திங்கள், 27 செப்டம்பர், 2021

வருந்திய நாய்க்குட்டியை அழைத்துக்கொள்ளுதல்.


 வருத்தமோ கொண்டாய் குட்டி?

வந்துநான் அமர்ந்தேன் ஒட்டி!

அருத்துவேன்  பாலும் சோறும்,

அருகில்நான் அமர்ந்து விட்டேன்.

திருத்தமாய் முடியைச் சீவி

சீரிலே உன் தாய்   ஆக,

ஒருத்தன் நான்  போதும் வாவா

உண்மையில் நானுன் அன்பன்.


உணராத மொட்டை  ஞாலம்

ஓயாத கலகம் நீளம்!

அணர்தரு அன்பே  இல்லார்

அழிபோரை நடத்திக் கொள்வார்!

துணிவற்ற மனிதர் வேண்டாம்.

 தூணாக நிற்பேன்  வாவா!

தனியன்பு தழைக்க வாழ்வாய்

தயங்காமல் அடுத்து வாவா.!


----- என்று நாய்க்குட்டியை அழைக்கிறார் இந்த மூத்த குடிமகன்.


அரும்பொருள்:

அருத்துவேன் -  அருந்தச் செய்வேன்.

அருந்து - தன்வினை.  அருத்து -  பிறவினை.

சீரிலே உன் தாய் - உன்னைச் சீராட்டுவதிலே உன் தாய்போல

ஞாலம் -  உலகம்

மொட்டை - பண்பு இல்லாத

நீளம் - நீளமான,  தொடரும்

அணர்தரு --  உயர்வுதருகின்ற.

அணர்தல் -  மேலெழல்.  அடிச்சொல்:  அண் ( நெருங்கு )

அழிபோர் -  அழிவு ஏற்படுத்தும் போர்கள்.

துணிவு அற்ற - மனத்துத்  திடம் இல்லாத

தூணாக -  பக்க பலமாக

தனியன்பு  -  ஒப்பிலாத அன்பு.


தொடர்புடைய இடுகைகள்:

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_27.html

https://sivamaalaa.blogspot.com/2021/09/blog-post_50.html




கருத்துகள் இல்லை: