வியாழன், 27 செப்டம்பர், 2018

சதி என்னும் சொல்.

சொற்கள் எப்படி அமைந்தன என்று எழுத்தாளன் கவலைகொள்தல் ஆகாது. இதிற் கவனம் செலுத்தினால் அவனெழுதிக் கொண்டுள்ள கட்டுரையோ கதையோ குன்றிவிடும்.  ஆகவே சொல்லியலைத் தனிக்கலையாகப் போற்றவேண்டும்.  படைப்பாற்றலை வெளிக்கொணராத  எழுத்துவேலைகளில் ஈடுபாடு கொண்டுள்ள காலை சொல்லியலில் மூழ்கி முத்தெடுக்கலாம்.

சொற்களில் வினைகள் பெயராகுங்காலை சில முதனிலை திரிகின்றன. திரிபு வகைகளில் நீள்தல் குறுகுதல் என்பவை அடங்கும்.  இவை இடுகைகளில் சுட்டிக் காட்டப்பட்டிருப்பினும் இடுகைகள் பலவாதலின் இவற்றை ஒன்று சேர்த்து நோக்க, ஈண்டு மிக்க விரிவாகவே இத்தகு திரிபுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்பதை எளிதாக அறியலாம்.

துள் > துளை;   துள்> தொள் > தொடு;  தொடு> தோடு; தோடு > தோண்டு; தோண்டுதல். என்பவை காண்க.

தொண்டை என்பது ஒரு தோடு போன்றதே.  தோண்டியதும் போன்றதே.

தோண்டு> தொண்டை.

இங்கு முதலெழுத்துத் திரிந்தது. (குறிலானது).  ஐ விகுதி பெற்றுப் பெயரானது.

தோண்டு > தோண்டி.  இப்படி வரும். இங்கு முதலெழுத்து திரியவில்லை. இச்சொல் இ விகுதி பெற்றது,

நெடிலான சில முதலெழுத்துக்கள் சொல்லமைவில் குறுகும் என்பதை உணர்ந்தீர்கள்.

சதி என்பது ஒரு திட்டத்தையோ ஒரு மனிதனையோ சாய்ப்பதும் எழவிடாமல் செய்வதுமாகும்,

சாய் > சய்தி > சதி.

இது யகர ஒற்று இழந்து சாதி என்று வரின், குழப்பம் ஏற்படுமாதலின் மேலும் குறுக்கப்பெற்று சதியானது.

இது மிக்கத் திறமையுடனே அமைக்கப்பட்டுள்ளது.  முதலெழுத்து -  குறுகியதும் யகர ஒற்று வீழ்ந்ததும் காண்க.

பின் தேவையெனில் திருத்தம்பெறும்,


கருத்துகள் இல்லை: