சனி, 29 செப்டம்பர், 2018

அம்மா காக்கவேண்டும்.

ஆறவைத்த நீரே அருந்தியே தாகத்தை
மீற விடுத்திடா மேலாம் கவனத்தில்
இந்நாள் வரையிருந்தேம் நேற்றோ செல்லிடத்து
உண்ணாமை போற்றி ஒருபுட்டி உண்ணீரைக்
உண்டு விடாய்கழித்தேம் வந்த தொருநாளில்;
தும்மலும் நீர்க்கோவை தானும் துவள்தர
இம்மியும் இன்பிலா நாளாய் இதுவான
தம்மையே நீங்கள்  தரவேண்டும் தேகநலம்
உம்மைப் பணிந்தேமும் சேய்.

இது இன்னிசைப் பஃறொடை வெண்பா.

அரும்பொருள்:
உண்ணாமை = விரதம்.
புட்டி - பாட்டில் (ஆங்கிலம்)
உண்ணீர் - புட்டியில் கிடைக்கும் உண்ணும் நீர்.
விடாய் - தாகம்.
துவள்தர – உடல் தளர
இன்பிலா - துன்பமான.
அம்மையே - தேவியே.
தேகம் - உடல்.

தேய்ந்து அழிதலை உடையது உடல், அதனால்
அது தேய் > தேய்+கு+அம் = தேய்கம் என்று
அமைந்து பின் தேகம் ஆனது. யகர ஒற்று மறைந்தது.
நிலையாமை பற்றி ஏற்பட்ட சொல்.

எலும்பு நரம்பு தசை உறுப்புகள் என்பவால் கட்டப்பெற்றது
அல்லது யாக்கப்பட்டது யாக்கை. யாத்தல் : கட்டுதல்.

உள்ளுறுப்புகளைப் போர்த்தி உடுத்தி யிருப்பது உடல்; உடம்பு.
உடு என்பது அடிச்சொல்.

உறுப்புகள் பலவும் அடங்கி இருப்பது அங்கம்:  அடங்கம் என்பதன்
இடைக்குறை.  ட கெட்டது.

உடலில் நீர் பாதி;   நீரில்லாதது பாதி.  ஆகவே:  சரி+ஈரம் = சரீரம்1
ஆனது. 

மேனி -  உடலின் மேற்பகுதி.

===================
சரீரம் :

இதைச் சரிதல் + ஈர + அம் எனக்கொண்டு:

சரிவை அல்லது அழிதலை ஈர்த்துக்கொண்டு இலதாவது  என்ற பொருளிலும் கூறலாம். அவ்வாறாயின் தேகம் என்பதன் பொருட்கு ஒத்தது இதுவாகும்.








கருத்துகள் இல்லை: