பேரிகை என்ற பண்டைக்கால முரசு/ பறை.
பேரிகை என்பது ஒருவகைப் பறையின் பெயர். இதை வாசிப்பதைக் கொட்டுதல் முழக்குதல் என்ற வினைகளால் குறிக்கலாம்.
இப் பேரிகை என்னும் சொல்லில் இறுதி இகை என்று முடிகிறது. இகை என்ற தொழிற்பெயர் இகு+ ஐ என்று விகுதி புணர்த்தி அமைந்தது. இதுபோல் அமைந்த வேறுசொற்கள் : தொகை ( தொகு ஐ), நகை (நகு + ஐ), தகை ( தகு ஐ ) எனப் பலவுள்ளன. இகத்தல் பல்பொருட் சொல் என்றாலும், அதன் பொருட்களில், தாண்டுதல் என்பதுமொன்று. இகை என்பது தாண்டுதல் என்று பொருள்கொள்ளுவோமானால், இந்தப் பேரிகை என்பதை அங்குமிங்கும் தாண்டிக்கொண்டு ஆடினர் என்று முடிபு கொள்ளலாம். தாண்டித் தாண்டி ஆடிய ஆட்டங்களும் உள்ளன. தாண்டவம் என்று சிவபெருமான் ஆடியதாகக் கூறப்படும் நடனமும் உண்டு. "பொன்னம்பலம் தனில் தாண்டவமாடிய (சிவம்)" என்பது காண்க. தாண்டு+ அ+ அம் = தாண்டவம், இங்கு அ என்பது சொல்லாக்க இடைநிலை, அம் என்பது விகுதி. அ+ அம் = அவம், இதில் வ் என்பது வகர உடம்படுமெய். இது அவர் என்பதில் அ+ வ் + அர் > ~ , வகர உடம்படு மெய் என்றபடி.
இகத்தல் என்பது தாண்டுதல் என்று நம் நிகண்டுகள் சரியாகவே பொருள்கூறியுள்ளன. இது ஒரு சுட்டடிச் சொல். இது எவ்வாறு ஆனது என்பதை இப்போது கண்டுகொள்வோம்.
இக : வினைச்சொல். இ + கு + அ. இ என்பது இங்கு, அ என்பது அங்கு. தாண்டுவது, இங்கிருந்து அங்கு, அங்கிருந்து இங்கு. கு என்பது சேர்விடம் குறிக்கும் சிறுசொல், இக்காலத்தில் அது உருபாகவும் பயன் காண்கின்றது.
பேரிகை என்ற சொல்லை இப்போது நன் கு அறிந்தோம். ஆனால் இச்சொல்லை வேறொரு முறையிலும் அறியலாம். அதைப் பின் ஓர் இடுகையில் சொல்வோம்.
அறிக மகிழ்க.
மெய்ப்பு பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக