வியாழன், 17 ஏப்ரல், 2014

முயற்சித்தல்


இந்தச் சொல்லின் அடிச்சொல் எதுவெனின்,  முயலு(தல்) என்பதே ஆகும். அல்லது முயல்தல் எனினும் ஏற்கற்பாலதே. முயலல் என்பதும் சரிதான்.

முயல் என்பதே அடியாய் உள்ள வினைச்சொல்.  "கேள்வி முயல்" என்று ஆத்திசூடியில்   வருகிறது  அன்றோ?.  அப்படி  என்றால்,  கேள்வி  கேட்டு அவற்றின் மூலம்  அறிவை விரிவு படுத்திக் கொள் என்பது பொருள்.

முயல் என்று  ஓர்  உயிரி  உண்டு. இங்கு  நமது கவனத்தில் இருப்பது ஓர்  வினை.  ஓர் உயிரி  (விலங்கு )  அன்று.

முயல் + சி  =   முயற்சி.  சி -  விகுதி.

வினைச்சொல்லினின்றும்  சி விகுதி பெற்று ஓரு தொழிற்பெயர்  அமைந்துள்ளது.

முயற்சி  மீண்டும் வினையாகுமா?

முயற்சித்தல்   என்பது சரியானால், பயிற்சித்தல், உயர்ச்சித்தல்  என்றெல்லாம் வரவேண்டுமே. தொழிற் பெயர்கள் இங்ஙனம் அமையா.

"முயற்சிக்கிறான்" என்று பேசக் கூடாது,  எழுதவும் கூடாது.

தொல்காப்பியத்தில் தொழிற்பெயரிலிருந்து வினை அமைவது காணப்படுகிறது.

"மெய்யி   னி யற்கை  புள்ளியொடு  நிலையல் "   (தொல் 15).

என்ற நூற்பாவைப் பாருங்கள்.

நில்  + ஐ =  நிலை.

நிலை -  நிலையல் மற்றும்  நிலைத்தல் என்று  நிலை என்ற பெயர்ச்சொல்  மீண்டும் வினை ஆகவில்லையா?

பெயரே மீண்டும் வினை ஆனாலும்,  நிற்றல் என்பதன் பொருள் வேறு,  நிலைத்தல் என்பதன் பொருள் வேறு. முயற்சித்தல் என்ற சொல்லமைப்பிலிருந்து இது வேறுபடுவது ஆகும்.
முயலுதல் என்பதும் முயற்சித்தல் என்பதும் பொருள்  ஒன்றுதான். ஆகையால், முயற்சித்தல் என்பது வேண்டாத நீட்சி என்பர்.

எனினும் முயற்சித்தல் என்பது இன்னும் வழங்கவே செய்கிறது  -- தவறென்று ஆசிரியர் கடிந்தாலும்.

muyaRchiththal is a malformation.

கோர்வை, முயற்சிப்பது" என்பவெல்லாம் பிழைகள் என்பதில் ஐயமில்லை.தாளிகைத் துறையில் வேலைபார்க்கும் ஒரு நண்பரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொல்கிறார்: கோவை என்று எழுதினால் மக்களுக்குப் புரியாது, முயலுதல் என்றால் முயலைப்பற்றிய எண்ணம் வந்துவிடுகிறது என்று! -- சொல்லிப் புன்னகை வேறு புரிந்தார். அவர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் போலிருக்கின்றது. நாம் நல்லதமிழ் பயில்வோம் ------Sivamala, writing on 18.6.2006




கருத்துகள் இல்லை: