இன்று கால் என்ற சொல்லைப் பற்றித் தெரிந்துகொள்வோ.
காலுதல் என்பது ஒரு வினைச்சொல். அது நீண்டு ஓடிக் கீழிறங்குவதைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு நீர்வீழ்ச்சியில் நீரானது நீண்டு ஓடிவந்து மேடான நிலத்திலிருந்து கீழிறங்குகிறது. " மலையினின்று கான்றொழுகும் நீர்" என்று இதைக் குறிப்பர். சூரியனிலிருந்து கதிர் கீழிறங்குதலும் " பகல் கான்று எழுதரும் பரிதி " என்பர் ( பெரும்பாணாற்றுப் படை 2). இவற்றில் நீங்கள் கால் என்பதன் நீட்சிக் கருத்தை அறிந்துகொள்ளலாம்.
கால் - கான்று என்பது வினை எச்சம். கான்ற என்பது பெயரெச்சம். கான்றது, கால்கின்றது, காலும் என்பன இறந்தகால, நிகழ்கால, எதிர்கால முற்றுவினை வடிவங்கள்.
மனிதனின் காலும் விலங்குகளின் காலும் உடலிலிருந்து வெளிப்பட்டுக் கிழிறங்குவன. இங்கும் நீட்சிக் கருத்தே காண்கிறோம்.
காற்றும் நீண்டு வீசுவதுதான். கால் என்ற பெயர்ச்சொல்லிலிருந்து கால்+து > காற்று என்று சொல் அமைகிறது. நேரம் என்பது குறுகிய காலம். ஆனால் கால் > காலம் என்பது நீண்டு செல்லும் பொழுது ஆகும்.
காலம் என்பது எதற்கும் காத்திருப்பதில்லை. அது ஓடிவிடுகிறது. நேற்றைப் பொழுது இப்போது எங்கே? அது தொலைந்துவிட்டது. யாரிடமாவது வீண்வாதம் செய்துகொண்டிருந்திருந்தால், காலம் ஓடியிருக்குமே.... அந்தக் காலம் போனது போனதுதான். இதனால் ஆங்கிலப் பழமொழி Time and tide waits for no man " காலமும் கடற்பெருக்கும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை" என்று வருகிறது. அம் விகுதி பெறாமல் கால் என்ற அடிச்சொல்லும் காலம் குறிக்கும்.
" நன்றி ஒருவருக்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா"
என்ற ஒளவையின் பாடலில் கால் என்பது செய்த காலம் அல்லது பொழுது என்னும் பொருளில் வருகிறது. இங்கு இது ஓர் உருபு ஆகும்.
பேச்சுமொழியில் கால் என்பது வரும். " அவரு வந்தாக்க எங்கிட்ட சொல்லு: என்பது உண்மையில் வந்தக்கால் என்பதே ஆகும். எழுத்துமொழியை நோக்க "வந்தாக்க" என்பது சிதைவு. கால் என்பது ~க என்று சிதைந்துவிட்டது. கா என்னும் எழுத்து க என்று குறுகியும் கால் என்பதில் லகர ஒற்று கடைக்குறையாகியும் வந்தன. நம் பழைய இலக்கணங்கள் இவற்றைக் கண்டுகொள்ள மாட்டா. தமிழின் எல்லா நூல்களும் கிடைக்காமல் போய்விட்டால், க என்ற எழுத்தை வைத்துக்கொண்டு அது கால் என்பதன் திரிபு என்று கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. எந்த ஆய்வாளருக்கும் கடினமே.
வண்டிக்கால்கள்
வண்டிகளுக்கு ஒரு காலத்தில் சக்கரம் இல்லை. அதை தாங்கிக்கொள்ள நாலு அல்லது இரண்டு கால்கள் வண்டிகட்கு இருந்தன. இவை வண்டிக் கால்கள் அல்லது சகடக் கால்கள் எனப்பட்டன. பின் வண்டி "அறிவியல்" வளர்ந்து, உருளைகள் வந்த காலத்திலும் அந்த உருளைகளைக் கால்கள் என்றே குறித்தனர். நீட்சிக்குப் பதிலாக வளைவு வந்துவிட்டாலும் பெயர் அதுவாகவே இருந்தது. நாலடியாரில் இது " சகடக் கால்" என்று குறிக்கப்பட்டது. இப்போது வண்டிக்கால் என்றாலும் அது மாட்டுவண்டி குதிரை வண்டி முதலியவற்றின் உருள்சுற்றிகளையே குறிக்கின்றனர். உந்துவண்டியின் ரோடாக்கள் அவ்வாறு குறிக்கப்படுவதில்லை.
ரோடா என்பது பக்கப் பட்டியலில் உள்ளது. கண்டுகொள்க.
நீட்சிக்கருத்துடைய கால் என்ற சொல், நாளடைவில் உருட்சிப்பொருளைக் குறிக்க வளர்ந்தது உண்மையில் ஒரு பொருள்திரிபே ஆகும். ஆனால் இயல்பாகவே இரு பொருளையும் குறித்தது என்று அகரமுதலி வரைவோர் அலட்டிக்கொள்ளாமல் பட்டியலிட்டனர். யாரும் ஏன் என்று விளக்கினார்கள் இல்லை. மரப்பட்டையைக் குறித்த சீரை என்பது சீலை என்று திரிந்து அணியும் நீள்துணியைக் குறித்ததும் இவ்வாறானதே என் க.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக