வெள்ளி, 17 ஜூன், 2022

ராங்கி என்பதன் மூலம்

 ராங்கி என்பது பேச்சு வழக்கில்  (புழக்கத்தில்)  உள்ள சொல். இது தமிழன்று என்று சிலர் கூறுவாராயினர்.

ஏறத்தாழ இதே ஒலியுடன் இயல்வது ஓர் ஆங்கிலச் சொல். அது rank  என்பது. ஒலியொற்றுமை காரணமாக, இச்சொல் ஆங்கிலத்திலிருந்து வந்திருக்கலாம் என்று சிலர் கருதினர். ஆங்கிலச்சொல் செர்மானியச் சொல்லான *hringaz  என்பதிலிருந்து வந்திருக்கலாம் என்று ஆங்கில ஆய்வாளர்கள் கருதினர்.  அவர்கள் காட்டும் மூலச் சொல்லுக்கு  வளைவு "curved"  என்பது அடிப்படைப் பொருள் என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.  ஆயினும் இஃது பொருத்தமாகத் தெரியவில்லை.   இதற்குப் படிநிலை  (மதிப்பில்  ஏற்ற இறக்கம் ) என்ற வழக்கு(பயன்பாட்டு) ப் பொருள்  1809ல்  வந்து சேர்ந்ததாகக் கூறுவர்.    இதுவும் வெள்ளையர்கள் இந்தியாவில் நன்கு வேரூன்றிய பின்னர்  ஏற்பட்டது  என்று அவர்கள் சொல்கிறார்கள்.  இதில் உள்ளநிலை என்னவென்றால்   இதைக் "கண்டுபிடித்தோர்" தமிழறிவு இல்லாதோர்.  தமிழில்  அவர்கள் தேடிப்பார்க்கவில்லை.  . எலியைப் பற்றி அனைத்தும் அறிந்திருந்தாலும், அதைப் பிடிக்கும் வேலையில் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. எங்கும் தேடிப் பார்க்கவேண்டும். இல்லையேல் எலி தப்பிவிடும். 

அரங்கு என்பது தமிழில் உயர்நிலை, ஏற்றமான இடம் என்று பொருள்தரும். இதன் ஆண்பால் வடிவம் :  அரங்கன் என்பது.  ஆகவே பெண்பால் அரங்கி என்பதுதான். அரங்கி என்பது பால்பாகுபாடற்ற சொல்லாகவும் கூடும்.

அரங்கில் பேசுவார், பாடுவோர் முதலானவர்கள்,  பெரிதும் மதிக்கப்படுவோர் ஆவர்.  அரங்கில் நிற்போர்,  அரங்கிகள் ஆவர்.  இதனின்று " ராங்கி" என்ற சொல் வந்தது. இதை ஐரோப்பியர் எடுத்துச்சென்று அவர்கள் மொழியில் பரப்பிக்கொண்டனர் என்பது தெளிவு.  ராங்கி என்றால் அரங்கில் நின்று  தாழ இருப்போனுடன் தொடர்பு கொள்ளுதல்  போன்று நடந்துகொள்வது. 

அரங்கி என்பதே ராங்கி என்று திரிந்தது. எனவே ராங்கி என்பது நிரம்ப - ரொம்ப என்பதுபோல் தலையிழந்த சொல்.  இவ்வாறு தலையிழந்த இன்னொரு சொல்:

அரண் உடையவள் >  அரண் இ >அரணி >   ராணி  ,  பெரும்பாலும் அரசு உடையோரே ராணிகள்.

தானே கட்டிய அரணுக்குள் புகுந்துகொண்டு பாதுகாப்புத் தேடிக்கொண்டவனும் கடவுள், வலியோன் ஆகியோர்முன் பாதுகாப்புத் தேடி அரண் (சரண்) புகுந்தோனும் சரணாகதி அடைந்தோனும் என பல்வேறு வேறுபாடுகளையும் விளக்கவேண்டியுள்ளது. இதை நேரமுள்ளபோது எடுத்துக்கூறுவோம்.  ராணி என்பது அதிகம் வழங்க, தமிழ்நாட்டில் ஏன் ராணா என்பது அவ்வளவாக வழங்கவில்லை என்பதற்குக் காரணமும் உண்டு. இவை பின். இணைந்திருங்கள்.

ராணி:

இது தமிழே ஆகும்.

அறிக மகிழ.

மெய்ப்பு பின்னர்

சில திருத்தங்கள் செய்யப்பட்டன. சில சேர்க்கப்பட்டன. 


0015 20062022




கருத்துகள் இல்லை: