ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

சாம்பிராணி முதலிய பொருள்கள்

தொல்காப்பியனார் தம்காலத்தில்  சொற்கள் சிலவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி வழிகாட்டினார்.  திரிசொல் திசைச்சொல் ஆலமரத்தடிச் சொற்களாய் இல்லிற்கு வெளியில் தமிழுடன் வழங்கிய வடசொற்கள் (  இற்றைச் சமஸ்கிருதம் இச்சொல்லிலிருந்து வேறுபடுத்தி அறியத்தக்கது ) என்று பாகுபாடு செய்து தெளிவுகாட்டினார்.

அதன் பிறகு நீண்டகாலம்   நாம் இன்று அறிந்துமகிழும் அளவிற்கு பெரும் சொல்லாய்வுகள் தமிழரிடை நடைபெற்றதாகத் தெரியவில்லை.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே இப்போது  ஆய்வுகள் நிகழ்ந்தேறி உள்ளன.

திரிசொற்களைப் பொறுத்தவரை இரண்டை நாம் கவனிக்கவேண்டும்:

1.   சொல் உருமாறிப் பொருள் மாறாமலிருப்பது.

2.  பொருள் மாறிச் சொல் உருமாறாமல் இருப்பது.

மூன்றாவது சொல்லும் பொருளும் மாறிவிடுவது.

மூன்றாவது அணிக்கு நாம் ஓர் உதாரணம் தரலாம்:

இது என்ற தமிழ்ச்சொல்லுக்கு நேரான மலாய்ச் சொல்: இத்து என்பது.  இத்து என்பது இது என்று  பொருள்படுவதே. இச்சொற்களிடை உள்ள ஒலியொற்றுமையை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.  இது என்பது ஒரு சுட்டடிச் சொல்.  ஏனை மொழிகளிலும்  சுட்டடிச் சொற்கள் உள்ளன.  சீனமொழிப் பேச்சில் இ என்பது  இவர், இவன்,  இவள் என்பவற்றின் ஒன்றை இடம்நோக்கி உணர்த்துவது ஆகும்.  இட் என்ற இலத்தீன் சொல்லிலும்  ஹியர் என்ற ஆங்கிலச் சொல்லிலும் சுட்டு ஒலி உள்ளது.  எதிலிருந்து எது வந்தது என்பதை எப்போதாவது எழுதுவோம். இப்போது மூடி வைப்போம்.

இத்து என்ற இது என்று பொருள்படும் மலாய்ச்சொல்,  சித்து என்று மாறி {(டி-சித்து ) என்று உருமாறி} அங்கு என்று பொருள்படுகிறது.  இதில் சொல்லும் மாறிவிட்டது.  பொருளும் மாறிவிட்டது.  சித்து என்பதில் நமக்கு அடையாளம் காட்டுவது  சொல்லின் இறுதிப்பகுதியே ஆகும். தமிழில் இது என்பதில் உள்ள இகரத்தைக் கொண்டே இங்கு என்ற இடப்பொருள் காட்டும் சொல் அமைந்துள்ளது காண்க. மலாய் மொழியில்  இகரம்  அண்மைப் பொருளினின்று சேய்மைப் பொருள் காட்டச் சென்று விட்டதால் இது மூன்றாவது அணி என்று மேலே சொல்லப்பட்டதற்கு நல்ல உதாரணம் ஆகின்றது.


சாம்பிராணி என்பதான சொல்லில் என்ன மாறியது?   சாம்புதல் என்ற சொல்லின் பொருளில் நெருப்பிட்டு எரித்தல் என்ற பொருள் இல்லாமல் அல்லது கிட்டாமல் போய்விட்டது.  இருந்தாலும் இப்போது இருக்கும்  சொற்களிலிருந்து அப்பொருளை மீட்டு எடுக்கமுடிகிறது.

சாம்பு  >  சாம்பல்.  (எரிந்து மிஞ்சியது).
சாம்பு   > சாம்பார்  ( வேவித்து குழைவாக்குவது).
சாம்பு >சாம்பான்   (  பிணம் எரிப்போன்.)
சாம்பு > சாம்பன்     ( எரிதவழ் இறைவன் )
சாம்பு >  சாம்பவர்   ( பிணத் தொழிலோர்).

இவை எல்லாம்  தீயிடுதலையும் எரிதலையும் குறித்தாலும்,  சாம்புதல் என்பதற்கு இப்போது கிடைக்கும் பொருள்:

1  ஒடுங்குதல்.  2  கூம்புதல்   3  சோர்தல்  4  வாடுதல்  5  உணர்வழிதல்
6  இழுத்தல்   7  கெட்டுவிடுதல்  8  சோம்புதல்  9  ஒளிகுறைதல்.

இவற்றுள் நேரடியாய் எரித்தல் பொருள் தரப்படவில்லை.

தீ இட்ட பிணம்  ஒடுங்கும், கூம்பும். சோரும். வாடும்,  இழுக்கும், கெடும், இறுதியில் தீ ஒளிகுறைந்து சாம்பலாகும்.   எனினும் இவையும் நாம் தீயினுடன் தொடர்புறுத்திய மீட்டுருவாக்கமே.

புகையை ஏற்படுத்திப்  பாம்பு, கொசு, ஈ முதலிய பல ஊர்வன பறப்பன அண்டாமல் அரணை உண்டாக்கும்   சாம்பு + அரண் + இ =  சாம்பரணி ஆகும்.  இது பின் திரிந்து சாம்பிராணி ஆனது.   சாம்பிராணியில்  ராணியுமில்லை; பிராணியுமில்லை.அது ஓர் அரணிதான்.  ஆனால் அது எரிக்கப்படுவதுதான்.
அரண்:  பாதுகாப்புத் தருவது.

நமது நிகண்டுகளில் உள்ள சொற்களையே அகர வரிசைகளும் உட்படுத்தி வெளிவந்தன.  சொந்த ஆய்வுகளை அவர்கள் மேற்கொண்டு சொற்களைக் கண்டுபிடிக்கவில்லை. உலகவழக்கிலிருந்து எடுக்கவில்லை. எடுத்துக்காட்டாகத் திராவுதல் என்ற சொல் உலகவழக்கில் உள்ளது. அகராதியில் இல்லை. ஒழித்தல் என்பதற்கு ஊற்றுதல் என்று மலையாளத்தில் பொருள் உண்டு; தமிழில் இல்லையாகிவிட்டது.  எழுப்புதல் ஒழுப்புதல் என்று யாழ்ப்பாணத்தில் சொல்கிறார்கள். அது அகரவரிசையில் இல்லை. தைதல் என்ற தன்வினை இல்லை; தைத்தல் என்ற பிறவினை உள்ளது.  விடுபட்ட சொற்களைச் சிலர் பட்டியல் இட்டுள்ளனர்;  அவை இன்னும் இடம்பிடிக்கத் திணறுவனவே ஆகும்.

பழங்கால மன்னர்கள் சிலரை உயிருடன் எரித்துக் கொன்றனர்  என்று தெரிகிறது.  சில சிற்றூர்க் கதைகளில் சுண்ணாம்புக் காளவாயில்  (சூளை யில்)  இட்டு எரித்துக் கொன்ற கதை வருகிறது.  இதுபோன்ற கதைகள் திரட்டப்படவேண்டும்.  இப்போது வீட்டில் பாட்டி சொந்தக் கதை சொல்லும் திறன் குறைந்து புதுக்கதைகளைத் தொலைக்காட்சிகள் பரப்பத் தொடங்கிவிட்டதால் பழங்கதைகள் அழிந்தன  அல்லது அழிந்துகொண்டே இருக்கின்றன.. திரிசங்கு புலையனான கதை புலையர்களில் சிலர் எப்படி உருவாக்கப்பட்டனர் என்பதைத் தரவல்லது ஆகும்.  வழக்கிலுள்ள கதைகளையாவது யாராவது சென்று திரட்டுங்கள்.  அவை ஆய்வுக்கு உதவும்.

சா>  சாம்பு > சாம்புதல்.   எரித்துச் சாம்பலாக்கிக் கொல்லுதல். உயிருடன்  எரிக்கத் தொடங்கினாலே சாவு.  அப்புறம் சாம்பலானால் என்ன?  துண்டுகள் கிடந்தால் என்ன என்பீரோ?

சாம்புதல் :  பொருள் உணர்வழிதல் : இது  சாவின் தொடக்கம்.  மற்ற பொருள் குறிப்புகளும் சாவினோடு தொடர்புற்றவை. உணர்வழிதல் முதலியவை ஓர் வெளிச்சத்தை இச்சொல்லுக்கு அளிக்கின்றன.

எரித்து அரண் செய்வது சாம்பரணி  ( சாம்பு-ராணி(பேச்சு), சாம்பி-ராணி (பைக்கட்டில்)  , எதுவோ?)

(பைக்கட்டு:  பைக்குள் வைத்துக் கட்டி வெளியில் எழுத்துகள் ஒட்டப்பெற்றது.)

தமிழாசிரியர்கள் பொருளறியாமலும் சிலவேளைகளில் திருத்துவர்.தவறுகள் இயற்கை.

கருத்துகள் இல்லை: