திங்கள், 3 செப்டம்பர், 2018

தலைவேர் பக்கவேர் அறிவாளிகள்.

அறிவாளிகள் உலகில் பலர்.  ஒருவர் அறிவாளி என்பதற்கு அடையாளம் என்னவென்றால் அவரைச் சூழ்ந்து நிற்கும் அவருடைய புகழ்தான் என்று நாம் நினைக்கலாம்.  ஆனால் சில அறிவாளிகளின் வாழ்க்கையை ஆராயும் போது அல்லது மேலெழுந்த வாரியாகப் பார்த்தாலும் கூட,  அவர்களும் பல இடங்களில் சறுக்கி விழுந்து அப்புறம் மீண்டிருப்பதும்  சிலர் மீளாமலே அக்குறையுடன் தம் வாழ்நாளைக் கழித்திருப்பதும் மக்களும் அவர்பால் உள்ள அன்பினால் அக்குறைகளை ஒருவாறு அசட்டை செய்துவிட்டு அவரைப் போற்றிக் கொண்டாடி இருப்பதையும் காணலாம்.  மொத்தத்தில் அவர்வாழ்க்கை நிறைவானது என்று எண்ணுவதற்கில்லை.

ஆனால் குறையே இல்லாத அறிவாளியோ அல்லாதவரோ உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம்.  சிற்சில குறைகளை நாம் கணக்கிலெடுத்துக் கொள்வதில்லை  அல்லது அவர்பால் ஏற்பட்டுவிட்ட பற்றுவிரிவால் ( விசுவாசத்தால்)  மனத்திற் பதிவுசெய்துகொள்வதில்லை என்று திண்மையாகச் சொல்லலாம்.

" நானும் மனிதன் தான்;  உங்கள்போல் என்னிலும் குறைகள் உண்டு"  என்று சில அறிவாளிகள் தங்கள் சிந்தனைகளில் சிந்தியிருக்கிறார்கள்.

ஒரு சமயம் ஒருவருடன்ஒரு கோவிலில்  உரையாடிக் கொண்டிருக்கையில் "இந்தக் கோவிலில் சில நடவடிக்கைகளைத் திருத்தம் செய்தல் வேண்டு"  மென்று அவர் கூறினார். அதற்கு நான் இவை தலைவரால் செய்யத் தக்கவை என்றேன்.  அவர் உடனே தலைவர் என்ற சொல்லைப் பிடித்துக்கொண்டு: "தலைவேர்"   "பக்கவேர்"  என்று தாவரவியல் முறையில் விளக்கினார்.  ஆகவே எந்தச் சேவையிலும் தலைவேராக உள்ளவர்களும் பக்கவேராக உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பது ஓர்  இயல்பான பாகுபாடு என்று நாம் கருதலாம்.  இதை வேறு விதமாக பேரோடைகள்  சிற்றோடைகள் என்றும் பகுத்துக் கூறுவதில் தவறில்லை.  ஆனால் இதில் நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால் தலைவேரும் பக்கவேரும் ஒன்றாக இணைந்து செயல்படுபவை ஆகும்.  அவற்றின் வேலைகளில் எவையும் எதிர்மறைத் தன்மை உடையவை அல்ல.

ஆனால் ஓடைகளைப் பொறுத்த வரை ஒரு பேரோடை உலகின் ஒருபகுதியில் இருக்கலாம்; இன்னொன்று  வேறொரு பகுதியில் இருக்கலாம்.  அவற்றிடை எத்தகைய பிணைப்பும் இல்லாமல் இருத்தலும் கூடும். சிந்தனைச் செல்வர்களை எடுத்துக்கொண்டால் ஒருவர் ஓர் இலாகாவில் வேலைசெய்து ஓய்வு பெற்றவராகலாம்; இன்னொருவர் வேறோர் இடத்தில் தன்முனைப்பாகவும் எவ்விதக் கட்டுப்பாடுமின்றிச் செயல்பட்டவராக இருத்தலும் கூடும். இவர்கள் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு  ஆளுமைகளுடனும் கட்டின்மையுடனும்  செயல்பட்டவர்கள்.  இவர்களின் கருத்துகள் பேரோடைக் கருத்துகள் சிற்றோடைக் கருத்துகள் என்று பகுக்கப்படுதலில் ஏற்புடைமை காணுதற்கில்லை. பேரோடைச் சிந்தனையாளர் ஒரு பல்கலைக் கழகத்தில் வேலைபார்த்திருந்தால் அவர் கூறிய கருத்துக்கள் அப்பல்கலையில் உள்ள பிற மேலாண்மை அலுவலர்களின் கருத்துகளுக்கு ஒத்துச் செல்வனவாகவே இருக்கவேண்டும். இல்லையென்றால் அவர்தம் சீட்டுக் கிழிந்துவிடலாம்.  அத்தகைய அச்சத்தில் எழுதியவை அல்லது சொன்னவை ஒரு திறந்த சிந்தனை என்று கொள்வதற்கில்லை.  அவருக்கு எதிர்மறையாக இருக்கும் பிறரின் கருத்துகள் சிற்றோடைக் கருத்துகள் என்பது உண்மையில் தவறாகும்.

படிப்பாளிகள் பெரும்பாலும் கைகட்டியே தொழில்மேற்கொள்வதால் ஒவ்வொரு கருத்தும் ஆய்வு செய்யப்படவேண்டியதாகும். கட்டின்றி வெளிப்படும் கருத்துகள் மேலானவை; எனினும் அவையும் ஆய்வுக்குரியவை தாம். எதையும் மெய்ப்பொருள் கண்டே ஏற்கலாகும். ஊதியத்துக்கு இயங்குவோன் கருத்து  அவன் தன் ஊதியம் காக்குமாறு வெளியிடப்பட்ட கருத்தே என்று முடிக்கவும்.

கருத்துகள் இல்லை: