திங்கள், 28 ஜூன், 2021

பாதரட்சை

 பாதரட்சை என்றாலும் செருப்பு என்பதே பொருள்.  ஆனால் சொல்லைக் கேட்க, அது அமைப்பாய்வுக்கு  எளிதானதன்று என்று நினைக்கத் தோன்றும்.  இதை யாமும் நீங்களும் இங்கு ஆய்வு செய்தபின்னர், அது எத்தகைத்து என்று ஒரு கருத்தை மேற்கொள்ளுதல் பொருத்தமாக  விருக்கும்.

பாதரட்சை என்ற சொல்,  பாதரட்சம் என்றும் வழங்குவதுண்டு. மற்றொரு பெயரான  தொடுப்பு என்பது மிக்கப் பொருத்தமுடையது எனலாம்.  வேட்டியையோ அல்லது  சேலையையோ கட்டிக்கொண்ட பிறகு,  'கால்மிதியல்' என்பது தொடர்ந்து வரும் ஓர் அணியாகும். ஆதலின் "தொடுப்பு" என்பது பொருந்துவதே.

பாததிராணம் என்பது மிதியடிக்கு இன்னொரு பெயர். பாதத்தின் மேல்புறத்தைத் திரைபோல் ஓரளவு மறைப்பதால் ,  திராணம் என்பது பெயரில் வருகின்றது.  திரை + அணவு + அம் >  திர அண அம் > திராணம் ஆகின்றது.  திரையணவம்  என்று அமைத்தலை இச்சொல்லாசான்கள் உகக்கவில்லை .  பாததிராணம் போலும் சொற்கள் மிக்கத் திரிபுகளுடன் அமைக்கப்பெறுபவை.

பாதம் என்பது முன்னரே நம் இடுகைகளில் விளக்கம்பெற்ற ஒரு சொல்லே.  ஆதலின் அதை இங்கு மீண்டும் விளக்கவில்லை.  தொடர்புடைய இடுகைகள் கிட்டுமாயின் கீழே அடிக்குறிப்பில் தருவோம்.

இரட்சை என்பது ஒன்று,   பாதங்களுக்கு வலி, வியர்வை, அழுக்கேற்றம் முதலியன இன்றி  "ரட்சிப்பவை"  என்று நீங்கள் வைத்துக்கொள்ள விரும்பினால் அதுவும் ஒரு விளக்கமாகலாம்.  ஆனால் நம் விளக்கம் வேறு:

பாதரட்சைகள் எப்போதும் இரண்டாகவே வருபவை.  ஒற்றை பயன்படாது என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

இரண்டு >  இரட்டு > இரட்டு + சை > ( இங்கு டு என்ற கடின ஒலியை விலக்க ) > இரட் + சை > இரட்சை ஆகிறது.  இவ்வாறு கடின ஒலிகள் விலக்குண்டு அமைந்த சொற்கள் பல பழைய இடுகைகளில் காட்டப்பெற்றுள்ளன.  அங்கு சென்று அமைதியாகப் படித்து நீங்கள் அறிந்துகொள்ளலாம்.  ஆனால் ஒன்று மட்டும் எடுத்துக்காட்டாக  இங்குக் காண்பீராக:

பீடு + மன் >  பீமன் > வீமன்.    வீமன் மகாபாரதக்கதையில் வருபவன்.  இங்கு டு என்னும் வல்லொலி விலக்குண்டது.  

சொல்லமைப்பில் நாவினைத் தடைசெய்வது போலும் வல்லொலிகள் இடைவருங்கால் அவற்றை நீக்கிச் சொல்லமைத்தல் ஒரு நல்ல உத்தியே ஆகும். மொழியிற் பல சொற்களை ஆய்ந்தால், பல சொற்களில் இவ்வாறான விலக்குதல்களும் சுருக்குதல்களும் வருவதைக் காணலாம்.  எ-டு:  ஒளி மழுங்குதல் >  ஒளி மங்குதல்  ( ழு ஒழிந்தது).  காள் காள் தை >  காள்தை > கழுதை. இது சிலருக்கு வேடிக்கையாக இருக்கும்.  இவை தேவையான மாற்றங்கள்.

பகு + குடுக்கை >  பகுக்குடுக்கை > பக்குடுக்கை.

நாத்தடை கூடுமான வரை ஏற்பாடாமல் ஒழுகிசையாகச் சொல்லமைக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.  இதைத் பண்டைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பதற்குப் பல அகச்சான்றுகள் மொழியில் அமைந்துகிடக்கின்றன.

பாதரட்சைக்குத் திரும்புவோம்.  பாதத்திற்கு இரண்டு பாதரட்சை. இரண்டு என்பது ரண்டு, ரெண்டு என்றெல்லாம் தலையிழந்து வரும். இச்சொல்லில் ரட்சை என்று வந்ததும் அஃதே.

பாதரட்சை செய்தால் "இரட்டி" ச் செய்க.  பாத இரட்டுச் செய் என்று எடுத்து முடிப்பினும் யாம் ஒப்புவோம்.

எல்லாத் திரிபுகளையும் இங்கு விவரிக்கவில்லை , ஏனெனில் நம் நேயர்கள் பலர் தொடர்ந்து படித்து வருகிறீர்கள். தெரிந்தவற்றை மீண்டும் கூறாதொழிதல் நேரத்தை மீத்துத் தரும் உத்தியாம்.

அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்னர்.


குறிப்புகள்







கருத்துகள் இல்லை: