புதன், 12 செப்டம்பர், 2018

பொங்கு பொக்கம் பொக்கிடம் பொக்கிஷம்

முதலில் பொக்கம் என்ற மலையாளச்சொல்லை அறிந்துகொள்வீராயின் பொக்கிஷம் என்பதை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு சட்டியில் பாயசம் செய்யும்போது  அது வெம்மை குறைந்த நிலையில் பாதி மட்டத்தில் இருந்து கொதித்துக் கொதித்து அதன் மட்டம் உயர்ந்து வெளியில் வழியத் தொடங்கிவிடுகிறது.  வழிநிலைக்கு வளர்ந்த பின்பு அது பொங்குவதாகக் கூறுவோம். கேரளாவில் ஒரு பெண் உயரமாக வளர்ந்துவிட்டால் " அவள் பொங்ஙி  (பொங்கி)"  என்று சொல்வர்,  உயரத்தைப் பொக்கம் என்பர்.  மட்டம் உயர்ந்துவிட்டதை இது குறிக்கிறது.

திரவியம் என்ற சொல்லில் எந்த 'மகிமை" யும் இல்லை.  திரட்டு என்பது சொல். அதன் அடி  திர  -  திரள் என்பது.    திர + இயம் =  திரவியம்.  மனிதன் திரட்டி வைத்துக்கொள்வது திரவியம்.  வேண்டாமென்று எறிந்துவிடுவது குப்பை. பொருளுக்குத் தரப்ப்டும் தரமும் மதிப்பும் மனப்பதிவு முறையிலானது. சொல் மனம் தரும் மதிப்பு முறையில் அமைவதில்லை. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

குப்பைக்கும் பொக்கிடத்துக்கும் வேறுபாடு காணமுடியாவிட்டால் நீர் ஞானி ஆகிவிட்டீர்.

திரட்டப்படும் பொருள் மட்டம் உயர்ந்துவரும்.  பொன்னையும் மணியையும் ஒரு சட்டியில் இட்டு வைக்க,  சேரச்சேர  மட்டம்   உயரும்/  ஆகவே அது பொங்குகிறது.  பொக்கம் கூடிவிட்டது. சேர்த்துவைக்கும் இடம் பொக்கிடம் ஆகிறது. பொங்குமாறு  இடுவதே பொங்கிடம்.  தமிழியல்புப் படி பொங்கு + இடம் = பொக்கிடம் ஆகும்.   இரும்பு பாதை > இருப்புப்பாதை;  இரும்பு பெட்டி - இருப்புப் பெட்டி. கரும்பு சாறு :  கருப்பஞ்சாறு.  தமிழ்ப்புலவர்கள் இதனை வலித்தல் விகாரம் என்பர்.   மிகுந்து நிற்றலே மிகு> விகு> விகு+ ஆர் + அம் = விகாரம்.  ஆர்தல்: சூழ்தல்.  சுற்றிலும் மிகுந்து நிற்றல் விகாரம். மிகுவது வேறு உருக்கொள்ளும். ஆகவே வேறுபாடு அடைதல் என்பது பெறப்பட்ட பொருள்.
உறுபொருள் வேறு. பெறுபொருள் வேறு.

இது போலும் திரிபுகள் பல.  ஒன்று:  மிஞ்சு > விஞ்சு.  இன்னொன்று: மிகுதி > விகுதி.

எதை எங்கு இடுகிறோமோ அங்குதான் அதற்கு இடம்//  இடு+ அம் =  இடம். இடமென்ற சொல்லிலும் எளிய கருத்தே அடங்கியுள்ளது.  இப்படி மிக்க எளிய கருத்துக்களிலிருந்து தோன்றி இயற்கையாக வளர்ந்ததே தமிழ் மொழி.  ஆகவே  அதனை இயன்மொழி என்று சொல்கிறோம்.

பொக்கிடம் என்ற சொல்லைப் பல ஆண்டுகட்கு முன் விளக்கிச் சொல்லி இருக்கின்றேன். இன்று விளக்க ஒரு வாய்ப்புக் கிட்டியது மகிழ்ச்சியே ஆகும்.

பண்டை வழக்கில் பிள்ளை இல்லாதவனுக்கு எந்த மதிப்பும் உயர்வும் இல்லை.  இதற்குக் காரணம் அவன் தொழிலை அவன் பிள்ளைகள் மேற்கொண்டு பொருளியல் விரிவுற்று பிழைப்பு உறுதி பெற்றது.   மக என்றால் பிள்ளை.  மகமையே மகிமை என்று திரிந்தது.

மேற்படி முறையில்  விளக்குவது மகிமை என்ற சொல்லுக்குப் போதுமானது.  மக இம் மெய் என்று விரிக்கலாம்.   இம் மெய் =  இந்த மனிதன் ( உடல்)   மக =  பிள்ளைகளை உடையது  எனினும் அதுவே.

பொக்கிடம் என்பது பொக்கிஷம் என்று   மெருகூட்டப்பட்டது.  மக மை என்பது மகிமை > மஹிமை என்று பூசிக்கொண்டது.    அழகு படுத்தும் நம் கற்பனைகளுக்கு ஏற்ப எச்சொல்லையும் அழகுபடுத்திக்கொள்ள அறியாதவன் அல்லன் மனிதன் என்பவன்.

மக + து + அம்  =  மகத்து + அம் =  மகத்து(வ்)(அ)ம் =  மகத்துவம்.   வ்+ அ = வ.
வ் :  வகர உடம்படு மெய்.    து: இது உடையது என்பது.   அம்:  அமைவு அல்லது வெறும் விகுதி. துவம் என்பது தமிழில் புனைவுற்ற ஒரு சொல்லிறுதி அல்லது ஈறு. 

ஷ என்ற ஒலியையும் ஹ என்ற ஒலியையும் பிற்காலத்தில் மனிதன் மொழியில் நுழைத்துக்கொண்டு மகிழ்ந்தது அவன் மன வளர்ச்சியன்றிப் பிறிதில்லை. தான் இருக்குமிடத்தைப் பிறன் அறியாமல் விளையாட அறிந்த மனிதன் எல்லாவற்றிலும் மறைத்து இயங்குவதிலும் மன மகிழ்ச்சி  அடைந்தது ஒரு வளர்ச்சி என்றே கருதவேண்டும்.

பொங்கும்படியாக இட்டுவைத்தால் அது பொங்கு இடு அம் பொக்கிடம் .

எழுத்துகள் மாறின் திருத்தம் பெறும்.





கருத்துகள் இல்லை: