திங்கள், 24 செப்டம்பர், 2018

எசமான் ( எஜமான் ) என்ற சொல்.

இன்று எசமான் என்ற சொல் எப்படி ஆக்கப்பட்டது என்பதை அறிந்து இன்புறுவோம்.

இப்போது சில கவிதைகளும் சொல்லாய்வுமே செய்துவருகின்றோம்.
இலக்கிய ஆய்வு அல்லது நோட்டம் எதுவும் செய்வதில்லை. ஏனென்றால் சில நன் கு பிறரால் திருடப்பட்டுவிட்டன.  பல உரைகள் அழிக்கப்பட்டுவிட்டன. எமது மின்னஞ்சல் உள்ளும் புகுந்துவிட்டனர்.  அடிக்கடி கடவுச் சொற்களை மாற்றி இடர்விளைவிக்கின்றனர்.

தமிழில் நடத்துபவன் அல்லது தலைவனுக்கு இயவுள் என்றொரு சொல் உள்ளது.  இது கடவுள் என்ற சொல்லைப்போல உள் விகுதி பெற்ற சொல்.

இயக்கம், இயங்கு என்ற சொற்களில் இய என்ற அடிச்சொல் உள்ளது.

பெருமான் என்ற சொல் பெரு+ம்+ஆன் என்று அமைந்தது. மகர ஒற்று ஒரு சொல்லாக்க இடைநிலை ஆகும்.  மான் என்பது இறுதி என்று சிலர் சொல்வதுண்டு.  எனினும் மான் என்பது ம்+ ஆன் என்பதே.  ஆன் என்பதுஆண்பால் விகுதி.  பெண்பால் விகுதி ஆள் என்று வரும். இது நீங்கள் அறிந்ததே.

இய+ம்+ஆன் = இயமான்.  அதாவது இயக்குநன்.  இயவுள் என்ற பழைய சொல்லுமது.   யகரம் சகரமாகத் திரியும்.  வயந்தம் > வசந்தம்.  வாயில்> வாசல்.  நேயம் > நேசம்.

இருவர் நெருங்கிப் பழகுவது அன்பைப் பயக்கிறது.  பயத்தல் என்பது உண்டாக்குவதென்பதாகும்.  பய > பயன் என்பதும் காண்க.  இனிப் பய+ அம் = பாயம்.  இது பாசம் என்று திரியும்.  பசுமையான அன்பும் பசு+ அம் = பாசமாகும். இது ஓர் இருபிறப்பிச் சொல்.

இனி இயமான் என்பதற்கு வருவோம்.  இது இயமான் > இசமான் > எசமான் என்று திரிந்தது.  பின் எசமான் எஜமான் என்று மெருகு பெற்று,  மூலங்கள் வழக்கற்றுவிட்டன.

இது தான் எசமானின் கதை.  எசமான் என்பது இன்னொரு விகுதி -  அன்  பெற்று எசமானன் என்றும் சிலரிடத்துத் தவழும்.

அறிவீர் மகிழ்வீர்

பிழைகள் காணின் பின் திருத்துவோம்.

கருத்துகள் இல்லை: