வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

விரைவுச்சொற்கள்: சடு, சடுதி, சங்காலம் - பிறவும்

 நாம் சொல்லாய்வில் தெரிந்துகொள்வதற்குப் பல சொற்கள்

 உள்ளன.  அவற்றை ஆர அமர ஒவ்வொன்றாக அறிந்து

கொள்வதே உரிய நன்முறை ஆகும்.


இன்று சங்காலம் என்ற சொல்லைத் தெரிந்துகொள்வோம்.

இச்சொல்லின் பொருள் "விரைவு"  என்பது ஆகும்.  இதே

பொருளுடைய இன்னொரு சொல்: சீக்கிரம் என்பது.

இதை விளக்கியதாக ஞாபகம். நீங்கள் தேடிப்பாருங்கள்.


சங்காலம் என்பதில் சடு என்ற உள்ளுறுப்புச் சொல்லும்

காலம் என்ற அவ்வாறான சொல்லும் உள்ளன.  சடு 

என்பது சட்டு என்பதன் இடைக்குறை.  "கடைக்குப் 

போய்ச் சட்டென்று ( சட்டுன்னு) வந்துவிடு. வழியில் வேடிக்கை 

பார்த்துக்கொண்டிராதே" என்று வீட்டில் அம்மா சொல்வதைக் 

கேட்டிருப்பீர்கள்.


சடு என்பது தி விகுதி பெற்று சடுதி என்றும் வரும். அது

திரிந்து "சடிதி" என்ற வடிவிலும் காணப்படும்.  விரைவாக

விளையாடப்படும்  ஆட்டம் "சடுகுடு" எனப்பட்டது. சட்டென்று

குடுகுடுவென்று ஓடிவிளையாடுவார்கள்.  அது " சடுகுடு"


சடு என்ற இடைக்குறைச் சொல்,  சடுதியாகி ஜல்தியும்

ஆகும். எல்லாம் விரைவுதான். சடு என்பது ஜல் என்றுதிரிய,

தி என்ற விகுதிமட்டும் திரியாமல் திடமாக நின்றது.

பெரும்பாலும் அப்படித்தான். " ஒம்னிபஸ்" என்பதில்

"பஸ்" போல - இலத்தீனின் ஒரு விகுதி!!


சடு, சட்டு, சடுதி என்பவெல்லாம் ஒலிக்குறிப்பில்

தோன்றிய சொற்கள்.


காலத்தில் சட்டென்று செய்வதைக் குறிப்பதே

சங்காலம்.   சடு + காலம் என்று புணர்த்தின் சடுங்காலம்

என்று மெலிந்து உருவாகும். இதில் வல்லின டு என்ற

எழுத்தைக் குறைக்க, சடுங்காலம் சங்காலம்

ஆகிவிடும். இதில் காலம் என்பது நெடுநேரத்தைக்

குறிக்கும் சொல், சடு என்பதால் குறுகிய காலத்தைக்

குறிக்கலானது. ஆனால் வேகமாக நடக்கும் கால்களை

உடையானைச் சடுங்காலன் என்றனர். இங்குள்ள

காலன் என்ற சொல், காலத்தைக் குறிக்கும் என்பதினும்

கால்களைக் குறித்தது என்பதே பொருத்தம்.


டுகரம் மறைந்த இன்னொரு சொல்: பீடுமன்,  பீமன், வீமன்

எனக்காண்க. பீடுமன் - பீடுடைய மன்னன்.  பின்னர்

பீஷ்மன் என்று திரிந்து இனிமை பெற்றது. பீமன் ஒரு

தொன்மகாலப் பாத்திரம்.


அறிக மகிழ்க.


குறிப்பு:

1    சடு என்பது இருபிறப்பி.  அடு> சடு எனினுமாம்.

அடுத்தடுத்து இடையீடின்றி நிகழ்தலே

விரைவு. சட் என்பது ஒலிக்குறிப்பும் ஆனது.

2    டுகரம் மறைந்த இன்னொரு சொல்:  கெடு+ து

>  கேது.  முதலெழுத்து கெ  நீண்டு கே ஆனது.

டு மறைந்தது.  கேது என்றானது. ஒரு நிழற்கோள்

இதுவாம். இதுவும் இராகுவும் எதிர்ச்சுற்று 

விளைப்பன. இராகுவும் இருட்கோள். இர் - இருள்

என்பதன் அடிச்சொல்.  இரு+ ஆகு= இராகு, முதற்

குறைந்து ராகு ஆனது. அரங்கன் - ரங்கன் போல்.

நிரம்ப என்பதும் ரொம்ப ஆகும். அறுக்கும்

ரம்பமும் அறு+ அம் + பு+ அம் > றம்பம், பின்

திருத்தப்பெற்று ரம்பம் என்று வழங்குவதாகும்.

இயற்சொல், திரிசொல் என்று தொல்காப்பிய

முனிவர் ஒன்றை முதலில் சொன்னாலும் மற்றதே

மிகுதி என்று தெரிகிறது. வருகிறாயா என்பதை

வர்ரியா. வாரியா என்று பேசுகிறவன் தமிழன்.

இவன் கெடுக்காத சொற்கள் உலகில் குறைவு.

மெய்ப்பு: பின்









 

கருத்துகள் இல்லை: