சனி, 15 செப்டம்பர், 2018

அகத்திருக்கும் ஆத்துமா; பதிந்திருப்போர் மன்பதை

அகத்து இருப்பதாக உணரப்படுவது ஆத்துமா. இதைச் சுருக்கி அழகாக ஆத்மா என்றும் எழுதுவார்கள்.

வீட்டிலிருந்து வீட்டைப் பார்த்துக்கொண்டு பிள்ளைகுட்டிகளையும் கவனித்துக்கொண்டு கணவனுக்கு பணிவிடைகள் புரிந்துகொண்டு இவற்றின்மூலம் மன்பதைக்கு ( =  சமுதாயத்துக்கு) நலம்புரிவாள் ஆத்துக்காரி.

தமிழின் தன்மை வேறு.  ஆங்கிலத்தின் இயல்பு வேறு. எமக்கு ஆங்கிலம்போல் பேசுதல்தான் பிடிக்கிறது.  யார் எந்த மந்திரத்தை எந்தக் காதில் ஓதினாலும் எமக்குப் பிடித்ததையே செய்வோம். அப்படியானால் ஆத்துக்காரியை ஆங்கிலக்காரியைப்போல் உச்சரித்து இன்பம் காண்பது வேண்டுவதே.

ஆத்துக்காரி > ஆத்கேரி  :  இது நன்றாக இருக்கிறதா?

நன்றாக இல்லையென்றால் இந்தி மொழிப் பாணியில் "ஆத்கார்"  அல்லது "ஆத்கர்"  வெகு விமரிசையாக இருக்கும்.

அல்லது மண்டரின் மொழிப் பாணியில்:  ஆ தூ காங்  என்னலாம்.  அதுவும் இனிமைதான்.

எல்லாம் இனிமை.  எங்கும் இனிமை. எமக்குப் பூனை கத்தினாலும் இனிமையே.

மேலே மன்பதை என்ற சொல்லைப் பயன்படுத்தி இருந்தேம்.  அதை ஆய்ந்து இப்போது தெளிவாக்கி உலவவிடுவோம்.

மன் என்பது அடிச்சொல்.

மன் + இது + அன் =  மனிதன்.
மன் >  மான்:   மான் + து + அன் = மாந்தன்.
( சொல்லாக்கத்தில் மான்+து = மான்று என்று வராமல் மான்+து  = மாந்து என்று வருவது ஒரு வகை.)

~ன்ற என்று வராமல்  ~ன்த   ~ந்த என்று ஏன் வருகிறது என்றால்:

அப்படியும் வரும்.  வேண்டிய வேண்டியாங்கு வரும்.

ஈன்+தல் என்பது  ஈந்தல் என்னாமல் ஈன்றல் என்று வந்தது.
ஆனால் மான்+து + அன் என்பது மான்+தன் என்று நின்று  மாந்தன் என்று முடிபு கொள்ளும்.

இருவகையாகவும் இனிமை கருதிச் சொல்லாக்கி உள்ளனர்.

மனிதன் என்பதில் முழு "  இது " பயன்படுத்திவிட்டு  மாந்தனில்  து மட்டும் பயன்படுத்தியுள்ளனர்.    சொல்லை ஆக்கியவனே அரசு.  சட்டியை எப்படி உருவாக்க வேண்டுமென்று குயவனே தீர்மானிக்கிறான்.  சமையல்காரன் அந்தச் சட்டி வேண்டாமென்றால் இன்னொரு சட்டியைப் போட்டு ஆக்கிக்கொள்ளவேண்டியதுதான்.

மன்  >  மான் இவை இரண்டும் அடிச்சொற்கள்.

இனி மன் என்பதிலிருந்து சமுதாயத்தைக் குறிக்க (குமுகம் அல்லது குமுகாயம்)  ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால்:

மன்:  மனித வருக்கம் குறிக்கும் அடிச்சொல்.
பலரும் வருக்கத்தில் பதிவு பெற்று வாழ்கின்றனர்.

மன் + பதி + ஐ =  மன் + பத் + ஐ = மன்பதை.

இகரம் வீழ்ந்தது. கெட்டது .  அல்லது வீசப்பட்டது.

மன்பதை என்பது குமுகம்.  பல மனிதர் ஒன்றுபட்டு இருப்பது.

( பத் ) >  (பது ) > (பதுங்கு  ).
( பத் ) >  (பது )  > ( பதை  )  இதைப் பின் விளக்குவோம். பதைத்தல்.
(பத் )  > ( பதை ) > மன் +( பதை)   =  மன்பதை.   (  மனிதர்கள் பதிந்து வாழும் நிலை).
பதி வந்த பதிவுச் சொற்கள் பல.  தளபதி,  சேனாதிபதி,  அதிபதி,  பதிவிரதை என்ற வழிச் சென்று காண்க.

இனி ஆத்மா என்பதையும் அகத்துமா என்பதிலிருந்து கண்டோம்.  அகத்திருக்கும் பெரியது ஆத்துமா எனினும் அமையும்.  சற்று வேறு பட்ட விளக்கமும் ஏற்புடைத்தே.  இதற்கு ஓர்  இடுகையே உள்ளது. காண்க.

உலகில் பலவும் அறிந்தோரும் உளர்.  ஒன்றே ஒன்றுதான் என்று பிடித்துக் தொங்கி விழுந்தோரும் உளர்.  உலகம் பலவிதம். 

ஆத்துமா >  ஆத்மா பற்றி:





அகத்து என்பது ஆத்து என்று மாறும். தெரியாதபோது ஆத்துக்காரியைக் கேட்டு அறியவேண்டும்.  ஆத்காரியையும் கேட்கலாம்.

கருத்துகள் இல்லை: