வியாழன், 27 செப்டம்பர், 2018

உற்பத்தியும் அதன் உறவுக்கருத்துகளும்.

இன்று உற்பத்தி என்ற சொல்லைக் காணச் செலவு மேற்கொள்வோம்.  

இன்று யாம் எழுதிய கவிதை ஒன்றினுக்கு உரை எழுதும்போது இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளோம்.

உறு என்பதும் உண்டாகுதல் என்ற பொருளைத் தெரிவிக்கும். உறுப்பத்தி எனினும் அதுவே.  எடுத்துக்காட்டு: தெளிவு உறுதல்:  தெளிவு உண்டாகுதல். உறுதல் என்பது ஓர் இணைப்பைக் குறித்தாலும் உண்டாகாத எதுவும் இணைப்புறுவதில்லை ஆதலால் உறுதல் உண்டாதலைத் தழுவியது ஆகும், உறுதல் ஆக்கத்தின் பின் நிலை; முன் நடைபெற்றதைக் கொணர்வது; ஆதலின் உண்டாக்கத்தை உணர்த்துவது ஆகும்.

உறுப்பத்தி -  பற்றி உறுதல். இது திரிந்து உற்பத்தி.  இனி உள் பத்தி எனினும் அது.  உள், உல், உறு என்பன தம்முள் உறவுடைய சொற்கள். ஒன்றின் பொருள் பிறவற்றில் தழுவி நிற்குமாறு பயன்படுத்தத் தக்கவை.

உரு என்பதும் தொடர்புடையதே.

காவல் உறவேண்டும் என்ற தொடரைச் சிந்தித்தால், காவல் உண்டாகவேண்டும் என்பது பொருளென்று அறியலாம்.  மிகுதல் பொருளும் உண்டாகி அதிகப்படுதல் என்பதே. அதாவது அளவில் அதிகமாய் உண்டாகுதல்.

கீழ்க்காணும் விளக்கம் அறிந்து மகிழ்க.

இது திரிசொல். (  இயற்சொல் அன்று ).

பல சொற்கள் தாம் அமைந்தபோதிருந்த பொருளில் வழங்குவதில்லை.  எடுத்துக்காட்டு: நாற்றம்.  ஆனால் அதன் அடி  நறு என்பது; அது நல் என்பதிற் பிறந்தது.  நல் என்பது நன்மை.  நறு மணம் என்பதும் இன்றும் நல்ல மணமே ஆம். அதன் விரிவாகிய நாற்றம் என்பதே இழிபொருள் குறித்தது.

நாற்றம்: திரிசொல்;  நறு : இயற்சொல். இரண்டும் உறவினவாம். பரமாத்துமா தெய்வமாகவும் அவர் மகன் அசுரனாகவும் ஆனதுபோல.

 

உற்பத்தி


உற்பத்தி என்பது மிக்க அழகாய் அமைந்த சொல்லாகும். கரு ,  கருப்பையை உள் பற்றிக்கொண்டுதான் வளர்ந்து பெரிதாகிறது.  

மரங்களின் விதைகளும் எங்காவது போய் விழுந்து மண்ணினுள்  பற்றிக்கொண்டுதாம்  வளர்ச்சி பெறுகின்றன . 


உள் பற்றுதல் என்ற கருத்திலிருந்து உண்டாகுதல் என்னும் கருத்து வளர்ச்சி பெற்றது. உண்டாகு என்பதிலும் உண்டு என்னும் சொல், உள்+து என்று அமைந்ததே. உள் என்பதே உற்பத்தி  என்பதிலும் பொதிந்துள்ளது உணரற் பாலது ஆகும்.


உற்பத்தி என்பதில் உள் > உல் என்று திரிந்துள்ளது. பற்றுதல் என்பது பற்றி >பத்தி என்று திரிந்துள்ளது. உள் என்பது பத்தி என்பதனோடு புணர,  உட்பத்தி என்று ஆனாலும், பின் உத் பத்தி எனறு திரிவது மற்றொரு வழியாகும்.


இது தமிழ் மூலச்சொற்களைக் கொண்டு அமைந்தது. இந்த விளக்கம் எல்லாம் கூறிக்கொண்டிராமல், இது தமிழன்று என்பது இன்னும் எளிதாக இருக்கும். 


உள்  என்ற  தமிழ்ச் சொல்  மலாய்  மொழியில்  உலு என்று திரிவது கவனிக்கத்தக்கது.

படிப்பறிவு இல்லாதவர்கள் "உலுப்பத்தி" என்பதும் கருதத்தக்கது.

கருத்துகள் இல்லை: