வெள்ளி, 14 செப்டம்பர், 2018

அகம் பிரமஸ்மி

இவ்வுலகில் எத்தனையே உடல்கள் உயிருடன் உலவுகின்றன. இவற்றின் உயிர்கள் இறைவனை ஒப்பிடுங்கால் மிக்கச் சிற்றளவிலானவை. எல்லையற்றோன் இறைவன்  --  என்று எல்லா வேதங்களும் ஓதுகின்றன.

உடல் நமக்கு உள்ளது;  அதனுள் ஆன்மாவும் உள்ளது.  நாம் ஒவ்வொருவரும் நான் என்று தன்னைக் குறித்துக்கொள்ளும்போது  அந்த "நான் " எது?  உயிரா அல்லது உடலா?

நான் என்பது இவ்வுடலில்லை.  நான் வெளியேறிய பின் இவ்வுடல் அசைவற்று இயக்கமற்று விறகுபோல் கிடக்கும்.  அப்போது  அது எல்லா உணர்ச்சிகளையும் இழந்து கிடக்கும். உயிர் போய் விட்டதென்பார்கள். " நேரமாகிவிட்டது;  சீக்கிரம் தூக்குங்கள்" என்று பேசிக்கொள்வார்கள்.

குடம்பை தனித்தொழியப் புள் பறந்துவிட்டது என்று வள்ளுவனார் கூறியது இந்நிலைக்கு முற்றப் பொருந்துமொரு வாக்கியமாகும்.  அப்போது சிலர் துயர்தாங்காது அழுதுகொண்டிருப்பர். பட்டினத்தடிகள் சொன்னதுபோல இன்று செத்த பிணத்துக்கு இனிச் சாகும் பிணங்கள் அழுதுகொண்டிருக்கின்றன என்பதே முற்றுமுண்மை ஆகும்.

இக்குடம்பை தனித்தொழியப் பறந்துவிட்டதே அதுதான் ஆன்மாவாகும்.  நான் என்று நாமெல்லாம் குறித்துக்கொள்வது இவ்வுடலன்று; இவ் ஆன்மாவே யாகும்.

இவ்வுடல்பால் உள்ள பற்றினை முற்றும் அறுக்கவேண்டுமென்பதே பெரியோர் நமக்குரைப்பது ஆகும்.   தாயுமானவர் கூறியதற்கொப்ப  எல்லா மலங்களும் ஊறித் ததும்பும் மெய்யுடன் உங்கட்கு உள்ள தொடர்புதான் என்ன?
உங்கள் உடல்கள் நீங்கள் அல்ல.

ஒவ்வொருவரும் நான் இவ்வுடல் அன்று என்று உணர்வேண்டும். அகத்திருப்போன் உங்கள் பெருமான் ஆவான். அவன் ஆன்மாவுடன் ஒற்றுமை முற்றுடையோன்.  ஒரு பெருங்காந்தத்திலிருந்து தெறித்து விழுந்த துண்டு கவர்ந்துகொள்ளுமாற்றலும் உடையது.  அதுபோலவே.

நான் வேறு. இவ்வுடல் வேறு.  " அகம் பிரமஸ்மி".

நான் இவ்வுடல் என்பதோ அகங்கார மெனப்படும். இஃது பூதவுடல்.

பூத்தல் - தோன்றுதல்.  பூ+ து + அம் =  பூதம்.  (தோன்றியது).   தோன்றிய உடல் இறப்பது.  தோன்றாமை ஆன்மாவின் அழிவிலா உண்மை.

பூ -  பூத்தல் : தோன்றுதல்.  பூ+ம் + இ = பூமி:  தோன்றியது.  மகர ஒற்று ஓர் இணைப்பொலியாகும்.

யானே பிரம்மன். இவ்வுடல் வேறு.

கருத்துகள் இல்லை: