கொரனா என்னும் முடிமுகி நோய் முற்றிலும் நீங்கிடுமா? இதற்குப் பதில் சொல்வதானால் முன்வந்த தொற்றுகளெல்லாம் முற்றும் இவ்வுலகினின்று நீங்கிவிட்டனவா என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு கொள்ளுங்கால் என்னதான் நாம் அதைத் தொலைக்க முயன்றாலும் அதை நூறு விழுக்காடு உலகிலிருந்து விலக்கிவிட இயலாது என்பது தெளிவாகும். இங்கொன்றும் அங்கொன்றுமாக இருக்கும் என்றே நம் நிபுணர்கள்1 நினைக்கிறார்கள். கொரனா (கோவிட்19) குறுகும்.
நலம் விளையும் என்பதற்கு ஒரு கவிதை:
வருநாளில் வான்துயரம் வற்றியொரு வண்மைவரும்;
கொரனாவின் கோரப்பிடி குறுகியொரு நன்மைபெறும்
இருகாலும் பெருமக்கள் இன்னலற ஒண்மைதரும்
திருநாளும் வருகிறதே தெள்ளுலகும் சீர்பெறுமே.
பொருள்:
வருநாளில் - எதிர்காலத்தில்;
வான் துயரம் - மிகப் பெரிய துயரம்.
வற்றி - குறைந்து
வண்மை - வளமான நிலை
கோரப்பிடி - கொடுமையான நீக்கமில்லா நிகழ்வு
குறுகி - ஒடுங்கி;
இருகாலும் - இரவு பகல் இரு காலங்களிலும்; நெடுங்காலம் எனினுமாம்.
பெருமக்கள் - உலகின் மக்களைச் சுட்டியது. உலகம் பெரிதாதலின் அதன் மக்கள் பெருமக்கள் எனப்பட்டனர். புவிமக்கள்.
இரு - பெரிய என்ற பொருளும் உண்டு.
திருநாளும் - நாம் மகிழ்வுறும் நாளும்;
தெள்ளுலகும் - அறிவியல் உலகமும். ( தெள் - தெளிவு)
குறிப்புகள்:
1. நிபுணர் - நிற்பு + உணர். நிற்பு என்பது நிலை. தம்துறையின் நிலையையும் கலையையும் முற்ற உணர்ந்தவரே நிற்புணர் > ( இடைக்குறைந்து) - நிபுணர் எனப்படுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக