வெள்ளி, 30 மார்ச், 2018

நடுதலும் நாடும்.



நடுதல் என்ற சொல்லை முன் ஆய்ந்துள்ளோம். இன்று அதே சொல்லை வேறோரு கோணத்தில் சிந்தித்து அறிவோம். (நாடு என்ற சொல்லின் தொடர்பில்.)

விதை நடுகிறவன் என்ன செய்கிறான்?  விதையை ஓர் இடத்தில் ( மண்ணில் ) நட்டுவைக்கிறான். அதாவது புதைத்துவைக்கிறான்.  

ஆகவே நடுதல் என்பது முழுமையாகவோ பாதியாகவோ மண்ணில் செலுத்துதல் ஆகும்.

நடுதல் என்பது நள் என்ற அடியினின்று வருகிறது.

நள் > நடு.

ஒன்றில் ஒன்று புகுவது அல்லது உட்செல்வதுதான் நடுதல். இங்கு நடுதலில் மனிதன் விதையை உட்செலுத்துகிறான்.  ( action through human agency).

நாடாது நட்டலிற் கேடில்லை என்பார் திருவள்ளுவ நாயனார்.  நடு+ அல் = நட்டல்.  அதே நடு என்ற சொல்தான் நட்டல் என்னும் நட்பையும் குறிக்கிறது.  விதை மண்ணில் நடப்படுதல்போல்  அன்பு உள்ளத்தில் நடப்படுகிறது.

நள் என்பது முன்வடிவம்.

நள்+ தல் = நட்டல்;   ள்+ = .
நடு + அல் = நட்டல். டகரம் இரட்டிப்பு.

இனி நள் அடியிலிருந்து:
நள் + பு =  நட்பு.  (வல்லெழுத்துத்  திரிபு).
நள் + பு =  நண்பு. (மெல்லெழுத்துத் திரிபு).

இருவகையிலும் அமையும்.
நட்பு > நட்பினர்.   நண்பு > நண்பர்.
நண்பர் என்பது இடைக்குறைந்து நபர் என்றுமாகி,  ஓர் ஆள் என்ற பொருளில் இப்போது வழங்குகிறது. 


சில கட்சிக்காரர்கள் அந்தத் தோழர் இந்தத் தோழர் என்று குறிப்பிடுவது போன்றதே நபர் என்பதும்.

ஆள் என்ற சொல் ஆட்சிசெய்வோன் என்ற பொருளில் வழங்காமல் ஒரு மனிதன் என்று வழங்குவது போலவே நபர் என்பதும் நட்பு என்ற பொருளழுத்தம் உடைய சொல்லாய் இல்லாமற் போய்விட்டது.  இவை வழக்கில் மக்கள் ஏற்படுத்திய திரிபுகள்.

நட்டு நிற்றலே நட்பு.  குடியிருத்தலும் அப்படியே ஆகும்.  நிரந்தரமாக எங்கே மக்கள் தங்குகிறார்களோ (தங்களை நட்டுக்  கொள்கிறார்களோ ) அதுவே நாடு ஆகும்.   மக்கள் அங்கே நட்டு நிற்கிறார்கள்; நட்டு நடக்கிறார்கள்;  நட்டு வாழ்கிறார்கள்.  நட்டிருப்பதே நிரந்தரமாகத் தங்குதல்.

நட்ட விதை எப்படி மண்ணில் ஓர் இடத்தில் தங்கி விட்டதோ அப்படியே மனிதனும்.

இப்போது நள்> நடு> நாடு என்பதன் பொருளைப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

நடுதலாவது நிரந்தரமாய் இருத்தல். விதையும் இருக்கும்; நட்பும் ஒருவன்பால் இருக்கும்; மக்களும் பெருவாரியாக ஓரிடத்தில் இருப்பர். எல்லாம் நள்! நள்! நள்!
நடு என்பது முதனிலை நீண்டு நாடு என்று அமையும்.

முதனிலை திரிந்த தொழிற்பெயர்.

இனி நளிதல் என்ற வினையும் நள் என்பதன் வெளிப்பாடே.  நளிதல் என்பது பரத்தல் என்றும் பொருள்தரும். இப்போது:

நள் > நளி;
நள் > நடு.
நள் > நடு  > நாடு.

மக்கள் நட்டுக்கொண்டு வாழிடம்;  ஒரு பரந்த இடம்.

நள் என்பதன் பல்வேறு பொருட்சாயல்களைப்
புரிந்துகொண்டு இன்புறுக.



   

கருத்துகள் இல்லை: