செவ்வாய், 14 ஜூன், 2022

அழித்தவை எல்லாம் மீண்டுவந்தன

 அழியாத நல்லின்பம்  அகிலத்தில் எனதென்றே அறிந்திட்ட ஒன்றென்றால் அதுவென்றன்  கைப்பேசியில்;

பழியொன்றும்  அதிலில்லை, படிக்கின்றேன் அதைமீண்டும், பார்தன்னில் சோர்வுற்றே இல்லாயின உள்வந்திட்டால்;

வழிச்செல்லும் போதாங்கு  வந்தோருள் வானுலகு சென்றோரும் உள்ளோருள் கலந்திங்கு வந்ததேபோல்;

விழியிலிவை பட்டாலும் வீணென்று காணற்கும் கூனென்று கொள்ளற்கும்ஒன்றில்லை இன்பமின்பம்.


எம் தொலைப்பேசியில் உள்ளவற்றை அழித்துவிட்டு மறுதிறவு செய்கிறபோது முன் களைந்தவை எல்லாம் மீண்டும் வந்துவிட்டன. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்றபடி,  இதுவும் இன்பம்தான்; இன்பமே அன்றித் துன்பமில்லை. இருக்கட்டும்.


கூன் -   குறைவு.  நிறைவற்றநிலை.

ஒன்றில்லை - ஏதுமில்லை.

இந்தச் சிறுகவியில் அருஞ்சொற்கள் இல்லை. அடிக்கு எட்டுச்சீர்களாக, ஒவ்வொரு சீரும் மூன்று  அசைகளாக அமைந்துள்ளன.  மனத்துள் இந்த வடிவில் கவிதை தோன்றியதால் வடிவில் மாற்றம் செய்யாமல் அவ்வாறே வடித்துள்ளேம்.  கவிதை தன்மையொருமையில் கூறுவதாக வந்துள்ளது. விளக்கத்தில் தன்மைப்பன்மையில் கொடுத்துள்ளேம்.  மிக்க நன்றி.

{கைப்பேசி,  தொலைப்பேசி என்பவற்றில் வலிமிகும். இது நன்று. மெய் " ப்" இடப்பட்டுள்ளது. விடப்பட்ட இடங்களில் ப் இட்டு வாசிக்கவும்.)  பின்னூட்டம் இடுதல் மிக்க உதவி. எளிதில் நாங்கள் கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு வணக்கம்.

தொலைப்பேசி என்றால் தொலைவிலிருந்துகொண்டு பேசும் கருவி என்பது.

 தொலைப்பேசி என்ற தொகையில்  "இல், இருந்துகொண்டு" என்பன தொக்கது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்பு.




கருத்துகள் இல்லை: