ஞாயிறு, 16 செப்டம்பர், 2018

பதிட்டித்தல் பிரதிஷ்டை

பதிட்டித்தல் என்றொரு வினைச்சொல் உள்ளது.  இதற்கு நிறுவுதல் என்று பொருள் கூறலாம். இதன் அமைப்பைத் தெரிந்துகொள்வோம்.

இடுதல் என்ற சொல் பிற்காலத்தில் இட்டித்தல் என்று நீட்டப்பட்டது. அவ்வக்காலத்தினர் தங்கள் கற்பனைக் கேற்பச் சொற்களை நீட்டிக்கொண்டனர். இவற்றுளெல்லாம் எது சரி எது தவறு என்பது வாதமன்று. அவர்களின் பயன்பாட்டுக்கு அது தேவைப்பட்டதா, பொருந்தி அமைந்ததா என்பதே காணற்குரியதாகும். பழமைப்படியே சென்றால் புதுமை தவறாகத் தோன்றலாம். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல என்பார் பவணந்தி முனிவர் என்னும் இலக்கணியர்.  ஆக அது வழுவன்று.

ஒன்றைப் பதிந்து இட்டு வைத்தல் -  பதி இட்டித்தல்.  ஓர்  ஏட்டிலாயினும் உரிய மேட்டிலாயினும் பதிந்து இட்டுவைத்தல் பதிட்டித்தல் ஆகும். பெரும்பாலும் சிலைகள் இவ்வாறு  இருக்குமிடத்தில் பதிந்து இட்டு வைக்கப்பட்டன.

பதி என்பது அயலாக்கமாக  ப்ரதி என்று திரியும்.இட்டி என்ற இப்புதிய வினையடி இஷ்டி என்றாகும்.

ப்ரதி + இஷ்டி + ஐ =  ப்ரதிஷ்டை ஆகிவிடும்.

அயல் பலுக்குதலில் ஐ முழுமையாக ஒலிக்கப்படுவதில்லை.  ஐ என்பது அ என்றே நின்றுவிடும்.  ஆக அயலார்க்குப் ப்ரதிஷ்ட என்று உருக்கொள்ளும்.

ட்ட என்று டகரம் இரட்டித்து வருங்கால் ஷ்ட என்று திரிதல் அயற்போக்கு ஆகும்.  எடுத்துக்காட்டாக: மனத்தை எங்கு இடுகிறோமோ அங்கு இட்டமிருக்கிறது என்று பொருள்.  இடு + அம் = இட்டம்.  இது பின்னாளில் இஷ்ட என்று மாறியமைந்தது.  இவனைப் பெண் இட்டப்பட்டாள் என்று டகர ஒலிகளை இட்டு இடருறாமல் இஷ்ட என்று மெல்லிதாக்கினார்கள் என்றாலும் இது செந்தமிழியற்கைக்கு ஒத்தது அன்று என்றனர் தமிழ்ப்புலமையினோர்.

கடுமையானது கட்டம்.  இது கடு+ அம் =  கட்டம்.  கடின நிலை என்று பொருள். எந்தப் பேராசிரியன் வந்து புளுகினாலும் இதுதான் பொருள். பின்  அது: கஷ்டம் என்று ஆனது. இப்போது கட்டம் என்ற சொல் இப்பொருளில் வழக்கின்றி ஒழிந்துவிட்டதுபோல் உள்ளது.  நான் கு  கோடுகள் இணைந்து  ஓர் அடைப்பு ஏற்பட்டால் அதைக் கட்டு + அம் =  கட்டம் என்று சொல்கிறோம்.  இது கடினமான நிலை என்ற பொருள்படாமல்  ஓர் கட்டுக்குள் உள்ள நிலை என்று பொருள்படலாம். பல்லவி முடிந்து அடுத்து அனுபல்லவி என்னும் கட்டத்திற்கு வந்துவிட்டோமென்று பாட்டுவாத்தியார் சொல்கிறார். இவ்வாக்கியத்தில் கட்டம் என்ற சொல்லின் பொருளை அறியலாம். பல்லவி அனுபல்லவி சரணம் என்பதை எடுப்பு தொடுப்பு முடிப்பு என்பர் தனித்தமிழாசிரியர். பதிட்டித்தல் என்பது  ப்ரதிட்டை( ப்ரதிஷ்டை) என்றானது இதில் ஓரளவு விளக்கமுறும்.

பதித்து இடுதலே பிரதிஷ்டை,  அது முன் பதிட்டித்தலாகும்,

வடசொல் என்று குறிக்கப்பட்ட எந்தச் சொல்லிலும் வட ஒலிக்குரிய எழுத்துக்களை நீக்கி விட்டால்  அது ஏற்றற்குரிய தமிழ்ச்சொல் ஆகிவிடும் என்றார் தொல்காப்பியனார். "வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ"  என்றார்.
கஷ்டம் என்பதில் வடவொலிக்குரிய எழுத்து  ஷ் என்பது.  அதை எடுத்துவிட்டு,  இன்னோர் எழுத்தைப் போடவேண்டும்:  கஷ்ட >  க(ட்)ட.  ஆக டகர ஒற்றுடன் ( எழுத்தொடு  புணர்ந்த ) சொல் அமைந்து விடுகிறது.  இங்கு இரண்டாவதாகச் சொல் என்றது தமிழ்மொழிக்குரிய  சொல்.  வடவெழுத்து நீக்கித்   தமிழ் எழுத்தை இட்டால் சொல் தமிழாகிவிடுகிறது.  இப்படிக் கூறியதற்குக் காரணம் இந்தச் சொற்கள் தமிழ்ச் சொற்கள். வடக்கே சென்று வட எழுத்துக்கள் புகுந்தன.  அதாவது கட்ட > கஷ்ட ஆகிற்று,  அதை மீண்டும் பழைய நிலைக்குத் திருப்ப கஷ்ட என்பதைக் கட்ட என்று மாற்றவேண்டும் என்றார் தொல்காப்பியனார்.  இந்த நூற்பாவுக்குப் பிறர் எழுதியவை தள்ளுபடி செய்யப்பட்டது அறிக. வடசொல் என்பது வடக்குத் திசையில் பேசப்பட்ட பாணி.  அல்லது மரத்தடியில் பேசப்பட்ட பாணி.  எதுவானாலும் நூற்பாவின் பொருள் இதுதான்.   ஒரீஇ என்றால் விலக்கி.  தொல்காப்பியர் கூறிய வடசொல் என்பது  தமிழ்ச் சொற்கள் திரிந்து வழங்கியமை ஆகும்.

வடசொற் கிளவி என்று தொடங்கும் நூற்பாவுக்கு பலர் விளக்கம் வரைந்துள்ளனர் என்றாலும் ஓர் எளிய நூற்பாவை எடுத்துப் பூனையைப் புலியாக்கிப் பொருள்கூறியுள்ளனர்.  இதுபோல்வது தேவையற்ற திறமை ஆகும்.

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. 5

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். 6

தொல்காப்பியம் சொல்லதிகாரம்,

பொருள்:

வடசொல் -  தமிழ் நாட்டின் வடக்கில் வழங்கும் அல்லது மரத்தடியில் வழங்கும்  பேச்சின்;   கிளவி -  சொற்கள்  ;  வட எழுத்து ஒரீஇ  -  வட ஒலிகளுக்கு உரிய எழுத்துக்களை விலக்கி;   எழுத்தொடு புணர்ந்த -  விலக்கிய எழுத்துக்களுக்கு உரிய தமிழ் எழுத்தை  ஆங்கு இட்டு  இணைக்க;   சொல் ஆகும்மே - அவை  செய்யுட்குரிய (தமிழ்ச்) சொற்களாகிவி டும்.

சிதைந்தன -  உருமாறிவிட்டவை;  வரினும் - வந்தாலும்;  இயைந்தன -  மீட்டுருவாக்கம் செய்து சேர்க்கக்கூடியவற்றை;   வரையார் -  விலக்காமல் ஏற்றுக்கொள்க . புலவர் ஏற்பர் என்பது.

வடம் : ஆலமரத்தடி.    ஆலயங்கள் இங்குத்தாம் தோன்றி வளர்ந்தன.  ஆல்+ அ + அம்:  ஆலயம்.   இது ஆலமரத்திடம் என்று பொருள்படும்.   ஆல்: மரப்பெயர்; அ - அவ்விடம்.  அம்: விகுதி.  ஆலோசனைகளும் இங்குத்தாம் நடைபெற்றன;  ஆல் -  ஆலமரத்தடி; ஓயனை> ஓசனை > யோசனை.  ஓய்ந்து சிந்தித்தல்.  ஆலமர் கடவுள்:  சிவபெருமான். அல்லது பிறவும் இருந்திருக்கலாம். இதை நான் ஆராயவில்லை.  ஆக வடமொழி ஆல் மொழி ஆகலாம்.

ஆலமரத்தடியில் சாமி கும்பிட்ட மொழி ஆகும்.   ஆர் என்பது பணிவுப் பன்மை விகுதி;  இய -  அடைவு.  ஆரிய - பணிதற்குரிய ( பயன்பாட்டுமொழி).   வெளிநாட்டு மொழி என்பதற்குரிய குறிகள் இல.

வட என்பது திசை குறிக்குமானால்.  திசைச்சொல்லின் இது ஒரு வகையாகிறது.  வடசொல் என்பது  தனியாகச் சொல்லப்படக் காரணம்?  தமிழ்நாட்டின் இற்றை எல்லைகள் படி பார்த்தால்,  வடதிசை நீங்கப்   பிற முப்புறமும் கடல். கடலில் வழங்கிய சொற்கள்?  கடற்கு அப்பாலிருந்த வந்த  சொற்கள்?  அவைதாம் திசைச்சொற்களோ?  பாருங்கள்:

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. 4 

என்பதால் செந்தமிழை ஒட்டி யிருந்த பன்னிரண்டு நிலத்திலும் வழங்கியவை திசைச்சொற்கள். இவையும் செந்தமிழைச் சேர்ந்தவை என்றே நூற்பா சொல்கிறது. வேறுபாடுகள் இருந்திருக்கலாம்.  கொடுந்தமிழ் என்பது பொருத்தமான வரணணையாகத் தோன்றவில்லை.

அடுத்து:  அத்தியாயம் என்ற சொல் ஆய்வோம்.


கருத்துகள் இல்லை: