வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

தவமும் ஜெபமும்

  ஜெபமென்பதும் தவமென்பதும் அழகான தமிழ்ச்சொற்கள்.

இவற்றை இப்போது காண்போம்.


தொடக்கத்தில் சிலர் தவம் செய்யத்தொடங்கிய காலத்து, 

அதற்கு உடனே ஒரு பெயர் ஏற்பட்டுவிடவில்லை. 

இல்லறத்தார் அதைக் கண்டு,   அதில் ஈடுபட்டவர்கள்

(இந்தத் தவஞ்செய்வோர்) குடும்ப வாழ்க்கை மற்றும்

இன்னல்களிலிருந்து  தப்பி ஓடப் பார்க்கிறார்கள்

என்றுதான் நினைத்தனர். அதனால் ஒப்பாமையை

உணர்த்த  வீட்டு வாழ்வே சிறந்தது என்றனர்.  

இதன் எண்ணச் சுவடுகள் பிற்காலங்களிலும்

 இலக்கியங்களில் காணப்பெற்றன. அதிர்வுகளை

உண்டாக்கின. ஒரு புதுக்கொள்கை தோன்றியவுடனே 

அதற்குப் பெயர் ஏற்பட்டுவிடுவதில்லை. பெயர்கள் 

நாளடைவில்தான் ஏற்படுகின்றன. திரைப்படங்களைக் 

குறிக்க என்னென்ன பெயர்கள் வழங்கின? இதை 

இப்போது விவரிக்கவில்லை. நீங்களே சிந்தித்துக்

கொள்ளுங்கள். நேரம் கிட்டினால். எப்போதாவது 

எழுதுவேம்.


இன்னல்கள், சிக்கல்கள், உலகியல் தொந்தரவுகள் 

முதலியவற்றினின்றும் தப்பித்துக்கொள்வதே தவம். 

தவமென்றால் என்ன என்பதை மிக்கச் சிறப்பாக 

விளக்கிய வரையறவுகள் எல்லாம் வெகுநாட்களின்

பின்னர் அறிஞர் ஆய்ந்து எழுதியவை.  கேட்கவும்

படிக்கவும் அவை இனியவையாக இருக்கும் என்பதில்

ஐயமெதுவும் இல்லை.  ஆனால் முதன்முதலாய் இதைக்

கண்டவர்களுக்குத் தோன்றிய எண்ணம், இவர்கள்

தப்பி ஓடுகிறார்கள் என்பதே அன்றி வேறில்லை. ஆகவே

தப்புதல் என்ற சொல்லினின்று தவம் என்ற சொல் 

தோன்றியது.


(சில தப்பியோடியவர்களைப் பிடித்து உதைத்துக்

கட்டாயக் கல்யாணம் செய்துவைத்த நிகழ்வுகளும்

நடைபெற்றிருக்கலாம். இவற்றை யாம் தேடிச்

கண்டுபிடிக்கச் செல்லவில்லை. நாம் கற்பனைகளுக்

குள்ளும் செல்லாமல் விடுப்போம்.)


தப்புதல், இது இடைக்குறைந்து  தபுதல் ஆனது.பின்

தபுதல் >  தபு+ அம் > தபம் > தவம் ( பகர வகரத் திரிபு ).

என அமைந்தது.


தப்புதல் தாவுதல் எல்லாம் தொடர்புடைய சொற்கள்.

ஒருவன் தாவும்போது இடையில் உள்ள பல தடைகள்

இடையூறுகளை இடறாமல் தப்பித்துத்தான் விடுகிறான்.

இதைப் பின் விளக்குவோம்.


தாவு > தாவு + அம் > தவம் ( முதனிலை குறுகிய தொழிற்

பெயர் ).  சா வு > சவம் என்பதுபோலுமே இது. இவ்வாறு

கூறினும் ஏற்கலாம்:   சா(தல்) > சா + அம் > சாவம் (வகர

உடம்படுமெய்) > சவம் (முதனிலை குறைந்தது ).


இனிச் செத்துதலிலிருந்து செபம் வந்ததை அறிவோம்.

செத்துதலாவது ஒத்திருத்தல்.  புல்லைச் செத்தி 

அழகுபடுத்துகிறவன்,  அவற்றின் நீட்டம் 

ஒத்திருக்கும்படி வெட்டுகிறான். அப்போது திடல் 

அழகாகிறது.


இதன் அடிச்சொல் செ என்பதுதான்.  செத்துதல் என்பதில்

து என்பது வினையாக்க விகுதி.


புத்தகங்களை அச்சிடுவோர் அவற்றை அழகாக வெட்டிச்

செப்பம் செய்கிறார்கள்.  அவை ஒத்திருக்கும்படி கட்டி

வெட்டி ஒட்டி வேண்டியன செய்வதே செப்பம். ( படியொப்

புமை)  . ஒருவன் செபம் செய்யும்போது அவன் ஒத்த 

வாக்கியங்களைச் சொல்லி வழிபடுகிறான். அதாவது

இன்று சொன்னதையே  நாளையும் அதற்கடுத்த 

நாட்களிலும் ஓதுவான்.   அதுவும் செப்பம்தான்;  

அவன் வாயினின்று வருவன நல்ல செப்பம் செய்த 

வாக்கியங்கள்.


செப்பம் > செபம் .  செப்பம் செய்த வாக்கியங்களைத் 

திருப்பித் திருப்பிச் சொல்லி வழிபடுதல். செபம் பின் 

ஜெபம் ஆனது.  உயர்த்தி என்பது ஒஸ்தி ஆனது

போல. தமிழில் "வடவொலிகள்" இல்லாத பல சொற்கள்

ஏனைத் திராவிட அல்லது தமிழின மொழிகளில் 

அவ்வொலிகளை அடைந்தன. எடுத்துக்காட்டுகள் 

பின்னொருநாள் காண்போம். ஒன்று கூறினேம். தமிழிலே 

உயர்த்தி (  உயர்ச்சி )என்பது ஒஸ்தி ஆனது அன்றோ?


இன்னும் கொஞ்சம் சிந்தியுங்கள். செப்புதல்  என்பது 

ஒன்றைச் செப்பமுறச் சொல்லுதல்.  செ என்பது செம்மை 

குறிக்கும் அடிச்சொல்.  செப்பு என்பதில் பு என்பது 

வினையாக்க விகுதி. செப்பு இடைக்குறைந்தால் செபு 

ஆகும்.  செபு+ அம் = செபம். இப்போது செப்புவதையே 

நாளையும் பின்னும் செப்புவது என்று வரையறவு செய்க .  

அப்போது உண்மை புரியும்.


ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும் அது 

அதுவேதான்.


அறிக மகிழ்க.


மெய்ப்பு பின்.

இப்போது இவ்விடுகை சிறிது செப்பம்

செய்யப்பெற்றுள்ளது. அது வாக்கிய

அமைப்பு, தட்டச்சுப் பிறழ்வு தொடர்பானது.

இடுகையின் உள்ளுறைவு மாற்றம்

செய்யப்படவில்லை.





 




கருத்துகள் இல்லை: