ஆங்கிலத்திலுள்ள சிவப்பு என்று பொருள்படும் "ரெட்
என்னும் சொல், பலரும் அறிந்ததே.
இரத்தம் என்ற சொல்லில் உள்ள இகரத்தையும்
இறுதிநிலையில் அமைந்த "தம்" என்பதையும்
எடுத்துவிட்டால் நடுவிலிருப்பது "ரத்" (ரெட்) என்பதே.
இந்தோ ஐரோப்பிய மூலமொழி எனப்படும்
புனைவாக்கத்தில் இதை ஏறத்தாழ "ரெத்" என்றே
கண்டுபிடித்திருக்கிறார்கள்.ஆங்கிலத்துக்கு அது
ஸ்காட் மொழியிலிருந்து வந்தது என்பர்.
ஸ்காட் மொழிக்கு அது ஸ்காண்டிநேவிய வட்டாரத்தி
லிருந்து வந்திருக்கவேண்டுமென்று தெரிகிறது.
அவ்வட்டாரத்தில் ரெயனிர் ரோவன் என்று பலவாறு
திரிந்து வழங்கியுள்ளதாம்.
இலத்தீனில் அது "ருப்ரம்" என்னும் அழகான வடிவமாய்
உள்ளது. சிவப்புக் கல்லுக்கு "ரூபி" என்று நாமறிந்ததே.
இலத்தீனிலே அது "ரூஃபூஸ்", "ரூபர்" " ரூபிகுண்டஸ்"
என்றெல்லாம் வேற்றுமைப்படும். ரகர வருக்கம்
முன்னிலையில் இருந்தபடி இருக்க, வால்கள் - விகுதிகளில்
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழில்போல சமஸ்
கிருதத்திலும் இலத்தீனிலும் வேற்றுமைகள் வரும்:
தமிழில், மேசை, மேசையை, மேசையோடு, மேசைக்கு
என்றெல்லாம் உருபுகள் வருவதுகாண்க. வேற்றுமை
இல்லாத (இவ்வாறு சொல்லிறுதி மாறியமையாத)
மொழிகள் பல உலகில் உள்ளன. அது நிற்க. ஆங்கிலத்தில்
இது உள்ளதென்றாலும் மெத்தக் குறைவு. எடுத்துக்காட்டு:
ஹி > ஹிம் என்பது காணலாம். எழுவாய், பயனிலை
என்ற எந்நிலையிலும் மலாய் முதலிய
மொழிகளில் சொல்லிறுதி மாற்றமென்பது இலது.
இரத்தம் என்பதன் மூலம் அரத்தம் என்பதே. இதை
மொழிநூலார் கூறியுள்ளனர். அர் என்பதே சிவப்பு என்று
பொருள்படும் அடிச்சொல். அர்+ அத்து + அம் = அரத்தம்.
அத்து என்பது அது என்ற சொல்லின் தகர இரட்டிப்பு
வடிவம். இங்கு சொல்லாக்க இடைநிலையாய் வருவது.
கணித்தல் குறிக்கும் கணிதம் என்ற சொல்லில் இது
என்பது இடைநிலையாய் வந்தது போலுமே இஃது
என்றறிக. கணி + இது + அம் = கணிதம். ஓர் இகரம்
கெட்டது. துகரத்தில் உகரமும் கெட்டது. அரத்தம்
என்பதிலோர் உகரம் கெட்டது. அர் + அத் +
(த்+உ) +அம் > அர் அத் த் அம் > அரத்தம் எனவறிக.
அர் என்ற அடிச்சொல் வந்த மற்ற சொற்கள்:
அர் அன் > அரன்; அர் அத்து ஐ > அரத்தை. என்று
கூறுவர். அரன் : சிவன் குறிக்கும் சொல்.
அர் ஆனாலும் இர் ஆனாலும் ஒன்று தலையிழந்து
ரூ ஆகி, பின் வெவ்வேறு இறுதிநிலைகளை
ஆங்காங்கு வேண்டியவாறு திரித்துக்கொண்டு
சொற்கள் பல்கியுள்ளமை இதனால் அறியலாகும்.
இதில் இ-ஐரோ. மூலமொழி மீட்டுருவில்
தகர ஒற்று கண்டிணைபுற் றிருப்பது சிறப்பே
என்றுமுடிக்க.
அரத்தம் இரத்தம் என்ற வடிவங்களில் நடுவாகிய
ரத் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகட்கும் ஏகி
ஆங்கு இடம்கண்டிருப்பது நாம்
மகிழ்வதற்குரியதாகும்.
மெய்ப்பு - பின்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக