வியாழன், 20 செப்டம்பர், 2018

பாதாளம் வரை செல்வோம் தடுப்பவர் யார்?

இன்று பாதாளம் என்ற சொல்லினமைப்பையும் தெரிந்துகொள்வோம்.

பாதாளம் என்ற சொல் காதில் விழும்போது ஏதோ வேறொரு சிறப்பான மொழியில் மிக்கச் சிறப்புடன் அமைவுற்ற சொல்லினைப் போலன்றோ ஒலிக்கிறது.  இதனால் ஏமாந்துவிடக் கூடாது. மெய்ப்பொருள் காணும் மேலான எண்ணத்துடன் என்றும் செயல்படுதலே நன்றாகும்.

பரத்தல் என்ற சொல் விரிவாய் இருத்தல் என்று பொருள்படும்.  தொழிற்பெயர்கள் அதாவது வினைச்சொல்லிலிருந்து பெயர்ச்சொல்லாக மாறும் சொற்கள்,  பலவகைகளில் மாறும்; அதிலொரு வகை முதலெழுத்து நீண்டு அமைவதாகும்.  ஓர் எளிய உதாரணம்:  சுடு என்ற வினைச்சொல் சூடு என்று நீண்டமைந்து பெயராகிறது. பின்னும் அது ஒரு விகுதி பெற்றுச் சூடு என்று நிற்பது சூடம் ஆகும்.  பின்னும் அம் விகுதி அன் ஆகி சூடன் என்றாகும். பொருளிலும் மாறுதல் ஏற்படுதல் உளது.

இவ்வாறாக.  பர என்ற வினைச்சொல் பார் என்று அமையும். பார் என்பது இந்தப் பரந்த உலகம் என்று பொருள்படும்.  முன்னரே சொன்னோம்: பரத்தல் என்றால் விரிந்தமைதல். பார் என்ற சொல் பின்னர் இறுதி எழுத்து வீழ்ந்து பா என்று ஆகும். இந்த நிலையைக் கடைக்குறை என்பர். அதாவது கடைசி எழுத்துக் குறைந்து வருவதாகும். பொருளும் பரவலாக இருத்தல் என்பதே.

பாருங்கள்:  காலின் கீழ்ப்பகுதி பரவலாக அல்லது நடக்கும்போது நிற்க வசதியாக விரிந்து அமைந்துள்ளது.  மிகப்   பொருத்தமாக அதற்குப் "பாதம்" என்றனர்.  பா : பரவலாக;   து:  இருப்பது;  அம்: இது சொல்லின் இறுதி. அல்லது விகுதி.

பாதுகை: இது கீழே பரவலாக இருக்கும் காலணியைக் குறித்தது. ஒரு பற்றன் இராமபிரானின் பாதுகையே துணை என்று தொழுகிறான். இதனால் பாதுகை என்ற சொல்லுக்குத் துணை என்ற பொருளும் ஏற்பட்டது:  இது பெறுபொருள். 

தாள் என்பது  தாழ இருக்கும் காலைக் குறிக்கிறது.  "தாள் பணிந்து போற்றினேன் "  என்பதில்லையா:  அதுபோல்வது.  இது தாழ இருப்பதைக் குறிக்கும் தாழ் என்ற வினைச்சொல்லுடன் உறவுடைய சொல். உங்கள் அக்காவும் தம்பியும் உறவினர் ஆனதுபோலவே சொற்களெல்லாம் உறவுமுறை போற்றுகின்றன,  உறவு கண்டும் பொருள் காணலாம்.

பரந்து தாழ்வாக இருக்கும் பகுதியே பாதாளம் ஆகும்.  வழக்கில் அது மிக ஆழத்தில் இருக்கும் நிலப்பகுதியைக் குறிக்க வழங்கப்படுகிறது.  இயல்பான சொற்பொருளுக்கு மிக்க ஆழ்ந்த பொருளைத் தந்துவிடும் வழக்கு என்பது.  வழக்கு என்றால் எப்படிச் சொல்லை ஒரு மொழியில் மக்கள் வழங்கினார்கள் என்பது.  தொல்காப்பியப் பாயிரத்தல் பனம்பாரனார் எழுத்தையும் சொல்லையும் மற்றும் பொருளிலக்கணத்தையும் செய்யுள் மற்றும் மக்கள் பயன்படுத்தும் விதம் இவற்றையெல்லாம் ஆராய்ந்ததாகக் கூறுகிறார்.  இவ்வாறு பாதாளம் என்ற சொல் மக்கள் பயன் கொண்ட விதம் காணின் மேலாக உள்ள நிலப் பள்ளங்களைக் குறிக்காமல் ஆழமான நிலப் பரப்புப் பள்ளங்களையே பாதாளம் என்றனர்.  சொல்லின் அமைப்பை மட்டும் கண்டு உணர்ந்தால் பக்கத்தில் உள்ள படுகையைக்கூடப் பாதாளம் என்னலாம் எனினும் வழக்கில் அது இன்னும் ஆழமான பரந்த கீழ்நிலத்தைக் குறிக்கிறது; நாமும் இவ்வழக்குக்கு மதிப்பளித்து அவ்வாறே பயன்படுத்தி நம் மொழியைக் காப்போமாக.பாதாளம் என்பதும் ஒரு காரண இடுகுறிப் பெயரே ஆகும்.

பிழைகட்கு பின் கவனிப்பு.

கருத்துகள் இல்லை: