சனி, 3 மார்ச், 2018

பாட்டும் ஓசையும்



பாடலென்றால் அதற்கு ஓசை முன்மையான அமைப்பு ஆகும்.  இலக்கணம் பார்த்துக்கொண்டு ஓசையைக் குலைத்துவிடலாகாது.  இதை மிகப் பழங்காலத்தில் தொல்காப்பியரே உணர்ந்திருந்தார். ஆகையால் சீர்களை ( அதாவது பாட்டுச்சொல்வடிவங்களை) நீட்டவும் குறுக்கவுங்கூட ஒப்புக்கொண்டார்.  அவர்மட்டுமல்லர்; ஏனை இலக்கணியரும் அவ்வாறே செய்தனர்.  பிறமொழிகளிலும் இருந்த பெரும்புலவர்களும் அவ்வாறே இசைந்தனர்.

தொல்காப்பியர் வாழ்ந்த பழங்காலத்தில் கட்டளையடி இருந்தது.  ஓர் அடிக்கு இத்தனை எழுத்துக்கள் தாம் இருக்கவேண்டுமென்று விதி இருந்தது.  அது என்ன பாட்டு என்பதற்கேற்ப அமைந்திருந்தது.  இப்போது நாம் பெரும்பாலும் இத்தகைய எழுத்துக் கட்டமைப்புக்குள் பாடல் அடிகளை உட்படுத்துவதில்லை. பழங்காலத்தில் பாடல்களைப் பாடிக்கொண்டுதான் அமைத்தனர்.  இப்போது பெரும்பாலான கவிதைகள் பாடும்பொருட்டு எழுதப்படுவதில்லை.  ஆங்காங்கு இசைமுறிவு ஏற்பட்டாலும்  கவலைப் படுவதில்லை.

ஓசையே இல்லாத பாடல்கள் பெரிதும் எழுதப்பெறுகின்றன.  இது ஒரு புதுமையாகும். யாப்பு இலக்கணப்படி அமைந்த பாடலைப் பல்போன கிழவிக்கு ஒப்பிட்டவர்களும் இருந்தனர்.

இசைமுறிவு ஏற்படாமல் காப்பதற்குப் பேச்சுத் தமிழிலிருந்து சொற்களை எடுத்துப் போட்டுக்கொள்வதும் சில வேளைகளில் கையாளப்படுகிறது.  ஆயிற்று, போயிற்று என்பனபோலும் சீர்கள் பாட்டில் பொருந்தாத போது உடனே ஆச்சு, போச்சு என்ற பேச்சுவழக்கு வடிவங்களைப் பயன்படுத்திப் பாடலை நிறைவு செய்துவிடுகின்றனர் கவிஞர்.  இதை அந்தக்காலத்தில் நம் ஔவைப்பாட்டியும் செய்திருக்கிறாள்.  கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும் என்று தொடங்கும் வெண்பாவில்  “மூழாக் காழாக்கு” என்று போட்டு எதுகைநயம் காட்டினாள் பாட்டி.  இந்தப் பேச்சுமொழித் தொடர் “முவுழக் காழாக்கு” என்பதைச் செதுக்கிப் பாடலுக்குள் பொருந்தப்புகுத்தி அது ஆரழகு விளைத்தது.  அது உங்களுக்குப் புரியாமல் உரை தேவைப்பட்டது. ஆனால் அதை அவள் சோழனிடம் பாடியபோது அவனுக்கு அது நன்`கு புரிந்தது.
அப்பாடல் எழுதப்பட்ட காலத்தையும் கடந்து நம்மிடம் வந்துவிட்டபடியால் நமக்கு உரை தேவைபடலாம். ஆனால் பாட்டி அதை நமக்காகப் பாடவில்லை. நெல்லுக்குப் பாடியது புல்லுக்கும் கிட்டுகிறது.
இத்தகைய புதுமைகள் ஒரோவழி நுழைவுபெற்றுப்  பாடலை முழுமைசெய்தன. ஆனால் இவை பெரிதும் விலக்கப்பட்டன. இவற்றை உபாயங்கள் என்றனர்.
உவ > உப ஆனாது.  பகர வகரப் போலி.  ஆயம் என்பது ஆதலைக் குறிப்பது. முன்னின்று  நிலைமையைச் சீர்செய்வது என்று பொருள்.  உப+ஆயம். இதில் உப என்பது முன் நிற்றல். உ = முன் என்று பொருள்படும் சுட்டு.


கருத்துகள் இல்லை: