எந்தநாள் என்றாலும் இதற்கீடாய் நில்லாதே
இனிமை எலாம்தரும் தேசிய தினமே---நாம்
இருக்கின்ற இந்நாடு நம்பூ வனமே.
சொந்தநாள் என்றினிச் சொல்வதற் குண்டென்றால்
சோர்வகல் சுனைநீர் சுரந்தஇந் நாளே----- வளம்
சுருங்காப் பெருங்கலி சூழ்வதிந் நாளே.
சார்பின்மை வீடுண்டு சோர்வின்மை உண்டதனால்
மார்புண்டு வீறுண்டே மாண்பும் உள்ளிலே----நல்ல
மதியுண்டு நிதியுண்டு மகிழ்வும் இல்லிலே.
தொழிலுண்டு எழிலுண்டு தொட்டதில் பொன்னுண்டு
தோன்றிடும் எண்ணமெலாம் ஊன்று திண்ணமே---- இனங்கள்
துவண்டிடாத் தூண்கள் நாலு நிற்கும் வண்ணமே
சிங்கை என்னும் மங்கை தனைப் போற்றிப் பாடியே
சீருடன் வாழ்கவென்று பாடி யாடுவொம்
கைகள்கொட்டி இங்குமங்கும் கூடி யாடுவோம்.
சிங்கைக்குத் தேசிய தின வாழ்த்துகள்.
பொருள்:
சுனை - நீர் சுரக்குமிடம்.
பெருங்கலி - பெரு மகிழ்ச்சி.
கலி - துள்ளுதல்.
சார்பின்மை - யாரையும் நத்தி வாழாமல்
தானே பொருள்தேடி வாழ்தல்.
சார்பின்மை வீடு - சொந்த வீடு.
மார்பு உள்ளிலே - நெஞ்சில்.
இல்லிலே - வீட்டிலே
ஊன்று - நிலை(த்தல்)
நாலு - நான்கு இனங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக