வியாழன், 24 ஜூன், 2021

காரை, சாந்து முதலியவை [cement]

 

24.6.2021


இன்று காரை என்ற சொல்லை ஆய்ந்து உரையாடுவோம்.


முதலில் சொல்லின் பொருளைக் காணப்புகுந்தால், காரை என்பது 1. ஊத்தை, 2. ஆடை, 3. சுண்ணச்சாந்து (என்பவற்றோடு), மற்றும் செடி, மரம், மீன் இவற்றின் வகைப்பெயர்களாகவும் உள்ளது. இவற்றுள் ஊத்தை சாந்து முதலியவை கரைய அல்லது கரைக்கத் தக்கனவாய் உள்ளன. இது காரணமாக, இச்சொல்லினைப் பற்றிய ஆய்வில் வகைப்பெயர்களை விடுத்து முதல் மூன்றில் இரண்டை மட்டும் சற்று விரித்துக் காண்போம்.


கார் என்ற அடிச்சொல், கருநிறத்தைக் குறிக்கின்ற சொல். கருநிறத்தது எனப்படும் சனிக்கிரகம், காரி என்ற பெயருமுடையது. மற்றும் பிற கோள்களுடன் ஒப்புநோக்க, தனித் தன்மை வாய்ந்தது சனிக்கிரகம்; அதன் பெயரும் இதனால் வந்ததே. நடைமுறையில் தன்மை பற்றிப் பெயர் வருவது மிக்க இயல்பானதே. தகர வருக்கம் சகர வருக்கமாம் ஆதலின், தனி > சனி ஆயிற்று. கிரகம் இங்கு கோள் என்ற சொல்லுக்குப் பதிலாக வந்தாலும், அது வீடு ( சோதிடத்தில் வரும் 12 வீடுகள் ) என்னும் பொருளதே. அதை இவ்வாறு உணர்க:-


சனிக்கு + இரு + அகம் : சனிக்கிரகம் ( சனியின் வீடு என்பதாம்). இரு என்பது இருத்தல் வினை. கோள் தொடர்புற்று இருக்கும் வீடே இராசி ( இரு + ஆசு + ). கணியக் கலை, தமிழர் கலை என்பதறிக. இச்சொற்களின் அமைப்பு அதனை நிறுவி உண்மை தெரிவிக்கும்.


எடுத்துக்கொண்ட சொல் "காரை" எனினும், உண்மை உணர்த்துவதே வான் நோக்கு ஆதலின் சற்றுப் பிற திசைகளில் விரிதலில் குற்றமொன்றும் இலது காண்க.


ஊத்தை என்பது, வேண்டாதவை. நீரோடும் நெடுங்குழிவில் வீசப்பட்டவை பலவும் கரைந்து கருநிறத்தவாய்க் கிடத்தலால் காரை என்பது அதற்குப் பொருத்தமே. கரை > காரை. (முதனிலை நீண்டு தொழிற்பெயரானது.) கரை(தல்) என்பது வினைச்சொல்.


மேற்கண்ட பொருள்போல், சுண்ணச் சாந்து என்பதும் கரைத்துப் பயன்பெறுவதே ஆகும். அதுவும் காரையேயாகும்செமென்ட் என்பதைச் சீமைக்காரை என்று மொழிபெயர்த்துள்ளனர். (20th c). தரைக்காரை இணக்குக்காரை இறுகுகாரை எனினும் ஏற்புடையனவே. செவிக்கினியதைத் தேர்வுசெயதுகொள்க.


தரைக்காரை என்பதில் இது சுவர் எழுப்பவும் பயன்படுவது என்பதால் காரண இடுகுறிப்பெயர் ஆகிறது. இணக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயராகும். காரை என்பதும் தொழிற்பெயராவதால் வல்லெழுத்து மிகுந்து புணர்ந்து இணக்குக்காரை என்று வந்தது..இறுகுகாரை என்பது வினைத்தொகை.இதில் வலிமிகவில்லை.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை: