அருளுதல் என்பது இப்போது பெரிதும் புழக்கத்திலுள்ள சொல்லாகும். அருள்மிகு என்ற அடைமொழியுடன் சாமி கும்பிடும் இடங்களும் குறிக்கப்படுகின்றன. ஏறத்தாழ எழுபது ஆண்டுகட்கு முன் வந்த ஒரு திரைப்பாடலும் " அருள்தாரும்..." என்று தொடங்கிப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அருள் என்ற சொல்லும் பொருள். இருள் என்ற சொற்களுக்கு எதுகையாக வருமாதலின், இதன் விரி பயன்பாட்டினை உணர்ந்து கொள்ளலாம்.
இதற்கு ஈடான சொற்களும் தமிழ்மொழியில் கிடைக்கின்றன. அருளுதல் என்பது ஏதெனும் ஒரு வரத்தைத் தருதல்தான். ஆயினும் அருளுதல் என்பதில் உள்ள பொதுப்பொருண்மை வரமென்பதில் இல்லை. இரண்டு வரம், மூன்று வரம் என்று எண்ணிக்கை உடையதாய் இருப்பது வரமென்னும் தெய்வத்தரவு. தெய்வத்தினிடமிருந்து வருவது ஆதலின், வரு> வரு+ அம் > வரம் ஆகிறது. வரு என்பதன் இறுதி உகரம் கெட்டு அம் விகுதி பெற்று அமைவது வரமென்னும் சொல். வரமாவது தெய்வத்தினிடமிருந்து வருவது என்னும் பொருளது ஆகும்.
பற்றன் அருள்வேண்டுங்கால் தெய்வத்திடம் "கடைக்கண் பாருங்கள்" என்று வேண்டுவதே பெருவழக்காகும். பல தெய்வ வணக்கப் பாடல்களிலும் இத்தகு வேண்டுதல் இடம்பெறுவதைக் காண்கிறோம். இதிலிருந்து அமைந்ததே கீழ்க்கண்ட சொல்.
கடைக்கண் > கடைக்கணித்தல்.
இது மிக்க எளிமையாக அமைந்த சொல்லாகும். கடைக்கண் பார்வையினின்று அருள் சுரத்தல் என்பது பொருளாகிறது. தெய்வம் கடைக்கணித்தல் மட்டுமின்றி, மனிதர்களிடையிலும் பொருந்துமிடத்து இதைப் பயன்படுத்தலாம் என்று எண்ணுகிறோம். எடுத்துக்காட்டாக, "குடியரசுத் தலைவர் இவ்வழக்கின் தன்மையை ஆராய்ந்தபின் மரண தண்டனையை விலக்கி, கடைக்கணித்துள்ளார்" என்று எழுதலாம்.
கண் என்ற சொல் விழி என்று பொருள்பட்டால் மட்டுமே இப்பொருள் பொருத்தமாகிறது. அதற்கு இடம் என்ற இன்னொரு பொருளும் உள்ளது. அந்தப் பொருளை மேலிட்டு இச்சொல்லைக் கையாள்வதாயின், இச்சொல்லுக்குப் புறக்கணித்தல் என்ற பொருள் வந்துவிடுகிறது. ஆகவே இருபொருள் படும் இச்சொல்லைப் பொருண்மையும் இடமும் அறிந்து பயன்படுத்துதல் வேண்டும் என்பது தெளிவு.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக