வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

சகடம்

இனி, சகடம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். சகடம் என்ற சொல்லை ஆய்வு செய்ய முயல்கையில், இது ச+ கடம் என்றவாறு, புரியாத புதிர்ச்சொல்லாகத் தெரியலாம். சகடம் என்பது மிக்கப் பழமையான சொல் என்று எம் ஆய்வு சொல்கிறது. அது ஏனென்று இவ் வெழுத்தளிப்பின் முடிவில் நல்லபடியாகப் புரிந்துவிடும்.
 பழங்காலத்தில், உருளைகள், வளையங்கள், ரோதைகள், எல்லாம் கண்டிபிடிக்கப்படாத காலப்பகுதி இருந்தது. அது எப்போது என்று மனிதவளர்ச்சி நூலார் கண்டிபிடிக்க, அவர்களிடம் நாம் விட்டுவிடுவோம். இங்கு முன் குறித்த சொற்கள் எவ்வாறு அமைந்தவை என்பதும் கேட்டு மகிழற்குரியதே ஆகும். 

அதையும் இவ்விடுகையில் கண்டு மகிழ்வுறுங்கள்: https://sivamaalaa.blogspot.com/2020/02/blog-post_4.html. 

 சக்கரம் கண்டுபிடிக்குமுன் வண்டிகள் அல்லது ஊர்திகள் சறுக்கியே கொண்டுசெல்லப்பட்டன. பண்டங்களை ஓரிடத்தினின்று இன்னோர் இடத்துக்குக் கொண்டுசெல்ல உயரத்திலிருந்து தாழ்ந்து செல்லும் நிலப்பகுதிகளே பெரிதும் பயன்பட்டன. ஆற்று ஓட்டமுள்ள இடங்களும் பயன்பட்டன. இவைபோலும் தலங்கள் இல்லாதவிடத்து, யானை, குதிரை, மாடு முதலியவையும் ஆட்களும் தேவையாயிற்று. 

இவற்றுள் சறுக்கலான நிலங்களில் இருந்தவர்கள், சறுக்கி வேண்டிய இடத்தருகில் சென்றனர். சறுக்கு + அருகில் என்ற கருத்துகளே சறுக்கு + அரு + அம் என நின்று, சறுக்கரம் ஆயிற்று.பின் நாளடைவில் இடைக்குறைந்து சக்கரம் ஆனது. சகடம் என்பதும் அவ்வாறு அமைந்த சொல்லே. சறுக்கு + அடு என்ற இரு சொற்கள் இதற்குப் பயன் தருவ(ன)வாயின.  

சறுக்கி அடுப்பது. சறுக்கு + அடம் > சறுக்கடம், இடைக்குறைந்து சகடம் ஆனது. ஊர்தி அமைப்புகளில் வளையத்தைக் கண்டுபிடித்தவனே பெரிய அறிவியலான் ஆவான். அவனை நாம் மறக்காமல் இருக்கவேண்டும். பனியில் சறுக்குவதுபோல் அவ்வளவு எளிதாகத் தரைகளில் சறுக்கமுடிவதில்லை. அந்தக் கடினமே வளைந்த உருளையை அமைக்க அவனுக்குச் சிந்தனை அறிவை வழங்கியதென்பதை மறவாதீர். சறுக்கும் பனிப்பாறைகளிடை உலவியவனாய் அவன் இருந்திருப்பின் உருளை அமைக்க உந்து ஆற்றல் ஏதும் விரைந்து விளைந்திருக்காது என்று அறிக.


 PROOF READ   20062021 

கருத்துகள் இல்லை: