சனி, 4 செப்டம்பர், 2021

அதரம், இதழ், பாலிகை.

 அதரம் என்ற சொல் முன்னர் நம் வலைப்பூவில் விளக்கம் பெற்றது.  அது இங்கு உள்ளது.  சொடுக்கி அதில் கூறப்பட்டுள்ள யாவையும் அறிந்துகொண்டு மேலே தொடர்வது மேலும் தெளிவைத் தரும் என்பது எம் நம்பிக்கை.  அவ்வாறின்றிக் குழப்பம் ஏதும் விளைந்தால் நீங்கள் பின்னூட்டம் இடுங்கள்.

சொடுக்குக:

https://sivamaalaa.blogspot.com/2018/10/blog-post_23.html

அதரம் என்பதற்கு இன்னொரு பெயர் உதடு அல்லது உதடுகள் ஆகும். மேலுதடு, கீழுதடு என்று இரண்டு கடைப்பாகம் ஒட்டி முடிவதால் சிலர் பன்மையில் கூற விழைதல் கூடும். உதடு என்றாலும் உதடுகள் என்றாலும் யாம் ஒப்புவோம். கண்களைப்போல் உதட்டுக்கு இடைவெளி அதிகமில்லை.  இருபகுதிகளும் இணைப்புறுபவை.

உதடு சொல்லமைப்பு:

உதடு என்ற சொல்லினமைப்பைக் கண்டுவிட்டு அப்பால் பாலிகை என்பதன் விளக்கத்தைக் காண்போம்.

உதடு என்ற சொல்லின் உது அடு என்று இரு உள்ளுறைவுகள் உள்ளன.  உது என்பது சுட்டடிச்சொல்.  உ - முன்னிருப்பது.   து என்பது விகுதி.  இச்சொல் உதடு இரு பகுதியான உறுப்பு என்பதைத் தெரிவிக்கிறது.  இத்  து  விகுதியுடன் அ என்ற பன்மை விகுதியும் இணைகிறது.  இதனால் இது உத என்ற நிலையை அடைகிறது.   அடு என்ற சொல் தொடர்ந்து வந்து,  இரண்டும் அடுத்தடுத்து இருப்பன என்பதைத் தெளிவு செய்கிறது.

உ + து + அ + அடு >  உது + அ + ( அ ) டு  >  உதடு ஆயிற்று.  இங்கு ஓர் அகரம் கெட்டுச் சொல் அமைந்தது காண்க.

பாலிகை

பால் என்பது பகுப்பு என்று பொருள் படும் சொல்.  உதடு என்ற உறுப்பு   இருபால் பட்டு நிற்கிறது. ஒவ்வொரு பகுதியும் பல்வரிசையை மூடிக்கொண்டு நிற்கின்றது.  எனவே உதட்டுக்கு இன்னொரு பெயர் அமைக்கவேண்டுமானால் அதற்குப் பால் என்பது பொருத்தமான சொல்லே.

பால் - பகுதி.

பாலி  -  இகரம் பகுதியை உடையது என்ற பொருளைத் தரும்.

கை  -  இது ஒரு  விகுதி.  அல்லது சொல்லிறுதி.

பாலிகை என்பது இரு பகுப்பு உடைய உறுப்பு என்பதையே கோட்டிட்டுக் காட்டுகிறது.

எனவே  பாலிகை உதட்டுக்கு நல்ல இன்னொரு பெயராய் அமைந்தது காண்க.

இது காரண இடுகுறி ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



 


கருத்துகள் இல்லை: