்தி >   சக்தி.    தன் > த:  கடைக்குறை.  தி: விகுதி.

இனிச் சங்கட ஹர சதுர்த்தி என்பதில்  ஹர என்பது:

அற > ஹர.

தங்கடம் அறுபடச் செய்யும் பூசை அதாவது சங்கடம் அறச் செய்யும் பூசை.  


கடு + அம் =  கட்டம்  ( கடின நிலை).
கட்டு + அம் = கட்டம்.  குறுக்கு நெடுக்காக கோடுகளால் அமைந்த வரைவு.
நிலை.  டகரம் இரட்டித்தது.

கட + அம் =  கடம் (  கடத்தற்குரிய இடம் அல்லது நிலை ).

கடம்  > கஷ்டம் ( மெருகூட்டல்)
கட்டம் > கஷ்டம் ( மெருகூட்டல் ).

கஷ்டம் என்பதில்  ஷ் என்பது அயல் ஒலி. அதை விலக்க:

கஷ்டம் >  க(ஷ்)டம் > கடம்.  ( சொல் பழைய நிலைக்கு வந்துவிட்டது).

தமிழிலிருந்து அமைந்த வடசொற்கிளவி  கஷ்டம்.
வடவெழுத்து ஒரீஇ  :  ஒருவி;  அதாவது விலக்கி:
பழைய கடம்  என வந்துவிட்டது.

கடு  கட என்ற அடிச்சொற்கள் இந்தோ ஐரோப்பியச் சொற்கள் அல்ல.

பின் தோற்றப் பிழைகள் திருத்தம் பெறும்.



கருத்துகள் இல்லை: