ஞாயிறு, 18 மார்ச், 2018

ஈஸ்வரன் என்ற வடசொல்.



இறைவர் என்ற சொல் தமிழ்மொழியினுடையது.  இது  இறைவன் என்றே ஆண்பாலில் அன் விகுதியுடன் எழுதப்படும், இறைவி என்பது எப்போதாவது காணப்படும் வடிவம்.  பேச்சு வழக்கில் வருவது மிகக் குறைவு.

பாரதிதாசனின் ஒரு பாடலில்இறைவனார்என்று ஓரிடத்தில் வந்தாலும்  அது வள்ளுவரைக் குறிக்கத் தமிழ் இறைவனார் என்று வருகிறது.  இந்தப் பணிவுப் பன்மைவடிவம்  கடவுளைக் குறிக்க வழங்கப்படுவதைக் காணமுடியவில்லை.

இச்சொல் ஏனை இந்திய மொழிகளிலும் சென்றேறியுள்ளது. ஆனால் அதன் வடிவம் திரிந்துள்ளது.

இறைவர் > இஷ்வர் என்று திரிந்துள்ளது. றை: ஷ்.

இப்படித் திரிந்தபின் மீண்டும் தமிழுக்கு வருகிறது.  இஷ்வர் > ஈஸ்வர்> ஈஸ்வரன் என்று அர் விகுதியின்மேல் ஓர் அன் விகுதியும் பெற்று வருகிறது.

அன் விகுதியின்மேல் ஓர் ஆர் விகுதி பெற்று இறைவனார் என்று வந்ததுபோலுமே அர் விகுதியின்மேல் ஓர் அன் விகுதி பெற்று வழங்குகிறது. இதுவும் வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புலவர் பெருமக்களின் பெயர்களில் அன் விகுதியின் மேல் ஒரு ஆர் விகுதி புணர்த்துதல் தொன்றுதொட்டு வழக்கில் உள்ளதாகும்..  எடுத்துக்காட்டு: சீத்தலைச் சாத்தனார்.

இறைவன் என்பது கடவுள். அரசன்.  குரவன் அல்லது குரு ஆகிய விரிந்த பொருளுடைய சொல்.

இது இறுதல் -( முடிதல்) என்ற சொல்லிலிருந்து வருகிறது.   இறு > இறை. எல்லாவற்றிற்கும் இறுதி இறைவனே என்ற கொள்கை தமிழரினது ஆகும். எனவே இறுதி என்ற சொல்லைத் தந்த இறு என்ற பகுதியே இறைவன் என்ற சொல்லையும் தந்தது.

ஆண்டவனின் பதிலாளனாக இவ்வுலகில் மக்களை ஆள்பவன் மன்னன். எனவே அவனும் இறைவன் எனப்பட்டான் என்று தெரிகிறது.  இறை என்பது  வரி என்றும் பொருள்தரும்.  இறை  என்று தொடங்கும் வேறு சொற்களும் உள்ளன.

ஈஸ்வரன் என்று வடிவெடுத்தபின் ஈசுவரன் என்றும் சிலவேளைகளில் இது எழுதப்பெறுகிறது.

ஈஸ்வரன் என்பது ஒரு வடசொற்கிளவி என்று வைத்துக்கொள்வோம்.  அதிலுள்ள ஸ் என்ற வடவெழுத்தை ஒருவிவிடுவோம். (ஒருவுதல்:  விலக்குதல். ஒருவு = ஒரீஇ என்று பழைய நூல்களில் வரும்). அப்போது ஈ0வர் என்பதே கிடைக்கிறது. ஆகவே இன்னொரு எழுத்து புணர்த்தவேண்டும். (எழுத்தொடு புணர்ந்த சொல்)  அது என்ன எழுத்து என்று தெரியவேண்டும்.  அவ்வெழுத்து றை என்பது நமக்குத் தெரிவதால் ஈறைவர் என்று போட்டுக்கொள்வோம். இதில் ஈ என்ற நெடில்  அயல்மொழியால் வந்த நீட்டம். அதைக் குறுக்கவேண்டும். ஈ என்பதை இ ஆக்கி  :  இறைவர் என்று காண்கிறோம்.  இறைவர் என்று பலர்பாலில் வருவதில்லை ஆதலால் இறைவன் என்று மாற்றி உரியது கண்டுகொள்கிறோம்,  ஸ் என்ற எழுத்தை விலக்கியபின், நாம் செய்த மற்ற மாற்றங்கள் எல்லாம் “எழுத்தொடு புணர்த்தல்” (செய்து சொல் காணுதல் ) என்று தொல்காப்பியம் சொன்னதில் அடங்கிவிடும்.  உரிய எழுத்துக்கள் யாவை என்று தெரிந்து வடசொல்லில் இருந்து தென்சொல்லைக் கண்டெடுத்துவிடலாம்,
வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா  கும்மே  (தொல்)

என்பதோடு ஒத்துவருகிறதா என்பதைக் கண்டுகொள்க.

வடவேடம் புனைந்த சொல்லைக் கண்டாலும் அதன் 
வடிவத்தைக் கண்டு பயன்படுத்த வேண்டும்.

பின்னர் திருத்தம் செய்து இறுதி செய்யப்படும்.

கருத்துகள் இல்லை: