வியாழன், 10 ஏப்ரல், 2014

உபாத்தியாய - வாத்தியார்

உபாத்தியாய என்ற சமஸ்கிருதச் சொல்லுக்குப் பல பொருள் உண்டு.  வேதங்கள் வேதந்தாந்தங்கள், இலக்கணம் முதலிய சொல்லிக்கொடுத்து அது தரும் ஊதியத்தால் வாழ்பவர் என்பது ஒரு பொருள். இது ஒரு  கல்வி கற்பிக்கும் பெண்ணையும் (ஆசிரியை) குறிக்கும். மூன்றாவது பொருள் கற்பிப்போன் ஒருவனின் மனைவி என்பதுமாகும்,  சமஸ்கிருத நூல்களில் இச்சொல் வருங்காலை, இடம் நோக்கிப் பொருள் அறிய வேண்டும்.  ஆச்சார்யா என்பது வேறென்பர் சமஸ்கிருத ஆசிரியர்.

தமிழில் வழங்கும் வாத்தியார் என்பதற்கு இந்தப் பொருள்களெல்லாம் இல்லை. வாத்தி என்பவர்  வாய்மொழியாகக் கல்வி கற்பிப்பவர்.  வாய்> வாய்த்தி > வாத்தி > வாத்தியார்.  "வாய்  மூடு"   என்பதை "வா மூடு" என்பவர்களும் உள்ளபடியால், யகரம்   மறைதலின் இயல்புண்மை அறியலாகும். வாத்தியார் மனைவியை நாம் வாத்தியார் என்பதில்லை. ஆசிரியை என்பதை "வாத்திச்சி "என்பது சற்று "பணிவுக் குறைவு"டையதாய்த் தோன்றுகிறது . இது "வாத்தி ஸ்ரீ "  அன்று.  ஸ்ரீ  ஆயின் உயர்வு தோன்றுதல் வேண்டுமே !

அத்யாயிகா  வாசிப்போன்;   கற்போன்.

அத்யாயின்  மாணவன்.மாணவி.

அத்யாய     இது  நூற்பகுதி குறிக்கும். chapter of a  book.

உப +    அத்யாய‌ =  உபாத்யாய    -   வேத முதலியன போதிப்பவர் .

எனவே வாத்தியார் என்பது வேறு,  உபாத்யாய என்பது வேறு .

இவ்விரு சொற்களும் குழப்படி செய்யப்பட்டுள்ளன என்று புரிந்துகொள்ளல் வேண்டும்.

வாத்தியார் என்பது கொச்சை  உபாத்தியாயர் அதற்குச் சரியானது என்று நமது ஆசிரியர்கள் "தறுதலாகத் திருத்தியதன்" காரணமாக நேர்ந்த  குழப்பம்  இதுவாகும்.



கருத்துகள் இல்லை: